-திருநின்றவூர் ரவிகுமார்

அண்மையில் அமித்ஷா, நாட்டின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருந்தால் நல்லது என்று பேச, தமிழ்ப் பெயர் இல்லாத ஒரு பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் தெய்வத் தமிழ்த் தாயை திரைப்பட ஆட்டக்காரியாக்கி படத்தை வெளியிட்டு கூத்தாடிய சம்பவங்களை எல்லாம் பார்த்திருக்கலாம். அதையொட்டி நண்பரொருவர் வாட்ஸ் ஆப்பில் ஒரு படத்தை அனுப்பி இருந்தார். அதில் சுமார் பதினைந்து, இருபது பிரபலங்களின் தபால்தலை அளவு படங்களின் தொகுப்பு இருந்தது. அந்தப் படங்களின் கீழே ‘இவர்கள் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர்கள், இவர்களுக்கு ஹிந்தி தெரியாது’ என்று எழுதியிருந்தார். அந்தப் படத்தில் இருந்த விக்ரம் சாராபாய், ஹோமி பாபாவுக்கு ஹிந்தி தெரியாது என்று இவருக்கு எப்படித் தெரிந்தது என்று எனக்குத் தெரியாது.
எனினும் அவர்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதைப் பார்த்த பிறகு எனக்கு வேறு ஒரு யோசனை வந்தது. கார்ப்பர்டே நிறுவனங்கள் என்றாலே ‘அம்பானி, அதானி’ என்று எதுகை மோனையுடன் முழக்கமிடும் நண்பர், மாறன், பாலு, ஜெகத்ரட்சகனை வசதியாக மறந்து விடுபவர். எனவே இன்றைய இந்திய முகங்களாக இருப்பவர்கள் எவர் என்று பார்க்கத் தொடங்கினேன்.
இதோ, இவர்கள் இன்றைய இந்தியாவின் முகங்கள்…
$$$
இன்றைய இந்தியாவின் முகங்கள்
1. டாக்டர் கிருஷ்ண எல்லா

உலகம் முழுவதும் கொரானா தொற்றுப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய போது அதற்கு தடுப்பூசியை ஓராண்டுக்குள் கண்டுபிடித்து, நம்மவருக்கு மட்டுமல்ல – உலகெங்கும் இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கொடுத்து சாதனை படைத்தது மோடி அரசு. அந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தது பாரத் பயோடெக் நிறுவனம். அதைத் துவங்கியவர் டாக்டர் கிருஷ்ண எல்லா-வும் அவரது மனைவி டாக்டர் சுசித்ரா எல்லா-வும்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் பிறந்தவர் கிருஷ்ண எல்லா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு குடும்பத் தொழில் விவசாயம். எனவே இவர் விவசாயத்தில் பட்டம் பெற்று விவசாயம் செய்யத்தான் விரும்பினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் பட்டம் பெற்ற இவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக பாயர் கம்பெனியில் விவசாயப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.
பின்னர் அந்தப் பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் முதுகலைப் பட்டம் படிக்க அமெரிக்கா சென்றார். முதுகலைப் பட்டத்திற்குப் பின் நுண் உயிரியல் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். 1997இல் பாரத் பயோடெக் கம்பெனியை ஆரம்பித்தார்.
சிக் குன் குனியா, ஜிகா வைரஸுக்கு உலக அளவில் தடுப்பூசிக்காக காப்புரிமை பெற்ற முதல் நிறுவனம் பாரத் பயோடெக். வெறிநாய்த் தடுப்பூசியை உலகில் அதிக அளவில் தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனமும் இதுதான். இந்நிறுவனம் இதுவரை 16 தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளது. தவிர, ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசியை கண்டுபிடித்து வெறும் பத்து ரூபாய்க்கு உலகமெங்கும் விற்றுள்ளது. ஸ்வைன் ஃப்ளூவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்தவர்களும் இந்த நிறுவனத்தினர் தான்.
ஐடிபிஐ வங்கியில் ரூ. 2 கோடி கடன் வாங்கித் துவங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்றைய ஆண்டு வருமானம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1,527 கோடி). சாதாரணக் குடிமகனுக்கும் அடிப்படை ஆரோக்கியம் தொடர்பான தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தன் நோக்கம் என்று கூறுகிறார் டாக்டர் கிருஷ்ண எல்லா. அவர் சிந்திக்கும் விதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதும் சிறப்பாக இருக்கும்.
‘’எந்த வைரஸ் பிரச்னையும் சிறிதாகக் கிளம்பும்போதே நாம் அதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் அதுதான் பின்னாளில் பெரும் தொற்றாக மாறும்’’ என்று சொல்கிறார் டாக்டர் கிருஷ்ண எல்லா. பல தனியார் விருதுகளைப் பெற்ற அவருக்கும் அவரது மனைவிக்கும் இந்த ஆண்டு பத்மபூஷண் விருதை அளித்து கௌரவித்தது மோடி அரசு.
(முகங்கள் தொடர்கின்றன…)
$$$