விடுதலைப் போரில் அரவிந்தர் – 2

-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம்-1: குடும்பமும் குழந்தைப் பருவமும்…

அத்தியாயம்- 2

மான்செஸ்டரில்…

மான்செஸ்டரில் பாதிரியார் ரூவெட், அவரது மனைவி, அவரது வயதான தாய் என மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் சகோதரர்கள் மூவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மகன்களை விட்டுப் பிரிவதற்கு முன் டாக்டர் கிருஷ்ணதன கோஷ், தன் மகன்களுக்கு எந்த விதத்திலும் இந்தியர்களுடன் தொடர்பும் இந்தியா பற்றிய எந்த விஷயமும் தெரியக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டு தாயகம் திரும்பினார்.

அரவிந்தர் 1879 முதல் 1893 வரை பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் இருந்தார். முதல் ஐந்தாண்டுகள் மான்செஸ்டரில், அடுத்த ஆறு ஆண்டுகள் லண்டனில், கடைசி மூன்றாண்டுகள் கேம்பிரிட்ஜில் இருந்தார். எப்போதாவது வீட்டில் இருந்து வரும் கடிதம், நாளிதழ்களில் வரும் செய்தி, கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஏற்பட்ட சில அறிமுகங்கள், என்பதைத் தவிர தாயகத்தோடு அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பாரதம் பற்றி, அதன் மக்கள் பற்றி, அதன் பண்பாடு பற்றி, சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் வளர்ந்தார். ”அந்த விஷயத்தில் முற்றிலும் அறியாமையில்தான் இருந்தேன்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மூத்த சகோதரர்களும் மான்செஸ்டர் இலக்கணப் பள்ளியில் (Manchester Grammar School) சேர்க்கப்பட்டனர். ஆனால் அரவிந்தருக்கு வீட்டிலேயே ரூவெட் பாதிரி பாடம் எடுத்தார். அவர் லத்தீன், ஆங்கிலத்தில் புலமை  பெற்றவர். அவரது மனைவி கணக்கு, புவியியல், பிரெஞ்சு மொழியை  அரவிந்தருக்கு சொல்லிக் கொடுத்தார். கொஞ்சம் நாளிலேயே ரூவெட் தம்பதியருக்கு அரவிந்தரைப் பற்றி புரிந்து விட்டது. கூரிய அறிவு, தீவிர கவனக்குவிப்பு, இனிய சுபாவம், பேச்சிலும் நடத்தையிலும் தயக்கம் என விதிவிலக்கான தன்மைகளுடன் அரவிந்தர் இருந்தார்.

பாதிரியார் ரூவெட்டுடன் (வலது) அரவிந்தரின் அண்ணன்கள்.

அந்த வயது பிள்ளைகள் வீட்டில் படிப்பதில்லை. ஆனால் அரவிந்தரின் சுபாவம் பள்ளிக்கூடத்திற்கு ஏற்றதாக இல்லை என ரூவெட் தம்பதியினர் கருதியதால் அவரை பள்ளியில் சேர்க்கவில்லை. ஆனால் பள்ளியில் சேர்வதற்கு முன்னமே அவருக்கு கவிதை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் அறிமுகம் ஆகிவிட்டது. ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைபிள் போன்றவற்றைப் படிக்க ஆரம்பித்து விட்டார்.

பள்ளியில் படிக்கும்போது ஷெல்லியின் ‘இஸ்லாத்தின் புரட்சி’ என்ற கவிதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது; அவருள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலும் புரியவில்லை என்றாலும், அநீதியில் இருந்து விடுதலை, ஆக்கிரமத்தை எதிர்த்துப் போராடுவது போன்ற உணர்வுகள் சிறுவன் மனதில் பதிந்தது. அந்தச் சிறுவயதில் அவர் எழுதிய கவிதை பாக்ஸ் குடும்பப் பத்திரிகையில் வெளியானது.

மான்செஸ்டரில் கழிந்த ஐந்தாண்டுகளில், கவனிப்பதில், புரிந்து கொள்வதில், அவரிடம் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டது. பதினொரு வயதிலேயே உலகில் ஒரு மாபெரும் கிளர்ச்சி, புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட இருப்பதாகவும் அதில் தானும் பங்களிக்க உள்ளதாகவும் அவருக்கு ஆழமான புரிதல் ஏற்பட்டது. அந்த வயதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏற்படுவது வழக்கத்துக்கு மாறானது மட்டுமல்ல, அடுத்து வரப்போகும் அவருடைய அசாதாரணமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறுவதாகவும் இருந்தது.

