-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
6அ. திருவாவடுதுறை வாஸம்
அம்பர்ப் புராணம்
அப்பால் இவர் முன்பு தாம் வாக்களித்திருந்தபடி திருவாவடுதுறை செல்ல நிச்சயித்துப் புறப்பட்டார். அம்பர்ப் புராணத்தை எடுத்துக்கொண்டு உடன்வரும்படி சொன்னமையால் அதனையும் என் புஸ்தகங்களையும் எடுத்துக்கொண்டு உடன்சென்றேன். மாயூரத்தின் மேல்பாலுள்ள கூறைநாடு செல்லும் வரையில் பொதுவாகப் பாடவகைகளைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்துவிட்டு அம்பர்ப்புராணச் சுவடியை எடுத்துக்கொள்ளும்படி சொல்லி ஆன பாகத்தில் இறுதிப் பாடலைப் படிக்கச் செய்து கேட்டார். பின்பு மேலே தொடர்ச்சியாகச் செய்யுட்களை இயற்றிச் சொல்லிக்கொண்டே போனார். இவர் பாடத்தொடங்கியது அப்புராணத்தில் நந்தன்வழிபடுபடலத்தில் 54 – ஆவது பாடல். திருவாவடுதுறைத் தெற்கு வீதி செல்லும்வரையில் மேற்பாகத்தைச் சொல்லிக் கொண்டே சென்றார்; நான் எழுதிக்கொண்டே போனேன். அந்தப் பகுதி நந்தனென்னும் அரசன் தனது நகரிலிருந்து புறப்பட்டு இடையிலேயுள்ள சிவஸ்தலங்கடோறும் சென்று சென்று தரிசனம் செய்துகொண்டு திருவம்பரை அடைந்தானென்பது. அதிலுள்ள செய்யுட்களில் தலப்பெயர்களை எதுகையிலமைத்திருத்தலும் வழியெதுகைகளும் ஸ்தலங்களின் சரித்திரங்களும் இன்பத்தை உண்டுபண்ணின.
இவர் விரைவாகச் செய்யுள் செய்யும் ஆற்றலையுடையவரென்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக்கேட்டு அந்த நிலைமையை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமாவென்று ஆவலோடு பலநாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்தச் சந்தோஷம் அடைந்தேன். ‘இனி யாரேனும் இவரைப்போலப் பாடப் போகிறார்களா?’ என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று.
ஏதேனும் ஒரு பாடலைச் செய்துவிட்டு அதைப் பிறரைக் கொண்டும் திருத்துவித்துத் தாமே கையில் எடுத்துக்கொண்டு, “இச்செய்யுள் எப்படியிருக்கிறது பாருங்கள். நான் வெகு சீக்கிரத்திற் செய்தேன். இதைப்போலவே யாராவது பாடுவார்களா?” என்று சிலர் பெருமை பாராட்டிக் கொண்டிருத்தலைப் பலவிடத்திற் கண்டிருக்கிறேன். இவரோ சிறிதேனும் பெருமிதமின்றியும் தம்முடைய கவியைப் பாராட்டாமலும் வேறு பேச்சின்றியும் மேலே மேலே செய்யுள் செய்துகொண்டு போதலைப் பார்த்த எனக்கு விம்மிதமுண்டாயிற்று.
கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது.
வண்டியிற் செல்லும்பொழுது உண்டான அசைவால் ஏடுகளில் நான் எழுதிய பாடல்கள் வரிகோணியும் எழுத்துக்கள் நிலைகுலைந்தும் இருத்தலை அந்தச் சுவடியில் இன்றும் காணலாம்.
அந்தப் பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
(விருத்தம்) "வெற்றியூ ரொருமூன் றட்ட விமலனைக் கமலத் துள்ளான் பற்றியூர் கலுழப் புள்ளான் பறந்திடந் தினுங்கா ணானைச் சுற்றியூர் கோள்வ ளைந்த மதிநிகர் சோலை சூழ்ந்த ஒற்றியூர் புகுந்து போற்றி யுவணின்று மெழுந்தா னன்றே." "எயிலையன் றட்ட மூர்த்தி யெல்லாமா மட்ட மூர்த்தி அயிலையங் கையிற் கொண்டா னைங்கையான் றந்தை மேய கயிலையென் றெடுத்துப் பேசும் புன்னையங் கானல் சூழும் மயிலையம் பதியுட் புக்கு வள்ளலை வணங்கிப் போற்றி " *1 "ஒருகழு கும்ப ரேகி யுழன்றுங்கா ணரியான் பாதம் இருகழு கென்றுங் காணூஉ விறைஞ்சொரு வரையும் போற்றி அருண்மய மகலா தாக வழன்மய மாயி னான்செம் பொருண்மய மவனே யென்னப் பொலிதிரு வரையும் போற்றி."
