-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
91. அகன்றது அறியாமை
.
ஆத்யாsவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்–
வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்கதா த்வத்ப்ரஸாதாத்/
ஸேவே நித்யம் ஸ்ரீகரம் த்வத்பதாப்ஜம்
பாவே முக்தேர் பாஜனம் ராஜமௌலே//
.
ஆதியிருள் நின்னருளால் அகன்றதாகி விட்டது
அதியறிவு இதயத்துள் உறைவதாக ஆனது
திருவுடனே வீடுபேறும் தந்தருளும் திருவடிகள்
தினந்தோறும் பிறைசூடி தியானித்தே வணங்குவனே!
.
சிவபெருமானை மனோ வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் பக்தன் சிரத்தையுடன் வணங்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஜகத்குரு, இந்த ஸ்லோகத்தில் அதனால் பக்தனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய நன்மை என்ன என்பதை உரைக்கின்றார்.
.பிறைசூடிய பெருமானாகிய சிவபெருமானின் அருளால், பக்தனின் உள்ளத்திலே ஆதியில் இருந்து குடியிருந்த அவித்தை எனப்படும் அறியாமை அகன்றுவிடுகிறது. ஒளி வீசுகின்ற இடத்திலே இருளுக்கு இடமேது? அறியாமை இருள் அகன்றுவிட்ட படியால், எல்லாவிதப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கின்ற விவேகம் ஆகிய அதியறிவு பக்தனின் இதயத்திலே புகுந்து வாசம் செய்யத் தொடங்கிவிடுகிறது. சிவபெருமானுடைய திருவடித் தாமரை மீதான தியானம், அனைத்துவித ஐஸ்வர்யங்களுடன் வாழ்வின் பூரணத்துவமாகிய முக்திப் பேற்றையும் தந்தருள்கின்றன. ஆகையினால், பக்தன் சிவபெருமானின் திருவடிகளை தினந்தோறும் வணங்கி தியானிக்க வேண்டும் என்கிறார்.
இவ்வாறு சிவபெருமானை வணங்குவதால் பிறவிச்சுழலை ஏற்படுத்தும் அறியாமை அகன்றுவிடும். இதுதொடர்பாக தாயுமானவ ஸ்வாமிகள் பாடிய பாடல் ஒன்றையும் இங்கே ஒப்புநோக்கலாம். ““கன்மமேது கடுநர கேது மேற் சென்மமேது எனைத் தீண்டக் கடவதோ என்மனோரத மெய்தும் படிக் கருள் நன்மைகூர் முக்கண் நாதன் இருக்கவே.”
$$$