சத்திய சோதனை- 3 (16-19)

-மகாத்மா காந்தி

மூன்றாம் பாகம்

16. லார்டு கர்ஸானின் தர்பார்

     காங்கிரஸ் மகாநாடு முடிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்த வேலை சம்பந்தமாக வர்த்தகச் சங்கத்தையும் மற்றும் பலரையும் நான் காண வேண்டியிருந்ததால் கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன். இத் தடவை ஹோட்டலில் தங்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘இந்தியா கிளப்’பில் ஓர் அறையில் தங்குவதற்கு வேண்டிய அறிமுகத்தைப் பெற ஏற்பாடு செய்துகொண்டேன். அந்த கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான இந்தியரும் உண்டு. அவர்களுடன் தொடர்புகொண்டு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வேலையில் அவர்களுக்குச் சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு விளையாடுவதற்காக கோகலே இந்த கிளப்புக்கு அடிக்கடி வருவது உண்டு. நான் கல்கத்தாவில் கொஞ்ச காலம் தங்க வேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும், தம்முடன் வந்து தங்குமாறு அவர் என்னை அழைத்தார். இந்த அழைப்பை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால், நானாக அங்கே போவது சரியல்ல என்று எண்ணினேன். அவர் இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என் சுபாவத்தைக் கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது: “காந்தி, நீங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியவர். ஆகவே, இப்படிக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது சாத்தியமோ அவ்வளவு பேரோடும் நீங்கள் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காங்கிரஸ் வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

கோகலேயுடன் நான் தங்கியதைப் பற்றிக் கூறுமுன்பு இந்தியா கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சமயம் லார்டு கர்ஸான் தமது தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்த கிளப்பில் அங்கத்தினர்கள். கிளப்பில் இருக்கும்போது அவர்கள், எப்பொழுதும் வங்காளிகள் வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள். ஆனால், தர்பார் தினத்தன்று அவர்கள் வேலைக்காரர்கள் அணிவதைப் போன்ற கால்சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பளபளப்பான பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக் கண்டேன். இதைப் பார்த்து என் மனம் வேதனையடைந்தது. இந்த உடை மாற்றத்திற்குக் காரணம் என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.

     “எங்களுடைய துர்பாக்கிய நிலைமை எங்களுக்குத் தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம்” என்று அவர் பதில் கூறினார்.

     “ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய இந்தக் கால் சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக?” என்றேன்.

     “எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமே இல்லை!”

     இவ்விதம் மனம் விட்டுப் பேசிய அந்நண்பருக்காகப் பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது.

     ஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக் கல் நாட்டியபோது அங்கே ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும் மகாராஜாக்களும் குழுமியிருந்தனர். இந்த விழாவுக்கு வருமாறு பண்டித மாளவியாஜி என்னைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன்.

     மகாராஜாக்கள், பெண்களைப் போல ஆடை அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருப்பதைப் பார்த்து, மனம் வருந்தினேன். அவர்கள் பட்டுக் கால்சட்டை போட்டுக் கொண்டு, பட்டுச் சட்டைகளும் அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி முத்துமாலை தரித்திருந்ததோடு, கைகளில் கொலுசுகளும் போட்டிருந்தார்கள். அவர்களுடைய தலைப்பாகைகளில் முத்து, வைரப் பதக்கங்கள் இருந்தன. இவ்வளவும் போதாதென்று தங்கப் பிடி போட்ட பட்டாக் கத்திகள், அவர்களுடைய அரைக் கச்சைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன.

     இந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களை யெல்லாம் இவர்கள் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களை யெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதை சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்தத் தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.

எனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்ற சமயங்களிலும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக் கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும்.

     செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!

$$$

17. கோகலேயுடன் ஒரு மாதம் – 1

     நான் கோகலேயுடன் வசிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் சொந்த வீட்டில் வசிப்பதுபோல் நான் உணரும்படி அவர் செய்துவிட்டார். தமது சொந்தத் தம்பியைப் போன்றே பாவித்து அவர் என்னை நடத்தினார். என் தேவைகள் யாவை என்பதை எல்லாம் அறிந்து கொண்டார். எனக்கு வேண்டியவை யாவும் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக எனக்குள்ள தேவைகளோ மிகக் கொஞ்சம். அதோடு எனக்கு வேண்டியதை எல்லாம் நானே செய்துகொள்ளுவது என்ற பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால், வேலைக்காரரின் உதவி எனக்குத் தேவையே இல்லை. என் காரியங்களையெல்லாம் நானே செய்துகொண்டதும், நான் சுத்தமாக இருந்ததும், என்னிடமிருந்த விடாமுயற்சி, ஒழுங்கு முதலிய குணங்களும் அவர் மனத்தைக் கவர்ந்து விட்டன. அவர் அடிக்கடி என்னை மிகவும் புகழ்ந்து பேசுவார்.

தமது காரியம் எதையும் எனக்குத் தெரியாமல் அவர் ரகசியமாக வைத்திருந்ததாகத் தெரியவில்லை. தம்மைப் பார்க்க வரும் முக்கியமானவர்களிட மெல்லாம் என்னை அறிமுகம் செய்து வைப்பார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் என் நினைவில் முக்கியமாக நிற்பவர் டாக்டர் (இப்பொழுது ஸர்) பி.ஸி.ராய். கோகலேயின் ஜாகைக்கு வெகு கிட்டத்திலேயே அவர் வசித்து வந்தார் ஆகையால், அடிக்கடி வருவார். “இவர் தான் பேராசிரியர் ராய். இவருக்கு மாதச் சம்பளம் ரூ. 800. அதில் தமக்கென்று ரூ. 40 வைத்துக்கொண்டு மீதியைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார். இவருக்கு விவாகம் ஆகவில்லை. விவாகம் செய்துகொள்ள விரும்பவும் இல்லை” என்று சொல்லி அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

     டாக்டர் ராய், இன்று இருப்பதற்கும் அன்று இருந்ததற்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவருடைய ஆடையும் இப்பொழுது இருப்பதுபோலவே அப்பொழுதும் எளிமையானதாக இருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு. அந்த நாளில் இந்திய மில் துணி ஆடை அணிந்துவந்தார். இப்பொழுது கதர் உடுத்துகிறார். கோகலேயும் டாக்டர் ராயும் பேசிக் கொண்டிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டாலும் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை. ஏனெனில், அப் பேச்சு பொதுநன்மையைப் பற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் அறிவை ஊட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் இப் பேச்சு, பொது ஜனத் தலைவர்களின் நடத்தையைக் கண்டிப்பதாகவும் இருக்கும். அப்பொழுது அதைக் கேட்பது, மனத்திற்கு வேதனையைத் தரும். இதன் பயனாக, முக்கியமான வீரர்களாக எனக்குத் தோன்றி வந்தவர்களில் சிலர், மிகவும் சின்ன மனிதர்களாகத் தோன்ற ஆரம்பித்தனர்.

     கோகலே, வேலை செய்வதைப் பார்ப்பது இன்பம் தருவதாக மாத்திரமின்றி, ஒரு போதனையாகவும் இருக்கும். ஒரு நிமிட நேரத்தைக்கூட அவர் வீணாக்குவதில்லை. அவருடைய தனிப்பட்ட உறவுகள், நட்புகள் எல்லாமே பொது நன்மையை உத்தேசித்துத் தான் இருக்கும். அவர் பேசுவதெல்லாம் நாட்டின் நன்மையைக் குறித்தே. அதில் உண்மையல்லாததையோ, கபடமானதையோ ஒரு சிறிதேனும் காண முடியாது. அவருக்கிருந்த பெரிய கவலையெல்லாம், இந்தியாவின் வறுமையும் அடிமைத்தனமும் எப்படி ஒழியும் என்பதே ஆகும். வேறு பல விஷயங்களிலும் அவருக்குச் சிரத்தை உண்டாகும்படி செய்யப் பலர் முயல்வார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்வருமாறு ஒரே பதிலேயே அவர் கூறுவார்: “அக் காரியத்தை நீங்களே செய்யுங்கள். என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்பதே. இதில் வெற்றி பெற்று விடுவோமானல் மற்றவைகளைப் பற்றி நான் சிந்திக்கலாம். இன்று என் முழு நேரத்தையும் பக்தியையும் ஈடுபடுத்துவதற்கு இந்த ஒன்றே போதுமானது.”

