இலக்கிய தீபம் – 3

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

3. திருமுருகாற்றுப்படை

ஆற்றுப்படையென்ற நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தின் கண்ணேயே காணப்படுகின்றது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்

என்பது புறத்திணையியற் சூத்திரம் (36)

அரசர்கள் முதலியோர் வாழ்ந்துவந்த நகர்கட்குச்சென்று அவர்களுடைய புகழைப் பாடி மகிழ்வித்துப் புலவர்கள் ஆதரவு பெற்றுவந்த பண்டைக்காலத்தே இவ்வகைப் பிரபந்தங்கள் தோன்றுதல் இயல்பே. ஏனெனின், ஆற்றுப்படைகள் அரசர் முதலியோர் மாட்டுச்சென்று பாடிச் செல்வம் பெறுதலையே நூற்பொருளாகக் கொண்டுள்ளன. சங்ககாலத்தே பல ஆற்றுப்படைகள் தோன்றின. கூத்தராற்றுப்படை என்பது மலைபடுகடாத்திற்கு வழங்கிய ஒருபெயர். பாணராற்றுப்படை வகையிற் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படையென இரண்டு நூல்கள் உள்ளன. பொருநராற்றுப்படை யென்பதும் பத்துப்பாட்டினுள் ஒன்றென்பது யாவரும் அறிந்ததே. விறலி யாற்றுப்படை யென்பது தனிநூலாகக் காணப்படவில்லை. ஆனால் இவ்வகைப்பாட்டு, புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் வந்துள்ளது. ‘சேயிழை பெறுகுவை’ (புறம்-105), ‘மெல்லியல்விறலி’ (புறம்-133) என்ற செய்யுட்களை உதாரணமாகக் காட்டல் தகும்.

கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் உலா வாழ்வு கருதிய (லௌகிகச்) செய்யுட்களாம். பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச்செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாகியுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும். இரவலர் வாழ்வு எவ்வகையான் நோக்கினும் இழிவானதே. அறநூற் பெரும்புலவராகிய வள்ளுவரும்,

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். (குறள் 1066)

என்று கூறினர். இச்சிறு பயன் பெறுதற்பொருட்டுத் தம்மையும் தமிழையும் இழிவு படுத்திக்கொள்ளுதல் பெருமக்கள் வெறுக்கத்தக்க தாகவே இருக்கும். இதனை நக்கீரர் உணர்ந்து ஆற்றுப்படையின் நோக்கத்தையே முழுதும் வேறு கொண்டு அவ்வகை நூல்களுக்குப் புதியதொரு கௌரவத்தைக் கொடுத்தனரென்றுதான் நாம் கொள்ள வேண்டும். இங்ஙனம் இயற்றிய புதுநூல் முருகாற்றுப்படையாகும்.

இப் புது நூலினைக் குறித்துப் பண்டைக்காலத்துத் தமிழறிஞர்க்குள்ளே விவாதம் நடைபெற்றது. இது நச்சினார்க்கினியாது புறத்திணையியலுரையால் நமக்கு விளங்குகிறது. ஒரு சிலர் புலவராற்றுப்படை யென்பதே நூற்பெயராதல் வேண்டும் என்றனர். நூலினகத்தே (அடி 284) வழிப்படுக்கப்பட்டவன் “முதுவாயிரவலன்” ஆகிய புலவன் என்பது இவர் காட்டிய காரணமாதல் வேண்டும். சிறுபாணாற்றுப்படையிலும் (அடி 40), பதிற்றுப்பத்திலும் (66), புறநானூற்றிலும் (48,180) ‘முதுவாயிரவல’ என வருதல் நோக்கத்தக்கது. 48-ம் புறப்பாட்டுப் ‘புலவராற்றுப்படை’ யெனவே துறை குறிக்கப் பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் இப்பெயர் வழங்கவில்லை யென்றும், ‘கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யார்’ என்றும் கூறி மறுக்கின்றார். முருகாற்றுப்படை யென்பதற்கு “முருகன்பால் வீடுபெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை ஆற்றுப்படுத்ததென்பது” பொருளெனவும் அவர் கூறுவர். அப்பொருளைத்தான் நாமும் கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் பிற ஆற்றுப்படைகளெல்லாம் ஆற்றுப்படுக்கப் பட்டாராற் பெயர் பெறுதலும், அந்நெறிக்கு மாறாக முருகாற்றுப் படையொன்றே பாட்டுடைத் தலைவனாற் பெயர் பெறுதலும் மனங்கொளத்தக்கன. புலவராற்றுப் படையென்ற பெயரால் நூல் நுதலிய சமயப்பொருள் விளங்க மாட்டாது போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இந்நூல் வழங்கலாயிற் றென்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இப் புதுவழக்குப் பரவிவிட்ட காரணத்தினால் பழைதாகிய  ‘புலவராற்றுப்படை’ யென்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாகல் வேண்டும்.

