மகாவித்துவான் சரித்திரம்- 1(10)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ்சொல்லுதலும்

.

மாணாக்கர்களிடத்து அன்பும் பாடஞ்சொல்லுதலில் விருப்பமும்

பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.

மாணாக்கர்களிடத்து இவர் காட்டிவந்த அன்பிற்கு எல்லையே இல்லை. தமக்கு ஏதேனும் தீங்கு செய்தாலும் பொறுத்துக்கொள்வார்; மாணாக்கர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் இவருடைய மனம் அதைச் சிறிதும் பொறாது. அத் தீங்கு செய்தவர்களை இவர் பகைவரைப்போலவே நினைந்து கடிந்தொழுகுவார்.

பாடஞ் சொல்வதில் இயல்பாகவே இவருக்கு விருப்பம் அதிகம். இவருடைய கல்வி வளர்ச்சிக்கும் கவித்துவத்திற்கும் காரணம் இங்ஙனம் பாடஞ்சொல்லி வந்ததேயென்று சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருவாவடுதுறை யாதீனத்தில் மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலத்திற் சின்னப்பட்டத்தில் இருந்தவரும் இவருடைய மாணாக்கரும் இடைவிடாமற் பாடஞ் சொல்லுதலையே தம்முடைய கடப்பாடாகக்கொண்டு ஒழுகியவருமாகிய ஸ்ரீ நமச்சிவாய தேசிகர், “ஒருமுறை பாடஞ்சொல்வது ஆயிரந்தரம் படிப்பதற்குச் சமானம்” என்று சொல்லுவதுண்டு. ஒருகாலத்தில் ஸ்ரீ சி.தியாகராச செட்டியார் இவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இவரை நோக்கி, “நீங்கள் இடைவிடாமற் பாடஞ்சொல்லுவதாகப் பேர் வைத்துக்கொண்டு நன்றாகப் படித்துவருகிறீர்கள்” என்று சொன்னதை நான் உடனிருந்து கேட்டிருக்கிறேன்.

“ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்”

“அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்”

-என்பன இக்கருத்தை விளக்கும்.

பெரிய புராணப் பிரசங்கம்

இங்ஙனம் இருந்து வருகையில் சிலர் இவரிடம் பெரிய புராணத்திற்குப் பொருள் கேட்பாராயினர். பாடங்கேட்பவர்களேயன்றி வேறு சிலரும் வந்து உடனிருந்து கேட்டுச் செல்லுவது வழக்கம். அங்ஙனம் செல்பவர்கள் பலரும் கேட்கும்படி பெரியதோர் இடத்தில் இவரைக்கொண்டு பெரிய புராணப் பிரசங்கம் செய்வித்தால் தமிழ்ச்சுவையையும் பக்திரசத்தையும் பலரறிந்து உய்தல் கூடுமே யென்றெண்ணினார்கள். அக்காலத்தில் இத்தகைய காரியங்களைச் செய்வித்தலில் ஊக்கமுடையவராய் அங்கேயிருந்த ஒரு செல்வரிடம் அவர்கள் சென்று தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் சொல்லியதற்கு அவர் இணங்கித் தம்முடைய வீட்டில் நூற்றுக்கணக்கானவர் இருக்கக்கூடிய இடமொன்றில் நாள்தோறும் பிரசங்கம் செய்யும்படி இவரைக் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே பிரசங்கம் நடைபெற்றது. மேற்கூறிய அன்பர்களும் வேறு பலரும் நாடோறும் வந்து கேட்டு மகிழ்வாராயினர். இவர் உரிய இடங்களில் சொல்லும் பதசாரங்களும் அப்பொழுதப்பொழுது எடுத்துக்காட்டும் தேவாரம் முதலிய மேற்கோள்களும் சைவ சாஸ்திரக் கருத்துக்களும் எல்லாருடைய உள்ளத்தையும் கனிவித்தன. அயலூர்களிலிருந்தும் பலர் நாடோறும் கேட்பதற்காக வரத்தொடங்கினர். இவருடைய புகழ் முன்னையினும் பலமடங்கு எங்கும் பரவியது. இது தெரிந்த அக் கனவான் இவருக்கு மாதந்தோறும் தக்க பொருளுதவி செய்து வருவாராயினர்.

