-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
96. தறிகெட்ட மனக்களிற்றுக்கு தறிக்கட்டான திருப்பாதம்
.
தைர்யாங்குசே’ன நிப்ருதம்
ரபஸாதாக்ருஷ்ய பக்திச்’ருங்கலயா /
புரஹர சரணாலானே
ஹ்ருதய- மதேபம் பதான சிந்த்யந்தரை: //
.
உறுதியாம் அங்குசத்தால் அடங்கிய மனக்களிற்றை
பக்தியாம் சங்கிலியால் வேகமாய் இழுத்திட்டு
திருவடியாம் தறிக்கட்டில் அறிவாம் கருவிகளால்
திரிபுரம் எரித்தவரே கட்டிவைத்து அருள்வீரே!
.
முன்பு 20-வது ஸ்லோகத்தில், மனத்தை அலைபாயும் குரங்காக வர்ணித்து அதனைக் கட்டிவைக்கும் கயிறாக சிவபெருமான் மீதான பக்தியை உவமைப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், இந்தச் செய்யுளிலும் இதற்கு அடுத்த செய்யுளிலும் மனத்தைக் கட்டுக்கடங்காத மதயானைக்கு ஒப்புமைப்படுத்துகிறார். அதனைக் கட்டுப்படுத்தி அருள்வதும் சிவபெருமான் மீதான பக்திதானே! இந்த ஸ்லோகத்தில் அதுபற்றி ஜகத்குரு என்ன உரைத்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:
யானைக்கு மதம் பிடித்தாலும் அதன் பாகனுக்குக் கட்டுப்படும். அதற்குரிய உபாயங்கள் பாகனுக்கு நன்கு தெரியும். அதனைப்போல கட்டுக்கடங்காமல் திரியும் நமது மன யானையை அடக்கியருள அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய பசுபதியை வேண்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
.சிவபெருமான் மீதான நம்பிக்கை என்ற உறுதியே, அங்குசமாகச் செயல்பட்டு எனது மதம் பிடித்த மன யானையை அடக்கியுள்ளது. அவ்வாறு அடங்கியுள்ள யானையை மீண்டும் மதம் பிடித்து அட்டகாசம் செய்ய இயலாத வண்ணம், திரிபுரத்தை நகைப்பு ஒன்றின் மூலமே எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானே, தங்கள் மீதான இடைவிடாத பக்தி என்ற சங்கிலி மூலம் வேகமாய் இழுத்துக் கட்டி வையுங்கள். வாழ்வின் பூரணத்தை அருள்கின்ற உங்களது திருவடிகளாகிய தறிக்கட்டில் (யானையை கட்டி வைக்கப் பயன்படும் கனமான கம்பத்திற்குப் பெயர் தறிக்கட்டு. கட்டுத்தறி என்றும் கூறுவர்), அவை பற்றிய சிந்தனை – அதாவது இறைவனின் திருவடித் தாமரை குறித்த தியானம் – என்கிற அறிவுக் கருவிகளின் துணை கொண்டு கட்டி வைத்து, உங்களது அருளைப் பொழியுங்கள் என்கிறார்.
$$$