மான்செஸ்டரில் இருந்தபோதுதான் அவரை கிறிஸ்தவராக மதம் மாற்றம் செய்யும் முயற்சியும் நடந்தது. ரூவெட்டின் தாயார் தீவிர கிறிஸ்தவ மதப்பற்று கொண்டவர். அவருக்கு அரவிந்தரை மிகவும் பிடிக்கும். அவரை கிறிஸ்தவர் ஆக்குவதன் மூலம் அந்த ஆன்மாவைக் கரையேற்ற வேண்டுமென விரும்பினார். விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் அரவிந்தரை அழைத்துக்கொண்டு கம்பர்லாந்தில் நடந்த பாதிரிகளின் கூட்டத்துக்குச் சென்றார்.

அரவிந்தர் பின்னாளில் அதைப் பற்றி சொன்னது இது:

“பிரார்த்தனை முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். தீவிர மதப்பற்று கொண்ட ஒரு சிலரே இருந்தனர். வழக்கமாக அப்போதுதான் மதமாற்றம் செய்வது நடக்கும். நான் சலிப்பான மனநிலையில் இருந்தேன். அப்போது ஒரு பாதிரியார் என்னிடம் வந்து ஏதோ கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். உடனடியாக அங்கிருந்தவர்கள்  ‘அவன் இரட்சிக்கப்பட்டான், இரட்சிக்கப்பட்டான்’ என்று கூவினார்கள். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்லியும் எனக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். இதெல்லாம் எதற்கென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பாதிரியார் வந்து என்னை பிரார்த்தனை செய்யச் சொன்னார். எனக்கு எப்படி பிரார்த்தனை செய்வது என்றும் தெரியாது; வழக்கமும் கிடையாது. குழந்தைகள் உறங்கச் செல்வதற்கு முன் சொல்வது போல நான் பாவ்லா செய்தேன். அப்போது எனக்கு வயது பத்து”.

இதில் பாதிரி ரூவெட்டுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவருக்கு சமயம் பற்றி பரந்த சிந்தனை இருந்தது. அது மட்டுமன்றி அரவிந்தரின் தந்தை பிள்ளைகளுக்கு மதச் சிந்தனையைக் கொடுக்கக் கூடாது என்று உறுதியாக அறிவுறுத்தியும் இருந்தார்.

1884இல் ரூவெட் தம்பதியினர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தனர். அப்போது மூன்று சகோதரர்களையும் தன் தாயிடம் விட்டுச் சென்றனர். அந்த மூதாட்டி அரவிந்தரின் சகோதரர்களுடன் மான்செஸ்டரை விட்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். லண்டனில் உள்ள தூய பவுல் பள்ளியில்  அரவிந்தரும் மற்றவர்களும் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் முதல் பள்ளிக்கூட அனுபவம்  அரவிந்தருக்கு பல புதிய திறப்புகளை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த திரு.  வாக்கர் அந்தக் காலத்தில் சிறந்த கல்வியாளர் என்று அறியப்பட்டவர். சில நாட்களிலேயே  அரவிந்தரின் அசாத்தியத் திறன்களைத் தெரிந்து கொண்டார். லத்தீனை நன்றாகவும், கிரேக்க மொழியை ஓரளவும் தெரிந்திருந்த அரவிந்தரை மற்ற துறைகளில் ஈடுபட ஊக்கப்படுத்தினார். தலைமை ஆசிரியரின் கவனத்தைப் பெற்ற மாணவர் என்பதால் மற்ற ஆசிரியர்களும்,  அரவிந்தரைக் கவனித்தனர்; அவரது அறிவும் பண்பும் அனைவரையும் கவர்ந்தது.

