-எஸ்.எஸ்.மகாதேவன்

16. மக்களின் கலாசார நலன் நாடிய மடாதிபதி
கடந்த ஆகஸ்டு 11 அன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி தினம். ஜெயலலிதா உள்பட எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரிடம் ஆசி பெற வருவதுண்டு. அம்மையார் 1996 தேர்தலில் தன் கட்சி வேட்பாளர் பட்டியலை சுவாமிகள் முன் வைத்து ஆசி பெற்றார். அந்த அளவுக்கு நல்ல தொடர்பு இருந்தது. அதை சுவாமிகள் பயன்படுத்தினார்; 2002இல் மதமாற்றத் தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மதமாற்றத் தடைச் சட்டம் வந்ததும் அதை ஆதரித்து அரசைப் பாராட்டி, திலகர் கட்டத்தில் (மெரினா கடற்கரை) ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். எளிய ஹிந்து மக்களை அச்சுறுத்தி ஆசைகாட்டி மதமாற்றும் மோசடியைத் தடுக்க இவ்வாறு வழிபிறந்தது (மிஷனரிகளின் நிர்பந்தத்தால் இரண்டு ஆண்டுகளில் அந்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டாலும், அப்படி ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கான காரணம் அப்படியே நீடிக்க்கிறது என்பதுதான் சோகம்).

நெல்லை மாவட்டக் கடற்கரையோரம், இடிந்தகரை கிராமத்தில் 1969இல் ஏராளமான மீனவ கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினார்கள். பிரமாண்டமான சர்ச்சுக்கு எதிரே சின்னஞ்சிறு விநாயகர் கோயில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கோயிலுக்கு நேரில் சென்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீனவ சகோதர சகோதரிகள் மத்தியில் அருளுரை நிகழ்த்தினார். மீனவர்களை அந்த வட்டாரத்தில் பரதவர்கள் என்று குறிப்பிடுவார்கள். இதை சுட்டிக்காட்டிய சுவாமிகள் “நீங்களெல்லாம் பரதனின் வம்சத்தில் வந்தவர்கள். இது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்” என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டு அந்த மீனவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் அதைக் கண்ட இந்தத் துறவிக்கும் கண் கலங்கியது. தங்கள் உன்னதமான பெருமை ஏதும் தெரியாமல் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொன்னவரும் கேட்டவர்களும் உணர்ந்த போது ஏற்பட்ட நெகிழ்ச்சி அது.
ஏழை எளிய மக்களின் கலாச்சார நலனில் ஸ்ரீ ஜெயேந்திரர் என்ற துறவியின் அருள் பார்வை அவ்வளவு தீட்சண்யமானது. விளைவாக, அந்த மக்களை தங்கள் மதமாற்ற வலைவீச்சில் சிக்க வைக்க முடியாமல் போனவர்கள் திகைத்தார்கள். விசுவாச ஊடகங்கள் வாயிலாக அவதூறுகளைக் கொட்டினார்கள்.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1987ஆகஸ்டில் திடீரென மூன்று நாட்கள் தலைக்காவேரி என்ற திருத்தலம் சென்று தங்கினார். இப்போதும் நன்றியுள்ள ஜீவன்களாக ஊடகங்கள் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டன. அவர் காஞ்சி மடத்திற்குத் திரும்பியதும் அவரிடம் ஒரு நேர்காணல் எடுத்தேன். சமுதாயத்திற்கு அவர் தந்த அதிர்ச்சி வைத்தியத்தின் பின்னணி அந்த நேர்காணலில் தெளிவாக வெளிப்பட்டது. தன்னை அணுகும் அரசியல்வாதிகள், விதிவிலக்கு இல்லாமல், சுயநல வேட்டையே குறியாக இருப்பதைக் கண்டு அவர் மனம் நொந்து போயிருந்தது. மக்களுக்கு சேவை செய்யவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரிவான அமைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார். அவ்வாறு உருவானதுதான் ஜனகல்யாண்- ஜன ஜாகரண் அமைப்பு என்று தகவல் (அந்த நேர்காணல் விஜயபாரதம் வார இதழில் அப்போது வெளியாயிற்று. பிறகு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பாரத நாட்டின் பல்வேறு மொழிகளில் வெளிவரும் ஹிந்துத்துவ இதழ்களுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு ஹிந்து துறவிகள், மடங்கள் பற்றி ஊடகச் சுவரைத் தாண்டி ஊருக்குள் சரியான தகவல் பரவ வழி பிறந்தது).
1982இல் நடந்த மண்டைக்காடு கலவரம் பற்றி விசாரித்த வேணுகோபால் கமிஷன், ”மதமாற்றம் தான் வன்முறைக்கு வழிவகுக்கிறது என்பதால் மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கடந்தது. 2002-ல் வந்த மதமாற்றத் தடைச் சட்டம் அல்பாயுசில் போனாலும் அந்த சம்பவத்தில் ஒரு நல்ல அம்சம் தென்படுகிறது. மதமாற்ற மோசடி ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்ற விவரத்தை, ஸ்ரீ ஜயேந்திரர் உள்ளிட்டோர் முயற்சியால் ஆட்சியாளர் காதை எட்டச் செய்ய முடிந்தது; சட்டமும் வந்தது.
மண்டைக்காடு கலவரத்தை அடுத்து முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்த தாணுலிங்க நாடார் உள்ளிட்ட ஹிந்து சமுதாயப் பிரதிநிதிகளிடம் முதல்வர், மற்ற மதத்தினர் தங்கள் தரப்பை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவது போல ஹிந்துக்கள் தரப்பில் இருந்து வருவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார் என்று சொல்வார்கள். 2002 மதமாற்றத் தடைச் சட்டம் வந்த சம்பவத்தில் அந்தக் குறை ஒருவாறு நீக்கப்பட்டது என்று சொல்லலாம்.
சென்னை ஜெமினி சர்க்கிளிலிருந்து கடற்கரை செல்லும் சாலை, கதீட்ரல் சாலையாக ஆரம்பித்து பாதிக்குமேல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகி ஐ.ஜி. பீச்சில் முடிகிறது. 1980களில் கதீட்ரல் சாலையின் பெயரை மாற்றி டிடிகே சாலை ஆக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான். கிறிஸ்தவ சமூகம் மாநிலத்தின் கல்விச் சூழலையே முடக்கிப் போட்டு விடுவோம் என்று மிரட்டியது. அடுத்து மௌபரீஸ் சாலைக்கு டிடிகே பெயர் வைக்கப்பட்டது. இதெல்லாமும் எம்ஜிஆர் போன்றோர் மனதில் வேலை செய்திருக்க வேண்டும்.
இன்று தென்படும் சூழல் அடியோடு மாறுபட்டது. திருவாரூர் தேரோடும் வீதியின் பெயரை மாற்ற அரசு நினைக்கிறது என்ற தகவல் கசிந்ததுமே, ஹிந்துக்கள் தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக சமூக ஊடகங்களில் பதிவு செய்யும் வசதி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஹிந்துக்களின் உள்ளம் அரசுக்கு தெரியாமல் போகவே வாய்ப்பில்லை என்பது இன்றைய சூழல். 2002 நிலவரத்துடன் அல்லது 1982 நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. எனவேதான் 2002இல் தமிழகத்தில் ஜெயலலிதாவை மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற வைத்தது சாதாரண விஷயம் அல்ல என்று பதிவு செய்யத் தோன்றுகிறது.
$$$