Phiosopher Saint – நூல் அறிமுகம்

-திருநின்றவூர் ரவிகுமார்

இந்நூலின் முன்னுரையில் முனி நாராயண பிரசாத் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். அவரிடம் வந்த ரஷ்யப் பெண்மணிகளின் குழு தங்களுக்கு Enlightment (அறிவின் உயர்நிலை)யைக் கொடுக்கும்படி கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மட்டுமல்ல பல வெளிநாட்டினரும் இதுபோல இந்திய குருமார்களைப் பற்றிக் கருதுகிறார்கள்.

சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் ஒரு ஸ்காட்லாந்துகாரர். அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்தியாவில் பணிபுரிந்துள்ளார். அவர் மூலமாக இந்தியா பற்றி கேள்விப்பட்டுள்ள சுவாமி 1930 இல் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு வயது 23. வருவதற்கு முன் அவர் ஸ்காட்லாந்தில் பிரம்மஞான சபையின் உறுப்பினராக இருந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வந்தார்.

பல பிரபல காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்தார்; பிரம்மஞான சபைப் பணிகளில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசு அவரைக் கண்காணித்தது. தனது கனவான இந்திய நாட்டுக்கு வந்த பின்னர், அவர் அரசுக் கண்காணிப்பு பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சிக்கிம், நேபாளம், திபெத், பூடான் போன்ற இமயமலைப் பிரதேசங்களில் சுற்றியுள்ளார். மலைகளை மிகவும் விரும்பிய அவர் ஒரு நல்ல ஓவியரும் கூட.  பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹெனஸ்ட் வுட், ஹில்டா வுட் தம்பதி ஊட்டியில் அளித்த விருந்து ஒன்றில் டாக்டர் ப.நடராஜனைச் சந்தித்தார். அதன்பின் அவர் வாழ்க்கையின் போக்கு சீரான திசையில் மாறியது. 

கேரள மாநிலத்தில் பெரிய ஆன்மிக- சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவர் நாராயண குரு. அவருடைய சீடர் டாக்டர் பல்பு. பிரபல வைக்கம் போராட்டத்திற்கு முன்னின்றவர் டாக்டர் பல்பு தான். அவரது மகன் டாக்டர் நடராஜன். அவர் (டாக்டர் நடராஜன்- நடராஜ குரு) நாராயண குருவின் ஆன்மிக அறிவின் வாரிசாகக் கருதப்படுகிறார். ஜான் ஸ்பியர்ஸும் டாக்டர் நடராஜனும் ஊட்டியில் சந்தித்தபோது அது ஒருவரை ஒருவர் ஆழம் பார்ப்பதாக இருந்தது. 

ஜான் ஸ்பியர்ஸ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்; இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்றார். அவர் பிரிட்டிஷ் பிரஜையாக  இருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிய மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி பெங்களூரில் போர்அகதிகள் மறுவாழ்வுப் பணியில் ஈடுபட்டார். ‘போர் செய்தி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.

எனவே ஆரம்பத்தில் இருவரும் பரஸ்பரம் தகுதி நிர்ணயம் செய்ய முனைந்தது இயல்பே. ஜான் ஸ்பியர்ஸ் தான் முதன்முதலில் டாக்டர் நடராஜனை ‘நடராஜ குரு’ என்று அழைத்தவர். பின்னாளில் நடராஜ குரு தனது குருவான நாராயணகுருவின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய நூலை (Word of Guru) செம்மைப்படுத்தி பதிப்பிக்கும் பணியை ஜான் ஸ்பியர்ஸுக்கு வழங்கினார். 1936 ல் ஏற்பட்ட அறிமுகம் 1946 ல் நடராஜ குருவின் நாராயண குருகுலத்தில் சேர்ந்ததில் குரு-சிஷ்ய உறவாக ஆனது.