ரானடேயிடம் அவர் கொண்டிருந்த அபார பக்தியை ஒவ்வொரு நிமிடமும் காணலாம். ஒவ்வொரு விஷயத்திலும் ரானடேயின் கருத்துத்தான் இவருக்கு வேத வாக்காக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் ரானடேயின் கருத்தை எடுத்துக் காட்டுவார். நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது, ரானடேயின் சிரார்த்த தினம் (அல்லது பிறந்த தினமா என்பது எனக்கு நினைவு இல்லை) வந்தது. கோகலே, இத்தினத்தைத் தவறாமல் அனுசரித்து வந்தார். அப்பொழுது அவருடன் என்னைத் தவிர அவருடைய நண்பர்களான பேராசிரியர் கதாவடே, ஒரு சப்ஜட்ஜ் ஆகியவர்களும் இருந்தனர். இத் தின வைபவத்தில் கலந்து கொள்ள எங்களை கோகலே அழைத்தார். அப்பொழுது அவர் பேசியபோது, ரானடேயைப் பற்றிய தமது நினைவுகளை எங்களுக்கு எடுத்துக் கூறினார். அச்சமயம் ரானடே, திலாங், மண்டலிக் ஆகியவர்களை ஒப்பிட்டுச் சொன்னார். திலாங்கின் அழகிய எழுத்து நடையைப் பாராட்டினார். சீர்திருத்தவாதி என்ற வகையில் மண்டலிக்கின் பெருமையைச் சொன்னார். இவர், தமது கட்சிக்காரர்களின் விஷயத்தில் எவ்வளவு சிரத்தை காட்டி வந்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். அவர், வழக்கமாகப் போக வேண்டிய ரெயில் ஒரு நாள் தவறிவிட்டதாம். தமது கட்சிக்காரரின் நன்மையை முன்னிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் தாம் கோர்ட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தனி ரெயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு போய்ச் சேர்ந்தாராம். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட ரானடே தலைசிறந்தவர் என்றும், எல்லாவற்றிலும் சிறந்த மேதாவி என்றும் கோகலே சொன்னார். அவர் சிறந்த நீதிபதி என்பது மாத்திரம் அல்ல, அதேபோல் சிறந்த சரித்திராசிரியரும் பொருளாதார நிபுணரும், சீர்திருத்தக் காரருமாவார் என்றார். அவர் நீதிபதியாக இருந்தும், கொஞ்சமும் பயப்படாமல் காங்கிரஸ் மகாநாட்டிற்குச் சென்றார். அவருடைய அறிவாற்றலில் எல்லோருக்கும் நம்பிக்கை உண்டாகையால் அவர் கூறும் முடிவுகளை, எல்லோரும் எந்தவித ஆட்சேபமும் கூறாமல் ஏற்றுக்கொண்டு விடுவார்களாம். தமது குருவின் உள்ளத்திலும் அறிவிலும் இருந்த இந்த அபூர்வ குணாதிசயங்களை விவரித்துக் கூறும்போது கோகலேக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

     அந்த நாளில் கோகலே ஒரு குதிரை வண்டி வைத்திருந்தார். குதிரை வண்டி அவருக்கு என்ன காரணத்தினால் அவசியமாயிற்று என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, இதைக் குறித்து அவரிடம் வாதாடினேன். “தாங்கள் டிராம் வண்டியில் போய்வரக் கூடாதா? அப்படிப் போய் வந்தால், தலைவர் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமா?” என்றேன்.

