வலிமைக்கு மார்க்கம்- 4

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

10. ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்

பாரதக் கதையில் துரியோதனன் பாண்டவரைக் கொல்வதற்காகச் செய்த பல வஞ்சகங்களினின்றும் அவர்கள் தப்பிப் பிழைத்ததை நாம் பாலியர்களாயிருந்த காலத்தில் எவ்வளவு ஆவலோடு வாசித்தோம்! துரியோதனனது வஞ்சகங்களினின்று பாண்டவர்கள் தப்புவார்களென்பதையும், முடிவில் பாண்டவர்களே துரியோதனனாதிகளை வெல்வார்களென்பதையும், நமது சிற்றறிவு எவ்வளவு நன்றாக அறிந்திருந்தது! ஏனெனில் மெய்ப்பொருள் சர்வ வல்லமையும் சர்வ நியாயமுள்ளதென்பதும், அது நன்மையையும் நியாயத்தையும் கைவிடாதவர்களைக் கைவிடுவதில்லையென்பதும் நமக்குத் தெரியும். கடைசியில், பாண்டவர்கள் துரியோதனனாதிகளை வென்று, தமது அரசாட்சியைக் கைக்கொண்டபொழுது, நமது மனம் எவ்வளவு பெரிய சந்தோஷத்தை அடைந்தது.

மெய்ப்பொருள் அணுவுக்கணுவாய் நமது காட்சிக்குப் புலப்படாததாயிருந்தும், அது எல்லாவற்றையும் வெல்லுஞ்சக்தியைக் கொண்டு, நல்லவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சுகத்தையும், அவற்றை அடைவதற்குத் தக்க நிலைமைகளையும் கொடுக்கின்றது; அன்றியும் அது ஞான வளர்ச்சியினால் நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவையும் உயிர்களின் அகவுலகத்தை ஆளும் சட்டங்களைப் பற்றிய அறிவையும் அடைந்திருக்கிறவனுடைய ஆன்மா ஐக்கியமாகி நித்தியமாக வாழ்கின்றது. நன்மை வடிவாயிருக்கிற கடவுளுக்குச் சரியாக எவர் தமது அகத்தை நல்லதாக்க நாள்தோறும் முயல்கின்றனரோ, அவர் உண்மையில் மெய்யான ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சுகத்தையும் அடைகின்றனர். நன்மைக்கு உவமையாகச் சொல்லத்தக்க பொருள் ஒன்றுமில்லை. ஒழுக்க விதிகளுக்கு ஒத்துப்புறத்தில் நடப்பதை மாத்திரம் நான் நன்மையென்று சொல்லவில்லை. தூய நினைப்பு, உயர்ந்த கோரிக்கை, சுயநலமற்ற அன்பு, வீண் பெருமையில்லாமை முதலியவற்றை நன்மையென்று சொல்லுகிறேன். நல்ல நினைப்புகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருத்தலானது. ஒருவனைச் சுற்றி இனிமையும் வலிமையும் பொருந்திய ஒரு சூட்சும ஆகாயத்தைப் பரப்புகின்றது. அவன் சமீபத்தில் செல்லுகிறவர்களெல்லாம் அதனை உணர்கின்றனர்.

உதயசூரியன் உதவியற்ற இருள்களையெல்லாம் ஓட்டுவது போல, தூய்மையாலும் தெய்வ நம்பிக்கையாலும் பலப்படுத்தப்பட்ட ஓர் அகத்தினின்று பிரகாசிக்கிற நல்ல நினைப்பின் கிரணங்கள் தீமையின் இருட் சக்திகளையெல்லாம் ஓட்டுகின்றன. எவ்விடத்தில் பூரண தெய்வ நம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் ஆரோக்கியம் இருக்கின்றது; வெற்றி இருக்கின்றது; வலிமை இருக்கின்றது; அத்தகைய நம்பிக்கையும் தூய்மையுமுள்ள மனிதனை நோயும் தோல்வியும் எளிமையும் அணுக மாட்டா; ஏனெனில், அவற்றைக் கிரகிப்பதற்கும் போஷிப்பதற்கும் அவனிடத்தில் யாதொன்றுமில்லை.

