-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
94. பற்றினேன் பரமசிவத்தை
.
ஸா ரஸனா தே நயனே
தாவேவ கரௌ ஸ ஏவ க்ருதக்ருத்ய: /
யா யே யௌ யோ பர்கம்
வததீக்ஷேதே ஸதார்ச்சத: ஸ்மரதி //
.
பரசிவம் பேசும் நாவே நாவு
பரசிவம் காணும் விழியே விழிகள்
பரசிவ பூசை செய்வதே கரங்கள்
பரசிவம் கருதுதல் வாழ்க்கைப் பயனே!
.
முன்பு 7-ம் ஸ்லோகத்தில், சிந்தையெல்லாம் சிவமயமாகிவிட வேண்டும் என்பதை எடுத்துரைத்த பகவத்பாதர், இந்த ஸ்லோகத்தில் அதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்துமாகி நிற்கும் பரம்பொருளான அந்தப் பரமசிவத்தைப் பற்றினால், பற்றுகள் தீர்ந்துபோய் வாழ்க்கைப் பயன் பூர்த்தியாகிவிடும் என்கிறார்.
.ஆகையினால், பரசிவம் (மேலான மங்களத்தைத் தரும் இறைவன்) பற்றிப் பேசுகின்ற நாவே நாவாகக் கருதப்படும். பரசிவத்தைத் தரிசிக்கின்ற கண்களே, உண்மையில் கண்களாக இருக்கும். பரமசிவத்துக்கு பூஜை செய்கின்ற கைகளே கைகளாக மதிக்கப்படும். எப்போதும் பரமசிவனை எவன் நினைக்கிறானோ, அவனே வாழ்க்கைப் பயனை எய்தியவனாகவும் ஆகிறான்.
இதே கருத்து தொனிக்கும் வகையில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைப் பாடல் ஒன்றை இங்கே ஒப்புநோக்கலாம்: “எங்கை உமக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க, இங்கிப்பரிசே எமக்கெங்கோனே நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்.”
.எமது கரங்கள் உமது பூஜையிலும், எமது கண்கள் உன்னையே காண்பதிலும் லயித்திருக்கும் பரிசை மட்டும் தந்துவிடு சிவனே, அதற்குப் பின் சூரியன் எந்தப் பக்கம் எழுந்தால் எனக்கென்ன? என்ன கேடு வந்தாலும் காப்பாற்றி கடைத்தேற்ற நீயிருக்கிறாயே! என்கிறார் மாணிக்கவாசகர்.
.அதேபொருளில்தான் சிவனின் திருவுருவைக் கண்ணார தரிசித்து, நாவால் துதித்து, கரங்களால் பூஜை செய்துவந்தால் வாழ்க்கைப்பயனாகிய முக்தி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டுகிறார் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$