     இக்கேள்வி அவருக்குக் கொஞ்சம் மனவருத்தத்தையே உண்டாக்கிவிட்டது. அவர் கூறியதாவது: “அப்படியானால் நீங்களும் என்னை அறிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள்! கவுன்ஸில் அங்கத்தினர் என்பதற்காக எனக்குக் கிடைக்கும் படிப்பணத்தை நான் சொந்த சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொள்ளுவதில்லை. டிராம் வண்டிகளில் போய் வருவதில் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அப்படி நானும் போய் வர முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். என்னைப் போல் நீங்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் விளம்பரத்தைப் பெற்றுவிடும் துர்பாக்கியத்தை அடைந்துவிடும் போது, டிராம் வண்டிகளில் நீங்கள் போய் வருவது அசாத்தியம் என்று ஆகாவிட்டாலும் கஷ்டமானதாகவே இருக்கும். தலைவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சொந்த சௌகரியத்திற்காகவே என்று ஊகித்துக்கொண்டு விடுவதற்கு எவ்விதமான காரணமும் இல்லை. உங்களுடைய எளிய பழக்கங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. என்னால் இயன்ற வரை எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆனால், என்னைப் போன்ற ஒருவருக்குச் சில செலவுகள் தவிர்க்க முடியாதவை.”

     என்னுடைய புகார்களில் ஒன்றுக்கு இவ்வாறு அவர் திருப்தியளிக்கும் வகையில் பதில் சொல்லிவிட்டார். ஆனால், மற்றொரு புகாருக்கோ எனக்குத் திருப்தி உண்டாகும் வகையில் அவரால் பதில் சொல்லிவிட முடியவில்லை.

நீங்கள் உலாவுவதற்குக் கூடப் போவதில்லை! நீங்கள் எப்பொழுதும் நோயுற்றே இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? பொதுவேலையில் ஈடுபடுவதனால் தேகாப்பியாசத்திற்கு நேரமே இல்லாது போக வேண்டுமா?” என்றேன்.

     “உலாவப் போவதற்கு எனக்கு எங்காவது நேரம் இருப்பதைப் பார்க்கிறீர்களா?” என்று பதிலளித்தார் கோகலே.

     கோகலேயிடம் எனக்கு அபாரமான மதிப்பு இருந்தது. ஆகையால், அவரை எதிர்த்துப் பேச எனக்குத் துணிவு வருவதில்லை. மேற்கண்ட பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லையெனினும் மௌனமாக இருந்துவிட்டேன். ஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும் என்று அப்பொழுது கருதினேன். இன்றும் அவ்வாறே கருதுகிறேன். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்குப் பதிலாக அதிகப்படுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

$$$

18. கோகலேயுடன் ஒரு மாதம் – 2

     நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது எப்பொழுதும் வீட்டிலேயே இருந்துவிடாமல் வெளியிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் இந்தியக் கிறிஸ்தவர்களைச் சந்தித்து. அவர்களுடைய நிலைமையையும் தெரிந்து கொள்ளுவேன் என்று தென்னாப்பிரிக்கக் கிறிஸ்தவ நண்பர்களிடம் சொல்லி இருந்தேன். பாபு காளிசரண் பானர்ஜியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அவரிடம் எனக்குப் பெரு மதிப்பும் இருந்தது. காங்கிரஸின் நடவடிக்கைகளில் அவர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். சாதாரணமாக இந்தியக் கிறிஸ்தவர்கள், காங்கிரஸில் சேராமல் ஒதுங்கி இருந்து விடுகிறார்கள்; ஹிந்துக்கள், முஸ்லிம்களுடன் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், பாபுகாளிசரண் பானர்ஜி விஷயத்தில் அத்தகைய சந்தேகம் எதுவும் எனக்கு இல்லை. அவரைச் சந்திக்க எண்ணியிருக்கிறேன் என்று கோகலேயிடம் சொன்னேன். “நீங்கள் அவரைப் பார்ப்பதால் என்ன பயன்? அவர் மிகவும் நல்லவர். ஆனால், உங்களுக்குத் திருப்தி அளிக்க மாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். என்றாலும், நீங்கள் விரும்பினால் அவரைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்.