இந்த நிலைமையைக்கண்டு பொறாமையுற்ற வேறு மதத்தினர் ஒருவர் எப்படியாவது இந்தப் பிரசங்கத்தை நடைபெறாமற் செய்து விட வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு மேற்கூறிய கனவானிடம் வந்தார். இந்தப் பிரசங்கத்தைச் செய்வித்தலால் தமக்கு மிகுந்த கெளரவம் உண்டாயிற்றென்று எண்ணிக்கொண்டிருந்த அந்தப் பிரபு வந்தவரை நோக்கி, ”இங்கே நடக்கும் பெரிய புராணப் பிரசங்கம் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது பார்த்தீர்களா?” என்று தம்முடைய நல்ல எண்ணத்தை வெளியிட்டார். கேட்ட அவர், “அதைப்பற்றிச் சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பது என் கருத்து. அதற்காகத்தான் இங்கே வந்தேன்; கேட்டாற் சொல்லுவேன்” என்றார். தனவான் சொல்ல வேண்டுமென்று கூற, வந்தவர் எந்த வழியாகச் சொன்னால் அந்தப் பிரபுவிற்கு வெறுப்பு தோன்றுமோ அதைத் தேர்ந்து அவரை நோக்கி மிகவும் தைரியமாக, ”அப்புராணம் மிக்க சுவையுள்ள தென்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொருவர் இறந்தாரென்ற முடிவே அமைந்திருக்கின்றது. அது மங்களகரமாகவில்லை. அதை ஒரு வீட்டில் வைத்து நடத்துவது சுபகரமானதன்றென்று சிலர் சொல்லுகிறார்கள். கோயில் முதலிய இடங்களுள் ஒன்றில் வைத்து நடத்தச் செய்தால் உத்தமமாக இருக்கும். தாங்கள் பெரிய குடும்பியாதலாலும் எனக்கு அன்பராதலாலும் இந்த உண்மையைத் தங்களிடம் சொல்லாமலிருக்க என் மனம் துணியவில்லை, தங்கள் க்ஷேமத்தை உத்தேசித்து இதனை இன்று வெளியிட்டேன். இது தங்கள் மனத்திலேயே இருக்க வேண்டும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அப்பால் தங்கள் சித்தம் போலப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விடைபெற்றுத் தம்மிடம் சென்றார்.

அவருடைய பேச்சைக் கேட்ட அக்கனவானுக்கு மனம் பேதித்துவிட்டது. அவர் தமிழ்ப்பயிற்சியும் நாயன்மார்களிடத்திற் பக்தியும் இல்லாதவர்; ஆயினும் எல்லோரும் விரும்பும் காரியத்தைச் செய்வித்தால் தமக்கு மதிப்புண்டாகுமென் றெண்ணியவர்; பிறர் கூறுவதை அவ்வாறே நம்பிவிடும் தன்மையுடையவர்; ஆதலால் பெரிய புராணப் பிரசங்கத்தைப்பற்றிய ஐயம் அவர் மனத்திற் குடிகொண்டு விட்டது. அந்தரங்கமாகச் சிலரை அழைத்து அதைப்பற்றி விசாரிக்கலானார். கேட்ட அவர்கள், “ஈது என்ன விபரீத உணர்ச்சியாக இருக்கிறது. யாரோ ஒருவன் விஷமம் பண்ணிவிட்டான் போலிருக்கின்றது. இந்தப் பைத்தியக்கார மனுஷ்யரும் இதை உண்மையென்று நம்பிவிட்டாரே! இதை மாற்றுவது மிகவும் அசாத்தியமாயிற்றே!” என்று நினைத்து அதனைப் பிள்ளையவர்களிடம் தெரிவித்தனர்.

இவர் அதனைக் கேட்டுப் புன்னகை கொண்டு அவர்களை அனுப்பிவிட்டு அந்தப் பிரபுவிடம் வந்து, ”உங்களுக்குக் கவலையுண்டாயிருப்பது எனக்குத் தெரிந்தது. புராணத்தை இன்றோடே நிறுத்திக்கொள்வேன். அதனாற் குற்றமில்லை” என்று சொல்லி அன்று அங்கே வந்து சொல்ல வேண்டிய பகுதியைச் சொல்லி முடிவில், “நாளைமுதல் இங்கே பிரசங்கம் நடைபெறாது; இங்கே நீங்கள் வந்து அலைய வேண்டாம்” என்று கேட்பவர்களுக்குச் சொல்லிவிட்டு உரியவரிடம் விடைபெற்றுக்கொண்டு தம்மிடம் சென்றனர்.

