-ம.வெங்கடேசன்

சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது ஆரிய மொழி, பிராமணர்களின் மொழி, அது தமிழை அழிக்கும் மொழி என்றெல்லாம்கூட கருத்தை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறோம். தலித்துகளில்கூட அப்படியான ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனங்களில் இந்த எண்ணங்களைத்தான் பல நூறாண்டுகளாக வெள்ளைக்காரர்கள் செய்தார்கள், இப்போது திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசவிரோத சக்திகள் இந்த எண்ணங்களைத்தான் தலித்துகளின் – மக்களின் மனங்களில் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில் சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழி. இம்மக்களின் மொழி. இன்று தலித்துகளின் பட்டியலில் உள்ள வள்ளுவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வானியல், ஜோதிடம் போன்றவற்றில் மிகச்சிறந்த திறமைசாலிகளாக, புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். பல்வேறு அரசர்களுக்கு நாள் குறித்து தரும் கணியன்களாக பணிபுரிந்துள்ளனர். சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெறாமல் ஜோதிடத்தையும், வானியலையும் தொழிலாகக் கொள்ள முடியாது; காலத்தையும் கணிக்க முடியாது.
இப்படி எல்லா மக்களுக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் நாளடைவில் ஒரு சமுதாயத்திற்கான மொழியாக உருமாற்றம் பெற்றது வரலாற்றின் புதிர். ஆனால் ஒரு சில இடங்களில் தலித்துகள் சமஸ்கிருதம் பயின்றனர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கிறது. உதாரணத்திற்கு பறையரான க.அயோத்திதாசப் பண்டிதர், அவரின் பாட்டனார் போன்றவர்கள் சமஸ்கிருத மொழியில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்கள். அதே சமயம் அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எம்.ஆர்.ஜெயகர் போன்றவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க முடியாமல் ஆதிக்க சாதியினரால் துரத்தப்பட்ட சம்பவங்கள்தான் மிக மிக அதிகம்.
ஆனால் இதற்காக அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத மொழியை வெறுத்து ஒதுக்கிடவில்லை. தம் சொந்த முயற்சியாலும் பண்டிதர்களின் துணைகொண்டும் சமஸ்கிருத மொழியைக் கற்றார். அவர் சமஸ்கிருத மொழியைப் பற்றி கூறும்போது ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, தத்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். *1

சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின் மொழியாக, தேசிய மொழியாக வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதுபற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார். *2
இந்தச் செய்தி அன்றைய எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியானது. ‘தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்’ எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்: ‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.’ *3
இதற்கு இரண்டுநாள் முன் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷன் கூட்டத்திலும் அண்ணல் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது B.P.மௌர்யா போன்ற சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பின் B.P.மௌர்யா அவர்கள் என்சிஇஆர்டி-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் அப்போது அறியாமையினாலும் சமஸ்கிருத மொழியின்மேல் இருந்த வெறுப்பினாலும் அப்படி நடந்துகொண்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.
அடிக்குறிப்புகள்:
1. 1947 ஏப்ரல் 13ஆம் நாள் நவயுகம் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பு மலரில் பேராசிரியர் சத்தியபோத் ஹட்லிக் எழுதியது. (நூல்: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தனஞ்செய் கீர், தமிழாக்கம்– க.முகிலன், வெளியீடு: மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி).
2. The Hindu 11-9-1949
3. The Sunday Hindustan standard 11-9-1949
குறிப்பு:
திரு. ம.வெங்கடேசன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) என்ற அரசு சார் அமைப்பின் தலைவர்.
$$$