அவரைப் பார்க்க விரும்புவதாக அனுமதி கோரி எழுதினேன். அவரும் உடனே பதில் அனுப்பினார். நான் அவரைப் பார்க்கச் சென்ற அன்று அவருடைய மனைவி மரணத் தறுவாயில் இருந்தார் என்பதை அறிந்தேன். காங்கிரஸில் அவரை நான் பார்த்தபோது கால்சட்டையும் கோட்டும் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இப்பொழுதோ ஒரு வங்காளி வேட்டி கட்டிக்கொண்டு சட்டை போட்டிருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன். அச்சமயம் நான் கால்சட்டையும் பார்ஸி கோட்டும் அணிந்திருந்த போதிலும் அவருடைய எளிய உடை எனக்குப் பிடித்திருந்தது. அனாவசியப் பேச்சு எதுவும் வைத்துக்கொள்ளாமல் எனக்கு இருந்த சந்தேகங்களை நேரடியாக அவருக்குக் கூறினேன். “மனிதன் ஆரம்பத்தில் பாவம் செய்தே கேடுற்றான் என்ற தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்று அவர் என்னைக் கேட்டார். “ஆம். நம்பிக்கை உண்டு” என்றேன்.

     “அப்படியானால் சரி. ஹிந்து மதம் அதற்கு விமோசனம் அளிப்பதில்லை. கிறிஸ்தவ மதம் அளிக்கிறது” என்று அவர் சொல்லிவிட்டு, மேலும் கூறியதாவது: “பாவத்தின் ஊதியம் மரணமேயாகும். ஏசுவினிடம் அடைக்கலம் புகுவது ஒன்றே அதனின்றும் விடுதலை பெறுவதற்குள்ள ஒரே மார்க்கம் என்று பைபிள் கூறுகிறது.”

     பகவத் கீதை கூறும் பக்தி மார்க்கத்தைக் குறித்து நான் சொன்னேன். ஆனால், அது பயன்படவில்லை. அவர் என்னிடம் காட்டிய அன்பிற்கு நன்றி கூறிவிட்டு, விடை பெற்றுக்கொண்டேன். எனக்குத் திருப்தியளிக்க அவர் தவறி விட்டார். ஆனால், இச் சந்திப்பினால் நான் பயன் அடைந்தேன்.

     இந்த நாட்களில் நான் கல்கத்தாத் தெருக்களில் இங்கும் அங்குமாகத் திரிந்து கொண்டிருந்தேன். அநேக இடங்களுக்கு நடந்தே போய் வருவேன். எனது தென்னாப்பிரிக்காவின் வேலைக்கு நீதிபதி மித்தர், ஸர் குருதாஸ் பானர்ஜி ஆகியவர்களின் உதவி எனக்கு வேண்டியிருந்தது. அவர்களைப் போய்ப் பார்த்தேன். அதே சமயத்தில் ஸர் பியாரி மோகன் முக்கர்ஜியையும் சந்தித்தேன்.

     காளி கோயிலைப் பற்றிக் காளி சரண் பானர்ஜி என்னிடம் கூறினார். முக்கியமாக, புத்தகங்களிலும் அதைக் குறித்து நான் படித்திருந்தால் அதைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆகவே, ஒரு நாள் அங்கே போனேன். அதே பகுதியில்தான் நீதிபதி மித்தரின் வீடும் இருந்தது. எனவே, நான் அவரைப் போய்ப் பார்த்த அன்றே காளி கோயிலுக்கும் போனேன். காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஆடுகள், மந்தை மந்தையாகப் போய்க்கொண்டிருந்ததை வழியில் பார்த்தேன். கோயிலுக்குப் போகும் சந்தின் இரு பக்கங்களிலும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் சில சாதுக்களும் இருந்தனர். உடல் வலுவுடன் இருக்கும் யாசகர்களுக்குப் பிச்சை போடுவதில்லை என்ற கொள்கையில் நான் அந்த நாளிலேயே உறுதியுடன் இருந்தேன். அவர்களில் ஒரு கூட்டம் என்னை விரட்டிக்கொண்டு வந்தது. சாதுக்களில் ஒருவர் ஒரு தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னை நிறுத்தி, “தம்பி, நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றதும், என்னையும் என்னுடன் வந்தவரையும் உட்காரும்படி சொன்னார். அப்படியே உட்கார்ந்தோம்.

 “இந்த உயிர்ப்பலியை மதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன்.