பள்ளியின் இலக்கியக் கூட்டங்களில் அரவிந்தர் கலந்துகொண்டு நல்ல பேச்சாளரானார். அவரிடம் இருந்த பல திறமைகள் வெளிப்பட ஆரம்பித்தன. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென்று அவரது பள்ளி மதிப்பெண்கள் சரிய ஆரம்பித்தன. ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை; குழப்பம் அடைந்தனர்; சோம்பேறி ஆகிவிட்டான் என்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. பள்ளிப் பாடங்கள் அவருக்கு போதவில்லை. எனவே பாடத்திற்கு வெளியே கவிதைகள், புதினங்கள், வரலாறு, பிரெஞ்சு இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார். சில ஐரோப்பிய மொழிகளைக் கற்க ஆரம்பித்தார். லத்தீன்,  கிரேக்க மொழியில் சில கவிதைகளையும் எழுதினார்.

பள்ளிப்படிப்பு அவருக்கு சுலபமாக வந்தது. பல பரிசுகளைப் பெற்றார். அதில் ஒன்று, ஆயிரம் அரேபிய இரவுகளின் முழுத் தொகுப்பு. அதை மகிழ்ச்சியுடன் முழுவதும் படித்து முடித்தார். இறுதித் தேர்வில் இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல பரிசுகள் அவருக்குக் கிடைத்தன. லத்தீன், கிரேக்க மொழியில் அவருடைய புலமை அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது பள்ளிப் படிப்பு பற்றி திரு. வாக்கர் சொல்லியது இறுதி வாக்காகக் கருதக் கூடியதாக இருக்கிறது. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில்  அரவிந்தரை இணைத்திருந்தது ஆங்கில அரசு. அது பற்றிய செய்திகள் இங்கிலாந்தில் வெளிவந்தபோது முன்னாள் தலைமை ஆசிரியரான திரு. வாக்கர் சொன்னார்:  “தூய பவுல் பள்ளியில் என்னிடம் படித்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அவர்கள் அனைவரிலும் மிகவும் புத்திசாலியான மாணவர் ரவிந்தர்.”

டாக்டர் கிருஷ்ணதன கோஷ் வசதியானவர், தன் மகன்களை இங்கிலாந்தில் படிக்க அனுப்பினார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அரவிந்த சகோதரர்கள் பணக்கஷ்டத்தில்தான் இருந்தார்கள். மான்செஸ்டரில் இருந்தபோது ஆண்டுக்கு 360 பவுண்டுகள் இந்தியாவிலிருந்து வந்தது; அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே பண வரத்து தொடர்ச்சியாக இல்லாமல் சீரற்றும், படிப்படியாகக் குறைந்தும் போனது. காரணம், டாக்டர் கோஷின் ஏழைகளுக்கு உதவும் தாராள மனப்பான்மையும், பணத்தைப் பற்றிய அக்கறை இன்மையும்தான். அதனால் அவர் மகன்களுக்கு பணம் அனுப்புவது முதலில் குறைந்து, பிறகு நின்று போனது. எனவே ரூவெட் மூதாட்டியின் வீட்டில் இருக்க முடியாமல் சகோதரர்கள் வெளியேற வேண்டி இருந்தது. அதுவும் ஒரு சுவாரசியமான நிகழ்வுடன்.

ரூவெட் மூதாட்டி கிறிஸ்தவ சமயத்தில் தீவிரப் பற்றுள்ளவர். வீட்டில் விவிலியத்தைப் படிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவரது வழக்கம். மூத்த சகோதரன் விநயபூசண் அந்தப் பணியை முன்னின்று செய்ய வேண்டும். ஒரு நாள் அதுபோலச் செய்யும் போது மன்மோகன்,  ‘மோசஸிற்கு தண்டனை கிடைத்தது சரிதான்’  என்று சொல்லிவிட்டான். வந்ததே கோபம் கிழவிக்கு.  ‘நீங்கள் நாஸ்திகர்கள். இன்னும் ஒரு நாள் உங்களுடன் இருந்தால் இந்த வீட்டின் கூரை இடிந்து என் தலைமேல் விழுந்துவிடும். போங்கள் வெளியே’ என்று சொல்லிவிட்டாள்.

