-கி.வா.ஜகந்நாதன்

3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலிலுள்ள வீட்டில் இருந்தார். அவர் சைவத் திருக்கோலத்துடன் விளங்கினார். அப்புலவர் பெருமானை முதல் முதலாகக் கண்ட போது இவருக்கு உண்டான உணர்ச்சியைச் சொல்லினால் சொல்ல முடியாது. இவரே சொல்வதைக் கேட்கலாம்:
“அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது.”
தந்தையார் தம் குமாரரை அறிமுகம் செய்துவைத்தார். “இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியும்” என்றும் தந்தையார் சொன்னார். பிறகு மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி இவருடைய கல்விப் பயிற்சியை ஒருவாறு தெரிந்து கொண்டார். சில கேள்விகளைக் கேட்டு இவரது அறிவின் நுட்பத்தை உணர்ந்தார். இவருடைய தந்தையார், “பையனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார். புலவர் பெருமான் சிறிது யோசித்தார். “இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை. நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே இவர் தந்தையார் , “இவன் அவ்வாறு இருக்க மாட்டான். தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தமிழ்க் கல்வி கற்க எவ்வளவு காலம் ஆனாலும் தாங்கள் சொல்லிக் கொடுக்கலாம். வேறு எந்தவிதமான கவலையும் இவனுக்கு இல்லை” என்று சொன்னார். “இவரது உணவுக்கு என்ன செய்வது?” என்று அந்தப் புலவர் பெருமான் கேட்டார். “அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்தால் நல்லது” என்று தந்தையார் சொன்னார்.
“திருவாவடுதுறையிலும், பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய உணவு விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேனே” என்றார். அப்போது தந்தையார், “இங்கே இருக்கும் போது இவன் உணவுச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று நான் அனுப்பிவிடுகிறேன்” என்றார். “அப்படியானால் ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்” என்று புலவர் பெருமான் சொன்னார். அப்போது இவருக்கு உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு சொல்வது? அதன் பின்பு ஆசிரியர் பெருமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணாக்கராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதுமுதல் இந்தப் பெருமானுடைய வாழ்க்கையில் இரண்டாவது பகுதி ஆரம்பமாயிற்று.
சில காலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேரே பாடம் கேட்கச் சந்தர்ப்பம் இல்லை. அவரிடம் பாடம் கேட்டு வந்த சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர், நல்ல அன்பு உடையவர்; அவரிடமே இவர் பாடம் கேட்கும்படியாகப் பிள்ளை பணித்தார். அவரிடம் பாடம் கேட்கும்போது தம் அறிவாற்றலுக்கேற்ற வகையில் அவரால் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதை இவர் உணர்ந்தார். எப்படியாவது பிள்ளையிடமே அன்பைப் பெற்றுக் கொண்டு அவரிடம் நேரே பாடம் கேட்கவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்தது.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம்முடைய வீட்டின் பின் பக்கத்தில் பல மரங்களை அப்படியே வேருடன் பறித்து வந்து நட்டு வைத்தார். அவை நன்றாகத் தளதளவென்று தளிர்த்து வர வேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த மரங்களில் புதிய தளிர் விட்டிருக்கிறதா என்று பார்ப்பாராம். இதனை உணர்ந்து இவர் விடியற்காலையில் எழுந்திருந்து, அந்த மரங்களைப் பார்த்து, எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வார். பிள்ளை தளிரைப் பார்த்து வரும்போது, எங்கு எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று இவர் சுட்டிக் காட்டுவார். இதனைக் கண்டு இவரிடத்தில் பிள்ளைக்கு அன்பு மிகுந்தது. மெல்ல மெல்ல அவரோடு இவர் உரையாடத் தொடங்கினார். “இப்போது என்ன பாடம் நடக்கிறது?” என்று அவர் கேட்டார். “நைடதம் கேட்கிறேன். மேலே ஐயா அவர்களே எனக்குப் பாடம் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று விண்ணப்பித்துக்கொண்டார். அது முதல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவர் பாடிய திருக்குடந்தைத் திரிபந்தாதியை முதலில் பாடம் சொன்னார். இவ்விளைய மாணாக்கரிடத்தில் காணப்பெற்ற தமிழ்ப் பசியைப் பிள்ளை தெரிந்து கொண்டார். இவரது பசிக்கேற்ப ஒரு நாளில் பல பாடல்களைப் பாடம் சொல்லி வந்தார். பஞ்சத்தில் அடிபட்டவன் சிறிது சிறிதாகப் பல இடங்களில் உணவு பெற்று உண்டு, பிறகு ஓரிடத்தில் வயிறு நிறையச் சோறு உண்டது போல ஒருவகை உணர்ச்சியை இவர் பெற்றார். இவரே சொல்கிறார்:
“எனக்கிருந்த தமிழ்ப் பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப் பொரிபோல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். ‘இனி நமக்குத் தமிழ்ப் பஞ்சம் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தேன்” என்று எழுதுகிறார்.