     “மிருகங்களைக் கொல்லுவதை மதம் என்று யாராவது கருதுவார்களா?” என்றார், அவர்.

     “அப்படியானால், அதை எதிர்த்து நீங்கள் ஏன் பிரசாரம் செய்யக் கூடாது?”

     “அது என் வேலை அல்ல. கடவுளை வழிபடுவதே நமது வேலை.”

     “கடவுளை வழிபடுவதற்கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?”

     “எங்களுக்கு எல்லா இடமும் நல்ல இடந்தான். மக்கள், ஆடுகளைப் போலத் தலைவர்கள் இட்டுச் செல்லும் இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். சாதுக்களாகிய எங்கள் வேலை அதுவன்று.”

     இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கவில்லை. கோயிலுக்குப் போனோம். ரத்த ஆறுகள் எங்களை எதிர் கொண்டு அழைத்தன. அங்கே நிற்கவே என்னால் முடியவில்லை. நான் ஆத்திரமடைந்தேன்; அமைதியையும் இழந்துவிட்டேன். அந்தக் காட்சியை என்றும் நான் மறக்கவே இல்லை.

     அன்று மாலையே சில வங்காளி நண்பர்கள் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே ஒரு நண்பரிடம், இந்தக் கொடூரமான வழிபாட்டு முறையைக் குறித்துச் சொன்னேன். அதற்கு அவர் கூறியதாவது: “ஆடுகளுக்குத் துன்பமே தெரியாது. பேரிகை முழக்கமும் மற்ற சப்தங்களும் அவைகளுக்கு துன்ப உணர்ச்சியே இல்லாதபடி செய்து விடுகின்றன.”

     இதை ஒப்புக்கொண்டுவிட என்னால் முடியவில்லை. “ஆடுகளுக்கு வாயிருந்தால் அவை வேறு கதையைச் சொல்லும்” என்றேன். அக்கொடூரமான பழக்கம் நின்றாக வேண்டும் என்றும் எண்ணினேன். புத்தரின் கதையை நினைத்தேன். ஆனால், இவ்வேலை என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் கண்டேன்.

அன்று எனக்கு இருந்த அபிப்பிராயமே இன்றும் இருக்கிறது. மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டுக் குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்குத் தோன்றவில்லை. மனித உடலுக்கு ஓர் ஆட்டின் உயிரைப் போக்குவதற்கு நான் உடன்படக் கூடாது. ஒரு பிராணி எவ்வளவுக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு உரிமை பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். அத்தகைய சேவையைச் செய்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளாதவர், அதற்கு எவ்விதப் பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது. ‘அக்கிரமமாக பலியிடப் படுவதிலிருந்து இந்த ஆடுகளைக் காப்பாற்றி விடலாம்’ என்று நான் நம்புவதற்கு முன்னால் நான் அதிக சுயத் தூய்மையையும் தியாக உணர்ச்சியையும் அடைந்தாக வேண்டும். ‘இந்தத் தூய்மையையும் தியாகத்தையும் அடையப் பாடுபடுவதில் நான் உயிர் துறக்க வேண்டும்’ என்று இன்று எண்ணுகிறேன். இத்தகைய கோரமான பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, கோயிலையும் புனிதப்படுத்துவதற்கு தெய்வீகக் கருணையுடன் கூடிய ஒரு பெரிய ஆத்மா, ஆணாகவோ பெண்ணாகவோ, இப்புவியில் பிறக்க வேண்டும் என்பதே என்னுடைய இடை விடாத பிரார்த்தனை. எவ்வளவோ அறிவும், தியாகமும், உணர்ச்சி வேகமும் கொண்ட வங்காளம், இப்படுகொலைகளை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறது?