அப்பாவிடம் இருந்து பணமும் வரவில்லை, கடிதமும் வரவில்லை. உணவும் இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு உதவியவர் ஜேம்ஸ் காட்டன். இந்தியாவில் டாக்டர் கிருஷ்ணதன கோஷின் நண்பராகவும் நீதிபதியாகவும் இருந்த சர் ஹென்றி காட்டனின் சகோதரர் இவர். ரூவெட் தம்பதியினரின் உறவினர். தெற்கு கென்சிங்டன் தாராளவாதிகளின் சங்கம் (South Kensington Liberal Club) என்ற அமைப்பின் செயலாளராக இருந்தார். சகோதரர்கள் மூவரும் அவரைச் சென்று பார்த்தனர். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் தன் சங்க அலுவலகத்தின் மேல் பகுதியில் இருந்த ஓர் அறையில் அவர்களைத் தங்க அனுமதித்தார். பெரியவனை சிறிய சம்பளத்தில் தன் அலுவலகத்திலும் சேர்த்துக் கொண்டார்.

அது வாழ்வதற்கான அறையாக இல்லை; குளிருக்கான வெப்பமூட்டி இல்லை; போர்த்திக்கொள்ள கம்பளிப் போர்வை இல்லை. உடைகளும் ஆங்காங்கே நைந்து விட்டுப் போயிருந்தன. உணவும் சரிவரக் கிடைக்கவில்லை. பல நாட்கள் சாப்பிட சில ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தேனீரும்தான்  கிடைத்தன. மிகவும் கஷ்டமான காலம் அது. வறுமை அந்தக் காலத்தில்,  அரவிந்தரின் ஆளுமை மீது பாதிப்பை ஏற்படுத்தியதா அல்லது ஆளுமையை சிறப்பாக வளர்க்க, வெளிப்படுத்த ஊக்கம் அளித்ததா? என்ற கேள்வியை பின்னாளில் அவரிடம் ஒரு சீடர் கேட்டார். அதற்கு அவர் தந்த பதில் சுவையானது.

"எதுவும் இல்லை. வறுமை என்னை எப்பொழுதும் அச்சுறுத்தியதில்லை. அது எனக்கு ஊக்கம் அளித்ததும் இல்லை"…. 

"பரோடாவில் கை நிறையச் சம்பாதித்து வசதியாக இருந்த வேலையை, உதற வேண்டிய அவசியம் இல்லாத போதும், அதை விட்டுவிட்டு கல்கத்தா தேசியக் கல்லூரியின் முதல்வராக வந்தேன். அதற்கு அவர்கள் கொடுத்த ஊதியம் ரூபாய் நூற்றியம்பதையும் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அப்போது நான் வாழ்வதற்குரிய எந்த பொருளாதார வழியும் வசதியும் எனக்கில்லை. பணம் எனக்கு ஒரு ஊக்கமாக இருந்தால் நான் அப்படி செய்திருக்க மாட்டேன்" என்று அவர் பதில் எழுதி இருந்தார்.

வசதி வந்தாலும் வறுமை வந்தாலும் அதை ஒரே மாதிரியாக, சமமாக பாவிக்கும் தன்மை அவருக்கு இளம் வயதிலேயே இருந்ததையே இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, சகோதரர்கள் யாரும் தாங்கள் கஷ்டப்பட்டதற்காக தந்தையைப் பழி சொல்லவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மன்மோகன் நீண்ட நாள் அந்த அறையில் தங்கவில்லை. ஆக்ஸ்போர்ட் கிறிஸ்துவ சர்ச் கல்லூரியில் நல்கையுடன் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனே வசதியான இடத்திற்கு மாறிவிட்டார். ஆனால்  அரவிந்தர் ஏப்ரல் 1889 வரை அங்கிருந்தார். அறை வாடகை கொடுக்காதபோது அந்த உரிமையாளர் வற்புறுத்தவோ காலி செய்யவோ சொல்லவில்லை. அவர் ஐசிஎஸ் படிப்புக்குச் சேர்ந்த போது கிடைத்த உபகாரத் தொகையைக் கொண்டு மொத்த வாடகை பாக்கியையும் அடைத்தார்.

அந்தக் கஷ்ட காலத்திலும் படிப்புடன் கூடவே  அரவிந்தர் கிரேக்க, லத்தீன், ஆங்கில மொழியில் கவிதைகளை எழுதினார். அவர் பல விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் கவிதை புனைவது அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. ஒருவேளை அந்த ஆர்வம் அவரது தாயாரிடமிருந்து  வந்திருக்கலாம். அவரது அண்ணன் மன்மோகன் ஒரு கவிஞர். ஏற்கனவே நல்ல கவிஞர் என்று பெயர் பெற்றிருந்தார். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களாக்க் கருதப்பட்ட லாரன்ஸ் பின்யோன், ஸ்டீபன் பிலிப்ஸ் போன்றவர்கள் அவரது நண்பர்களாக இருந்தார்கள். பிரபலக் கவிஞர் ஆஸ்கார் ஒயில்ட் உடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது.  அரவிந்தர் பதினொழவது வயதில் ‘ஈகூபா’ என்ற கிரேக்கக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருந்தார். அதை ஏதச்சையாகப் பார்த்த மன்மோகன்  மிகவும் பாராட்டியதுடன், அரவிந்தரை மேலும் கவிதை எழுத, மொழி பெயர்க்க ஊக்கமளித்தார்.