சரீர நிலைமைகள் பெரும்பாலும் மனோ நிலைமைகளால் ஏற்படுகின்றன. இவ்வுண்மையை ஜடதத்துவ சாஸ்திரிகளும் அங்கீகரிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். தனது சரீரம் தன்னை எவ்வாறு செய்கின்றதோ அவ்வாறே மனிதன் ஆகிறான் என்னும் பழைய நாஸ்திக நம்பிக்கை விரைந்து நீங்கிக் கொண்டும், அதற்குப் பதிலாக மனிதன் தனது சரீரத்திற்கு மேற்பட்டவனென்னும், தனது நினைப்பின் வலிமையால் தனது சரீரத்தை எவ்வாறு செய்கிறானோ அவ்வாறே அஃது ஆகிறதென்றும் ஓர் ஆஸ்திக நம்பிக்கை விரைந்து உண்டாகிக் கொண்டும் வருகின்றது. ஒரு மனிதன் அஜீரண நோயால் வருந்துகின்றமையால் அவன் மனம் தளர்ச்சியுறுகிறானென்று நம்புவதை விட்டு, அவன் மனம் தளர்ச்சியுற்றிருப்பதால் அவன் அஜீரணத்தை அடைகிறானென்று இப்பொழுது ஒவ்வோர் இடத்திலுமுள்ள மனிதர் நம்பி வருகின்றனர். சகல வியாதிகளுக்கும் உரிய மூலம் மனத்திலிருக்கிறதென்ற உண்மை சமீப காலத்தில் சாதாரண ஞானமாய்விடும். மூலத்தையும் வேரையும் மனத்தில் கொண்டிராத தீமை எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை; துன்பமும் பாவமும், வியாதியும் துக்கமும் உண்மையில் பிரபஞ்சத்திற்குச் சொந்தமானவையல்ல. அவை உலகப் பொருள்களின் இயற்கைகளை ஒட்டினவையல்ல; ஆனால், அவை பிரபஞ்சப் பொருள்களுக்கும் நமக்குமுள்ள உண்மையான சம்பந்தங்களை நாம் அறியாத மடமை காரணமாக உண்டாகின்றன.

நமது தேசத்தில் ஒரு காலத்தில் அநேக தத்துவ ஞானிகள் இருந்ததாகவும், அவர்கள் அளவு கடந்த தூய்மையையும் கபடமின்மையையும் கைக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் சாதாரணமாக நூற்றைம்பது வயதிற்கு மேலேயே வாழ்ந்திருந்தாகவும், ஒழுக்கத்தினின்றும் தவறுதலே வியாதிக்குக் காரணமென்றும், வியாதியை அடைதல் மன்னிக்கத் தகாத ஒரு பேரவமானம் என்றும் அவர்கள் கருதியதாகவும் நமது தேசத்தின் சரித்திரங்கள் கூறுகின்றன. கோபங்கொண்ட ஒரு கடவுளால், அல்லது அறிவற்ற ஒரு தெய்வத்தால் வியாதி கொடுக்கப்பட்டதென்று நினைத்தலை நாம் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக விட்டு, அது நமது குற்றத்தால் அல்லது பாவத்தால் உண்டாகிறதென்று அபரோக்ஷமாக அறிவோமோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரமாக நாம் ஆரோக்கியமாகிய இராஜபாட்டையில் பிரவேசிப்போம். வியாதியானது தன்னைக் கவர்கின்றவர்களிடத்தும், தன்னைக் கொள்ளத்தக்க மனத்தையும் சரீரத்தையும் உடையவர்களிடத்துமே செல்கின்றது. ஆரோக்கியத்தையும் ஆயுள் பலத்தையும் கொடுக்கும் பிரவாகங்களைச் சிருஷ்டிக்கிற தூய்மையும் உண்மையும் வலிமையும் பொருந்திய நினைப்புக்களை ஆள்பவர்களை விட்டு வியாதியானது பறந்தோடுகின்றது.

நீங்கள் கோபத்திற்காவது, கவலைக்காவது, பொறாமைக்காவது, பேராசைக்காவது, நேர்மையற்ற வேறு ஒரு மனோநிலைமைக்காவது இடங்கொடுத்துக் கொண்டு, பூரண சரீர ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பீர்களாயின், நீங்கள் அடைய முடியாத ஒரு காரியத்தை எதிர்பார்க்கின்றீர்கள்; ஏனெனில், நீங்கள் உங்கள் மனத்தில் வியாதியின் வித்துக்களை இடைவிடாது விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவுள்ள மனிதன் எச்சரிக்கையாயிருந்து அத்தகைய மனோநிலைமைகளை நீக்கிவிடுகிறான்; ஏனெனில் அது துர்நாற்றம் நிறைந்த ஒரு சாக்கடையிலும், தொத்து வியாதி நிறைந்த ஒரு வீட்டினும் அதிக அபாயகரமானதென்று அறிவான். நீங்கள் சகல சரீர நோய்களிலிருந்தும் நோவுகளிலிருந்தும் தப்புவதற்கும், பூரண சரீர ஆரோக்கியத்தை அடைவதற்கும் விரும்புவீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் நினைப்பை நேர்மைப்படுத்துங்கள்; சந்தோஷகரமான நினைப்புக்களை நினையுங்கள்; ரம்மியமான நினைப்புக்களை உட்கொள்ளுங்கள்; நல் விருப்பமாகிய அமிர்தத்தை உங்கள் இரத்த நாடிகளின் வழியாக ஓடவிடுங்கள். உங்களுக்கு வேறு மருந்து ஆவசியகமில்லை. உங்கள் பொறாமைகளையும், உங்கள் சந்தேகங்களையும், உங்கள் கவலைகளையும், உங்கள் வெறுப்புக்களையும், உங்கள் சுயநல போகங்களையும் விட்டுவிடுங்கள். உங்கள் அஜீரணமும், உங்கள் பித்தமும், உங்கள் அச்சமும், உங்கள் கைகால் நோவுகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். பலஹீனத்தையும் நாசத்தையும் கொடுக்கிற இம்மனோ நிலைமைகளை நீங்கள் விடாது பற்றிக் கொண்டிருப்பீர்களாயின், உங்கள் சரீரம் நோயை அடைந்த காலையில் தெய்வத்தின்மீது குறை கூறாதீர்கள்.