நடராஜ குருவின் மூலமாக தான் ஜான் ஸ்பியர்ஸுக்கு நாராயண குரு பற்றித் தெரியவந்தது. அவர் இந்தியா வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னமே நாராயண குரு சித்தி அடைந்து விட்டார். ஆனால் மிகச் சரியாக நாராயண குருவைப் புரிந்துகொண்டார். பலரும் சொல்வது போல நாராயண குருவை ஆன்மிக  மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவோ சமூக சீர்திருத்தவாதியாகவோ கருதாமல், அத்வைத நெறியில் வாழ்ந்து, வழிகாட்டிய குரு மகான்களின் வரிசையில் ஒருவராகக் கண்டார். 1952இல் நடராஜ குருவினால் துறவறம் அளிக்கப்பட்டு ஜான் ஸ்பியர்ஸ் காவி உடை தரித்த ‘சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்’ ஆனார். 1955 இல் நாராயண குருகுலம் சார்பில் ‘வேல்யூஸ்’ என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் அதன் ஆசிரியரானார். அதில் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கட்டுரைகளைத் தொகுத்தவர் பி.ஆர்.ஸ்ரீகுமார். 

இந்தியாவுக்கு வராமலே இந்தியாவைப் பற்றி சரியாகப் புரிந்துகொண்ட மேல்நாட்டவர் சிலர் உண்டு. இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்தாலும் இதைப் புரிந்து கொள்ளாமலே செத்தவர்கள் அநேகம். உலகில் பல நாடுகள் உள்ளன. இதில் இந்தியாவின் இடம் என்ன? பலர் இதைப் பாராட்டவும் புகழவும், வேறு பலர் இதை திட்டித் தீர்க்கவும் காரணம் என்ன? 

மொகலாயர்கள், ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னம் இருந்த வரலாற்று இந்தியா, சுதந்திர இந்தியா, அதன் பிறகு பொருளாதாரரீதியில் வளர்ந்த தொழிற்சாலைகளும் நகரங்களும் போக்குவரத்து நெரிசலும் கொண்ட இந்தியா. இவையெல்லாம் இந்தியாவல்ல. அரசியலில், சமூக வளர்ச்சியில், இந்தியா இன்னமும் மூன்றாம்தர நாடு தான் என்பதை கொரானா காலம் நமக்குக் காட்டியது. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் இப்போதுதான் காலடி வைத்திருக்கிறோம். 

இதுபோன்ற பரபரப்புகளிலிருந்து விலகி ‘நான்’ என்றால் என்ன? பிறப்பு – இறப்பு என்ற மர்மத்திற்கு பின்னால் இருப்பது என்ன? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? இதெல்லாம் என்ன? என்று தியானிக்கின்ற யோகிகளின் இந்தியா தான், பலரின் வியப்புக்கும்  பாராட்டுதலுக்கும் காரணம். அந்த யோகியை, இன்னும் தொடர்ந்து வரும் அந்த யோகிகளின் பரம்பரையை நீக்கிவிட்டால் இந்தியா என்பது ஒன்றுமற்றது. 

இந்தத் தேடல், உள்முகப் பயணம் மேற்கொள்பவர்களை, துறவிகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. துறவியின் பெயரில் சில சோம்பேறிகள் இருந்தாலும், துறவு  இங்கு மதிக்கப்படுகிறது; போற்றப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இது சாத்தியமில்லை. உண்மையைத் தேடி அதற்காக எதையும் துறப்பவரும் அதைப் போற்றி ஆதரிப்பவரும் தான் இந்தியா. நிலப்பரப்போ, ஆட்சியோ இந்தியா அல்ல. இந்த மனநிலை தான் இந்தியா – என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ். 

நாராயண குருவைப் பற்றித் தெரிந்துகொண்ட பின்னர் அவரைப் பற்றியும் அவரது கருத்துக்களையும் ஜான் ஸ்பியர்ஸ் எழுதவும் பேசவும் தொடங்கினார். அப்போது ஒருவர் அவரிடம், “நீங்கள் நம் குருவை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். எனவே நம்ம ஆளு நீங்கள்” என்று சொல்லி உள்ளார். ஒரு ஜாதி ஒரு தெய்வம் என்று நாராயண குரு சொன்னதை அந்த ஈழவ பக்தர் அப்படிப் புரிந்து கொண்டார் போலும். நாராயண குரு இந்து சமயத்தில் ஒரு உட்பிரிவை உண்டாக்கவில்லை. சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் இதைக் குறிப்பிட்டு, இது தவறு என்கிறார். என் ஜாதி, என் மொழி, என் இனம், என் தேசம்- இவற்றைக் கடப்பது தான் ஆன்மிகத்தின் முதல் படி. ஆன்மிக மலையுச்சியில் இருக்கும் நாராயண குருவுக்கு பிராமணரும் சாதாரணக் கூலியும் ஒன்றுதான். எல்லோரும் மனிதர்கள், வேறுபாடில்லை. பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தான் தேசாபிமானத்தைத் துறந்தது தான் நாராயண குருவின் வழியில் பயணித்த முதல் அடி என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்.