வரிசையாகப் பல பிரபந்தங்களை மகாவித்துவானிடம் இவர் பாடம் கேட்டார். பல அந்தாதிகளையும், பிள்ளைத் தமிழ் நூல்களையும், வேறு பிரபந்தங்களையும் இவர் கற்றார். பாடம் சொல்வதற்காகவே அவதரித்தவர் போல மகாவித்துவான் விளங்கினார். பாடம் கேட்பதற்காகவே வந்தவர் போல இவரும் இருந்தார். இரண்டு பேர்களுடைய உணர்ச்சியும் ஒன்றுபட்டுச் சங்கமமாயின. அதனால் இரண்டு பேர்களுக்கும் பயன் கிட்டியது. மகாவித்துவான் பாடம் சொன்னார். தம் பசி தீர இவர் பாடம் கேட்டார். நன்றாகப் பாடம் கேட்கும் மாணாக்கரிடம் ஆசிரியருக்குத் தனி அன்பு உண்டாவது இயற்கை. ஆகவே, இந்தப் பெருமானிடம் கவிச்சக்கரவர்த்திக்கு உள்ளம் நெகிழ்ந்த பேரன்பு உண்டானது ஆச்சரியமன்று.
$$$
4. பெயர் மாற்றம்
ஒரு நாள் பாடம் சொல்லிக்கொண்டு வந்தபோது, “உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார் ஆசிரியர். “எங்கள் குல தெய்வம் வேங்கடாசலபதி. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பெற்றது” என்றார் இவர். “வேறு பெயர் உமக்கு உண்டா?” என்று பிள்ளை கேட்டபோது, “என்னைச் சாமா என்றும் அழைப்பார்கள்” என்று இவர் சொன்னார். “சாமிநாதன் என்ற பெயரின் சுருக்கம் அது” என்றும் எடுத்துச் சொன்னார். “இனிமேல், சாமிநாதன் என்ற அந்தப் பெயராலேயே உம்மை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார் பிள்ளை. அந்தப் பெயரே நிலைபெறுவதாயிற்று. தமிழ் உலகம் இன்றைக்கு இந்தப் பெரியவரை அந்தப் பெயராலேயே அடையாளம் கண்டு கொள்கிறது.
இடையிடையே காலை நேரங்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சென்று சங்கீதம் பயின்று வரலானார். இந்தச் செய்தியைப் பிள்ளையவர்களிடம் பாரதியாரே சொன்னார்.
ஒரு நாள் பாடம் சொல்லும் போது. ‘நீ பாரதியாரிடம் இசை கற்றுக் கொள்கிறாயாமே!’ என்று புலவர் பெருமான் கேட்டார். “பழக்கம் விட்டுப் போகாமல் இருப்பதற்கு அவரிடம் கற்றுக் கொள்ளும்படி தகப்பனார் சொன்னார்” என்று இவர் சொல்லவே, “இசையில் அதிகப் பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கியத்தில் அறிவு செல்லாது” என்று சொல்லிப் பிள்ளை போய்விட்டார்.