மேற் குறித்த விவாதமேயன்றி, தொல்காப்பியர் வகுத்த ஆற்றுப்படை யிலக்கணத்தில் முருகாற்றுப்படை அடங்காதெனவும் விவாதம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் தமது வழக்கப்படி சொற்களை அலைத்துப் பொருள் கொண்டு இந்நூலும் அடங்குமெனச் சாதித்துள்ளார். ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்’ எனவும், ‘ஆற்றிடைக்காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம்……சொன்ன பக்கமும்’ எனவும், இரண்டாகப் பிரித்துக் கூட்டிப் பின்னதற்கு “இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே, தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்தும் பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றார் பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச்சென்று அக்கந்தழியினைப் பெறும்படி சொன்ன பக்கமும்” என்று பொருளுரைத்தார். இது பொருளன்று என்பதனைச் சான்று காட்டி நிறுவ வேண்டா. ‘கூத்தர் முதலாயினோர் நெறியிடையே காட்சி மாறுபாடு தோன்றி………சொன்ன பக்கமும்’ எனச் சேர்த்தே கொள்ளுதல் வேண்டும். இளம்பூரனர் இவ்வாறே கொண்டார். காட்சி மாறுபடுதலாவது பெருவளம் பெற்றுவரும் தமது காட்சியும் வறுமைப்பிணியால் வருந்தித் தள்ளாடிவரும் ஆற்றுப் படுக்கப் படுவார் காட்சியும் தம்முள் மாறுபடுதல். இதுவே செம்பொருள். எனவே முருகாற்றுப் படையைத் தொல்காப்பியச் சூத்திரம் கருதிற்றன்றெனலே தகுதி. இதனால் தொல்காப்பியருக்கு யாதோரிழுக்குமின்று.

இந்நூல் தோன்றியதனைக் குறித்து ஒரு வரலாறு வழங்குகினறது. திருப்பரங்குன்றத்திற் சரவணப் பொய்கையின் கரையில் ஓர் அரசமரம் நின்றது. அதிலுள்ள இலை நீரில் வீழ்ந்தால் மீனாகவும் நிலத்தில் வீழ்ந்தால் பறவையாகவும் மாறும். ஒருகால் ஓர் இலை பாதி கரையிலும், பாதி நீரிலுமாக விழுந்தது. கரையில் விழுந்த பகுதி பறவையாகவும், நீரில் விழுந்தது மீனாகவும் அமைந்த விசித்திரப் பிராணியாக அந்த இலை மாறிற்று. பறவைப் பகுதி ஆகாயத்திற் பறக்கவும் மீன் பகுதி நீருள் மூழ்கவும் முயன்றன. அப்போது அங்குக் கரையிற் பூசை செய்து கொண்டிருந்த நக்கீரர் ஏகாக்கிர சிந்தனையில் வழுவி இந்த அதிசயத்தைக் கண்ணுற்று இரண்டனையும் விடுவிக்க வந்தனர். சிவ பூசையில் வழுவிய காரணத்தால் ஒரு பிரமராட்சசு நக்கீரரைப் பிடித்துக் கொண்டுபோய், ஒரு குகையில் அடைத்து விட்டது. அக் குகையில் இவரைப் போல் வழுவிய 999 பேர்கள் ஏற்கனவே அடைபட்டிருந்தனர். இவரையும் சேர்த்து ஆயிரம் பேராகவே, அவ்வளவு பேரையும் உண்டுவிடவெண்ணி அப் பிரம்மராட்சசு நீராடி வருவதற்குப் போயிற்று. அப்பொழுது நக்கீரர் முருகாற்றுப் படையைப் பாட, முருகப்பிரான் அவரைக் குகையினின்றும் விடுவித்தனர். இந்நூலை ஓதுவாருக்கு வேண்டும் வரங் கொடுப்பேம் என்றும் முருகப்பிரான் அருள் செய்தனர்.

