ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்

-மகாகவி பாரதி

அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906) அந்நாட்டு மக்களுக்கு செய்யும் கடமை என்ன? (அவர் தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல). அந்நாட்டில் சில மாகாணங்களில் ஜப்பான் தேசத்தாருக்கு எதிரான மனநிலை இருப்பது கூடாது என்னும் அதிபரின் மனநிலை,... என உலக அரசியலை நம்மப்வர்க்கு வழங்கத் துடிக்கும் மகாகவி பாரதியின் இதழியல் ஆர்வம் இக்கட்டுரையில் வெளிப்படுகிறது... 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராகிய மிஸ்டர் ரூஸ்வெல்ட் (தியோடார் ரூஸ்வெல்ட்) இந்த வாரத்தில் முக்கிய மந்திராலோசனை சபைக்கு (காங்கிரஸ்) அனுப்பிய கடிதம் அநேக விஷயங்களில் நன்கு கவனிப்பதற்குரியது. ரூஸ்வெல்ட் அதிபர் மிகுந்த தீரத்தன்மையுடையவர். தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல. சமீபத்தில் ஸான்பிரான்சிஸ்கோவில் கவர்ன்மெண்ட் பாடசாலைகளிலிருந்து ஜப்பானியர்களை விலக்கிய அநீதிகளைப்பற்றி இவர் மிகுந்த கோபத்துடன் எழுதியிருக்கின்றார். 

ஜப்பானியர்களிடம் அநாவசியமான விரோதம் பாராட்டும் அமைச்சர்களை மூர்க்கர்கள் என்று பேசுகின்றார். ஐக்கிய நாடுகளின் மத்திய கவர்ன்மெண்டார் வெளி தேசத்தாருடன் செய்து கொள்ளும் உடன்படிக்கை நிபந்தனைகள் ஒவ்வொரு தனி மாகாணமும் அனுஷ்டிக்கும் படி செய்ய இப்போது விதியேற் படுத்தப்படாமலிருக்கின்றது. எனவே, ரூஸ்வெல்ட் அதிபர் ஜப்பானியர்களை விலக்காமல் அவர்களுடன் சஹோதர பாவமாக நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதிலும், காலிபோர்னியா என்றும் ஒற்றை மாகாணத்தின் கவர்ன்மெண்டார் அதற்கிணங்க மனமில்லாமல் இருக்கின்றார்கள். இம்மாதிரியேற்படாமலிருக்கும் பொருட்டு அரசு முறைமை மாற்றப்பட வேண்டுமென்று ரூஸ்வெல்ட் அதிபர் அபிப்பிராயப்படுகிறார். இந்த ஜப்பானிய விவகாரத்திலே எந்த மாகாணத்தாரும் யாதொரு அக்கிரமமும் செய்யாமலிருக்கும் பொருட்டாக தனது ‘ஸிவில்’ அதிகாரத்தை மட்டுமேயன்றி ராணுவ பலத்தைக் கொண்டும் வற்புறுத்தத் தயாராகியிருப்பதாக இவர் வெளியிடுகின்றார். ஜப்பானிய விவகாரத்தை மிகவும் நுட்பமாக விவரித்துப் பேசுகின்றார். “எல்லா தேசத்து ஜனங்களையும் சமானமாக நடத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். சரியான ஒழுக்கத்துடன் நடக்கும் அன்னியர்களுக்குள்ளே பக்ஷபாதம் காட்டுதல் மிகுந்த தாழ்ந்த நாகரீகத்தின் அடையாளமாகும். ஜப்பானியரிடம் விரோதங் காட்டுதல் அமெரிக்கர்களுக்குப் பெரிய அவமானமாகும். அதிலிருந்து மிக்க விபத்துக்கள் ஏற்படக் கூடும்” என்று ரூஸ்வெல்ட் எழுதுகின்றார். ஜப்பானியர்களின் தீரத்தன்மையைப்பற்றியும் மிகவும் புகழ்ச்சி செய்து பேசுகின்றார். ஸான்பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தில் வருந்திய ஜனங்களுக்கு ஜப்பானியர்கள் ஒரு லக்ஷம் டாலர் தரும்படி செய்த நன்றியை நினைப்பூட்டுகின்றார். ஜப்பானியர்களை பள்ளிக்கூடங்களினின்று விலக்குதல் மஹாமூடத்தனம். அமெரிக்காவுக்கும் ஏஷியாவுக்கும் (ஆசியாவுக்கும்) இடையே மிகுந்த வர்த்தக நட்பு ஏற்பட வேண்டும். நாம் மற்றவர்களிடம் என்னவிதமான மரியாதையை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் அவர்களுக்குச் செய்யத் தயாராக வேண்டும் என்கிறார். 

இனி அமெரிக்காவை மட்டிலும் குறிப்பிட்ட சில சீர் திருத்தங்கள் அந்தக் கூட்டத்திலே காணப்படுகின்றன. வரம்புக்கு மிகுந்த திரவியம் வைத்திருப்போர்களை மிகுந்த தீர்வைகள் சுமத்தி கூடியவரை அமுக்கி வைத்திருக்க வேண்டுமென்ற சீர்திருத்தம் இவர் நெடுங்காலம் விரும்பு விருகின்றார். அதையும் இந்தக் கடிதத்தில் வற்புறுத்துகின்றார். அமெரிக்காவில் செல்வம் வரம்புக்கு மிஞ்சி வைத்துக் கொண்டிருப்பவர்களால் பொதுஜனங்கள் எவ்விதமான பெருந்தீமைகள் விளைவதென்பதை ஆராய்ச்சி புரிவோமானால் இவர் விரும்பும் சீர்திருத்தம் அவசியமென்பது விளங்கும்.

  • இந்தியா (08.12.1906)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s