இசைப் பயிற்சியில் பிள்ளைக்கு ஊக்கம் இல்லை என்பதையும், அவர் சொன்னது உண்மையாய் இருப்பதையும் உணர்ந்து ஆசிரியப் பெருமான் ஏதோ காரணம் சொல்லி கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் கற்றுக்கொண்டு வந்த இசைப் பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்தக் காலத்தில் நன்றாகக் கவி இயற்றும் ஆற்றலையும் இவர் பெற்றார்.
$$$
5. திருவாவடுதுறைக் காட்சி
முதல் முறையாக இவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றார். அப்போது ஆதீன கர்த்தராக மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். அவர் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்தவர். அங்கே பிள்ளைக்கு அளிக்கப்பெற்ற வரவேற்பையும், அவரவர்களுக்கு ஏற்றபடி அவர் இனிமையாகப் பேசிய தன்மையையும் இவர் கவனித்தார். இதுகாறும் காணாத காட்சியை ஆசிரியப் பெருமான் அங்கே கண்டார். மகா வித்துவானிடம் ஆதீன கர்த்தருக்கு இருந்த சிறந்த அன்பை அப்போது ஆசிரியரால் உணர முடிந்தது. திருவாவடுதுறையில் இருந்து எல்லோருக்கும் பாடம் சொல்ல வேண்டுமென்றும், தம்பிரான்கள் பலர் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவலோடு இருப்பதாகவும் தேசிகர் தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த இவரைப் பார்த்து, “இவர் யார்?” என்று கேட்க, தம்மிடம் இருந்து சில காலமாகப் பாடம் கேட்டு வருவதாகப் பிள்ளை சொன்னார்.
பிறகு தேசிகர் ஆசிரியப் பெருமானிடம் ஏதாவதொரு பாடலைச் சொல்லச் சொன்னார். இசையுடன் இவர் பாடினார்; பொருள் விளங்கும்படியாகச் சொற்களைப் பிரித்துப் பாடினார். தேசிகர் அதைக் கேட்டு மிகவும் உவகை அடைந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் வந்தவர். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றால யமக அந்தாதியில் உள்ள ஒரு பாட்டைத்தான் இவர் சொன்னார். தம் முன்னோர் பாடிய பாடலானதாலும், அதை இசையுடன் சொன்னதாலும் தேசிகருக்கு இன்பம் உண்டாயிற்று; இவரைப் பற்றிய செய்திகளை எல்லாம் பிள்ளையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
திருவாவடுதுறைக் காட்சிகள் ஆசிரியருடைய உள்ளத்தில் பதிந்தன. அங்கேயிருந்த தம்பிரான்கள் நீண்ட சடைகளுடன் காவி உடுத்திருந்தார்கள். அவர்கள் ஆறுகட்டி, சுந்தரவேடத்துடன் இருப்பது கண்டு வியந்து நின்றார். அங்கங்கே உள்ளவர்களின் தவக் கோலத்தைப் பார்த்து அதை சிவராஜதானி என்று உணர்ந்தார்.
தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்து, “இனிமேல் நீங்கள் இங்கே தங்கியிருந்து எல்லோருக்கும் பாடம் சொல்லித் தர வேண்டும். அதுதான் நமக்கும் திருப்தியாக இருக்கும்” என்று சொன்னார். அப்போது பட்டீச்சுரத்திலிருந்து வந்திருந்த ஆறுமுகத்தா பிள்ளை என்பவர் சந்நிதானத்திடம், “பிள்ளையவர்களைப் பட்டீச்சுரம் அனுப்பிவைக்க உத்தரவாக வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். தேசிகரும் அவ்வாறே போய்வர அனுமதித்தார்.