பெரிய புராணப் பிரசங்கம் நின்று விட்டதையறிந்த அவ்வூரிலுள்ள வேறொரு கனவான் தாமே அதனை மேற்கொண்டு நடத்த எண்ணினார். எண்ணியவர் தினந்தோறும் பிரசங்கத்தை மிகச் சிறப்பாக நடத்துவிப்பதாகவும், நிறைவேறியவுடன் பிள்ளையவர்களுக்குத் தக்க சம்மானம் செய்விப்பதாகவும் சிலர்முகமாக இவருக்குச் சொல்லியனுப்பினார். அந்தக் கனவானும் முன்னவரைப் போன்றவரே.

அந்தப் புதிய கனவானது வேண்டுகோளைச் சிலர் இவரிடம் வந்து சொன்னார்கள். கேட்ட இந்தக் கல்விச் செல்வர், ”தமிழ்ப் பாஷா ஞானமும் அதில் உள்ளன்புமின்றி வெறுங் கௌரவத்தை மட்டும் உத்தேசித்துத் தொடங்கும் செல்வர்களை நம்பக் கூடாது. தம்முடைய செல்வ இறுமாப்பினால் எல்லோரும் தமக்குக் கீழ்ப்படிந்து தம் இஷ்டம்போல் நடக்கவேண்டுமென்று கருதுவார்கள். அவர்களுடைய தொடர்பே வேண்டாம். ஏழைகளாயினும் பாஷையில் அன்புடையவர்கள்பாற் பெறும் ஆதரவுதான் சிறந்தது” என்று சொல்லி அங்ஙனம் செய்ய உடன்படவில்லை.

பின்பு பல அன்பர்கள் பிள்ளையவர்களிடம் வந்து பெரிய புராணத்தில் எஞ்சிய பாகத்தையும் பிரசங்கம் செய்து பூர்த்திசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அப்படியே வேறு ஓர் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு அது பூர்த்தியாயிற்று. அந்த நகரத்தார் ஒருங்குகூடித் தக்க சம்மானம்செய்து பிள்ளையவர்களை ஆதரித்தார்கள். அதன் பின்பு அவ்வூரினர் எல்லாரும் பெரிய புராணத்தில் ஈடுபட்டு அதைப் படித்தும் படிப்பித்தும் பொருள் கேட்டுப் பொழுது போக்குவராயினர்.

இவர் தமிழ் நூல்களை நன்கு பாடஞ்சொல்லி வருதலை அறிந்து சில மாணவர்கள் பிற ஊர்களிலிருந்தும் இவரிடம் வந்து உதவி பெற்றுக் கவலையின்றிப் பாடங்கேட்பாராயினர்.

தியாகராச செட்டியார்

தியாகராச செட்டியாரென்பவர் பூவாளூரிலிருந்து வந்து இவரிடம் பாடங்கேட்டவர். அவர் கேட்கவந்த காலம் குரோதி வருஷமென்று தெரிகின்றது. பூவாளூரில் வியாபாரத்திலும் பயிர்த் தொழிலிலும் புகழ்பெற்று விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தவர். அவருடைய தந்தையாரின் பெயர் சிதம்பரஞ்செட்டியாரென்பது. பூஸ்திதியும் இருந்தமையால் தியாகராச செட்டியார் வேளாண்மையையும் வியாபாரத்தையும் கவனித்துவந்தார். இளமை தொடங்கிப் பூவாளூரிலும் அயலூர்களிலும் உள்ள அறிஞர்கள் பால் தமிழ்க்கருவி நூல்களைப் பாடங்கேட்டு வந்தனர். இயற்கையாகவே நல்லறிவு வாய்ந்தவராதலின் கற்றவற்றைச் சிந்தித்துத் தெளிந்து பயன்படுத்திக் கொள்வதிற் சிறந்தவரானார். ”மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற் பவை.”