இவ் வரலாறு சில வேறுபாடுகளுடன் முதன்முதலாக திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடலிற் காணப்படுகிறது (44,23-28). ‘குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய்’ என்றுவரும் வெண்பாவும் நக்கீரர் இயற்றியதாகவே இத் திருவிளையாடல் கூறும். ஆனால் ஒரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இவ் வரலாற்றுக்குரிய செய்யுட்கள் சில பிரதிகளில் இல்லை. எனவே இவைகள் பிற்காலத் தொருவராற் சேர்க்கப் பெற்றனவென்று கருதலுக்கு இடமுண்டு. இந்திரன் முடிமேல் வளையெறிந்த சரிதத்திற்கும் நக்கீரர் செயலுக்கும் யாதோர் இமையுமில்லாமையும், இச்செய்யுட்களை நீக்கியவிடத்துக் கதை செவ்வனே நிகழுமாறும் ஈண்டு நோக்கத் தக்கன. அருணகிரிநாதர்,
‘கீரனுக்குகந்து………
உலக முவப்ப வென்று னருளாலளிகுகந்த
பெரியோனே’
(திருப்புகழ். சமாஜப் பதிப்பு, செய் 352) எனவும், ‘மலைமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா’ (திருப்புகழ், 1201) எனவும் கூறுதலே முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் வரலாற்றைச் சிறிது காணலாம். திருப்புகழாசிரியர் காலம் 15-ம் நூற்றாண்டாகும். திருவாலவாயுடையார்  திருவிளையாடற்புராணம் 13-ம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்றிய தாகலாம் என அந்நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சாமிநாதையர் கருதினர். இக்கால வரையறை கொள்ளத்தக்கதன்றெனவும் 16-ம் நூற்றாண்டுக்கே அந்நூல் உரியதெனவும் ஓர் ஆராய்ச்சியாளர் முடிவுசெய்துள்ளார். இவர் கூறுவனவே ஒப்புக்கொள்ளத்தக்கன. எவ்வாறு நோக்கினும் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்களில் முருகாற்றுப்படை வரலாறு காணப்பெறவில்லை. எனவே, இவ்வரலாறு 13-ம் நூற்றாண்டு முதல் கர்ணபரம்பரையாய் வழங்கத் தொடங்கியதெனக்கொள்ளலாம்.

இதுபோன்ற வரலாறுகளால் முருகாற்றுப்படை ஒரு சமய நூலாய் முடிந்து பெருமையிற் சிறந்து விளங்கிற்று. நக்கீரரும் பொய்யடிமையில்லாத புலவர்களுள் ஒருவராய்ப் போற்றப்பட்டனர். இவரது பொய்யற்ற புலமையை விளக்குதற்கும் ஒரு வரலாறு தோன்றியது.

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
கானஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரியை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே (குறுந்.2)

என்ற குறுந்தொகை செய்யுள் பற்றியது இவ்வரலாறு. இச்செய்யுள் இறையனார் என்ற புலவர் இயற்றியது;

“இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டுநின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப்பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோற்ற நலம்பாராட்டியது” என்ற அகத்துறையிற் பாடிய பாட்டு. இதனைத் தருமியென்னும் பிரமசாரிக்கு ஆலவாயிற் சோமசுந்தரக்கடவுள் சிந்தா சமுத்தியாகப் பாடியளித்து, அவன் பொற்கிழி பெறும்படி செய்தாரென்றும், இப்பாட்டிற்குக் குற்றங் கூறத் துணிந்த நக்கீரரைத் தண்டித்துப்பின் அருள் புரிந்தாரென்றும் ஒரு புது வரலாறு புறப்பட்டுவிட்டது. நக்கீரர் தாமே எழுதியதெனப்படும் இறையனார் கனவியலுரையில் இச்செய்யுளைக் குறித்துத் ‘தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த் திற்றாயிற்றுப் போந்தபொருள்’ (பவானந்தர் கழகம் 2-ம் பதிப்பு. பக். 49-50) எனக் காணப்படுகின்றது. இங்ஙனமிருப்பவும் இந்நக்கீரரை யுளப்படுத்தி மேற்சுட்டிய வரலாறு எழுந்தது வியப்பேயாகும். இவ்வரலாற்றின்கண் நக்கீரர் சங்கறுக்கும் குலத்தினரென்று சொல்லப்படுகிறது.

