விடுதலைப் போரில் அரவிந்தர் – 1

-திருநின்றவூர் ரவிகுமார்

அறிமுகம்: 

சுதந்திர இந்தியா உருவாகப் பாடுபட்ட விடுதலை வீரர்களுள் வங்கத்தைச் சார்ந்த மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் முக்கியமானவர். புரட்சிவீரராக வாழ்வைத் துவங்கி, குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விடுதலை வேட்கையை தீப்போலப் பரப்பியவர் அவர். ஆனால், பின்னாளில் போராட்ட வாழ்விலிருந்து விலகி, ஆன்ம விடுதலைக்கான பயணத்தையும் உலக ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளையும் பாண்டிசேரியில் இருந்தபடி தொடர்ந்தார். 

சிறந்த இயக்க நிர்வாகி, விடுதலைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி எனப் பன்முகம் கொண்டு இலங்கியவர் மகரிஷி ஸ்ரீ அரவிந்தர். திலகருக்குப் பின் இந்திய சுதந்திரப் போரை வழிநடத்தி இருக்க வேண்டிய மகத்தான ஆளுமையான அரவிந்தர் ஆன்மிக விடுதலை நோக்கி நகர்ந்தது, இறைவன் சித்தம் போலும். 

இந்த ஆண்டு மகரிஷி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினத்தின் 150வது ஆண்டு நிறைகிறது (1872- 2022). இவரது பிறந்த நாளில் தான் பாரதம் 1947இல் சுதந்திரம் பெற்றது. இதையொட்டி, நமது இணையதள ஆசிரியர் குழு  உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார் அரவிந்தரின் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாக இங்கே தொடராக எழுதுகிறார். 

சுதந்திர நன்னாளில், மகரிஷி அரவிந்தரின் பிறந்த நாளிலேயே இத்தொடர் இங்கு தொடங்குகிறது.இரண்டு நாட்கள் இடைவெளியில் இத்தொடர் நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.

அத்தியாயம்-1

குடும்பமும் குழந்தைப் பருவமும்

அந்த இளைஞன் கப்பலின் மேல் தளத்தில் நின்று, நெருங்கி வரும் நிலத்தைப் பார்த்தான். பதினான்கு ஆண்டுகள் கழித்து தன் தாய்நாடான பாரதத்தைப் பார்க்கிறான். மிகச் சிறியவனாக இங்கிலாந்து சென்று, வளர்ந்து வாலிபனாகத் திரும்புகிறான். அன்றைய பம்பாய், மும்பா தேவி என்ற தெய்வத்தின் பெயரால் மும்பாய் எனப்படுகிறது இன்று. தாய் மண்ணில் கால் வைத்தவுடன் அதுவரை அவன் மீது கனத்த அங்கி போல் போர்த்தியிருந்த இருள் சட்டென விலகி விழுந்ததை உணர்ந்தான். பரபரப்பான பம்பாய் துறைமுகத்தில் அவன் அமைதியும் நிசப்தமும் தன்னுள் முகிழ்வதை உணர்ந்தான். அந்த வினோத உணர்வு பல மாதங்கள் அவனுடன் இருந்தது.

பாரத மண்ணில் காலடி வைத்தவுடன் அரிய ஆன்மிக அனுபவத்தைப் பெற்ற அந்த இளைஞனின் பெயர் அரவிந்த கோஷ். அந்தக் காலத்தில் அந்தப் பெயர் சற்று வித்தியாசமானதாக இருந்தது. பல்லாண்டு கால யோக சாதனைக்குப் பிறகு கிடைக்கும் அந்த வினோதம் – அமைதியும் சாந்தமும் ஆக ஆன்மா தன்னை உணரும் அந்த வினோதம் – தேடாமலே கேட்காமலே அவனுக்குக் கிடைத்தது. அவன் அப்போது யோகியும் அல்ல. யோக சாதனைகளைப் பற்றி தெரிந்தவனும் அல்ல. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவனுக்கு இல்லை. அப்படி இருந்தும் அது அவனுக்கு கிடைத்தது. ஒருவேளை பாரதத்தாய் தன் மகனை வரவேற்கும் விதமாக தன் ஆன்மிகச் செல்வத்தை அவனுக்கு அளித்தாளோ…

அந்த நிகழ்வு வழக்கத்துக்கு மாறான எதிர்பாராத விஷயங்கள் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதைக் காட்டுகிறது. அவரது வாழ்க்கை பல முகங்கள் கொண்டு வைரமென ஜொலிப்பதைக் காட்டுகிறது. கவிஞர், தத்துவ ஆசான், பாரதப் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் புது நோக்கில் தெளிவு படுத்தியவர், தேசியவாதி, புரட்சியாளர், எல்லாவற்றுக்கும் மேல் ஒரு மகத்தான மகானாக, யோகியாக அவர் வாழ்ந்தார்.