அவர் வந்து பிள்ளையவர்களிடம் முதலிற் பாடங்கேட்டது திருச்சிற்றம்பலக்-கோவையாரென்றும் மற்ற நூல்கள் யாவும் அப்பாற் கேட்கப்பட்டன வென்றும் அவரே சொல்லியிருக்கிறார். கேட்கும் நூற்கருத்துக்களை அவர் ஊன்றிக் கேட்டுப் பயில்வதும் சிந்திப்பதும் தெளிவதும் இவருக்கு அவர்பால் அதிக அன்பை உண்டாக்கின. புதியனவாகச் செய்யுள் செய்யும் வன்மையும் அக்காலத்தில் அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. அதனாலும் இக்கவிஞர் தலைவருக்கு அவர்பாலுள்ள அன்பு வளர்ச்சியுற்றது. இவர்பாற் படிக்கவந்த காலந்தொடங்கி நூதனமாகப் பாடங்கேட்க வருபவர்களுக்குப் பாடஞ்சொல்லுதலும் இவர் நூதனமாகச் செய்யும் நூல்களையோ தனிச் செய்யுட்களையோ பனையேட்டில் அப்பொழுது அப்பொழுது எழுதுதலுமாகிய இப்பணிகளை அவர் பிறருக்குக் கொடுத்துவிடாமல் தாமே வகித்துக் கொண்டனர்; ஒரு நிமிஷமேனும் இவரை விட்டுப் பிரிந்திரார்; புதிய செய்யுட்களை இவர் சொல்லத் தாம் எழுதும்பொழுது அவற்றின் சொல்லின்பம் பொருளின்பங்களையறிந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்துவார்; அவற்றின் நயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுவார். இவைகளே அவருக்கு உண்டாகிய கல்வி முதிர்ச்சிக்கும் மற்ற மாணாக்கர்களைக் காட்டிலும் மேற்பட்டு விளங்கியதற்கும் காரணமாக இருந்தன. பிள்ளையவர்கள் செட்டியாரிடம் வைத்திருந்த அன்பு ஒப்பற்றது;

“நெஞ்சுற வருங்கலைகள் கற்குமவர் தம்மளவில்
நேயநிக ழாதவர்கள் யார்?''

வி.பா.குருகுலச் செட்டியார் பாடல் சொல்லுதலும் பொருள் சொல்லுதலும் செய்யுள் செய்தலும் அவரது குரலும் பிள்ளையவர்கள் பாடல் சொல்லுதல் முதலியவற்றிற்குப் படியெடுத்தாற் போலவேயிருக்கும். பிள்ளையவர்களுக்கு எவ்வளவு புகழுண்டோ அந்தப் புகழுக்கு அடுத்தபடியான புகழைத் தமிழ்நாட்டிற் பெற்று விளங்கினவர் அவரே.

அவர் திருச்சிற்றம்பலக் கோவையாருக்குப் பின்பு தமிழ்ப் பிரபந்தங்கள் பலவற்றைப் பாடங்கேட்டு வந்தார். அக்காலத்தில் நாடோறும் ஒவ்வொரு செய்யுளாகப் பிள்ளையவர்கள் மீது அவர் செய்துவந்த ஓரந்தாதி அபூர்த்தியாக இருக்கின்றது.

அந்நூற் பாடல்களுட் சில வருமாறு:-

“உன்னையொப் பாரிங் கெவரு மிலையொப் புரைத்திடினீ
நின்னையொப் பாயருண் மீனாட்சி சுந்தர நின்மலவெற்
கன்னையொப் பாய்பின்னு மத்தனொப் பாய்நின் னருளைப்பெற்ற
என்னையொப் பாருமுண் டோகடல் சூழு மிரும்புவிக்கே”. (2)

“பெற்றாரு ணின்னைப்பெற் றார்போற்பெற் றார்களும் பேண்பிறப்பை
உற்றாரு ணின்றனைப் போலவுற் றார்களு முன்னருளை
நற்றார ணியுளெனைப் போற்பெற் றார்களு நாடுறினு
மற்றார்முற் றோர்தரு மீனாட்சி சுந்தர மாமணியே.” (10)

“தக்கார் தகவில ரென்ப தவரவர் தம்மெச்சத்தால்
மிக்கா ரறியப் படுமென னின்னை விரும்பிப்பெற்றோர்
தக்கா ரெனநின்றன் னாலுணர்ந் தன்றுகொ றண்டமிழ்தேர்
மிக்கார் புகழ்தரு மீனாட்சி சுந்தர மெய்ம்மையனே.” (17)

“உள்ளும் பவமொரு கோடி யுறினு முறுகவந்த
விள்ளும் பவந்தொறு மீனாட்சி சுந்தர மெய்ம்மையநீ
எள்ளுஞ் செயலிற் புகுத்தாதென் பானின்குற் றேவலையே
கொள்ளும் படிதொண்ட னாக்கொள்வை யேலிக் குவலயத்தே.” (47)