திருவாவடுதுறையிற் பாடம் ஆரம்பித்தது
திருவாவடுதுறையின் தெற்கு வீதி சென்றவுடன் இவர் தம்முடைய விடுதிக்குச் சென்று அநுஷ்டானம் செய்து கொண்டார். பின்பு ஞானாசிரியரைத் தரிசித்தற்காக மடத்திற்குச் சென்றபொழுது இவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டே இருந்த குமாரசாமித் தம்பிரான் முதலியோர் முகமலர்ச்சியோடு வரவேற்று ஒடுக்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இவர் தேசிகரை வழக்கம்போலவே தரிசித்து அவருடைய கட்டளையின்படி அருகிலிருந்தார். இவருடைய நல்வரவைக் குறித்துத் தேசிகர் பாராட்டியதன்றி, “படிப்பதற்குத் தம்பிரான்களும் பிறரும் மிக்க ஆவலோடிருக்கிறார்கள். நாளைக் காலையிலேயே பாடம் தொடங்கி விடலாம். பாடங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். குமாரசாமித் தம்பிரான் நல்ல பயிற்சியுள்ளவராதலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் வைத்துக்கொண்டால் தங்களுக்கு அதிக சிரமம் இராது. ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைப் பிற்பகலிலும் வைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னார்.
மறுநாட் காலையில் இவர் அநுஷ்டானம் செய்துவிட்டு ஒடுக்கத்திற்குச் சென்றார். தம்பிரான்களும் பிறரும் அநுஷ்டானாதிகளை முடித்துக்கொண்டு அங்கே வந்து ஸித்தமாயிருந்தார்கள். ‘என்ன பாடம் இப்போது ஆரம்பிக்கவேண்டும்?’ என்று யோசித்தபொழுது சுப்பிரமணிய தேசிகர், “குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணமும் ஏனையோர்க்குச் சீகாளத்திப் புராணமும் தொடங்கலாம்” என்று சொன்னார். இவ்வாறு அவர்கள் கூறுவதைக் கேட்ட நான், “நம்மை ஒருவரும் கவனிக்கவில்லையே” என்றெண்ணிச் சற்று முகவாட்டத்தோடு இருந்தேன். இப்புலவர்பிரான் என்னை நோக்கினார். பார்த்த குறிப்பை அறிந்த தேசிகர், “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?” என்ற காலத்தில் இவர் என்னைப் பார்த்தார். ஆவல் மிகுதியால், “நான் இரண்டு பாடங்களையும் கேட்க ஸித்தமாயிருக்கிறேன்” என்று சொன்னேன் . “புத்தகங்கள் உள்ளனவா?” என்று தேசிகர் என்னை விசாரித்தார். இல்லையென்றேன். உடனே மடத்துப் புத்தகசாலையிலிருந்த திருவானைக்காப் புராணத்தையும், சீகாளத்திப் புராணத்தையும் வருவித்து எனக்கு அளித்தார். “இந்த இரண்டு பாடமும் நடக்கும்பொழுது செய்யுட்களை நீரே படித்து வாரும்” என்று தேசிகர் கூறினமையால் நான் அவ்வாறே படித்து வருவேனாயினேன்.
முதலில் திருவானைக்காப் புராணத்தில் ஸ்ரீ விநாயகர் துதி படிக்கப்பட்டது. அதற்குப் பொருள் சொல்லி முடித்தவுடன் மற்ற வகையாருக்குச் சீகாளத்திப் புராணப்பாடம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் விநாயகர் துதி முடிந்தவுடன் இவரைப் பார்த்து, “நாள்தோறும் பிற்பகலிற் சீகாளத்திப்புராணப் பாடத்தை வைத்துக்கொள்ளுங்கள். முற்பகலில் திருவானைக்காப் புராணம் நம் முன்னே நடக்கட்டும்” என்று தேசிகர் சொல்லவே இவர் அங்ஙனமே செய்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
எனக்கு ஆகாரம் பண்ணுவித்தது
அப்பால் மறுநாட் காலையில் திருவானைக்காப் புராணத்தின் மேற்பாகத்தைச் சுப்பிரமணிய தேசிகர் முன் படிக்கத் தொடங்கினோம். இக் கவிநாயகர் எனக்கு மட்டும் தெரியும்படி, “ஆகாரம் பண்ணிவிட்டீரா?” என்று கேட்டார். “இல்லை” என்றேன். அதைக் கண்ட தேசிகர், “ஐயா, என்ன சொன்னீர்கள்?” என்ன, பிள்ளையவர்கள், “காலையில் ஆகாரம் பண்ணி யாயிற்றாவென்றேன்” என்று சொல்லிவிட்டு மேலே பாடஞ் சொல்லத் தொடங்குமுன், தேசிகர் அங்கே நின்ற பிராமண காரியஸ்தரொருவரை யழைத்து, “ஒவ்வொரு நாளும் காலையில் இவருக்கு ஆகாரம் பண்ணுவித்து அனுப்ப வேண்டும். மற்றக் காலங்களிலும் ஆகார விஷயத்தில் நீரே இவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவு செய்து என்னைப் போய்வரும்படி சொன்னார்.