யோகி என்றால் வாழ்வைத் திறந்து வனமேகிய துறவியல்ல. “நம்முடைய நோக்கம் வாழ்வில் இருந்து விலகச் செய்யும் ஆன்மிகம் அல்ல, ஆன்மிகத்தால் வாழ்வை வென்று கடப்பது” என்று புதுப்பாதையில் பயணித்த யோகி. அரசியலில் இருந்து விலகி அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆன்மிக சக்தியை நாடி அவர் பயணித்ததற்கு காரணம் தாய்நாட்டின் மீது இருந்த அன்பு, மானுடத்தின் மீதாக விரிவடைந்ததே.

மானுடத்தின் மீது விரிந்த அந்த அன்பின் தொடக்கத்தைப் பார்ப்போம்.

***

கிருஷ்ண தன கோஷ், ஸ்வர்ணலதா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் ஸ்ரீ அரவிந்தர். கிருஷ்ண தன கோஷ் ஆங்கில மருத்துவர். அறுவைச் சிகிச்சை நிபுணர். இன்றைய வங்கதேசத்தில் மூன்றாவது பெரிய நகரமாக இருக்கும் குல்னா நகரில் அரசு மருத்துவராக அவர் இருந்தார். அப்போது கொல்கத்தா (கல்கத்தா) மாநகரில் அவரது நண்பர், பிரபல வழக்குரைஞர், மன்மோகன் கோஷ் வீட்டில் 1872 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் பிறந்தார்.

கிருஷ்ண தன கோஷ் தன் குழந்தைக்கு ‘அரவிந்தன்’ என்று பெயரிட்டார். அந்தக் காலத்தில் அது புதுமையாக இருந்தது. தாமரை மலரை சமஸ்கிருதத்தில்  ‘அரவிந்தம்’ என்பார்கள். தெய்வீக உணர்வின் குறியீடாக இந்துக்கள் தாமரையைக் கருதுகிறார்கள். குழந்தைக்கு சூட்டப்பட்ட அந்தப் பெயர் பின்னாளில் பொருத்தமானதாக வெளிப்பட்டது.

டாக்டர் கி த கோஷ் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். 1869இல் அவர் மருத்துவ மேற்படிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு கடல் கடந்துபோய்ப் படித்தார். அன்று கடல் பயணம் மரபுக்கு எதிரானது; எனவே ஜாதி விலக்கத்திற்கு காரணமானது. அதுபோலவே அவர் திருமணமும் முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருந்தது. தீ வளர்த்து வலம் வரும் வைதீகத் திருமணத்திற்கு மாறாக பிரம்ம சமாஜ முறைப்படி ஸ்வர்ணலதாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.

அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷ்

ஸ்வர்ணலதாவின் தந்தை ராஜ்நாராயணன்,  ‘வந்தேமாதரம்’ பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி, சிறந்த கல்வியாளர் என புகழ்பெற்ற ஈஸ்வர சந்திர வித்யா சாகர் ஆகியோரின் சமகாலத்தவர் மட்டுமின்றி, பிரபலக் கவிஞர் மைக்கேல் மதுசூதனருக்கு நெருங்கிய நண்பர். பிரம்ம சமாஜத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அந்தக் காலத்தில் எழுச்சி பெற்றுவந்த புதிய இந்தியாவின் புதல்வராகக் கருதப்பட்டார். சிறந்த தேசபக்தரான அவர் ஹிந்துத் திருவிழா என்ற பெயரில் சுதேசிப் பொருள்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அவரது அறிவையும் நடத்தையையும் கண்டு மதித்த மக்கள் அவரை ‘ரிஷி’  ராஜ்நாராயணன் என்றே அழைத்தனர்.