பின்வரும் கதை மனத்தின் சுபாவங்களுக்கும் சரீர நிலைமைகளுக்குமுள்ள நெருங்கிய சம்பந்தத்தை விளக்கும்:- ஒரு மனிதன் ஒரு கடுமையான நோயால் வருந்திக் கொண்டிருந்தான். ஒருவன் பின் ஒருவனாக வைத்தியனையும் பார்த்து அவன் மருந்து சாப்பிட்டான். ஆனால், அம்மருந்தெல்லாம் யாதொரு பயனையும் தரவில்லை. பின்னர் அவன் வியாதிகளை நீக்கும் தீர்த்தங்களுள்ள ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று அவற்றில் மூழ்கினான். அவன் வியாதியோ முன்னினும் அதிகமாய் அதிக வருத்தத்தைக் கொடுத்தது. ஓர் இரவு அவனுடைய சொப்பனத்தில் ஒரு பெரியவர் தோன்றி, “சகோதரனே! வியாதியைத் தீர்க்கும் சாதனங்களையெல்லாம் செய்து விட்டாயா?” என்று கேட்டார். அவன், “ஆம், எல்லாவற்றையும் செய்துவிட்டேன்” என்று பதில் சொன்னான். பெரியவர், “இல்லை. நீ என்னுடன் வா; நீ கவனியாது விட்டுவிட்ட ஒரு தீர்த்தத்தைக் காட்டுகிறேன்” என்றார். வியாதியஸ்தன் அவரைப் பின்தொடர்ந்து போனான். பெரியவர் சுத்தமான நீரையுடைய ஒரு தடாகத்திற்கு அவனை அழைத்துக் கொண்டுபோய், “நீ இதில் மூழ்கு, உன் வியாதி நிச்சயமாக நீங்கிவிடும்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அம்மனிதன் நீரில் மூழ்கி வெளியேறவும், அவனது வியாதி நீங்கிவிட்டது; அதே நிமிஷத்தில் அவன் தடாகத்தின் மீது “விட்டுவிடு” என்ற சொற்கள் எழுதப்பட்டிருக்கக் கண்டான். அவன் விழித்த பின்னர் அவன் சொப்பனத்தின் முழு அர்த்தமும் அவன் மனத்துள் விளங்கிற்று. அவன் தனது அகத்துள் நோக்கினான். அவன் அவ்வளவு காலமும் ஒரு பாபகரமான செயலைச் செய்து கொண்டு வந்ததைக் கண்டான்; அதனை அடியோடு விட்டுவிடுவதாக அக்கணமே சத்தியம் கொண்டான். அவன் செய்துகொண்ட சத்தியத்தை நிறைவேற்றினான். அந்நாளிலிருந்து அவனது வியாதி அவனை விட்டு நீங்கத் தொடங்கியது. சிறிது காலத்திற்குள் அவன் வியாதி அவனை விட்டுப் பூரணமாகி நீங்கிவிட்டது.

அநேகர் வேலை மிகுதியால் தமது சரீர ஆரோக்கியம் குன்றிவிட்டதாகக் குறை கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தமது சக்தியை மடத்தனமாகச் செலவு செய்ததனால் சரீர ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றனர். நீங்கள் ஆரோக்கியத்தை அடைய விரும்புவீர்களாயின் நீங்கள் கஷ்டமில்லாமல் வேலை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆத்திரப்படுதலும் கவலைப்படுதலும் அநாவசியமான காரியங்களைப் பற்றித் தொல்லைப்படுதலும் சரீர உடைவை உண்டு பண்ணுதலாம். மூளை வேலையும் சரீர வேலையும் இலாபத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கத்தக்கவை. தன் கையிலிருக்கிற வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து யாதொரு கவலையும் தொல்லையுமில்லாமல் நிலையான அமைதியோடும் பிடிவாதத்தோடும் தனது வேலையைச் செய்யும் மனிதன். கவலையோடும் ஆத்திரத்தோடும் வேலை செய்கிற மனிதனைப் பார்க்கிலும், அதிக வேலை செய்வதுமல்லாமல், அவன் இழக்கின்ற ஆரோக்கியத்தை விரைவில் அடைபவனாகவும் இருப்பான்.

உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதுபோல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். விருப்பும் வெறுப்புமாகிய கலக்க நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள்; கேடாகிய புயல் எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன்மப்படகை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும் அசையாத நம்பிக்கையோடும் செலுத்துவீர்களாயின், அது கரைக்குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிச்சயம். மற்றபடி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்கையின் பலத்தினாலேயே நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின், மெய்ப்பொருளிடத்து நம்பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள்; உங்களுடைய வேலையிலும் அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின்மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். சகல சந்தர்ப்பங்களிலும் உங்கள் மனச்சாட்சியின் மிகவுயர்ந்த தூண்டுதல்களைப் பின்பற்றுதலும், தெய்வத்தன்மை வாய்ந்த உங்கள் ஆன்மாவுக்கு உண்மையாக நடத்தலும், உங்கள் அகஒளியையும் உங்கள் அகஒலியையும் நம்புதலும், ஒவ்வொரு நினைப்பின் பலனும் முயற்சியின் பலனும் எதிர்காலத்தில் உங்களுக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையோடும், நிர்ப்பயமும் அமைதிமுள்ள ஹிருதயத்தோடும் உங்கள் காரியத்தைச் செய்தலும், பிரபஞ்ச நியதி ஒருபோதும் தவறமாட்டாதென்றறிதலும், உங்கள் விருப்பம் ஒரு சிறிதும் குறையாமல் உங்கள்பால் திரும்ப வந்து சேருமென்றறிதலுமே தெய்வ நம்பிக்கையாம், தெய்வ நம்பிக்கையில் வாழ்தலாம். அத்தகைய நம்பிக்கையின் வலியால் சந்தேகமாகிய நீல நீர் பிளக்கப்படும்; கஷ்டமாகிய கருமலை தகர்க்கப்படும். அந்நம்பிக்கையைக் கொண்ட ஆன்மா யாதொரு துன்பமும் உறாது சென்றுவிடுகின்றது. நண்பர்களே! இந்நிர்ப்பயமான நம்பிக்கையாகிய விலை மதிப்பற்ற உடைமையை எதற்கும் மேலாக அடைய முயலுங்கள்; ஏனெனில், அஃதாவது ஆரோக்கியத்தையும், வெற்றியையும், சாந்தத்தையும், வலிமையையும், வாழ்க்கையைப் பெரிதாகவும் துன்பமற்றதாகவும் செய்யும் எல்லாவற்றையும் கொடுக்கும் மந்திர யந்திரமாகும். அத்தகைய நம்பிக்கையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுவீர்களாயின், நித்திய மலையின் மீது நித்தியப் பொருள்களைக் கொண்டு, நித்திய வீட்டைக் கட்டுகின்றவர்களாவீர்கள். நீங்கள் கட்டும் வீடு ஒரு காலத்திலும் அழியாது; அது முடிவில் தூளாகப் போகின்ற சகல ஸ்தூல உடைமைகளையும் போகங்களையும் கடந்து நிற்கும். நீங்கள் துக்கமாகிய கடலுள் ஆழ்த்தப்பட்டாலும் நீங்கள் சந்தோஷமாகிய மலையின் மீது உயர்த்தப்பட்டாலும், நீங்கள் இந் நம்பிக்கையை எப்பொழுதும் கொண்டிருங்கள்; நீங்கள் நிர்பயமாகத் தங்கத்தக்க மலைக்குகை அஃதேயென்று அதற்குத் திரும்புங்கள். அழியாததும் அசையாததுமான அதன் அடிவாரத்தில் உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அத்தகைய நம்பிக்கையை உறுதியாக நீங்கள் கொண்டிருப்பீர்களாயின் உங்களைத் தாக்க வரும் தீமையின் சக்திகளையெல்லாம் கண்ணாடியாற் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல, தூள் தூளாக்கத் தக்க ஆன்ம சக்தியை நீங்கள் அடைவீர்கள். உலக லாபத்தை அடையக் கருதிய மனிதன் ஒருபோதும் அடைய முடியாத (கனவிலும் அடைய முடியாத) வெற்றியை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் நம்பிக்கையைக் கொண்டு சந்தேகத்தை விடுவீர்களாயின், நீங்கள் இதனைச் செய்து முடிப்பது மாத்திரமன்றி, நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘நீ இவ்விடத்தினின்று நீங்கிச் சமுத்திரத்தில் போய் விழ’ என்று கூறின், அஃது அவ்வாறு நீங்கிப்போய் அங்கு விழும்.

இந்நம்பிக்கையைக் கைக்கொண்டு, இதனைக் கடைப்பிடியாகப் பிடித்து, இதனை நாள்தோறும் அப்பியசித்து இதனால் வரும் பெருமையையும் அமைதியையும் அடைந்துள்ள புருஷர்களும் ஸ்திரீகளும் இன்றும் இவ்வுலகில் இருக்கின்றார்கள். அவர்கள்தாம் மனித சமூகத்திற்குரிய விதி விலக்குகளை ஏற்படுத்தியவர்கள்; துக்கமும் ஆசாபங்கமும் மனக்களைப்பும் சரீர நோவும் அவர்களை விட்டு நீங்கியொழிந்துவிட்டன. நீங்கள் இந்நம்பிக்கையை உடையவர்களாயிருப்பின், உங்கள் வெற்றியைப் பற்றியாவது தோல்வியைப் பற்றியாவது நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியகமில்லை; வெற்றி நிச்சயமாக உங்கள்பால் வந்து சேரும். உங்கள் முயற்சியின் பலன்களைப் பற்றி நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியகம் உண்டாகாது. சரியான முயற்சிகளும் சரியான பலன்களைத் தவறாது கொண்டு வருமென்று நீங்கள் தெரிந்து சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள்.

