சிவகளிப் பேரலை- 95

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

95. கல்லில் பூத்த மலர்

.

அதிம்ருதுலௌ மம சரணா வதிகடினம்

தே மனோ வானீச’ /

இதி விசிகித்ஸாம் சந்த்யஜ

தாமாஸீத்கிரௌ ததா ப்ரவேச: //

.

மிகமென்மை என்பாதம் உன்மனதோ வெகுகடினம்

அகத்துள் மூளும் அதிமுரண் அகற்றிடு

அவ்விதம் கருதிடின் பவானி மணாளா

எவ்விதம் மலையில் உழன்று திரிந்தாயே?

.

     கல்லினுள் தேரைக்கும், கருப்பையுள் உயிர்க்கும் உணவை உவந்து ஊட்டுபவன் அம்மையப்பனாகிய சிவபெருமான். உயிர்கள் அனைத்தின் மீதும் இரக்கம் கொண்ட கருணாகரன், பெரும் கருணையாளன் தியாகராஜனாகிய சிவபெருமான். அந்தக் கருணைக்கடலின் திருப்பாதங்கள் மலரிலும் மென்மையானவை. அவரை இடைவிடாது தியானிக்கின்ற  நமது மனமோ பல்வேறு எண்ணங்களால் கரடுமுரடாக இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி, நமது கல் போன்ற மனத்திலே பூக்காமல் போய்விடுமோ இறை அருள்? வருந்த வேண்டாம். அதற்காகவே, இந்த ஸ்லோகத்தைப் படைத்திருக்கிறார் பகவான் ஸ்ரீஆதிசங்கரர்.

     என் பாதங்களோ மிக மென்மையானவை, பக்தா உனது மனதோ மிகவும் கடினமானது என்று சிவபெருமானே உன்னகத்துள் எனது உய்வுக்கு முரணான சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக நீக்கிவிடு. பவானியின் மணாளனாகிய சிவபெருமானே, அவ்வாறு நீர் உண்மையிலேயே கருதுவீராயின், மிகவும் கரடுமுரடான இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலே நீர் எப்படி உழன்று திரிகின்றீர்? என்று நமக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

.முன்னர் 80-வது ஸ்லோகத்திலும் இதேபோல், பக்தர்களின் மனது கடினம் வாய்ந்ததாக இருந்தாலும், அவற்றில் வாசம் புரிய வேண்டும், அதிலே நடனம் புரிய வேண்டும் என்ற ஆவலினால்தானே, மலைப் பகுதிகளில் நடனமிட்டு சிவபெருமானே நீர் ஒத்திகை பார்த்து வருகிறீர்? என்று ஆதிசங்கரர் வினவியிருப்பதை நினைவில் கொள்க. முக்தி நெருங்கும் நேரத்தில் சந்தேகம் வந்து குழப்பலாம். ஆகையால் நம்மை திடப்படுத்த சந்தேக நிவர்த்தியாக இந்த ஸ்லோகத்தை ஆதிசங்கரர் மொழிந்துள்ளார்.

     $$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s