வண்ணான் தொழில்

-மகாகவி பாரதி

முந்தைய கதையில் குள்ளச்சாமியின் பிரதாபங்களைச் சொன்ன மகாகவி பாரதி, அதில் கூறியபடியே, இக்கதையிலும் அவரது பிரதாபத்தைத் தொடர்கிறார். முதுகின் மேலே கிழிந்த பழங் கந்தைகளையெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்த குள்ளச்சாமியிடம், “ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்?” என்று கேட்கிறார் பாரதி. அதற்கு, “நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்” என்று சொல்லி ஓடிப்போய் விட்டார்.  “உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன்” என்கிறார் பாரதி.

இந்த இடத்தில், மகாகவியின் முத்துமாரி கவிதை வரிகளை நினைவுகூரலாம்:

துணிவெளுக்க மண்ணுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணிவெளுக்கச் சாணையுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கரு நிறம். குண்டு சட்டியைப் போல் முகம். உடம்பெல்லாம் வயிரக்கட்டை போலே. நல்ல உறுதியான பேர்வழி.

அவருக்கு வியாதியென்பதே கிடையாது. சென்ற பத்து வருஷங்களில் ஒரே தடவை அவர் மேலே கொஞ்சம் சொறி சிரங்கு வந்தது. பத்து நாளிருந்து நீங்கிவிட்டது. அந்த மனிதர் ஜடபரதருடைய நிலைமையிலே யிருப்பதாகச் சொல்லலாம். பேசினால் பயித்தியக்காரன் பேசுவது போலிருக்கும். இழுத்திழுத்து, திக்கித் திக்கி, முன்பின் சம்பந்தமில்லாமல் விழுங்கி விழுங்கிப் பேசுவார். தெருவிலே படுத்துக் கிடப்பார். பசித்தபோது எங்கேனும் போய்ப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார். கஞ்சாத் தின்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடன் சண்டை போடுவார்.

வீதியிலே பெண் பிள்ளைகளுக்கெல்லாம் அவரைக் கண்டால் இரக்கமுண்டாகும். திடீரென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகள் நெற்றியிலே திருநீற்றைப் பூசி விட்டு ஓடிப் போவார். யாராவது திட்டினாலும், அடித்தாலும் பொறுத்துக்கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு ஓடிப்போய் விடுவார்.

சாமானிய ஜனங்கள் அவருக்கு நூறு வயதுக்கு மேலே ஆகிவிட்டதென்றும், நெடுங் காலமாக, இப்போதிருப்பது போலவே, நாற்பதைம்பது வயது போலேதான் இருக்கிறாரென்றும் சொல்லுகிறார்கள். ஆனால் இந்த வார்த்தை எவ்வளவு தூரம் நிச்சயமென்பதை நிர்ணயிக்க இடமில்லை.

அவர் கையால் விபூதி வாங்கிப் பூசிக் கொண்டால் நோய் தீர்ந்து விடுமென்ற நம்பிக்கையும் பலர் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி குள்ளச் சாமியார் ஒரு நாள் தாம் வீதியில் நடந்து வரும்போது, முதுகின் மேலே கிழிந்த பழங் கந்தைகளையெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்தார். இந்தச் சாமியாரைக் கண்டால் நான் கும்பிடுவது வழக்கம். அப்படியே கும்பிட்டேன். ஈயென்று பல்லைக் காட்டிப் பேதைச் சிரிப்புச் சிரித்தார். கண்ணைப் பார்த்தால் குறும்பு கூத்தாடுகிறது.

“ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்?” என்று கேட்டேன்.

“நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்” என்று சொல்லி ஓடிப்போய் விட்டார். உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன். அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங் கவலைகளையும், பழந் துன்பங்களையும், பழஞ் சிறுமைகளையும் மனதில் வீணாய்ச் சுமந்து திரியும் சாமான்ய மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டு மேற்படி சாமியார் இந்த திருஷ்டாந்தத்தைச் சொன்னாரென்று தெரிந்து கொண்டேன்.

பின்னொரு நாள் அவரிடம் பரிகாசமாக நான் “சாமி, இப்படிப் பிச்சை வாங்கித் தண்டச்சோறு தின்று கொண்டு ஜீவனம் பண்ணுகிறாயே, ஏதேனும் தொழில் செய்து பிழைக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அந்தப் பரதேசி சொல்லுகிறார். “தம்பி, நானும் தொழில் செய்துதான் பிழைக்கிறேன். எனக்கு வண்ணான் வேலை. ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்க்கிறேன், அந்தக்கரணமான துணி மூட்டைகளை வெளுக்கிறேன்” என்றார்.

