மொழிகளில் பேதம் எதற்கு?

-சேக்கிழான்

`வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்‘  

-என்று பாடுவார் அப்பர் பெருமான்.

(திருத்தாண்டகம்- பதிகம்: 6.87)

நமது பண்பாட்டில் மொழி பெற்றுள்ள பேரிடத்துக்குச் சான்று பகர்கிறது இப்பாடல். அது மட்டுமல்ல, கண்ணுதற் கடவுளே கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த பெருமையுடையது தமிழ் நிலம். ஈசனே தமிழ் அகப்பொருளுக்கு இலக்கணம் எழுதினார் என்பதும் நம் நம்பிக்கை. ஈசனின் மகனான முருகனோ, செந்தமிழ்க் கடவுளாகவே போற்றப்படுகிறார்.

மொழி என்பது நமது பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சம். இந்தப் பண்பாடே, மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும் ஊடாடி நெய்த சேலை போலத்தான் காட்சி தருகிறது.

இந்த பரந்த பாரத தேசத்தில் பல வகையான மொழிக் குடும்பங்களை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. குறைந்தபட்சம் பத்தாயிரம் பேருக்கு மேல் பேசும் மொழிகள் மட்டுமே தனி மொழி என்று மொழியியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த மொழிகளிலும் பெருமளவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 22. அவற்றை நமது அரசு அலுவல் மொழிகளாக அங்கீகரித்திருக்கிறது.

இத்தனை மொழிகள் பேசப்படும்போதும், இந்த நாடு ஒரே நாடாக இருப்பது எப்படி? பலரும் வியக்கும் வித்யாசமான அம்சம் இதுதான். இதற்கு தமிழகத்தின் தேசியகவி பாரதி தனது பாடலில் அழகாக விளக்கம் அளித்திருக்கிறார்:

முப்பது கோடி முகமுடையாள்- உயிர்

மொய்ம்புறம் ஒன்றுடையாள் -இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்

-என்பார் மகாகவி பாரதி.

ஆனால், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்களால் விதைக்கப்பட்ட வடமொழி வெறுப்பு என்னும் விதை இன்று பெரும் நச்சுமரமாக வளர்ந்து, ஒருமைப்பாட்டுக்கு அவ்வப்போது சவால் விடுக்கிறது. இதனைப் போக்க வேண்டியது தேச பக்தர்களின் கடமை. அதற்கு, மொழி நமது பண்பாட்டில் பெற்றுள்ள பிரதான இடத்தை அறிந்திருப்பது அவசியம்.

பண்பாட்டின் உச்சமாகக் கருதப்படுவது இலக்கியமே. அந்த வகையிலும், உலகின் மிகப் பழமையான இலக்கியமாக ‘ரிக் வேதம்’ கருதப்படுகிறது. எழுதாக்கிளவியாக மனன முறையில் வாழையடி வாழையாக பல ஆயிரம் தலைமுறைகள் கடத்தப்பட்டு நம்மிடையே இன்றும் வாழ்கிறது ரிக் வேதம். அதன் இளையவர்களான யஜூர், சாம, அதர்வண வேதங்களும், ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களூம், உபநிடதங்களும், பாரத நாட்டில் செலுத்திவரும் செல்வாக்கை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால், இந்த நாட்டை ஒரு கட்டமைப்புக்குள் உருவாக்கியவையே இந்த இலக்கியங்கள்தான் எனில் மிகையில்லை. இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்தின் ஞானக் கருவூலங்கள்.

தமிழின் தொன்மையான இலக்கியங்கள், இலக்கண நூல்கள் அனைத்திலும், இந்த நூல்களின் தாக்கத்தைக் காண இயலும். தமிழில் மட்டுமல்ல, எந்த ஒரு மாநில மொழியில் ஆய்வு செய்தாலும், சம்ஸ்கிருத இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். ஏனெனில், சம்ஸ்கிருத மொழி தனியொரு குழுவின் பேச்சு வழக்கிற்கான மொழியாக மட்டுமின்றி, அறிஞர்களிடையிலான கருத்துப் பரிமாற்ற மொழியாகவும், எல்லை கடந்த பொதுமொழியாகவும், ஞானத்தைப் பொதியவைக்கும் கருவூல மொழியாகவும்  விளங்கி இருக்கிறது. அதனால்தான் ஆதி சங்கரரும் ஸ்ரீமத் ராமானுஜரும், மத்வாச்சாரியாரும் தென்னிலத்தில் துவங்கிய தங்கள் விஜய யாத்திரையை வடபுலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.

ஒன்றுக்கொன்று எடுத்தும் கொடுத்தும் பாரத தேசத்தில் மொழிகள் வளர்ந்தன. நமது நாட்டின் மொழிகள் அனைத்திலும் இதிகாச காவியங்கள் தனித்தனியே எழுதப்பட்டிருப்பதை இதற்கு சான்றாகக் கூறலாம். உதாரணமாக, சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகியின் ராமாயணமே, தமிழில் கம்ப ராமாயணமாகவும், ஹிந்தியில் துளசிதாச ராமாயணமாகவும் அரங்கேறி இருக்கிறது. வியாசர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மகாபாரதம், தமிழில் பெருந்தேவனாராலும், வில்லிப்புத்தூராராலும், மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சனாலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இதுவே இந்த மண்ணின் பண்பாடு. நல்லது எங்கிருந்தாலும் அதைப் பயில்வதும் பின்பற்றுவதும் இந்த மண்ணின் அடிப்படைக் குணம். அதனால்தான், நமது பண்பாடு ஆயிரம் ஆண்டுக்கால அந்நிய ஆதிக்கத்தால் வீழாமல் இன்றும் நிலைபெற்று நின்று கொண்டிருக்கிறது.