*1 அரன்வாயில் வேங்கடசுப்புப் பிள்ளை

அப்பால் இவரிடம் அரன்வாயில் வேங்கடசுப்புப்பிள்ளை என்ற ஒருவர் படிக்க வந்தார். அவர் இவர்பால் வந்து ஆதரிக்கப்பெற்று முறையாகப் பாடங்கேட்டு நல்ல தமிழ்ப் பயிற்சியையும் செய்யுள் செய்யும் ஆற்றலையும் அடைந்து சென்று புகழ்பெற்று விளங்கினார். அவர் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்ட செய்தி வேதநாயகம் பிள்ளைக்கு ஒருமுறை அவர் எழுதிய கீழ்க்கண்ட பாடலால் விளங்கும்:

“மீனாட்சி சுந்தரனா மேலோன் சிரகிரியில்
தானாட்சி யாவாழ் தருணத்தே – தேனாட்சிச்
செந்தமிழ் வன்பாற் சிறிதுணர்ந்தேன் மன்னவித்தாற்
பந்தமெனக் குண்டேயுன் பால்.”

திருவீழிமிழலைச் சாமிநாத கவிராயர்

திருவீழிமிழலைச் சாமிநாத கவிராயரென்பவர் அத்தலத்திலுள்ள கல்விமான்கள் சிலர் சிலரிடம் கருவி நூல்களையும் திருவிளையாடற் புராணம் முதலிய காப்பியங்களையும் முறையே பாடங் கேட்டுத் தெளிந்தனர். பின்பு கம்பராமாயணம், பெரிய புராணம் முதலியவற்றை வாசிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவராய்க் குரோதி வருஷத்தில் திரிசிரபுரம் வந்து இவர்பால் முதலில் கம்பராமாயணத்தைப் பாடங்கேட்டார். அவருடைய நுண்ணறிவையும் இனிய சாரீரத்தையும் அறிந்த பிள்ளையவர்கள் பிரியத்துடன் பாடஞ் சொன்னார். *2 தாமே எழுதிவைத்த கம்ப ராமாயண ஏட்டுச்சுவடியொன்றை அவருக்குக் கொடுத்தார். அவர் இவருடைய பேரன்பினால் அந்நூலில் நல்ல பயிற்சியையடைந்தார்; அதிலிருக்கும் கருத்தைப் பிறருக்குச் சுவைபடச் சொல்லி மகிழ்விக்கும் ஆற்றலையும் பெற்றார்; அடிக்கடி பிறருடைய முயற்சியினால் இவருக்குத் தெரியாமல் தனியே வேறிடஞ் சென்று கம்ப ராமாயணப் பிரசங்கம் செய்து வந்தார். அதற்குக் காரணம் இவர்பாலுள்ள அச்சமும் நாணமுமே.

அவ்வாறு அவர் இருத்தலை யறிந்து ஒரு நாள் இவர் அவர் பிரசங்கம் செய்யுமிடஞ் சென்று மறைவாக இருந்து கேட்டு வியப்புற்று அவரைப் பின்னும் பிரகாசப்படுத்த வேண்டும் என்று நினைந்தார். சில காலத்துக்குப் பின்பு ஒரு சபை கூட்டி கம்ப ராமாயணத்திலுள்ள சில சுவையான பாகங்களை எடுத்துப் பிரசங்கிக்கச் செய்து ‘கம்ப ராமாயணப் பிரசங்க வித்துவான்’ என்ற பட்டத்தை அளித்ததன்றி, சால்வை யொன்றையும் தமது கையாலேயே வழங்கினர். அதுமுதல் அவருக்குத் தமிழ்நாட்டிற் கம்ப ராமாயணப் பிரசங்க விஷயத்தில் மிக்க கெளரவம் உண்டாயிற்று. வாழ்நாள் முழுவதும் கம்ப ராமாயணம் முதலியவற்றைப் பிரசங்கம் செய்து காலங்கழித்து வந்தார். தம்மை நன்னிலைக்குக் கொண்டுவந்த பிள்ளையவர்களை மறவாமல் எந்த இடத்திற் பிரசங்கம் செய்தாலும் இவ்வாசிரியருடைய துதியாக ஒரு பாடலைச் சொல்லிவிட்டுத்தான் பின்பு பிரசங்கிக்கத் தொடங்குவார். இங்ஙனம் அவர் துதியாகச் செய்த பாடல்கள் பல.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:


1.  அரன்வாயிலென்பது தொண்டை நாட்டிலுள்ளதோரூர்.

2.  கம்ப ராமாயணத்தை இவர் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பிரதிகள் எழுதி வைத்திருந்தனர்; அவற்றுள் ஒன்றை சாமிநாத கவிராயருக்கும், வேறொன்றை பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் கொடுத்தனர்; மற்றொன்றைத் தாமே வைத்துக் கொண்டிருந்தனர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s