அநேக சுகங்களை அநுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயை நான் அறிவேன். சமீபகாலத்தில் ஒரு நண்பர் அவளைப் பார்த்து, “ஆ! நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி! நீ ஒரு பொருளை அடைய விரும்புகிறாய்; அஃது உடனே உன்னிடம் வந்து சேருகின்றது” என்று கூறினார். அவளது காரியங்கள் மேலாந்தரப் பார்வையில் அவ்வாறு தோன்றின. உண்மையில் அவள் வாழ்வைப் பற்றிய சகல சுகங்களும் அவள் ஆயுள் நாளெல்லாம் கைக்கொண்டு வளர்த்து வந்த அவளது (சுகங்களென்னும்) அக நிலைமைகளின் நேரான பலன்கள், வெறும் விருப்பம் ஆசாபங்கத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டுவர மாட்டாது. சரியான வழியிற் செய்யப்படும் முயற்சியொன்றே விரும்பிய பொருளைக் கொண்டு வரும். ஒரு பொருளை அடைய விரும்பி மடையர் முணுமுணுக்கின்றனர். அப்பொருளை அடைவதற்குரிய வேலைகளைச் செய்து அறிஞர் காத்திருக்கின்றனர். இந்த ஸ்தீரி வேலை செய்திருக்கிறாள்; புறத்திலும் அகத்திலும் வேலை செய்திருக்கிறாள்; தெய்வ நம்பிக்கையும், தெய்வ விசுவாசமும், தெய்வ பக்தியும், அருளும், பரோபகாரமுமாகிய கற்களை கொண்டு (பொறிகளுக்குப் புலப்படாத) ஆன்மாவின் கைகளால் ஒரு நல்ல ஒளியாலயத்தைக் கட்டியிருக்கிறாள்; அதன் பெருமையுள்ள பிரகாசம் எப்பொழுதும் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. அஃது அவளுடைய கண்களில் பிரகாசிக்கின்றது. அஃது அவளுடைய முகத்தில் ஒளிக்கின்றது. அதன் வசீகர சக்தியை அவள் சமீபத்தில் செல்பவரெல்லாம் உணர்கின்றனர்.

எவ்வாறு அவள் சுகங்களை அடைந்தனளோ, அவ்வாறே நீங்களும் சுகங்களை அடையலாம்; உங்கள் வெற்றியும் உங்கள் தோல்வியும், உங்கள் செல்வாக்கும், உங்கள் முழு வாழ்வும் உங்களிடத்திலே இருக்கின்றன. ஏனெனில் உங்களை ஆளுகின்ற நினைப்புக் கூட்டங்களே உங்கள் விதியை ஆக்கும் கருவிகள். நீங்கள் அன்புள்ள நினைப்புக்களையும் மாசற்ற நினைப்புக்களையும் சந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள். சுகங்கள் உங்களிடம் வந்து சேரும். சாந்தியாகிய வஸ்திரம் உங்கள் மேஜையின் மீது விரிக்கப்படும். நீங்கள் வெறுப்புள்ள நினைப்புக்களையும், மாசுள்ள நினைப்புக்களையும், அசந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள்; நிந்தனைகள் உங்கள் மேல் சொரியப்படும்; அச்சமும் கவலையும் உங்கள் தலையணையின் மீது வந்திருக்கும் உங்கள் நல்ல விதியையோ, தீய விதியையோ, ஆக்குகின்ற கர்த்தர்கள் நீங்களே. உங்கள் வாழ்வை ஆக்குகிற அல்லது அழிக்கிற சக்திகளை நீங்கள் ஒவ்வொரு நிமிஷத்திலும் வெளியே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அகம் பெரியதாகவும் அன்புள்ளதாகவும் சுயநலமற்றதாகவும் வளரட்டும். நீங்கள் தனத்தை அதிகமாக அடையாவிட்டாலும், உங்கள் செல்வாக்கும், வெற்றியும் பெரியனவாகவும் நிலையுள்ளனவாகவுமிருக்கும். உங்கள் அகத்தைச் சுயநலத்தின் சுருங்கிய எல்லைக்குள் அடைத்து வையுங்கள்; நீங்கள் கோடீஸ்வரர்களான போதிலும் உங்களுடைய செல்வாக்கும் வெற்றியும் முடிவில் மிக அற்பமாகக் காணப்படும்.

ஆதலால், நீங்கள் கலப்பற்ற பர நலத்தை வளர்த்து அதனைத் தூய்மையோடும் தெய்வ நம்பிக்கையோடும் ஏக காரியத்தோடும் சேருங்கள். நீங்கள் நிலையான ஆரோக்கியத்தோடும் ஸ்திரமான வெற்றியை மாத்திரமல்லாது, பொறுமையையும் வலிமையையும் கொடுக்கும் அம்சங்களை உங்கள் அகத்தினின்று வெளிப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். உங்கள் தற்கால நிலை நீங்கள் விரும்பத்தகாததாகவும், உங்கள் மனம் உங்கள் வேலையில் செல்லாததாகவும் இருந்தால், நல்ல நிலைகளும் பெரிய காரியங்களும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற அபிப்பிராயத்தை நீங்கள் மனத்தில் கொண்டு உங்கள் கடமைகளை உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் ஊக்கத்தோடு செய்யுங்கள். நல்ல சமயம் வாய்த்துப் புதிய நிலை தோன்றும்பொழுது, அந்நிலையில் பிரவேசிக்கத்தக்க விதத்தில் உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டும், உங்கள் விவேகத்தை வளர்த்துக் கொண்டும், நீங்கள் அந்நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்.