கல்விக்கும், மொழிக்கும் ஒரு கடவுளையே சிருஷ்டித்த பண்பாடு நம்முடையது. கலைகளில் அன்னையான சரஸ்வதியே மொழிகளுக்கும், இலக்கியங்களுக்கும் அன்னை. அவளை ’வாக்தேவி’ என்றே பூஜிக்கிறோம். இளம் வயதில் பேச்சு வராமல் தவித்த சிறுவன்  அந்த அன்னையை வணங்கியதால்,  மாபெரும் புலவன் ஆனான். காளிதாசன் என்ற அந்தப் புலவன் படைத்த  ‘மேகதூதம்’ உள்ளிட்ட நூல்கள் அனைத்தும் நமது பொக்கிஷங்கள். அதேபோல, தமிழகத்திலிருந்து தில்லி சுல்தானைச் சந்திக்கச் சென்ற குமரகுருபரர்  ‘சகலாவல்லிமாலை’யைப் பாடியதால், ஒரே இரவில் சுல்தானின் தாய்மொழியைக் கற்றறிந்தார்; அதன்காரணமாக சுல்தான் அவருக்கு அடிபணிந்தான் என்பதும் வரலாறு.

இறைவனே இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்த நிகழ்வுகளும் தமிழில் நிறைய உண்டு. சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்துக்கு, “உலகெலாம்’’ என்று சிதம்பரத்தில் அடியெடுத்துக் கொடுத்தார் நடராஜப் பெருமான். அதேபோல, அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்ற அடியை திருவண்ணாமலையில் எடுத்துக் கொடுத்தார் முருகப் பெருமான்.

திருப்புக்கொளியூரில் (அவிநாசி) முதலையுண்ட பாலகனை மீட்டது சுந்தர மூர்த்தி நாயனாரின் தெய்வத் தமிழ்; திருமயிலையில் (மயிலாப்பூர்) பாவையை உயிர்ப்பித்தது சம்பந்தப் பெருமானாரின் தீந்தமிழ்; கற்றூணைப் பூட்டி கடலினிற் பாய்ச்சினும், ஈசன் மீது தெய்வத் தமிழ்ப் பதிகம் பாடி மீண்டெழுந்தவர் திருநாவுக்கரசர். அரிமர்த்தன பாண்டிய மன்னனுக்கு தனது பக்தர் மாணிக்கவாசகரின் பக்தித் திறத்தைக் காட்ட, நரியைப் பரியாக்கி சிவன் திருவிளையாடல் நிகழ்த்தக் காரணமானதும் இதே அருந்தமிழ்.

இதுபோன்ற பல காட்சிகளை பிற மொழிகளிலும் காண இயலும். துக்காராமும், சமர்த்த ராமதாசரும், விட்டலரும் பாடிய மராத்திப் பாடல்களுக்காக கண்ணனே காத்திருந்தான் என்பது நம் நம்பிக்கை. பாண்டிய நாட்டு ஆண்டாளும், ராஜபுத்திர மீராபாயும் கண்ணனைத் தம் நாயகராகவே பெற, அவர்கள் பாடிய பாடல்களே காரணம். ஏனெனில் மொழி என்பது பேச்சு வழக்கிற்கானது மட்டுமல்ல. அது நம் வாழ்வின் அடையாளம்; நம் வாழ்வின் அடித்தளம். அதை மந்திரமும், வினைத் தந்திரமும் ஆக்கலாம் என்பதற்கு கந்தர் சஷ்டிக் கவசமே உதாரணம்.

இதுவே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு. பலவித மொழிகளாகிய ரத்தினங்களை ஹிந்து தர்மம் என்ற ஒற்றை நூலே மாலையாகக் கோர்த்திருக்கிறது. இந்த மணிமாலையின் அழகு ஜுவலிக்கிறது; கிறங்கச் செய்கிறது. இந்த மணிமாலை புனிதமானது; நமது சிறப்பை வெளிக்காட்ட அணிவதற்கானது; உலகம் போற்றும் பண்பாட்டின் சின்னமானது. எதையும் உணரும் அறிவின்றிப் பிய்த்தெறியும் குரங்குகளுக்கு இதன் அருமை புரியாது. எனவே இந்த மணிமாலையைப் போற்றிப் புரக்க வேண்டியது நம் அனைவர்தம் கடமை.

மொழிகளிடையே போட்டியோ, பேதமோ தேவையில்லை; அதேசமயம் தாய்மொழியை மறத்தல் போலப் பாவம் பிறிதில்லை. எந்த ஒரு மொழியும்- அது ஆங்கிலமோ, ஹிந்தியோ, வேறெந்த மொழியோ ஆயினும்- நமது ஞானத்தின் திறவுகோல். எனவே, எத்துணை மொழிகள் கற்றாலும் நல்லதே. அப்போதுதான் நமது இலக்கியச் செல்வங்களைப் பகிர்ந்து உலகை மேம்படுத்த இயலும். நமது தாய்மொழியை பிழையறக் கற்போம்; ஞானத்தை வசப்படுத்த பிற மொழிகளும் கற்போம்! நமது பண்பாட்டைக் காத்த பேரருளாளர்கள் போல, நாமும் மொழிகளிடையே இணக்கம் கண்டு, இலக்கியச் செழுமை வளர்ப்போம்!  இனிய பாரதம் காப்போம்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s