கேம்பிரிட்ஜ் அரசர் கல்லூரி

ஒருமுறை சகோதரர்கள் மூவரும் ஒரு ஏரிக் கரையில் உல்லாச நடைப் பயணம் போனார்கள். கஷ்டமான காலத்திலும் சகோதரர்கள் இதுபோன்று கவலையற்ற நடைபயணங்கள் மேற்கொண்ட இனிய தருணங்கள் உண்டு. அப்பொழுது மன்மோகன் சற்று பின்தங்கி விட்டார். ஒரு புதிய கவிதையை வாய்க்குள் முனங்கிக் கொண்டே நடை தளர்ந்து விட்டார். அது ஆபத்தான பகுதி. இருவரும் அவரை சத்தமாகக் கூக்குரலிட்டு அழைத்தபோதும் அவர் வரவில்லை. இவர்களின் கூக்குரல் அவர் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. எனவே இவர்கள் அவரை நோக்கிப் போனார்கள். பார்த்தால் அவர் கவிதையை முனங்கிக் கொண்டிருந்தார். பிறகு, ஒருமாதிரியாக அவரை ஜாக்கிரதையாக அழைத்து வந்தார்கள்.

அரவிந்தர் 1889 டிசம்பரில் தூய பவுல் பள்ளியில் இறுதியாண்டுப் படிப்பை முடித்தார். உபகாரச் சம்பளம் பெற பரீட்சை எழுதி வெற்றியும் பெற்றார். அதனால் கேம்பிரிட்ஜ் அரசர் கல்லூரியில் சேர முடிந்தது. அந்தப் பரீட்சையில் செம்மொழிப் பாடத்தைத் தேர்வு செய்து, கிரேக்கம், லத்தீன் மொழிகளில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றார். அதனால் ஆண்டுக்கு 80 பவுண்ட் உபகாரச் சம்பளம் கிடைத்தது.

1890இல் ஐசிஎஸ் படிப்புக்கான தேர்வு எழுதினார். அதில் ஆங்கில மாணவர்களுடன், வயதும் கல்வித் தகுதியும் உள்ள இந்திய மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். சற்று கடுமையான தேர்வுதான். அதை எழுத அரவிந்தர் விரும்பவில்லை. ஐசிஎஸ் ஆகி ஆங்கில அரசுக்குப் பணிபுரிய அவர் விரும்பாததே அதற்குக் காரணம். ஆனால் அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணதன கோஷ் தன் மகன் சிறந்த நிர்வாகியாகி நாட்டுக்குப் பெருமை சேர்ப்பான் என்று எதிர்பார்த்தார். தந்தையின் விருப்பத்திற்காக அரவிந்தர் ஐசிஎஸ் தேர்வு எழுதினார். பதினோராவது இடத்தில் வெற்றி பெற்றார். கஷ்டமான தேர்வில் முன்னணியில் தேர்வு பெற்றது பற்றிக் கேட்டபோது,  ‘எனக்கு அது கஷ்டமான தேர்வில்லை’ என்று பின்னொரு நாளில் கூறியுள்ளார்.

ஐசிஎஸ் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டதால் ஆண்டுக்கு 150 பவுண்டுகள் உபகாரச் சம்பளம் கிடைத்தது. அரசர் கல்லூரியில் படித்த இரண்டு ஆண்டுக் காலமும் அந்த நல்கை கிடைத்தது. பவுல் பள்ளியில் இருந்து விடைபெற்று 1890 அக்டோபரில் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு பதினெட்டு வயது முடிந்து இரண்டு மாதங்களாகி இருந்தது.

$$$

(அடுத்த அத்தியாயம் ஞாயிற்றுக்கிழமை வெளிவரும்)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s