$$$

19. கோகலேயுடன் ஒரு மாதம் – 3

     மதத்தின் பெயரால் காளிக்கு அளிக்கப்பட்ட கொடூரமான பலி, வங்காளிகளின் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது. பிரம்ம சமாஜத்தைக் குறித்து அதிகமாகப் படித்திருக்கிறேன்; நிறைய கேள்விப்பட்டும் இருக்கிறேன். பிரதாப் சந்திர மஜும்தாரின் வாழ்க்கையைப் பற்றியும் சிறிது அறிவேன். அவர் பேசிய சில கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். கேசவ சந்திர சேனரின் வரலாற்றைக் குறித்து, அவர் எழுதிய நூலை வாங்கி அதிகச் சிரத்தையுடன் படித்தேன். சாதாரண பிரம்ம சமாஜத்திற்கும் ஆதி பிரம்ம சமாஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டேன். பண்டித சிவநாத சாஸ்திரியைச் சந்தித்தேன். பேராசிரியர் கதாவடேயுடன் மகரிஷி தேவேந்திரநாத டாகுரையும் பார்க்கப் போனேன். அச் சமயம் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப் படாததனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆனால், அவர் இருப்பிடத்தில் நடந்த பிரம்ம சமாஜ விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். அங்கே இனிய வங்காளி சங்கீதத்தைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமுதல் நான் வங்காளி சங்கீதப் பிரியனானேன்.

பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப் பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக, முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்; நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.

     பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில் அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசிய பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.

     ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழிபெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.

     தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வேலை சம்பந்தமாக கல்கத்தாவில் இருக்கும் முக்கியமானவர்களை சந்தித்துப் பேசுவதிலும் நகரில் இருக்கும் மத சம்பந்தமான பொது ஸ்தாபனங்களுக்குச் சென்று, அவற்றை அறிந்து கொள்வதிலும் ஒவ்வொரு நாளும் என் நேரத்தைச் செலவிட்டு வந்தேன். டாக்டர். மல்லிக்கின் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், போயர் யுத்தத்தில் இந்திய வைத்தியப் படையினர் செய்த வேலைகளைக் குறித்துப் பேசினேன். ‘இங்கிலீஸ்மன்’  பத்திரிகையுடன் எனக்கு ஏற்பட்டிருந்த அறிமுகம் இச் சமயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. அப்பொழுது அதன் ஆசிரியர் ஸ்ரீ சாண்டர்ஸ் நோயுற்றிருந்தார். என்றாலும், 1890-ல் உதவி செய்ததைப் போன்றே அதிக உதவியைச் செய்தார். என் பிரசங்கம் ஸ்ரீ கோகலேக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. டாக்டர் ராய், அதைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு, அதிக மகிழ்ச்சியடைந்தார்.

     கோகலேயுடன் நான் தங்கியிருந்ததனால் இவ்வாறு கல்கத்தாவில் என் வேலைகள் மிகவும் எளிதாயின. முக்கியமான வங்காளிக் குடும்பங்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. வங்காளத்துடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளுவதற்கு இது ஆரம்பமாகவும் அமைந்தது.

மறக்க முடியாத அந்த மாதத்தைப் பற்றிய மற்றும் பல நினைவுகளைக் கூறாமல் தாண்டிச் செல்ல வேண்டியவனாகவே நான் இருக்கிறேன். இதற்கிடையில் பர்மாவுக்குப் போய்விட்டு  சீக்கிரமே திரும்பியதைக் குறித்தும் அங்கிருக்கும் பொங்கிகளைப் பற்றியும் மாத்திரம் கொஞ்சம் குறிப்பிட்டுவிட்டு, மேலே செல்லுகிறேன்.

பொங்கிகள் என்னும் அந்தச் சந்நியாசிகளின் சோம்பல் வாழ்க்கையைக் கண்டு என் மனம் வேதனைப்பட்டது. அங்கே தங்கக் கோபுரத்தையும் பார்த்தேன். கோயிலில் எண்ணற்ற சிறு மெழுகுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கர்ப்பக் கிரகத்தில் எலிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. இது, மோர்வியில் சுவாமி தயானந்தருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எனக்கு நினைவூட்டியது. பர்மியப் பெண்களின் சுயேச்சையும் சுறுசுறுப்பும் என்னைக் கவர்ந்தன. ஆனால், பர்மிய ஆண்களின் மந்தப் போக்கோ எனக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. நான் பர்மாவிலிருந்த சில தினங்களுக்குள்ளேயே ஒன்று தெரிந்து கொண்டேன். அதாவது, ‘பம்பாய் எவ்விதம் இந்தியா ஆகிவிடாதோ அதே போல் ரங்கூன் பர்மா ஆகிவிடாது’ என்பதை அறிந்தேன். இந்தியாவிலிருக்கும் நாம் எவ்விதம் பிரிட்டிஷ் வர்த்தகர்களின் தரகர்களாக இருக்கிறோமோ அதேபோல் பர்மாவிலும் நம்மவர்கள், ஆங்கில வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டு, பர்மிய மக்களைத் தமது தரகர்களாக்கி யிருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டேன்.