இவ்வரலாறு கல்லாடம் முதலிய ஒருசில நூல்களில் நக்கீரரை யுளப்படுத்தாது வழங்கியுள்ளது. உதாரணமாக,

போதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி

எனக் கல்லாடத்தில் வந்துள்ளது (1,10-12).

திருநாவுக்கரசு சுவாமிகளும்,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண் (6,78,3)

என்று கூறியுள்ளார். இவ்வடிகள் தருமியின் பொருட்டு இறைவனே புலவனாகச் சங்கமேறிப் பாடியருளினானென்று பொருள்படுமாறு அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. நக்கீரர் செயலே கூறப்படவில்லை.

ஆகவே நக்கீரரை யுளப்படுத்தாத சரிதமொன்று நாவுக்கரசரது காலத்திற்கு முன்பு, கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி வழங்கியிருக்க வேண்டும். அவரை யுளப்படுத்திய சரிதம் சுமார் 13-ம் நூற்றாண்டளவில் வழங்கத் தொடங்கியிருக்கலாம். இப் பிற்காலச் சரிதத்தானும் நக்கீரர் புலமைத் திறனையும், அஞ்சா நெஞ்சுரனையும் தமிழ்மக்கள் போற்றினார்கள்.

நக்கீரர் சாபானுக்கிரக சக்தியுடையரெனவும் நம்மவர்கள் கருதினார்கள். இக் கருத்திற்கியையக் கடைச்சங்கத்தைப் பற்றிய ஒரு வரலாறும் எழுந்தது. இக் காலத்திற் போலவே கடைச்சங்க காலத்தினும் தென்மொழி – வடமொழிப் போரொன்று நிகழ்ந்தது. இப்போர் முடிவு பெறும் வரையிற் சங்கத்தாராகிய பட்டிமண்டபத்தார் அம்மண்டபத்தின் தெற்குவாயிலைத் திறவாது அடைத்துவிட்டனர். அவருள் தலைவராக நக்கீரனார் நின்று வாதத்தை நிகழ்த்திவந்தனர். எதிர்க்கட்சியில் ஒருவன் ‘ஆரியம் நன்று தமிழ் தீது’ என்று கூறினான். இஃது உலகம் பொறுக்கமாட்டாத சொல்லாதலால் உடனே மரணமாய் வீழ்ந்தனன். இறந்தவனை எழுப்பினால் உமது தமிழ்க்கட்சியை ஒப்புவோம் என்று எதிர்க்கட்சியினர் கூற,

ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி உயிர்ப்பித்தனர். இதனிடையில் வடமொழிக் கட்சியிலுள்ள வேட்கோவனான் குயக்கோடன் தமிழ்க் கட்சியினரைக் குறித்து ஆனந்தச் செய்யுள் கூறிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி நக்கீரர்,

முரணில் பொதியில் முதற்புத்தோன் வாழி
பரண கபிலரும் வாழி - அரணியல்
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
ஆனந்தஞ் சேர்க சுவாகா

என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி இறந்துபடச் செய்தனர். இவ் வரலாற்றை ‘இவை தெற்கண்வாயில் திறவாது பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் [ஒருவன்] சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின’ எனப் பேராசிரியர் செய்யுளியலுரையில் (சூ. 178)  கூறுவதிலிருந்து ஊகிக்கலாம். இதனைச் சிறிது வேறுபடுத்தி தமிழ் நாவலர் சரிதை உரைக்கின்றது. அதில் ‘நக்கீரர் நாடத்துக் குயக்கொண்டானைச் சாகப்பாடிய அங்கத வெண்பா’ எனத் தலைப்புத் தரப்பட்டுள்ளது. இது நுணுகி நோக்கத்தக்கது. ‘நாடத்து’ என்பது பொருள்படுமாறில்லை; அது ‘நாடகத்து’ என்று இருத்தல் வேண்டும்போலும். இவ்வூகம் உண்மையொடு பட்டதாயின் ‘நக்கீரர் நாடகம்’ என்ற நூலொன்று வழங்கிய தென்றும், அதன்கண் இந்த வரலாறு கூறப்பட்டிருந்த தென்றும் நாம் கொள்ளலாம்.