ஆம். பரிசுத்தப்படுத்துகிறவனே ஆசாரியன். அவனுடைய சொல்லை மற்றவர் ஆதரிக்க வேண்டும். மேலே சாமியாருடைய புற நடைகள் குடும்பம் நடத்தும் கிருஹஸ்தர்களுக்குத் தகுதியல்ல. ஆனால் அவருடைய உள்ள நடையை உலகத்தார் பின்பற்ற வேண்டும். ஐம்புலன்களாகிய கழுதைகளை மீறிச் செல்லாதபடி கட்டுப்படுத்தி ஆள வேண்டும். உள்ளத்தை மாசில்லாதபடி சுத்தமாகச் செய்துகொள்ள வேண்டும்.

அழுக்குத் தீர்க்கும் தொழில் செய்வோர் நமது தேசத்தில் மாகாணத்துக்கு லக்ஷம் பேர் வேண்டும். ஹிந்துக்கள் தற்காலத்தில் குப்பைக்குள் முழுகிப் போய்க் கிடக்கிறார்கள். வீட்டையும் தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. ஜலதாரைகளை ஒழுங்கு படுத்தவில்லை. கிணறுகளையும், குளங்களையும், சுனைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. கோயிற் குளங்களில் ஜலம் புழுத்து நெளிகிறது. நாற்றம் குடலைப் பிடுங்குகிறது.

மனுஷ்யாபிவிருத்தியாவது யாது?

புழுதியை நீக்கித் தரையைச் சுத்த மாக்குதல், அழுக்குப் போகத் துணியையும், நாற்ற மில்லாதபடி குளத்தையும், பொதுவாக எல்லா விஷயங்களையும் சுத்தமாக்கி வைத்துக் கொள்ளுதல்.

நான் மேற்படி சாமியாரிடம், “சாமியாரே, ஞானநெறியிலே செல்ல விரும்புவோன் முக்கியமாக எதை ஆரம்பத் தொழிலாகக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டேன். குள்ளச்சாமி சொல்லுகிறார்:

“முதலாவது, நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது, புறஞ்சொல்லக் கூடாது, முகஸ்துதி கூடாது, தற்புகழ்ச்சி கூடாது, வருந்தச் சொல்லலாகாது, பயந்து பேசக் கூடாது. இதுதான் வண்ணான் தொழில் ஆரம்பம். பிறகு அந்தக்கரணத்தை வெளுத்தல் சுலபம். சில இடங்களில் பொய் சொல்லி தீரும்படியாக இருந்தால் அப்போது மௌனத்தைக் கொள்ள வேண்டும். மௌனம் சர்வார்த்த சாதகம். அதை விட்டுப் பேசும்படி நேர்ந்தால் உண்மையே சொல்ல வேண்டும். உண்மை விரதம் தவறக் கூடாது. தவற வேண்டிய அவசியமில்லை. உண்மை கூறினால் தீங்கு நேரிடுமென்று நினைப்போர் தெய்வம் உண்மை யென்பதை அறிய மாட்டார்கள். தெய்வம் உண்மை. அதன் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. ஆதலால் பயப்படுகிறவன் மூடசிகாமணி. அந்தக்கரணத்தை வெளுத்தலாவது அதிலுள்ள பயத்தை நீக்குதல். அந்தக்கரணத்தைச் சுத்தி செய்துவிட்டால் விடுதலையுண்டாகும்” என்றார்.

பின்னுமொரு சமயம் மேற்படி குள்ளச்சாமி என்னிடம் வந்து, “தம்பி, நீ இலக்கணக்காரனாச்சுதே! ‘வண்ணான்’ என்ற வார்த்தையை உடைத்துப் பொருள் சொல்லுவாயா?” என்று கேட்டார்.

நான் நகைத்து, “சாமி, உடைக்கிற இலக்கணம் எனக்குத் தெரியாது” என்றேன். அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: “வண்-ஆன் வண்ணான். ஆன் என்பது ரிஷபம். வள்ளலாகிய ரிஷபம் நந்திகேசுரர். அவருடைய தொழில் சுத்த ஞானமூர்த்தியாகிய சிவனைச் சுமந்து கொண்டிருத்தல். தமிழ்நாட்டில் ஞானாசாரியர்களுக்கு ஆதிமூர்த்தியும் வள்ளலுமாகி நிற்கும் இந்த நந்தி பகவானுடைய தொழிலாகிய ஆசாரியத் தொழிலையே நான் வண்ணான் தொழிலென்று சொல்லுகிறேன். எனக்கு வண்ணான் தொழில்” என்று மேற்படி குள்ளச்சாமி சொன்னார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s