தமிழ்த் தாத்தா (11, 12, 13, 14)

-கி.வா.ஜகந்நாதன்

11. பிள்ளையவர்கள் மறைவு

1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். “பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினார்.

அவ்வாறே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்களை ஆசிரியப் பெருமான் பாடம் கேட்டார். கம்ப ராமாயணம், நன்னூல் முதலிய பாடங்கள் நிகழ்ந்தன. சித்தாந்த நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பாடம் கேட்டதோடல்லாமல் அங்கிருந்த தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும்படியாகத் தேசிகர் இவரைப் பணித்தார். அந்தக் காலத்தில் காவடிச் சிந்தை இயற்றிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் திருவாவடுதுறைக்கு வந்தார். தமிழ் படிக்க வேண்டுமென்ற அவா அவருக்கு இருந்தது. ஆசிரியப் பெருமானிடம் சில நூல்களைப் பாடம் கேட்டார்.

$$$

12. புதிய வீடு

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் ஒரு புதிய வீடு கட்டி, அதில் ஆசிரியப் பெருமான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவரது விருப்பப்படியே ஆசிரியருடைய தாய் தந்தையர் அங்கே வந்து வாழத் தொடங்கினார்கள். 1877-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அந்தப் புதிய வீட்டில் ஆசிரியப் பெருமான் குடியேறினார். தம் மனைவியாரோடு வாழத் தொடங்கினார். மடத்திலிருந்தே இவரது குடும்பத்திற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் கிடைத்தன. ஆசிரியப் பெருமானிடம் தேசிகர் காட்டிய பேரன்பையும் அவரது சிறந்த ஒழுக்கத்தையும் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

மதுரையில் அந்தக் காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் புறப்பட்டுச் செல்ல ஏற்பாடாயிற்று. அங்கிருந்து வேறு தலங்களுக்கும் போகலாம் என்று தேசிகர் நினைந்தார். அப்போது தம்முடன் ஆசிரியப் பெருமானையும் வரும்படி அழைத்தார். அப்படியே இருவரும் புறப்பட்டனர். மதுரை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து இன்புற்றார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் ஆசிரியருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்த சுப்பிரமணிய ஐயரை (ஜஸ்டிஸ் மணி ஐயர்) அங்கே முதல் முறை யாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

$$$

13. முதலில் பதிப்பித்த நூல்

திருநெல்வேலியில் மேலை ரதவீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம் ஒன்று உண்டு. அங்கே சில நாள் தங்கி, அப்பால் அதற்கு அருகிலுள்ள செவந்திபுரம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய மடாலயத்திற்கு,  ‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்று பெயர் வைத்தார்கள். அதன் கிருகப்பிரவேசத்திற்கு வந்திருந்த புலவர்கள் எல்லாம் அதைச் சிறப்பித்துப் பாடினார்கள். அந்தப் பாடல்களைத் தொகுத்து வெளியிட முயன்றபோது ஆசிரியப் பெருமானே அந்த வேலையில் ஈடுபட்டார். பிற்காலத்தில் எத்தனையோ அருமையான சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்த ஆசிரியப் பெருமான் முதல் முதலாகப் பதிப்பித்தது அந்த நூல் என்றே சொல்ல வேண்டும்.

“உ. கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுப்பாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமி களியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு – இவை பல வித்வான்களால் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடு துறை வேங்கடசுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன.

வெகுதான்ய வருடம், ஆனி மாதம்”

என்பது அதன் முகப்புப் பக்கம். அங்கிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் திருக்குற்றாலம், சங்கரநயினார் கோவில், திருச்செந்தூர் முதலிய தலங்களைத் தரிசனம் செய்துகொண்டு மீண்டும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்து சேர்ந்தார்.

$$$

14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது

திருவாவடுதுறையில் இருந்தபோது, 1880 -ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தியாகராச செட்டியார் அங்கே வந்தார். அவர் சுப்பிரமணிய தேசிகரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். “நான் என்னுடைய வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன். எனக்குப் பிறகு நான் வகித்த பதவியில் இருந்து பாடம் சொல்வதற்குத் தக்க ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். சாமிநாத ஐயரையே அந்த வேலையில் நியமிக்கலாம். அவரது பிற்கால வாழ்வுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்” என்று சொன்னார். சுப்பிரமணிய தேசிகர் முதலில் அதற்கு இணங்கவில்லை. தியாகராச செட்டியார் அவரிடம் மிகவும் சாமர்த்தியமாகப் பேசி அவரது இசைவைப் பெற்றுக்கொண்டார்.