நான் போய்வரும் வரையிற் பாடம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சீக்கிரத்திற்சென்று வந்து படிக்கத் தொடங்கினேன். தேசிகர் கவனித்துக்கொண்டே யிருப்பவராகி இடையிடையே தோற்றிய அரிய கருத்துக்களை விளங்கச் சொன்னார். மணி பத்தானவுடன், “நீங்கள் போய்ப் பூஜையை முடித்துக்கொண்டு இங்கே பூஜையின் தரிசனத்துக்கு வரவேண்டும்” என்று தேசிகர் கட்டளையிட அங்ஙனமே இவர் சென்றார்.
நான் படித்த முறை
படிக்கும்பொழுது ஒவ்வொரு பாடலையும் முதலில் ஒரு முறையும், பொருள் சொல்லும்பொழுது சிறுசிறு பாகமாக ஒரு முறையும், பின்பு ஒருமுறையும் நான் படிப்பது வழக்கம். பாடங் கேட்கும் காலங்களிலெல்லாம் இவ்விதமே நடைபெறும். திருவானைக்காப்புராணம் மிகவும் கடினமான நூலாதலால் இவர் எவ்வளவு தெளிவாகச் சொல்லியும் முதலில் நாளொன்றுக்கு ஐம்பது பாடல்களுக்குமேல் நடைபெறவில்லை.
உடையவர் பூஜை பெற்றது
இப்படி நடைபெறுகையில் ஒரு வாரத்திற்கெல்லாம் மகா சிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. அன்றைத் தினம் பன்னிரண்டு மணிவரையிற் காலைப் பாடம் நடைபெற்றது. எல்லோரும் உபவாஸமிருக்கும் தினமாதலால் பிற்பகலிற் பாடம் நடைபெறவில்லை. அன்று உடையவர் பூஜை இவருக்குத் தேசிகரால் எழுந்தருளுவிக்கப்பட்டது. அப்பொழுது அதைக்குறித்துத் தேசிகர்மீது இவர் பின்னுள்ள பாடலை இயற்றி விண்ணப்பஞ் செய்து கொண்டனர்:
(கட்டளைக் கலித்துறை) *2 "பெரும்புங் கவர்புகழ் கோமுத்தி வாழ்சுப் பிரமணிய அரும்புங் கவன்பதம் யான்றொழ வென்கை யருட்குறியொன் றிரும்புங் கரைய வெடுத்தளித் தானதை யேத்தல்செய்வேன் கரும்புங் கனியு மெனவன்பு சாருங் கதியுமுண்டே"
அது தொடங்கி இவர் அபிஷேகம் அருச்சனை நைவேத்தியம் முதலியவற்றிற்குரிய பொருள்களை மிகுதியாக வருவித்து நாள்தோறும் நெடுநேரம் பூஜை செய்து வருவாராயினர். இளநீர் வழுக்கை , பஞ்சாமிர்தம், நிவேதனங்கள் முதலியவை அங்கேயுள்ளவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
திருவானைக்காப் புராணம் உபதேசப்படலப் பாடம் நடைபெறும்பொழுது பிள்ளையவர்களும் அங்கே வந்திருந்த சைவ சாஸ்திரத்தில் நல்ல பயிற்சியுள்ள பெரியோர்களும் கேட்டு இன்புறும்படி அப்படலத்திலுள்ள சாஸ்திரக் கருத்துக்களைச் சுப்பிரமணிய தேசிகர் நன்றாக விளக்கிச் சொன்னார். அந்த அருமையைப் பிள்ளையவர்களும் ஏனையோரும் பின்பு அடிக்கடி பாராட்டிக் கொண்டே வந்தார்கள்.