பலர் நாராயண குருவை சமூக சீர்திருத்தவாதி என்கிறார்கள்; அதுவும் சரியல்ல என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ். குரு ஒருபோதும் தலைவர் அல்ல. தலைவர் என்பவர் கூட்டத்தைச் சேர்த்தாக வேண்டும். குரு கூட்டத்தைச் சேர்க்க மாட்டார் என்பது மட்டுமல்ல, அவர் கூட்டத்தை விரட்டுபவர். பறக்கத் தெரிந்தவுடன் பறவைக்குஞ்சு கூட்டில் இருந்து வெளியேற்றப்படுவதைப் போல போதுமான ஞானம் பெற்றவர்களை குரு தன்னிடமிருந்து விலக்கி விடுவார்.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்  ( SNDP) என்ற அமைப்பில் உள்ள தர்மம் என்ற வார்த்தை கூட குருவுக்கு பொருந்தாது. தர்மம் என்பது கர்மத்துடன் தொடர்புடையது. குரு முழுமையை அறிந்தவர். அந்த ஞானம் கருமத்தைப் பொசுக்கக்கூடியது. எனவே தர்மம் – அதர்மம் என்பதெல்லாம் ஞானியைக் கட்டுப்படுத்தாது. அவர் அவற்றுக்கு அப்பால் சென்றவர் என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ். 

புத்தருக்கு குருவென்று யாருமில்லை. புத்தர் தனக்குப் பிறகு இவரென்று யாரையும் நியமிக்கவில்லை. விவேகானந்தரும் அப்படியே வாரிசை நியமிக்காமல் போனார். அரவிந்தரும் தனக்குப் பின் இவர் என்று எவரையும் காட்டவில்லை. ரமணரும் அப்படியே; அவருக்கு குருவும் இல்லை, வாரிசும் இல்லை. நாராயண குருவுக்கும் குரு என்று யாரையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அவரும், தனக்குப் பின் இவரென்று எவரையும் காட்டிக் செல்லவில்லை. ஆனால் இவர்கள் அத்தனை பேரும் இந்திய ஞான மரபுத் தொடரின் கண்ணிகள்.

குரு ஒரு வாகனம். வாகனத்திலிருந்து இறங்கி நாம் பயணத்தைத் தொடர வேண்டும் எனக் கூறும் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ், ‘தான் நாராயண குருவின் ஞானத்தைப் பின்பற்றுபவனே அன்றி நடராஜ குருவின் சீடன் அல்ல’ என்று கூறி நாராயண குருகுலத்தில் இருந்தும், நடராஜ குருவினிடமிருந்தும் 1971இல் விலகினார். ஆனால் நடராஜ குருவின் மீது  தனக்குள்ள மதிப்பும் மரியாதையும் எப்போதும் போல் தொடர்ந்து இருக்கும் என்றார். 

குரு என்பவரை ஞானத்தைக் கொண்டு மட்டுமே மதிப்பிட வேண்டுமா? அவர் உடல் கொண்டு உலகில் வாழ்பவர் அல்லவா? உலகியல் ரீதியாக மதிப்பிடுவது எப்படி? குரு எப்போது பார்த்தாலும் பிரம்மம், முழுமை, கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பார். நம்மைப் போல அவர் கஷ்டப்படுகிறாரா என்ன? என்று பலரும் கேட்கிறார்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் அருமையாகப் பதிலளிக்கிறார். 

சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் நாராயண குருவை நேரில் பார்த்தவர் அல்ல. அவரைப் பார்த்து அவருடன் பழகிய நடராஜ குரு, நடராஜ குருவின் தந்தை டாக்டர் பல்பு, கவிஞர் குமரன் ஆசான், எர்னஸ்ட் கிர்க் போன்ற பலரை அவர் சந்தித்து அவர்கள் மூலம் நாராயண குருவைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளார்.

நாராயண குரு உயரமான மனிதர். பிரகாசமான முகமும் பொலிவான தோற்றமும் கொண்டவர். சட்டென்று மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளக் கூடியவர். பிறரது துன்பங்களைப் பார்த்தால் அவருக்குப் பொறுக்காது; அன்புடன் அவர்களுக்கு உதவி செய்வார். அதேபோல முறையற்ற செயல்களை, கொடூரமான செயல்களைப் பார்த்தால் அப்போதே அதை எதிர்ப்பார். அவரது எதிர்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப அவரது எதிர்ப்பு வெளிப்படும்.

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். புத்திசாலி. உணர்ச்சி வேகத்தில் எந்தத் தவறும் செய்யாமல் அவரது புத்திசாலித்தனம் காத்தது. தூய்மை குறித்து அவர் வெறித்தனமாக இருந்தார். குறிப்பாக உள்ளத்தூய்மை, அறிவுசார் நாணயத்தில்.

தோற்றத்திலும் பழக்கத்திலும் மிகவும் எளிமையாக இருந்தார். எளிமை என்ற பெயரில் சோம்பேறித்தனம், அழுக்கு, அக்கறையின்மை என்பதை அவர் ஏற்கவில்லை. அதேவேளையில், மேற்கத்தியர்கள் போல அமைதியற்று இருப்பதையும் அவர் ஏற்கவில்லை. 

பிரபலமான பிறகும் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு தென்னிந்தியப் பகுதிகளில் பயணித்தார்; மக்களுடன் கலந்துரையாடினார். சமூக -அரசியல் அசைவுகளைக் கவனித்து வந்தார். சமுதாயத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளித்தார். வைக்கம் சிவன் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சாலையில் கூட பட்டியலின மக்கள் நடமாட முடியாத நிலையை மாற்ற போராட்டத்திற்கு வித்திட்டார்.

அவர் ஓய்வாக உட்கார்ந்ததில்லை. அதே நேரத்தில் அவரை யாரும் சந்திக்க முடியும். அதற்கு அவருக்கு நேரம் இருந்தது. அவர் இயற்றிய இலக்கியங்களின், மொழிபெயர்ப்பின் பட்டியல் நீண்டது.

இரண்டாவது கேள்விக்கு சுவாமி ஜான்ஸியின் பதில் சுவாரஸ்யமானது. இதற்கு பதிலென ஒரு புத்தகமே எழுதலாம் எனத் தொடங்குகிறார். உங்கள் வாழ்வில் முக்கியமானது மதிப்புள்ளது எதுவும் – அம்மா, அப்பா, காதல், கணவன், மனைவி, தேசம், ஜனநாயகம், புரட்சி என எதுவாக இருந்தாலும் அது – அந்த மதிப்புகள்/ மூல்யங்கள் எல்லாம் முழுமையிலிருந்து (நமக்கு பழக்கப்பட்ட வார்த்தை பிரம்மம்) பெறப்பட்டதே. இது அனுமானமோ வெறும் பேச்சோ அல்ல. நூற்றுக்கணக்கான குருமார்கள் தங்கள் தியானத்தால், தவத்தால் கண்டடைந்து கறாரான தர்க்கத்தால்  நிறுவியது. 

அந்த முழுமை ஒரு அதிசயம். அது முழுமையாக தன்னை வெளிப்படுத்துவதில்லை. அதை அடைய முடியும்.  ஆனால் முழுமையாகச் சொல்ல முடியாது. அதை அனுபவிக்க முடியும். அதற்காக மருத்துவர் போல ஒரு சீடனுக்கு மருந்தென சிலதைக் கொடுப்பார். அதை சீடர் செய்ய வேண்டும். அவருக்குப் பதிலாக  மற்றொருவர் அதைச் செய்ய முடியாது.