நல்ல வேளை பார்த்து ஆசிரியப் பெருமானைக் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். புறப்படும்போது, “நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும், மகா வித்துவான் மகாலிங்கையரும், விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தி அடைந்து விளங்க வேண்டும்” என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அந்த அன்பும், அருளும் நிறைந்த வார்த்தை பிற்காலத்தில் அப்படியே பலித்தன. ஆசிரியப் பெருமான் அடிக்கடி அதை நினைவு கூர்ந்து உருகுவார்.

கும்பகோணத்திற்கு வந்தவுடன் அந்த ஊர்க் கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள் ஆசிரியருடைய புலமையைச் சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் சொன்ன பாடல்களை எல்லாம் ஆசிரியர் எடுத்து விளக்கினார். அவர்கள் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் ஆசிரியர் பாடம் கேட்டவையே. “நீர் புதிய பாட்டு இயற்றுவீரா?” என்று கேட்டதற்கு,  “எனக்குத் தெரிந்தவரையில் இயற்றுவேன்” என்று ஆசிரியர் சொன்னார். உடனே தியாகராச செட்டியாரை வைத்து அவரிடம் சொல்வதுபோல ஒரு பாட்டைப் பாடச் சொன்னார்கள். சில நிமிடங்களிலேயே ஆசிரியப் பெருமான் பின்வரும் பாட்டைப் பாடி முடித்தார்.

வாய்ந்த புகழ் படைத்திலங்கு மீனாட்சி
       
சுந்தரநா வலவன் பாலே
ஏய்ந்த தமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுற நீ
       
இதுகாறும் இனிதின் மேய
ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில்
       
நின்னிடமெற் களித்தல் நன்றே
வேய்ந்த தமிழ் முதற்புலமைத் தியாகரா
       
சப்பெயர் கொள் மேன்மை யோனே!

அங்கே இருந்த பேராசிரியர்கள் இதைக் கேட்டு மிகவும் வியந்தார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவருக்கு இத்தகைய திறமை இருப்பது ஆச்சரியமன்று என்று புகழ்ந்தார்கள். அப்போது கல்லூரி முதல்வராகக் கோபால் ராவ் இருந்தார். அவர் இந்தச் செய்திகள் அனைத்தையும் கேட்டுத் திருப்தி அடைந்து உடனே வேலையை மேற்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதுமுதல் ஆசிரியப் பெருமானுடைய மூன்றாவது வாழ்க்கைப் பகுதி தொடங்கியது. கல்லூரி ஆசிரியர் என்ற நிலையில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் பணியை மேற்கொண்டார்.

அந்த வேலையில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபால் ராவ் அடிக்கடி ஆசிரியர் நடத்தும் வகுப்புகளுக்கு வந்து இவர் பாடம் சொல் வதைக் கவனித்துச் செல்வார். மாணவர்களுடைய கவனத்தை ஈர்க்கும்படியாக, அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியாக, ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதைக் கேட்டுத் திருப்தி அடைவார்.

கும்பகோணத்திலிருந்து ஆசிரியப் பெருமான் அடிக்கடி திருவாவடுதுறை சென்று தம்முடைய அனுபவத்தை எல்லாம் தேசிகரிடம் சொல்வார். அதனால் சுப்பிரமணிய தேசிகருக்கும் திருப்தி உண்டாயிற்று.

கல்லூரி வேலையில் சேர்ந்த சில மாதங்களுக்கு எல்லாம் ஆசிரியப் பெருமானுக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அவருக்குக் கலியாணசுந்தரம் என்ற திருநாமத்தை வைத்தார்கள். திரு நல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாணசுந்தரேசுவரருக்குச் செய்துகொண்ட பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு அந்தத் திருநாமத்தை வைத்தார்கள்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s