அவர் தன் மகள் ஸ்வர்ணலதாவை நன்கு படிக்க வைத்தார். ஸ்வர்ணலதாவுக்கு சில அரிய திறன்கள் இயல்பாகவே அமைந்திருந்தன. அவள் அழகானவள் மட்டுமல்ல, கவிதை எழுதும் திறன் பெற்றவள். தன் கணவரின் இந்திய, ஆங்கில நண்பர்களுடன் பழகும் மேட்டுக்குடிக்குரிய சமூக நடத்தைகள் இயல்பாக கைவரப் பெற்றவள். அதே வேளையில் சாதாரண மக்கள் மீது பரிவு காட்டுபவளாக இருந்தாள். ரங்கபூர் என்றவூரில் தன் கணவருடன் வாழ்ந்தபோது அவ்வூர் மக்களால் ‘ரங்கபூர் ரோஜா’ என்று பாசத்துடன் அழைக்கப்பட்டாள். ஆனால் விதியின் விளையாட்டால் அவளது பிற்காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவளானாள். அதனால்  அவளது குடும்பத்தின் மீதும் கவலையின் நிழல் கவிழ்ந்தது.

அரவிந்தரின் தாய் ஸ்வர்ணலதா தேவி

மருத்துவ மேற்படிப்புக்குப் பிறகு இந்தியா வந்த டாக்டர் கிருஷ்ணதன கோஷ் பாகல்பூர், ரங்கபூர், குல்னா மாவட்டங்களில் அரசு மருத்துவராகப் பணிபுரிந்தார். அவர் இந்தியா வரும்போது ஆங்கில கனவான் போல மாறி இருந்தார். பழமைவாதம் மற்றும் சோம்பலில் மூழ்கி இருந்த இந்திய வாழ்க்கை முறையை அவர் வெறுத்தார்; ஆங்கில நடை, உடையை மட்டுமன்றி சிந்தனைப் போக்கையும் கொண்டிருந்தார். கடல் கடந்து சென்ற ‘பாவ’த்திற்காக பிராயசித்தம் செய்ய முடியாது என்றார். அவர், சிலையை உடைக்கவில்லையே தவிர மற்றபடி உருவ வழிபாட்டை மறுப்பவராக இருந்தார். மூட நம்பிக்கைகளையும் மரபையும் எதிர்த்ததால் ‘பெரிய நாஸ்திகரா’கவே கருதப்பட்டார்.

இதனாலும், அவருக்கு ஆங்கில வாழ்க்கை முறை மிகவும் பிடித்ததாக இருந்ததாலும், அவருக்கு பல ஆங்கிலேயர்கள் நண்பர்களாக இருந்ததாலும் அவரை ஆங்கிலேயர்களின் அடிவருடி என்று சொல்லிவிட முடியாது. ஆங்கில அரசின் தவறான செயல்களையும் ஆங்கிலேயர்களின் திமிரான நடத்தைகளையும் அவர் கண்டித்தே வந்தார். அது மட்டுமன்றி தன் தாய்நாட்டு மக்கள் மீது அவருக்கு அளப்பற்ற அன்பு இருந்தது. ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவி செய்தே அவரது செல்வம் கரைந்து போனது மட்டுமல்ல, அதனால் கஷ்டமும் பட்டார்.

 ‘டாக்டர் கிருஷ்ண தன கோஷ் கூரிய மதி படைத்தவர். இரக்கம் உள்ள இதயம் கொண்டவர். மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்துத் துடிப்பவர். உணர்ச்சி வேகத்தில் உடனடியாக தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் செலவிட்டு அதைப் போக்க  முனைபவர். இதுதான் அவரது குணச்சித்திரம்’ என்று சிறந்த தேசபக்தரான பிபின் சந்திர பாலர் தன்னுடைய ‘இந்திய தேசியம்: கருத்தும் அதை காத்தவர்களும்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

டாக்டர் கி த கோஷ் ரங்கபூரில் இருந்தபோது அவரது முயற்சியால் கட்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய்க்கு கி த கால்வாய் என்று பெயர் இருந்தது. குல்னாவில் ஒரு பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இதெல்லாம் மக்கள் நலன் மீது அவருக்கு இருந்த அக்கறையையும் மக்களுக்கு அவர் மீதிருந்த மதிப்பையும் காட்டுகிறது.