நீங்கள் செய்யும் வேலை எதுவாயிருந்தாலும், அதில் உங்கள் முழுமனத்தையும் ஏகாக்கிரப்படுத்துங்கள்; உங்கள் ஊக்கம் முழுவதையும் அதில் செலுத்துங்கள்; சிறிய வேலைகளைக் குறைவறச் செய்து முடிப்பவருக்குப் பெரிய வேலைகள் நிச்சயமாக வந்துசேரும். எப்பொழுதும் நீங்கள் உறுதியாக மேல்நோக்கிச் சென்று கொண்டிருங்கள்; ஒருபோதும் நீங்கள் கீழ்நோக்கிச் செல்லாதீர்கள்; இதில்தான் உண்மையான வலிமையின் மர்மம் அடங்கி இருக்கின்றது. நீங்கள் உங்கள் சக்திகளை எப்படி ஆளலாமென்பதையும், அவற்றை ஒரு குறித்த விஷயத்தில் ஒரு குறித்த நிமிஷத்தில் எப்படி ஏகாக்கிரப்படுத்தலாமென்பதை அடிக்கடியும் அப்பியசித்துக் கற்றுக்கொள்ளுங்கள். மடையர் தமது மனோபலத்தையும் ஆன்மபலத்தையும் அற்பத்தனமான சிந்தனைகளிலும் மூடத்தனமான பேச்சுக்களிலும் சுயநல விவாதங்களிலும் வீணாகச் செலவிடுகின்றனர்; அவர் சரீரத்தால் செய்யும் மிகைகளோ எண்ணிறந்தன.

எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை, நீங்கள் அடைய விரும்புவீர்களாயின், இன்ப துன்பங்களைச் சமமாகக் கொள்ளவும், எப்போதும் அமைதியாயிருக்கவும் கற்றல் வேண்டும்; நீங்கள் எந்தக் காரியத்தையும் தனிமையாகச் செய்து முடித்தற்குச் சக்தியுள்ளவர்களாக வேண்டும். பலவகைப் பலமும் அசையாமையோடு கூடியிருக்கிறது; நிலையான மலையும், பெரிய பாறும், காற்றிற் கிளையாத கருங்காலி மரமும் தனித்து நிற்றலாலும், அசையாது நிற்றலாலும் தமது பலத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; உருளும் மணலும், வளையும் தளிரும், அசையும் நாணலும் தக்கும் சக்தியின்மையாலும் அசையுந் தன்மையாலும் தமது பலஹீனத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; தமது இனங்களை விட்டுப் பிரிக்கப்பட்டபொழுது, அவை சிறிதும் பிரயோஜனமில்லாமற் போகின்றன. தனது இனத்தாரெல்லாம் மனக்கிளர்ச்சியால் அல்லது மனச்சலனத்தால் துடிக்கும்பொழுது எவன் அமைதியாகவும் அசையாமலும் இருக்கின்றானோ, அவன்தான் உண்மையில் பலமுள்ள மனிதன்.

எவன் தன்னை அடக்கி ஆளுகின்றானோ, அவன்தான் மற்றவரை அடக்கியாளுவதற்குத் தகுதியுள்ளவன். வெறியர்களும், பயங்காளிகளும், ஆலோசனையில்லாதவர்களும், அற்பத் தன்மையுள்ளவர்களும் தத்தம் இனத்தோடு கூடி நிற்கட்டும்; இல்லாவிட்டால் துணையின்றிக் கீழே விழுந்து அழிந்து போவார்கள்; ஆனால், அமைதியுள்ளவரும், பயமற்றரும், ஆலோசனையுள்ளவரும், பெருந்தன்மையுள்ளவரும் வனமும், காடும், மலையின் உச்சியும் ஆகிய தனித்த இடங்களைத் தேடிச் செல்லட்டும்; அவரது பலத்தோடு அதிக பலம் சேரும்; மனிதரை அழிக்கும் மனத்தின் ஓட்டங்களையும் சுழிகளையும் தடுத்து அவர் மேன்மேலும் வெற்றியடைவர்.

