தமிழில் எழுத்துக் குறை

-மகாகவி பாரதி

-1-

ஸம்ஸ்க்ருதம், ஹிந்து, பெங்ககாளி, மஹாராஷ்ட்ரம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், முதலிய மற்ற பாரத பாஷைகளிலெல்லாம் வர்க்க எழுத்துக்கள் உண்டு.

அதாவது, க-ச-ட-த-ப என்ற ஐந்து வல்லெழுத்துக்களில் ஒவ்வொன்றும் நான்கு வேறுபாடுகள் இருக்கின்றன. திருஷ்டாந்தமாக:

வடசொல்     பொருள்

1.   பரம்           மேலானது

2.   பரம் (ப=Ph)     பயன்

3.   பலம் (ப=b)     வலிமை

4.   பாரம் (ப=bh)    சுமை

வெவ்வேறு எழுத்துக்களை முதலாகக் கொண்ட இந்த நான்கு சொற்களையும் தமிழில் வழங்கி வருகிறோம். ஆனால், “எல்லி செட்டிலெக்க ஏகலெக்க” என்பது போல எல்லாவற்றிற்கும் ஒரே “ப” தான் போடுகிறோம். 

ஆனால் ஸம்ஸ்க்ருதச் சொற்களை ஸம்ஸ்க்ருத வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லையதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லை யென்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி, நியாயமென்று வைத்துக் கொள்வோம். 

வெளிநாட்டு ஊர்களின் பெயர்களையும் மனிதர்களின் பெயர்களையும் நாம் சரியானபடி சொல்ல வேண்மாடு, அதுவும் வேண்டாமா? “சுதேசமித்திரன்” பத்திரிகையை சென்ற 15 வருஷங்களாகப் படித்து வரும் ஒர் ஐயங்கார் நமது நிதானக் கட்சித் தலைவராகிய ஸ்ரீ கோகளேயின் பெயரைத் தப்பாக உச்சரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ‘தங்கம்’ என்ற சொல்லில் ‘க’ உச்சரிப்பது போல அப்பெயரின் முதலெழுத்தாகிய “கோ” (Go)வை வலிதாகச் சொல்ல வேண்டும். பிராமணர் “கோபுரம்” என்று சொல்லும்போது “கோ”வை எப்படிச் சொல்லுகிறார்களோ அதுபோலக் “கோகளே”யின் முதலெழுத்தைச் சொல்ல வேண்டும். இரண்டாவதெழுத்தாகிய “க” என்பதை “க்ஹ” என்ற ஒலி இலேசாகத் தோன்றும்படி அழுத்தி உச்சரிக்கவேண்டும். “மகம்” என்று வைதிகப் பிராமணர் சொல்வது போலே. ௸ ஐயங்கார் இதை “கோஹலே” என்று சொன்னார். அவர் மேல் குற்றமில்லை. “சுதேச மித்திரன்” மேலும் குற்றமில்லை; தமிழில் எழுத்துக் குறைகிறது.

பெள்ளாரி, குத்தி, பனாரஸ், பம்பாய் என்று நாட்டு ஊர்ப் பெயர்களைக்கூட நாம் விபரீதமாக எழுதும்படி நேரிட்டிருக்கிறது. இதற்கென்ன விமோசனம்?

கல்கத்தாவில் இருக்கும்போது ஸ்ரீமான் அரவிந்த கோஷ் (இவர் பெயரையும் தமிழில் சரியாக எழுத இடமில்லை. “Ghosh” என்பதை “Cosh” என்று எழுத நேரிடுகிறது!) – ஸ்ரீமான் அரவிந்தர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினாராம். அங்குத் தென்னாட்டு மனிதர் ஒருவர் இவருக்கு நமது அரிச்சுவடி முழுதும் கற்றுக் கொடுத்தார். முதல் பாடப் புஸ்தகமும் நடந்தது. அப்படியிருக்கும் ஒருநாள் ஒரு தமிழ்நாட்டுப் பத்திரிகை அகப்பட்டது. அதில், “பீரேந்திரநாத் தத்த குப்தர் வழக்கு” என்று மகுடமிட்டு ஒரு வியாஸம் எழுதியிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு அரவிந்தர் தமது தமிழ் வாத்தியாரிடம், “இதென்ன?” என்று கேட்டார்.

வாத்தியார், “இது ஒரு பெங்காளிப் பெயர்” என்று சொன்னாராம்.

அரவிந்தர் மயங்கிப் போய், “எப்படி?” என்ரு கேட்டார். 

வாத்தியார், “Birendranath Dutta Gupta” என்று அச்சொல்லைப் பெங்காளி ரூபத்திலே சொன்னார்.