நான் மல்லிகைமாலை பெற்றது
பாடம் நடைபெறுகையில் ஒருநாட் காலையில் திருவிடைமருதூர்க் கோயிலிலிருந்து வஸந்தோத்ஸவ விசேஷத்தை முன்னதாகத் தெரிவிப்பதற்கு வந்த ஆதிசைவர் முதலியோர்களால் திருநீற்றுப்பிரஸாதம் முதலியன தேசிகரிடம் சேர்ப்பிக்கப்பெற்றன. அவற்றுள் ஒரு தாம்பாளத்தில் மல்லிகை மாலைகள் மிகுதியாக இருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு இப்புலவர் தலைவர் என்னையும் பார்த்தார். அக் குறிப்பை யறிந்த தேசிகர் அவ்வளவு மாலைகளையும் எடுத்து நான் வாங்கிக்கொள்ளும்படி வீசினார். அவற்றைக் கையிலேந்தி வைத்துக்கொண்டு பாடல்களைப் படிக்கத் தொடங்கினேன். இவர் மீட்டும் என்னைப் பார்த்து “இம் மாலைகளைக் குடுமியிற் சுற்றிக்கொள்ளும்” என்று குறிப்பித்தார். குறிப்பித்தும் தேசிகருக்கு முன் அங்ஙனம் செய்வதற்கு அஞ்சினேன். அதனை அறிந்த அவர், “இம்மாலைகளைக் குடுமியிற் சுற்றிக் கொண்டே படியும்” என்றார். அவர் வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி அவ்வாறு செய்தேன். அது தொடங்கி நானிருக்கும் பொழுது சிவப்பிரஸாதங்களோடு மாலைகள் வந்தால் அவற்றைத் தேசிகர் எனக்கு அளித்து விடுவதுண்டு. அவருடைய பரிபூர்ண தசை வரையில் அவ்வழக்கம் நிகழ்ந்து வந்தது.
ஸ்ரீ அப்பா தீட்சிதர் ஆட்சேபித்தது
காலைப் பாடத்தில் திருவானைக்காப்புராணம் முடிந்த பின்பு திருநாகைக்காரோணப் புராணம் தொடங்கப் பெற்றது. அதனைப் படித்துக்கொண்டு வருகையில் தலவிசேடப் படலத்திற் பிரளய கால வர்ணனைப் பகுதி நடைபெறும்போது திருவாலங்காட்டு அப்பாதீட்சித ரென்பவர் வந்தார். அவர் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர்; வியாகரணத்திலும் சைவ சாஸ்திரங்களிலும் நல்ல பயிற்சியுடையவர். அவரிடத்தில் எத்தனையோ சிஷ்யர்கள் மடத்தின் உதவியாற் படித்துப் பெரிய வித்துவான்களாக ஆனதுண்டு. அப்பொழுதும் சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள்.
வந்து அங்கேயிருந்த தீட்சிதர் நாங்கள் படிக்கும் பகுதியைக் கவனித்துக் கேட்பாராயினர். அங்ஙனம் கேட்டு வருகையில் அவர் ஒவ்வொரு பாடலிலுமுள்ள விஷயத்தை என்ன காரணத்தாலோ *3 ஆக்ஷேபித்துக்கொண்டே வந்தார். பிள்ளையவர்கள் சுருக்கமாக விடை கூறியும் சமாதானம் சொல்லியும் அதனைப் பாராட்டாமல் அவர் மீட்டும் மீட்டும் ஆட்சேபம் செய்து வந்தனர். அதனால் இப்புலவர்பெருமானுக்கு அதிருப்தி உண்டாயிற்று.
அதனையும் பாடம் தடைப்படுதலையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் அவர் வந்த காரியத்தை விசாரித்து முடிவுசெய்து விடைகொடுத்து விரைவில் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, “பாடம் நடக்கலாம்” என்றனர். வழக்கம்போலவே பாடம் நடைபெற்றது. இக் கவிஞர்பிரான், “திருவாலங்காட்டுத் *4 தியாகராஜ சாஸ்திரிகளிருந்தால் இந்தப் பாகத்தைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைவார்கள். இங்கே இப்போது அவர்கள் இல்லாதது ஒரு குறையே” என்று எங்களிடம் சொல்லிக் கொண்டே தம்முடைய வீடு சென்றார்.
‘தர்மஸங்கடமான விஷயம்’
மறுநாள் பாடம் நடைபெற்றபொழுது மேற்கூறிய தியாகராஜ சாஸ்திரிகள் புதுக்கோட்டையிலிருந்து திருவாலங்காட்டுக்குப் போய்விட்டு உடனே ஆதீன கர்த்தரைப் பார்ப்பதற்காக மடத்திற்குத் தம் சிஷ்யர்களுடன் தற்செயலாக வந்தார்.
அவர் உள்ளே வந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுச் சில நேரம் பேசிக்கொண்டிருந்தார். இக்கவிஞர் தலைவரும் சாஸ்திரிகளோடு சில நேரம் ஸம்பாஷித்தனர். அப்பால், “நேற்று நடந்த பாகத்தைச் சாஸ்திரிகளவர்களுக்குப் படித்துப் பொருள் சொல்ல வேண்டும்” என்று தேசிகர் சொன்னார். அவ்வண்ணமே நாலைந்து செய்யுட்கள் ஆயின. ஒவ்வொரு பாடலின் பொருளையுங் கேட்கும்போது சாஸ்திரிகள் ஆனந்தமடைந்து, “உங்களைப்போல் பாடுகிறவர்கள் யார் இருக்கிறார்கள்? இவ்வளவு அழகாகக் கற்பனை அமைக்கும் சக்தி உங்களுக்குத் தானிருக்கிறது. தமிழிலே பரிசயமில்லாத எனக்கே இந்தப் பாடல்களின் பொருள்கள் நன்றாக விளங்குகின்றன. ஸாஹித்ய மென்பது இதுதான். பூர்வஜன்மத்தில் நீங்கள் கம்பராக இருக்க வேண்டும்” என்று இக் கவிநாயகரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.