காமக் குரோதம் பலமன்று. அது பலத்தின் துர்விநியோகமும் உடைவுமாகும். காமக் குரோதம் ஒரு பலத்த பாறின் மீது வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் அடிக்கும் ஒரு கடும் புயலுக்குச் சமமானது; ஆனால், பலம் அப்புயலுக்கெல்லாம் அசையாது மௌனமாய் நிற்கின்ற பாறுக்குச் சமமானது. மார்ட்டின் லூதர் என்பவர் வொர்ம்ஸ் என்னும் இடத்திற்குச் ஷேமமாகப் போய்வரமாட்டாரென்று சந்தேகித்த அவரது நண்பர்கள் அவரை அங்குப் போகக் கூடாதென்று சொல்லிய காலத்தில், அவர், “வீடுகளின் மேலுள்ள ஓடுகளைப் போல எண்ணிறந்த பேய்கள் வொர்ம்ஸில் இருந்தாலும் நான் போயே தீருவேன்” என்று பதில் சொல்லியது உண்மையான பலத்தைக் காட்டுகின்றது. பெஞ்சாமின் தேஸரே என்பவர் பார்லிமெண்டு சபையில் முதல் தாம் பேசத் தொடங்கித் தவறி, சபையாரின் அவமதிப்பை அடைந்த காலத்தில், அவர், “எனது பேச்சைக் கேட்பது ஒரு கௌரவம் என்று நீங்கள் நினைக்கும்படியான நாள் வரும்” என்று சொல்லியது சிருஷ்டி செய்யும் பலத்தைக் காட்டுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் துரதிர்ஷ்டங்களையும் கேடுகளையும் இடைவிடாது அடைந்து கொண்டிருந்த காலத்தில், அவனை அவனது சிநேகிதர் பரிகாசம் செய்து, மேல் பிரயத்தனஞ் செய்யாது நிறுத்திவிடும்படி சொல்லியதற்கு, அவன், “எனது நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் நீங்கள் கண்டு ஆச்சரியப்படும்படியான காலம் விரைவில் வரப்போகின்றது” என்று பதில் கூறினான்; அவனை எண்ணிறந்த கஷ்டங்களுக்குட்படுத்தி அவனுக்கு வெற்றியாகிய கிரீடத்தைக் கொடுத்ததும், எதனாலும் எதிர்க்க முடியாததுமான மௌன வலிமையை அவன் கொண்டிருந்தானென்பதை அது காட்டிற்று.

இவ்வலிமை உங்களிடத்தில் இல்லையானால் அதனை நீங்கள் அப்பியாசத்தினால் அடையலாம். வலிமையின் தொடக்கம் ஞானத்தின் தொடக்கத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் இவ்வளவு காலமும் மனதார இடங்கொடுத்துக் கொண்டிருந்த பயனற்ற அற்பக் காரியங்களையெல்லாம் ஒழிப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும். உரத்த சிரிப்பு, அடங்காத சிரிப்பு, நிந்தனைப் பேச்சு, பயனற்ற பேச்சு, சிரிப்பை உண்டு பண்ணும் விகடம் முதலியவையெல்லாம் வலிமையைக் கெடுப்பன என்று கருதி ஒதுக்கப்பட வேண்டும். செயின்டு பால் என்பவர் இபிசியின் ஜாதியாரைப் பார்த்து, “பயனற்ற பேச்சும் விகடமும் நல்லவையல்ல” என்று கூறியது, அவர் மனிதரது அபிவிருத்திக்குரிய (பொறிகளுக்குப் புலப்படாத) சட்டங்களில் எவ்வளவு ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தாரென்பதை விளக்குகின்றது. ஏனெனில், அத்தகைய பழக்கங்களைச் சுபாவமாகக் கொண்டிருத்தல் சகல ஆன்ம பலத்தையும் வாழ்வையும் அழித்துவிடும். அத்தகைய மனச்சிதறல்களுக்கு நீங்கள் இடங்கொடாத திட்பமுடையவர்களான காலையில் நீங்கள் உண்மையான வலிமை இன்னதென்று அறிய ஆரம்பிப்பீர்கள். பின்னர் உங்கள் ஆன்மாவைப் பந்தப்படுத்தி நீங்கள் வலிமையை அடைய விடாது தடுத்துக் கொண்டிருக்கிற உங்கள் அவாக்களோடும் பசிகளோடும் போராட ஆரம்பிப்பீர்கள்; அதன்பின்னர் நீங்கள் மிக எளிதில் அபிவிருத்தி அடைவீர்கள்.