நீங்கள் நல்ல ருசியான உணவை உண்டு திருப்தி அடைகிறீர்கள். கலவியில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். கருத்துக்களை ஒத்தவருடன் பகிர்ந்து சந்தோஷப் படுகிறீர்கள். உடலால் முடியாத நிலை ஏற்படும்போது மனம் அதை அசைபோட்டு மகிழ்கிறது. இவையெல்லாம் அந்த முழுமையிலிருந்து வந்ததே. ஏனெனில் அந்த முழுமை ஆனந்தமே வடிவானது என்று ‘பிருஹதாரண்ய உபநிடதம்’ கூறுகிறது.

அந்த முழுமை மறைக்கப்பட்டால் தான் உலகம் இயங்க முடியும். உலகியல் வாழ்வு இருக்கும். ஒப்பீட்டு ரீதியிலான இந்த உலக தொடர்பைக் கடந்து முழுமையை உணர்ந்தவர் நாராயண குரு. இதை அவர் எழுதிய நூல்கள் பறைசாற்றுகின்றன. அந்த நிலையிலிருந்து தான் அவர் பார்த்தார், செயல்பட்டார் – என்கிறார் ஸ்வாமி ஜான் ஸ்பியர்ஸ். 

குரு என்றால் இருளை நீக்குபவர். ஏன் எதிர்மறையாகச் சொல்ல வேண்டும்? ஒளியைக் கொண்டு வருபவர் என்று சொல்லலாமே என்று கேள்வி எழலாம். நாம் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள். நம்முடைய உணவு, பேச்சு, சமூக நடத்தைகள், வழிமுறைகள் என எல்லாம் குழந்தையாக இருந்ததில் இருந்து பழகியது. ‘மூளைச் சலவை’ செய்யப்பட்டவர்கள் நாம். அரசியல், சித்தாந்தம், வர்த்தகம், சமயம் எல்லாம் பழக்கத்தினால் உருவானவையே. நாம் செயலால், சிந்தனையால் கட்டுப்பட்டவர்கள். இதை முதலில் உடைத்தெறிகிறார் குரு. நமக்கு இருக்கும் அறிவு கூட ‘அறிவு வடிவில்’ இருக்கும் அறியாமை தான். இதையெல்லாம் முதலில் அழித்துவிட்டுப் புதிதாக எழுதுகிறார் குரு – என்று விளக்குகிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்.

நாராயண குருவின் நூல்களைப் பற்றி, அதில் உள்ள கருத்துக்களைப் பற்றி நன்கு புரியும்படி பல கட்டுரைகளை சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதியுள்ளார். அதில் சில இந்நூலில் உள்ளன. நாராயண குருவுடன் நெருக்கமாக பழகியவரும் சீடருமான கவிஞர் குமரன் ஆசான் எழுதியுள்ள ‘நாராயண குருவின் வாழ்க்கைச் சுருக்கம்’ இந்த நூலில் உள்ளது. நாராயண குருவை தத்துவார்த்த ரீதியில் முன்வைத்த நடராஜ குரு எழுதிய ‘குருவின் சொல்’ என்ற நூலில் இருந்து இரண்டு அத்தியாயங்களும் இதில் உள்ளன. நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைப் பட்டியல் இதில் உள்ளது. அவர் எழுதிய நூல்கள், மொழிபெயர்ப்புகளின் பட்டியலும், அவரைப் பற்றி புரிந்துகொள்ள மற்றவர்கள் எழுதிய நூல்களில் முக்கியமானவற்றின் பட்டியலும் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாராயண குருவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் சொல்வதென்பது, சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் வார்த்தையில் சொல்வதென்றால், கடலைக் குவளையால் அளப்பது போலத் தான்.

$$$

நூல் விவரம்:

Philosopher Saint: The life and philosophy of Narayana Guru

-Swami John Spiers

(மெய்யுணர்ந்த மகான்: நாராயணகுருவின் வாழ்வும் தத்துவமும் 

ஆசிரியர்: சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்)

வெளியீடு: பிரிசிம் புக்ஸ், பெங்களூரு

விலை: ரூ. 499/- 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s