குழந்தையாக இருந்த போது  அரவிந்தரின் வீட்டில் ஆங்கிலச் சூழ்நிலையே நிலவியது. தாய்மொழியான வங்க மொழியைப் பேச தடையிருந்தது. ஆங்கிலம் அல்லது ஹிந்துஸ்தானி தான் பேசப்பட்டது. அவருக்கு ஐந்து வயதானபோது அவரது இரண்டு அண்ணன்களுடன் சேர்ந்து டார்ஜிலிங்கில் இருந்த ஆங்கிலக் குழந்தைகளுக்கான கிறிஸ்தவப் பள்ளியில் தந்தையின் செல்வாக்கினால் சேர்க்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அங்கிருந்தார். படிப்பு சாதாரணமானதாக இருந்தது. ஆனால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் வனங்களும் மலர்களும் என இயற்கை அழகும் அனுபவமும் அவர் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

டார்ஜிலிங் வாழ்க்கையைப் பற்றி அரவிந்தர் பின்னாளில் தெரிவித்த ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. ‘ஒரு நாள் நான் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பிரம்மாண்டமான இருள் என்னுள் புகுந்து என்னையும் என்னைச் சுற்றியுள்ளவற்றையும் கவ்விக் கொண்டது. அந்த தாமஸ இருள் இங்கிலாந்தில் இருந்து நான் பாரதம் வரும் வரை அத்தனை காலமும் என் மீது இருந்தது. பாரதம் வந்த பிறகுதான் அது விலகியது’  என்று கூறியுள்ளார்.

இதைத் தவிர  அரவிந்தரின் குழந்தைப் பருவம் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நிகழ்வுகள் ஏதுமில்லை. ஓரிரு சம்பவங்கள்தான் கிடைத்துள்ளன.

டார்ஜிலிங்கில் மாணவர் விடுதியில் தங்கி இருந்தபோது ஒரு மாணவன் இரவு தாமதமாக வந்து கதவைத் தட்டினான். யாரும் பதில் அளிக்கவில்லை. கதவு தட்டுவது தொடர்ந்தது. கடைசியாக  அரவிந்தரின் அண்ணன் மன்மோகன் எரிச்சல் அடைந்து, “ நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் கதவைத் திறக்க முடியாது” என்றான்.

மற்றொரு முறை மூன்று சகோதரர்களும் தங்கள் பாட்டனார் ராஜ்நாராயணனுடன் மாலை நடை போனார்கள். சிறுவர்கள் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டும் ஆடிக் கொண்டும் போனதில் வயதானவரை மறந்து விட்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து இருளத் தொடங்கிய போது அவரைக் காணவில்லை. பயந்து கொண்டே வந்த வழியே குரல் எழுப்பி தேடிக் கொண்டு போனால் அவர் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தார்.

அரவிந்தருக்கு அவருடைய தாய்மாமனுடன் நெருக்கம் அதிகம். மாமாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஒரு முறை அவர் கண்ணாடி முன்பு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கம் ஆங்கில உடையில் அரவிந்தர் வந்தார். அவரைப் பிடித்து கண்ணாடி முன்பு நிறுத்திய அவரது மாமா, ‘அதோ பார், ஒரு குட்டி குரங்கு’ என்றார். அந்தக் கண்ணாடியைப் பிடுங்கி மாமா முன்பு நீட்டியபடி, ‘இங்கே பார் மாமா, பெரிய குரங்கு!’ என்றாராம். மாமாவுடன் நெருக்கம் கடைசி காலம் வரை நீடித்தது.

பெற்றோர், சகோதரர்களுடன் சிறுவன் அரவிந்த கோஷ்

டாக்டர் கி த கோஷ் தன் மகன்களின் குறிப்பாக  அரவிந்தரின்  எதிர்காலம் பற்றி பல நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார். மகன்களின் கல்விக்காக இரண்டாம் முறை இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்துக்கு சென்ற போது  அரவிந்தருக்கு வயது ஏழு. மூத்த மகன் வினயபூஷனுக்கு வயது பன்னிரண்டு. இரண்டாம் மகன் மன்மோகனுக்கு வயது ஒன்பது. அவர்கள் இங்கிலாந்தில் இருந்தபோது பிறந்த நாலாவது மகன் பிரேந்திரன்.

டாக்டர் கி த கோஷ் ரங்கபூரில் பணிபுரிந்த போது அவரது நண்பரான ஆங்கில நீதிபதியின் மைத்துனர் ரூவெட் என்ற பாதிரியாரிடம் தன் மகன்களை ஒப்படைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார். ரூவெட் குடும்பம் அப்போது மான்செஸ்டரில் இருந்தது.

$$$

(அடுத்த அத்தியாயம் புதன்கிழமை வெளியாகும்)

.

One thought on “விடுதலைப் போரில் அரவிந்தர் – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s