நீங்கள் ஒரே நோக்கத்தை உடையவர்களாயிருங்கள்; எல்லாவற்றிலும் முக்கியமானதும் நியாயமானதும் பயன் தருவதுமான ஒரு காரியத்தைத் குறித்துக் கொள்ளுங்கள்; உங்கள் முழு மனத்தோடும் அதனைச் செய்யுங்கள். அது தவிர வேறு எதுவும் உங்கள் கவனத்தைக் கவர விடாதீர்கள்; “இரண்டு மனமுள்ள மனிதன் தனது பல காரியங்களிலும் நிலையில்லாதவனென்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும். கற்பதற்கு முந்துங்கள்; ஆனால், இறப்பதற்குப் பிந்துங்கள்; உங்கள் வேலையைப் பூரணமாக அறிந்து கொள்ளுங்கள். அதனை நீங்களே செய்து முடியுங்கள். உங்கள் அகவழிகாட்டியை உங்கள் அக ஒளியை, நீங்கள் பின் தொடர்ந்து செல்லும்பொழுது நீங்கள் வெற்றிமேல் வெற்றியை அடைவீர்கள்; படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களுக்குச் செல்லுவீர்கள். எப்பொழுதும் விரிந்து கொண்டிருக்கிற உங்கள் நுண்ணுணர்வு உங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தையும் அழகையும் உங்களுக்குக் காட்டும். உங்கள் மனம் சுத்தமாய் விட்டால் ஆரோக்கியமும் உங்களுடையதாயிருக்கும்; நீங்கள் தெய்வ நம்பிக்கையைக் கொண்டிருந்தால், வெற்றி உங்களுடையதாயிருக்கும்; உங்கள் மனத்தை நீங்கள் ஆண்டு வந்தால், வலிமை உங்களுடையதாயிருப்பதோடு நீங்கள் செய்வதெல்லாம் அபிவிருத்தியாகும்; ஏனெனில், நீங்கள் மனத்திற்கு அடிமையாகி மற்றைய உயிர்களினின்று பிரிக்கப்பட்ட தனிப்பொருளாயிருப்பதினின்று நீங்கி, நீங்கள் பிரபஞ்ச உயிராயும் நித்திய நன்மையாயும் விளங்காநின்ற மெய்ப்பொருளாகிய பெரிய சட்டத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யாது, அதற்கு ஒத்தவாறே எல்லாவற்றையும் செய்து, அதனோடு ஒருமைப்பட்டிருப்பீர்கள். நீங்கள் அடையும் ஆரோக்கியம் உங்களிடத்தில் நிலையாக நிற்கும்; நீங்கள் அடையும் வெற்றி மனிதர் எண்ணிக்கைக்கு எட்டாததாயிருக்கும்; அஃது ஒருபொழுதும் உங்களை விட்டு நீங்காமலிருக்கும்; உங்களுடைய செல்வாக்கும் வலிமையும் நாள்தோறும் அதிகமாய்க் கொண்டிருக்கும்; ஏனெனில், அவை பிரபஞ்சத்திற்கு ஆதாரமாயிரா நின்ற மெய்ப்பொருளின் அம்சங்கள்.

ஆகையால், சுத்தமான ஓர் அகமும், ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் மனமுமே ஆரோக்கியத்தின் மர்மம்; அசையாத தெய்வ நம்பிக்கையும், விவேகத்தோடு செய்யும் காரியமுமே வெற்றியின் மர்மம்; அவாவாகிய கருங்குதிரையை உறுதியான தீர்மானத்தோடு அடக்கியாள்வதே வலிமையின் மர்மம்.

ஆசிரியப்பா

நாம் நம் கால்களால் நடப்பதற் காக
எல்லா நெறிகளும் இருக்கின் றன; அவை
ஒளிஇரு ளுடையவை; உயர்வுதாழ் வுடையவை;
அழிவழி யாமை, அகலம் ஒடுக்கம்,
எட்டும் படிகள், எட்டாப் படிகள்,
நன்மை தீமை, நண்ணப் பெற்றவை;
அவற்றுள் ஒன்றைநாம் அடுத்ததில்
சென்றுதன் நன்று தீதுணர லாமே.

உள்ளுறும் தூய்மையாம் உயர்ந்த ஒடுங்கிய
சுத்தமார் நெறியினில் தொடர்ந்து செல் வோமெனச்
சத்தியம் செய்துநம் தாள்களை வைத்துப்
பிறருடை இகழ்ச்சிப் பேச்சம் சிரிப்பும்
நிந்தைச் சொல்லும் சிந்தையுட் கொளாது
நடந்திடை யூறுமுட் கடந்து, நலனார்
பசியநன் னிலத்தைப் பற்றிடின்,
நல்லன வெல்லாம் நாங்காண லாமே.

ஓடியே கழியும் ஒவ்வொரு கணத்திலும்
அன்பும் பொறுமையும் அளவிலா தாற்றி,
மாசெள் ளளவும் மனத்துறா தாண்டு
வாம்மையி னின்று வழுவா தென்றும்
உயிர்கள் தமது செயிர்விட உதவின்,
ஆரோக்கியமும் அழகும் வலிமையும்
அடைந்துள இடத்தைநாம் அடைந்துநின்
றழியா வீட்டினை அறிந்துணர லாமே.

தேடுவோ மாயின், தேடிய காண்போம்;
முயல்வோ மாயின், முயன்றன அடைவோம்;
இழப்போ மாயின்; இனிதுநாம் திருந்துவோம்
நமதுன் பங்கள் நாசமுற் றொழிய,
நமதான் மாஒளி நல்வாழ் வுடைய,
நாம்இவண் அழாது நகையுற வேண்டின்,
மெய்விதிக் கடங்கநாம் வேண்டும்;
நமையாள் மெய்விதி நமக்கடங் காவே;

சுயநயம் பிடித்த மயல்நெஞ் சுடையோர்
நற்பொரு ளெல்லாம் நமவென மொழிவர்;
நமதுநல் நோக்கம் நற்பொரு ளனைத்தையும்
தேடிக் காண்டலே, தெரிந்தினி துணர்தலே;
ஏனெனில், தூயரே ஞானவீ டடைகுவர்.
நமதெனச் சொலற்கும் நமதெனக் கொளற்கும்
ஒன்றுமே ஈங்கிலை உண்மைநாம்
அறியவும் உணரவும் அனைத்துநம் முடையவே.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s