சுப் : இந்தப் பாடல்களில் ஏதேனும் குற்றம் காணப்படுகிறதா ?
தியாக : இந்தப் பாடல்கள் ஸஞ்சரிக்கிற இடங்களிற் கூடக் குற்றம் இராதே. அப்படியானால் இவற்றில் எப்படியிருக்கும்? நிர்த்தோஷமான வாக்கு.
சுப் : இவற்றில் ஏதாவது குற்றமிருக்கிறதென்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
தியாக : அவனை மஹா அயோக்யனென்றும் துஷ்டனென்றும் மூர்க்கனென்றும் மஹா அஹங்காரியென்றும் சொல்வேன். அப்படிச் சொன்னவன் யார்?
சுப் : உங்களுடைய குருவே!
தியாகராஜ சாஸ்திரிகள், “அப்படியா!” என்று நடுநடுங்கி உடனே எழுந்து இரண்டு கைகளையும் தலைமேற் குவித்துக்கொண்டு *5 வடதிசையை நோக்கிக் கண்ணை மூடிக்கொண்டு, “ஹரஹர மஹா தேவா! சிவ சிவா! என்னுடைய பதட்டமான வார்த்தைகளை க்ஷமிக்கவேண்டும். ஆசார்ய மூர்த்தே!” என்று சொல்லிக் கொண்டும் கண்ணிற் கருவிழிகளை மேலே செலுத்தித் தியானித்துக் கொண்டும் நின்றார்.
சுப் : (புன்முறுவல் கொண்டு) சாஸ்திரிகளே ! இருக்க வேண்டும். இவ்வளவு தூரம் நீங்கள் மனத்தைச் செலுத்துவீர்களென்பது நமக்குத் தெரியாது. ஏதோ நடந்ததைச் சொல்ல வேண்டியிருந்தமையால் சொல்லும்படி நேர்ந்தது. பொறுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளையவர்களிடத்தில் தாங்கள் மிகுந்த அபிமானமுடையவர்களாதலால் தங்களிடத்திற் படித்துக் காட்டித் தங்களுடைய ஸந்தோஷத்தைப் பெறவேண்டுமென்பதே நமது கருத்தாதலால் இங்ஙனம் செய்யலாயிற்று.
தியாகராஜ சாஸ்திரிகள், “ஸந்நிதானம் இப்படிப்பட்ட தர்மஸங்கடமான விஷயத்திற் கொண்டுவந்து விட்டதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! இனிமேல் இப்படிப்பட்ட ஸங்கடத்தில் என்னை இழுத்துவிடக் கூடாது” என்று சொல்லிக்கொண்டேயிருக்கையில் நேரமாய்விட்டபடியால் எல்லோரும் விடைபெற்று எழுந்து சென்றார்கள். முதல் நாள் மிகுந்த வருத்தமடைந்து கொண்டேயிருந்த எங்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பெரியதோர் ஆறுதலை விளைவித்தது. எல்லோருக்கும் விடை கொடுத்து விட்டுத் தேசிகர் ஸ்நானத்துக்குச் சென்றனர்.
ஒரு பாடலின் சரியான பாடம்
ஒரு சமயம் பல அன்பர்களிடம் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளுடைய புலமைத் திறத்தைப் பாராட்டிக் கொண்டிருக்கையில் அவர் பிடாரியென்னும் தெய்வத்திற்கு ஒரு சீட்டுக் கவி எழுதி விடுத்ததாகச் சொல்லிவிட்டு இவர் என்னைப் பார்த்தார். அக்குறிப்பை அறிந்து நான்,
(விருத்தம்) "திருந்துதமி ழிலக்கணவைந் திணைக்கோவை விருத்தகிரிச் செல்வர்க் கோதும் பெருந்தகைமை யுடையம்யாம் விடுமோலை வெங்கனூர்ப் பிடாரி காண்க இரும்புவியி லொருமுருங்கைக் கொம்பொடியா மற்காத்திங் கிருக்கும் நீரும் முருங்கைதனை வேரோடுங் களைவதென்றா லீதுனக்கு முறைநன் றாமோ"
என அந்தச் செய்யுளைச் சொன்னேன். இவர், “விருத்தகிரிச் செல்வரென்பது பாடமன்று; திருவெங்கைச்செல்வ ரென்பதே பாடம்” என்றார். ‘இவர் கூறுவது பிழையாயிருக்குமா? இவருடைய பாடமன்றோ கொள்ளற்பாலது?’ என்பதை அச்சமயத்தில் உணராமல் நான் மறுத்து, “தனிப்பாடற்றிரட்டின் அச்சுப் பிரதியில் அப்படித்தான் இருக்கிறது” என்றேன். நான் அங்ஙனம் கூறியதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையினால்தான் நான் மறுத்துச் சொன்னது பிழையென்பது புலப்பட்டது.
