-மகாகவி பாரதி

40. முத்துமாரி
உலகத்து நாயகியே! – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர் பலர், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! 1
துணிவெளுக்க மண்ணுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லை – எங்கள் முத்து
மாரியம்மா,எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா. எங்கள் முத்து மாரி! 2
$$$
41. தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். 1
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய். 2
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன். 3
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும். 4
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம். 5
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள். 6
நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். 7
$$$
One thought on “முத்துமாரி மீதான பாடல்கள்”