-மகாகவி பாரதி

7. கண்ணன் – எனது சற்குரு
புன்னாகவராளி – திஸ்ர ஜாதி – ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி
சாத்திரங் கள்பல தேடினேன் – அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் – பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் – பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? – நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் – சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே – என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை – நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. 1
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் – பல
நாட்கள் அலைந்திடும் போதினில், – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; – ஒளி
கூடு முகமும், தெளிவுதான் – குடி
கொண்ட விழியும், சடைகளும், – வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே – பல
சங்கதி பேசி வருகையில், 2
என்னுளத் தாசை யறிந்தவர் – மிக
இன்புற் றுரைத்திட லாயினர் -”தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், – சுடர்
நித்திய மோனத் திருப்பவன், – உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், – வட
மாமது ரைப்பதி யாள்கின்றான்; – கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் – அவன்
சத்தியங் கூறுவன்” என்றனர். 3
மாமது ரைப்பதி சென்றுநான் – அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, – என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே – சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; – அவன்
காமனைப் போன்ற வடிவமும் – இளங்
காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே – எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், 4
ஆடலும் பாடலும் கண்டுநான் – முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் – முனி
வேடந் தரித்த கிழவரைத் – கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் – ‘சிறு
நாடு புரந்திடு மன்னவன் – கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; – தவப்
பாடுபட் டோர்க்கும் விளங்கிடா – உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?’ 5
என்று கருதி யிருந்திட்டேன்; – பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், – ”நினை
நன்று மருவுக! மைந்தனே! – பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ; – நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே – சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் – அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்! 6
சந்திரன் சோதி யுடையதாம்; – அது
சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும்; -அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் – வந்த
மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -‘இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் – மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7
”ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; – கடல்
ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே – ஒரு
நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8
”சித்தத்தி லேசிவம் நாடுவார், – இங்கு
சேர்ந்து களித்துல காளுவார்; – நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; – ‘இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே – எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் – இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்’ – எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே, 9
‘சோதி அறிவில் விளங்கவும் – உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் – அற
நீதி முறைவழு வாமலே – எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து – கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் – பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே – இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் – பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10
”ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
யாதி யினைய கலைகளில் – உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் – பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் – அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் – சில
நாளினில் எய்தப் பெறுகுவார் – அவர்
காடு புதரில் வளரினும் – தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம். 11
”ஞானியர் தம்மியல் கூறினேன் – அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய்” – எனத்
தேனி லினிய குரலிலே – கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் – பண்டை
ஈன மனிதக் கனவெலாம் – எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்! – அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! – அதன்
ஆட லுலகென நான் கண்டேன்! 12
$$$