நான் செய்தது குற்றமெனினும் இவர் அதனைக் காட்டிக்கொள்ளாமல், “அச்சிலிருப்பதால் சரியான தென்று நினைக்கக் கூடாது. பாஷையிற் பயிற்சியில்லாதவர்கள் துணிந்து எதையும் அச்சிட்டு விடுவார்கள். விஷயம் தெரிந்தவர்கள் அச்சிட்டால் சரியாக இருக்கும்” என்று சொன்னார். பிற்காலத்தில், இவர் சொன்னதே சரியென்று என் அனுபவத்திலும் தெரியவந்தது.
மகா வைத்தியநாதையர் பெருமையை நான் அறிந்தது
பிள்ளையவர்கள் வேறு காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்கையில் நானும் சில மாணவர்களும் அவர்களுடைய நோக்கத்தின்படியே இரவில் ஆதீன கர்த்தரிடஞ் சென்று சில சமயங்களிற் பேசிக்கொண்டிருந்து விட்டு வருவதுண்டு. அக்காலங்களில் “இன்றைக்கு என்ன பாடம் நடந்தது? பாடங்களில் என்ன என்ன விசேடங்களை அறிந்தீர்கள்?” என்று அவர் கேட்பார். கேட்டவற்றிற்கு ஜாக்கிரதையாக விடை சொல்லிவிட்டு வருவோம். நாங்கள் சொல்லுவதில் ஏதேனும் குற்றமிருந்தால் அவர் அதைத் திருத்துவார்.
நாங்கள் செல்லுங்காலங்களில் *6 அவருக்கு முன் திருக்குறள் – பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, இலக்கண விளக்கம் முதலியவற்றுள் ஏதேனும் ஒரு பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதுவும் எங்களுக்குப் பேரூதியமே. மாணாக்கர்களோடு பழகுவதில் அவருக்கு மிகுந்த திருப்தியுண்டு; “ஏதேனும் ஆக வேண்டியதுண்டா?” என்று எங்களைக் கேட்டு நாங்கள் சொல்லுவனவற்றை அப்பொழுது அப்பொழுது முடித்துக் கொடுப்பார்.
ஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, “ஸங்கீதப் பழக்கத்தை விருத்தி செய்து கொண்டால் நலமாக இருக்கும்; அதனோடு சேர்ந்து தமிழ்க்கல்வியும் மிகப்பயன்படும்; மகா வைத்திய நாதையரவர்கள் ஸங்கீதப் பயிற்சியோடு தமிழிலும் நல்ல பாண்டித்யமுள்ளவர்களாக இருப்பதால் அவர்களுடைய வித்தை உலகத்தில் நன்றாக விளங்குகின்றது” என்று சொன்னார்; அன்றியும், தாம் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும்பொழுது அவர் தம் தமையனாருடன் அங்கே வந்ததும் அவருடைய ஒப்புயர்வற்ற கானத்தைக் கேட்டு மற்ற ஸங்கீத வித்துவான்களைக் காட்டிலும் அவர்க்கு அதன்பால் மிக்க ஆற்றல் இருத்தலையறிந்து ஒரு மகா சபை கூட்டி அவருக்கு மகா வைத்தியநாதைய ரென்ற பட்டத்தைத் தாமளித்ததும் பிறவுமாகிய வரலாறுகளை யெல்லாம் சொன்னார். சொல்லிக்கொண்டு வரும்பொழுது, “அவர்களைத் தரிசிக்க வேண்டுமென்கிற விருப்பம் எனக்கு நெடுநாளாக உண்டு; அதற்குரிய நற்காலம் இதுவரையில் எனக்குக் கிட்டவில்லை. இனிக் கிடைக்குமென்று நினைக்கிறேன்” என்று விநயத்துடன் சொல்லி விட்டு வந்தேன்.
இப்படிச் சென்று வந்தமையால், ஒவ்வொரு நாளிலும் நாங்கள் தெரிந்துகொண்ட அரிய விஷயங்கள் பலவாகும். நிகழ்ந்தவற்றை உடனுடன் பிள்ளையவர்களிடம் தெரிவித்து விடுவோம்.
ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் வந்தது
சில தினங்களுக்குப் பின்பு ஒருநாட் காலையில், கோடக நல்லூர் ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் திருவையாறு முதலிய ஸ்தலங்கள் ஏழனுக்கும் திருமழபாடிக்கும் திருப்பணி செய்வித்து ஒரே தினத்தில் அந்த எட்டனுக்கும் கும்பாபிஷேகம் செய்விக்க நினைந்து அந்தச் செலவிற்காகப் பலரிடத்துஞ் சென்று பொருள் சேகரித்துக்கொண்டு அதன் பொருட்டே திருவாவடுதுறைக்கும் வந்து ஓரிடத்தில் தங்கினார். மகா வைத்தியநாதையர் முதலிய பல சாம்பவர்களும் திருநெல்வேலி ஐயாஸாமி பிள்ளையவர்கள் முதலிய வேறு பல அடியார்களும் செறிந்த கூட்டம் அவருடன் வந்திருந்தது. அவருடைய வரவைக் கேட்ட இக்கவிஞர்கோமான் அவரைத் தரிசிக்க விரும்பி வந்தார்.
பிள்ளையவர்களைக் கண்டவுடன் ஸ்வாமிகள் எழுந்து நிற்க இவர் வந்தனஞ் செய்தார். அப்பொழுது ஸ்வாமிகள், “நீங்கள் சிவபக்த சிரோமணிகள். உங்கள் வந்தனத்துக்கு நான் உரியவனல்லேன். ஆதலின் அதனை ஈசுவரனுக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன்” என்று சொல்லிக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு அயலிலிருக்கச் செய்தார்; அப்பால் இருவருமிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்ஙனமிருக்கையில், ஸ்வாமிகள் எப்பொழுது பார்க்க வரலாமென்று ஸமயந்தெரிந்து வரும்படி ஆதீனகர்த்தரிடம் ஓரன்பரை அனுப்பினார்; அது தெரிந்த தேசிகர் உடனே அழைத்துக்கொண்டு வரும்படி தக்கவர் சிலரை அனுப்பினார். ஸ்வாமிகள் மடத்திற்குச் சென்றார்; முன்னே சென்று மகா வைத்தியநாதையர் ஸ்வாமிகளின் வரவைக் கூறவே தேசிகர் ஒடுக்கத்து வாயிற்புறத்தே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று ஸ்வாமிகளுடன் இருக்க மற்றவர்களும் இருந்தார்கள். கும்பாபிஷேக விஷயமாக ஸல்லாபம் நடைபெற்றது.
மகா வைத்தியநாதையருடைய இசைப் பாட்டு
அதன் பின்பு ஆதீனகர்த்தர் மகா வைத்தியநாதையரை நோக்கி, “உங்களைத் தரிசிக்க வேண்டும்; உங்களுடைய இனிய கானத்தைக் கேட்க வேண்டுமென்று இங்கே படித்துக்கொண்டிருக்கும் சிலர் விரும்புகிறார்கள்; ஆதலால் பிள்ளையவர்களியற்றிய நூல்களிலிருந்து சில பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொல்ல வேண்டும்” என்றார். அவர் சூதசங்கிதையிலிருந்து, கயிலையங்கிரியிற் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கக் காட்சியைப்பற்றிய சில பாடல்களை இசையோடு சொல்லிப் பொருளும் கூறி வரும்பொழுது கேட்டோரெல்லாருக்கும் உண்டான ஆனந்தத்திற்கு எல்லையில்லை. எப்பொழுதும் யாவர்க்கும் இன்பத்தை விளைவிக்கும் பிள்ளையவர்களுடைய பாடல்கள் அவருடைய திவ்ய ஸங்கீதத்தோடு கலந்து வெளிப்படும்பொழுது தம்மைத்தாமே வென்று விட்டன. அதை நினைக்கும் பொழுது,
(விருத்தம்) "தென்றல் நாடன் றிருமகளைத் தேவர் பெருமான் மணம்புரிய மன்ற லழகா லொருநகரொப் பதிக மின்றி மதுரைநகர் அன்று தானே தனக்கொப்ப தாகும் வண்ண மணியமைத்தார் இன்று தானே தனக்கதிக மென்னும் வண்ண மெழிலமைத்தார்" (திருவிளை. உக்கிரகுமாரனுக்கு. 12)
என்னும் பாடற் பொருள் ஞாபகத்திற்கு வந்தது
இப் புலவர்திலகருடைய பாடல்களைக் கேட்டவர்களின் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பெருகிற்று. இவருடைய கண்களிலிருந்தும் அது பெருகிவந்தது. பின்பு தேசிகர்,*7 பெரிய புராணக் கீர்த்தனத்திற்குப் பிள்ளையவர்கள் கொடுத்த *8 சிறப்புப் பாயிரப் பாடல்களைச் சொல்லும்படி சொன்னார். அவர் சொல்லிக் காட்டியபொழுது அவற்றின் இறுதிப்பாடலில் ஆதீன ஸம்பிரதாயத்தை அமைத்திருந்த அருமை எல்லோருக்கும் மிக்க வியப்பை உண்டுபண்ணிற்று.