“இங்கிலீஷ் தெரியாத கிராமத்துத் தமிழர் இச்சொல்லை எப்படி வாசிப்பார்கள்?” என்று அரவிந்தர் கேட்டார்.

“நீர் வாசித்தது போலவே Pirendiranata Tatta Kuptar (t..த) என்றுதான் வாசிப்பார்கள்” என்று வாத்தியார் சொன்னாராம்.

இன்றும் அரவிந்தர் இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்.

நமது பத்திரிகைகளில் ஐரோப்பாவிலுள்ள நகரங்கள், மலைகள், முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும்போது கண் கூசுகிறது. அதைத் தமிழ் மாத்திரம் அறிந்த தமிழர் எப்படி வாசிப்பார்களென்பதை நினைக்கும்போதே காது கூசுகிறது. 

இங்கிலீஷ் அக்ஷரத்தில் ப்ரெஞ்ச், அரபி, பார்ஸி, ஸம்ஸ்க்ருதம் முதலிய பாஷைகளின் பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு இங்கிலீஷ் அரிச்சுவடி இடங்கொடாததைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஐரோப்பிய பாஷைகளுமே அந்நிய பாஷைகளிலுள்ள விசேஷ உச்சரிப்புகளுக்கு இணங்கும்படி சில தனிக் குறிகள் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டிருக்கின்றன. 

நாமும் அப்படியே சில விசேஷக் குறிகள் ஏற்பாடு செய்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

ஏற்கெனெவே நான் இந்தக் குறையை நீக்கும் பொருட்டாக மிகவும் சுலபமாக ஐந்து நிமிஷங்களில் யாரும் கற்றுக் கொள்ளக்கூடிய சில குறிகள் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் இப்புதிய வழியைத் தமிழ் நாட்டுப் பத்திராதிபர்களும் பிறகும் அறியூம்படி துண்டுப் பத்திரிகைகள் போட்டு வேலை செய்வதற்கு வேண்டிய செளகர்யங்கள் எனக்கு இன்னும் சில மாதங்கள் கழிந்த பிறகுதான் ஏற்படும்.

இப்புதிய உபாயத்தை அனுஸரிப்பதால் இப்போது நாமெல்லோரும் எழுதி வரும் முறைமைக்கு யாதொரு ஸங்கடமும் உண்டாகாது புதிய குறிகள் தெரியாதவர்கள் கூட வழக்கம் போலவே படித்துக் கொண்டு போவார்கள். யாருக்கும் எவ்விதமான சிரமமும் ஏற்படாது. நமது பாஷைக்கு நமது அரிச்சுவடி போதும். அந்நிய தேசப்பெயர்கள் முதலியவற்றுக்காக மாத்திரமே இப்புதிய முறை ஏற்பட்டது. எனது புதிய முறையை இப்போதே அறிந்து கொள்ல விரும்புவோர் கீழே கண்ட என் விலாசத்துக்கு இரண்டணா தபால் முத்திரை வைத்தனுப்பினால் அவர்களுக்கு இம்முறையை நல்ல கையெழுத்தில் தெளிவாக எழுதுவித்து அனுப்புகிறேன்.

-2-

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ என்ற எழுத்துக்களைத் தமிழ் அரிச்சுவடியில் நமது பூர்வீகர் சேர்த்திருக்கிறார்கள். இவற்றைச் சேர்க்காவிட்டால் தமிழ் நேரே பேச முடியாமலும் எழுத முடியாமலும் போய்விடுமென்று அவர்களுக்கு அச்சமுண்டாயிற்று. 

தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி போதாத வண்ணமாக நமது பாஷை வளர்ச்சி பெற்றவுடனே நமது முன்னோர்கள் மேற்காட்டிய எழுத்துக்களையும் சேர்த்தார்கள்.

நாமும் அப்படியே நமக்கு இக்காலத்தில் ஏற்படும் உச்சரிப்புக் கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு, கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கலாமென்று சில பெரியோர் கருதுகிறார்கள். ஆனால் அதைக் காட்டிலும் அடையாளங்கள் போடுவது சுலபமான வழி. 

இப்போதுள்ள அரிச்சுவடியிலே பழகிய தமிழருக்கு மேற்படி அடையாளங்களால் எவ்வித ஸங்கடமும் நேரிடாது. தப்பாகவோ, சரியாகவோ வழக்கம்போல வாசித்துக்கொண்டு போவதை அடையாளங்கள் தடுக்க மாட்டா. கிரந்த எழுத்துக்களைக் கொண்டு சேர்த்தால் பாதி படிக்கும் போதே நிறுத்திவிட நேரிடும்.

ப்ரெஞ்ச், இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் – உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகர்யப் படுத்திக் கொள்ளுகிறர்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s