     பர்மாவிலிருந்து நான் திரும்பி வந்ததும் கோகலேயிடம் விடை பெற்றுக்கொண்டேன். அவரிடமிருந்து பிரிவது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், வங்காளத்தில் முக்கியமாக கல்கத்தாவில் எனக்கு இருந்த வேலைகள் முடிந்து விட்டன. இனியும் அங்கே நான் தங்குவதற்கு எவ்வித முகாந்தரமும் இல்லை.

     ஓரிடத்தில் நிலையாகத் தங்கிவிடுவதற்கு முன்னால், இந்தியா முழுவதையும், மூன்றாம் வகுப்பு ரெயிலில் பிரயாணம் செய்து பார்த்து, மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களை நானே அறிந்துகொள்ளுவது என்று எண்ணினேன். இதைப்பற்றி கோகலேயிடம் பேசினேன். ஆரம்பத்தில் என் யோசனையை அவர் பரிகசித்தார். நான் காண விரும்புவது இன்னதென்பதை அவருக்கு விளக்கிக் கூறியதும் அவரும் உற்சாகமாக என் யோசனையை அங்கீகரித்தார். ஸ்ரீமதி அன்னி பெஸன்ட் நோயுற்று, அப்பொழுது காசியில் இருந்து வந்தார். அவருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துவதற்கு முதலில் காசிக்குப் போவது என்று திட்டமிட்டேன்.

     மூன்றாம் வகுப்பு வண்டிப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் புதிதாகச் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. கோகலே எனக்கு ஒரு பித்தளைச் சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கொடுத்தார். அதில் மிட்டாய்களையும் பூரியையும் நிறைய வைத்தார். பன்னிரெண்டு அணாக் கொடுத்து, ஒரு கித்தான் பை வாங்கினேன். சாயக் கம்பளியினாலான மேற் சட்டை ஒன்றையும் வாங்கி கொண்டேன். இந்த சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஓர் உள்சட்டை ஆகியவைகளை வைத்துக்கொள்ள அந்த கித்தான் பை. போர்த்துக்கொள்ள ஒரு துப்பட்டியும், தண்ணீர் வைத்துக் கொள்ளுவதற்குச் செம்பும் என்னிடம் இருந்தன. இவ்விதமான ஏற்பாடுகளுடன் நான் பிரயாணத்திற்குத் தயாரானேன். என்னை வழியனுப்புவதற்காக கோகலேயும் டாக்டர் ராயும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். ஸ்டேஷனுக்கு வரும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றே அவர்கள் இருவரையும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. ‘நீங்கள் முதல் வகுப்பில் சென்றால் நான் வந்திருக்க மாட்டேன். இப்பொழுதோ நான் கட்டாயம் வர வேண்டும்’ என்றார், கோகலே.

கோகலே, பிளாட்பாரத்திற்குள் வந்தபோது அவரை யாரும் தடுக்கவில்லை. அவர் வேட்டி கட்டிக்கொண்டு, பட்டுத் தலைபாகையும் குட்டைச் சட்டையும் போட்டிருந்தார். டாக்டர் ராய், வங்காளி உடையில் வந்தார். அவரை டிக்கெட் பரிசோதகர் நிறுத்தி விட்டார். அவர் தமது நண்பர் என்று கோகலே சொன்ன பிறகே அவரை அனுமதித்தார். இவ்விதம் அவர்களுடைய நல்லாசியுடன் என் பிரயாணம் ஆரம்பமாயிற்று.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s