அப்பால் பெரிய புராணக் கீர்த்தன அச்சுப் புத்தகங்களைத் தேசிகருக்கும் இக்கவிஞர்பிரானுக்கும் மகாவைத்தியநாதையர் சேர்ப்பித்தார். அப்பொழுது அதிலிருந்து சில கீர்த்தனங்களைப் பாடிக் காட்டும்படி தேசிகர் விரும்ப அப்படியே சில மகாவைத்தியநாதையராற் பாடிக்காட்டப்பட்டன. அவை பெரும்பாலும் பெரியபுராணக் கருத்தையும் சொற்றொடர்களையுமே தழுவி இயற்றப் பெற்றனவாதலின் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சியுற்றார்கள்.
அப்பால் அம்பலவாண தேசிகர் கலம்பகத்திலிருந்தும் அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழிலிருந்தும் சில பாடல்களும் அவற்றிற்குப் பொருளும் அவராற் சொல்லப்பட்டன. சுப்பிரமணிய தேசிகர் பின்பு மகாவைத்தியநாதையரைப் பார்த்து, “தங்கள் தமையனார் இயற்றியவற்றிலிருந்து வேறு ஏதாவது சொல்லவேண்டும்” என்றார். உடனே அவர் தம் தமையனார் இயற்றிய திருவையாற்றுத் திரிபந்தாதியிலிருந்தும் மயூரகிரி இரட்டைமணி மாலையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினார். தேனும் பாலும் கலந்தாற்போல இயலும் இசையுங் கலந்து வெளிப்பட்ட அந்தச்சுவை சொல்லற்பாலதன்று. வந்த காரியத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு சுந்தர ஸ்வாமிகளும் மற்றவர்களும் விடைபெற்றுத் திருவையாறு சென்றார்கள்.
.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. பிரமதேவர் கழுகு வடிவங்கொண்டு சிவபெருமானுடைய திருமுடியைத் தேடினாரென்றும் ஒரு வரலாறுண்டு.
2. அருட்குறி – சிவலிங்கப்பெருமான். இச் செய்யுள் பின்பு இவர் இயற்றிய திருவிடைமருதூர்த் திரிபந்தாதியிற் குருவணக்கமாகச் சேர்க்கப் பெற்றது; ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2238.
3. யாரேனும் ஒன்றைச் சொன்னால் ஆட்சேபிப்பதும் ஆட்சேபிக்கப்பட்டவர்கள் ஸமாதானஞ் சொல்லுவதும் வாக்கியார்த்தமென்று வடமொழியிற் கூறப்படும்.
4. இவர் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர். சில சாஸ்திரங்களிலும் வேதத்திலும் வல்லவர். அலங்கார சாஸ்திரத்தில் நிபுணர். ஸங்கீதத்திலும் ஸாஹித்யம் செய்தலிலும் நல்ல ஆற்றலுடையவர். வீணை வாசிப்பதில் அதிகத் தேர்ச்சி பெற்றவர். இங்கிலீஷ் முதலிய வேறு பாஷைகளிலும் இவருக்குப் பயிற்சியுண்டு. ஒவ்வொரு பாஷையிலும் செய்யுள் செய்யும் ஆற்றலுள்ளவர். இவர் உபந்யாஸம் செய்வது சுவையுடையதாயிருக்கும். சிவகதை பண்ணுகிற வழக்கமும் இவருக்கு உண்டு. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே கேட்பவர்கள் வேறு விஷயத்தில் மனத்தைச் செலுத்தாமல் ஆனந்தித்துக் கொண்டே யிருக்கும்படி செய்வார். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சின்னப்பட்டம் பெற்றது தொடங்கி ஸம்ஸ்கிருத பாடஞ் சொல்லி வந்ததன்றிப் பல சாஸ்திரங்களுடைய நுட்பங்களையும் பல வடமொழிக் காவியங்களின் நுட்பங்களையும் அலங்காரப் பகுதிகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஓய்வு நேரங்களில் தெரிவித்து அவரை உலகத்திற்கு மிகப் பயன்படும்படி செய்தவர். தேசிகருடைய முக்கியமான ஸம்ஸ்கிருத வித்யாகுரு இவரே. பிள்ளையவர்களிடத்துப் பேரன்புடையவர்.
5. இவருடைய குருவாகிய அப்பா தீட்சிதருடைய ஊர் திருவாலங்காடு; அது திருவாவடுதுறைக்கு வடக்கேயுள்ளது.
6. தேசிகரும் ஓய்வு நேரங்களில் சிறந்த நூல்களை யாருக்கேனும் பாடஞ் சொல்லி வருவதுண்டு.
7. இந்நூல் மகாவைத்தியநாதையரவர்கள் தமையனாரான இராம ஸ்வாமி ஐயரால் இயற்றப் பெற்றது.
8. முதற்பாகம், பக்கம், 302 -3
$$$