$$$
6. தமிழ்த் தாத்தா பட்டீச்சுரத்தில்
திருவாவடுதுறையிலிருந்து பட்டீச்சுரம் போகும் வழியில் கும்பகோணத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த தியாகராச செட்டியாரை ஆசிரியர் சந்தித்தார். செட்டியாரைப் பற்றிய பெருமைகளை எல்லாம் ஆசிரியர் கேட்டிருந்தார். அவர் நல்ல சிவப்பு, பளபளவென்று இருக்கும் தேகமும், அவரது வீர நடையும், கம்பீரமான பார்வையும், தைரியமான பேச்சும் இவருடைய உள்ளத்தில் பதிந்தன. செட்டியார் இவரைப் பார்த்து, ‘நீ என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டாய்?’ என்று கேட்டார். தாம் பாடம் கேட்ட நூல்களைப் பற்றி இவர் சொன்னார் . “நீர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்ல முடிமா?” என்று கேட்டார் செட்டியார். “அப்படியே செய்வேன்” என்று இவர் சொன்னார். பிறகு பிள்ளையைப் பற்றிய பேச்சு அவர்களிடையே நிகழ்ந்தது. “ஐயாவிடம் பாடம் நன்றாகப் படியும், சோம்பேறியாக இருக்கக் கூடாது” என்று ஆசிரியரிடம் செட்டியார் சொன்னார். பிறகு ஆசிரியர் பிள்ளையுடன் பட்டீச்சுரம் சென்றார். பட்டீச்சுரத்தில் இருந்தபோது இவர் அதன் அருகில் இருந்த பல க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்து கொண்டார். நாகைப் புராணம், மாயூரப் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் எங்கும் இல்லாத புதிய முறைகள் இருந்தன. இரவு ஒன்பது மணிக்குமேல் எல்லோரும் சாப்பிடாமலே படுத்துக் கொள்வார்கள். நள்ளிரவில் ஆறுமுகத்தா பிள்ளை எழுந்திருந்து எல்லோரையும் எழுப்பி உணவு அருந்தச் செய்வார். அந்த விசித்திரமான செயல் பலருக்குப் பிடிக்காவிட்டாலும் ஆறுமுகத்தா பிள்ளையின் வற்புறுத்தலினால் அந்த முறை தவறாமல் நடந்து வந்தது. ஆறுமுகத்தா பிள்ளை சற்றுக் கடினமான இயல்பு உடையவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையைத் தவிர மற்றவர்களிடம் அவர் மரியாதை காட்ட மாட்டார். இவரையும் சில சமயம் கடிந்து கொண்டார்.
சவேரிநாத பிள்ளை என்பவர் அடிக்கடி மாயூரத்திலிருந்து அங்கே வந்து செல்வார். இரவு 12 மணிக்குமேல் உணவு செய்து வந்த வழக்கத்தை அவர் தைரியமாகப் பேசி மாற்றினார். அவர், “பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரமதேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!” என்று ஒரு பாட்டுப் பாடி அதைச் சொன்னார். ஆறுமுசுத்தா பிள்ளை அதைக் கேட்டார். சவேரிநாத பிள்ளை பக்குவமாக எடுத்துச் சொன்னதன் விளைவாக இரவு 10 மணிக்குள் யாவரும் உணவு அருந்தும்படி செய்தார். அவர் செய்த காரியத்தை யாவரும் மெச்சினார்கள். பிள்ளை ஆறு மாதங்கள் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்தார். அப்போது பல பெரிய மனிதர்களை எல்லாம் கண்டு பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
சரஸ்வதி பூஜைக்குத் தம்முடைய ஊராகிய உத்தமதானபுரம் செல்ல வேண்டுமென்று சொல்லி அப்படியே இவர் சென்றார். விஜய தசமியன்று தம்முடைய ஆசிரியரை விட்டிருப்பது நியாயமன்று என்றும், அன்று ஏதாவது பாடம் கேட்க வேண்டுமென்றும் ஆசிரியர் நினைத்தார். அவ்வாறு விஜயதசமியன்று பட்டீச்சுரம் சென்று நைடதத்தைப் பாடம் கேட்டார். மாயூரத்தில் முதல் நாள் பெற்றுக்கொண்டது நைடத நூல். இப்போதும் அதைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம் உவகையை ஆசிரியர் வெளியிட்டார்.
அதன் பின்பு தம்முடைய தாய் தந்தையர் இருந்த கோட்டூர் என்ற ஊருக்கு ஆசிரியர் சென்றார். அப்போது வெப்பு நோய் இவருக்குக் கண்டது. சிலகாலம் கழித்து அந்த நோய் நீங்கினவுடன் மீண்டும் திருவாவடுதுறை சென்று தம் ஆசிரியரைக் காண வேண்டுமென்ற அவா மீதூர்ந்தது.
(தொடர்கிறது)
$$$