‘நக்கீரர் நாடகம்’ போன்றதொரு நூல் முற்காலத்தில் வழங்கிவந்த தென்பதற்கு வேறொரு சான்றும் உள்ளது. யாப்பருங்கல் விருத்தியுரையில் (பக். 133)

ஊசி யறுகை யுறுமுத்தங் கோப்பனபோல்
மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப- மூசு
முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதேன் காண்போ
விறக்கோடு கொண்டெரிக்கின் றேன்

‘இந் நக்கீரர் வாக்கினுள கடையிரண்டடியும் மூன்றாமெழுத்தொன்றெதுகை வந்தவாறு காண்க’ எனக் காணப்படுகிறது. இச் செய்யுள் நக்கீரர் நாடக பாத்திரமாகவேனும் கதாபாத்திரமாகவேனும் வந்துள்ள ஒரு நூலிற் குரியதாதல் வேண்டும். ‘தமிழறியும் பெருமாள் கதை’ என்று இக்காலத்து வழங்கும் நூலில் மேலைச் செய்யுள் சிறிது வேறுபாட்டுடன் நக்கீரர் கூறியதாக அமைந்துள்ளது. இதுவும் எனது ஊகத்தை வலியுறுத்துகிறது. யாப்பருங்கல விருத்தியில் இச் செய்யுள் பயின்று வருதலினாலே தமிழறியும் பெருமாள் கதையைப் போன்றதொரு கதை சுமார் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் வழங்கி வந்ததெனக் கொள்ளலாம்.

இவ் வரலாறுகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் தோன்றி நக்கீரரது பெருமையையும் புகழையும் வளர்ப்பனவாயின. இவற்றுள் ஒன்றேனும் அவரது உண்மைச் சரிதத்தோடு தொடர் புடையதெனக் கொள்ளுதற்கில்லை.

இனி நக்கீரர்பெயரால் வழங்கும் நூல்கள் முதலிய வற்றை நோக்குவோம். அவை வருமாறு.

1 அகநானூறு: 17 செய்யுட்கள் (36,57,78,93,
120,126,141,205,227,249,253,290,310,
340,346,369,389)
குறுந்தொகை: 8 செய்யுட்கள் (78,105,131,143,
161,266,280,368)
நற்றிணை: 7 செய்யுட்கள் (31,86,197,258,340,
358,367)
புறநானூறு: 3 செய்யுட்கள் (56,189,395)

2 பத்துப்பாட்டு: நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை

3 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
4 திருவீங்கோய்மலை யெழுபது
5 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
6 திருவெழுகூற்றிருக்கை
7 பெருந்தேவபாணி
8 கோபப்பிரசாதம்
9 காரெட்டு
10 போற்றித் திருக்கலிவெண்பா
11 கண்ணப்பதேவர் திருமறம்
12 களவியலுரை
13 அடிநூல்
14 நாலடிநானூறு

மேற்குறித்த நூல்களுள் திருமுருகாற்றுப்படை முதல் கண்ணப்பதேவர் திருமறம் வரையுள்ள பத்து நூல்களும் 11-ம் திருமுறையில் அடங்கியுள்ளன. இந் நூல்களுள் திருமுருகாற்றுப்படை யொழிய ஏனையவெல்லாம் சங்ககாலத்திற்குப் பிற்பட்டன வென்பது தெளிவாம். பிரபந்தவகையை நோக்கினாலும், யாப்பு வகையை நோக்கினாலும், சொல்லின் உருவத்தை நோக்கினாலும், வடசொற்களின் அளவை நோக்கினாலும், கையாளப் பட்டுள்ள நடையை நோக்கினாலும் வரலாற்றுக் குறிப்பினை நோக்கினாலும் இவ்வுண்மை எளிதிற் புலப்படும்.

அந்தாதி, மும்மணிக்கோவை முதலியன மிகப் பிற்பட்ட பிரபந்த வகைகளாம். அந்தாதி முதலியவற்றைப் ‘புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச்செய்வ’தாகிய விருந்து என்பதன்பாற் படுப்பர் பேராசிரியர் (தொல்.செய்.239, உரை). கலித்துறை என்னும் பாவினம் திருவலஞ்சுழி மும்மணிக்கோவையிற் பயின்று வந்துள்ளது. இது மிகப் பிற்பட்ட வழக்கென்பது செய்யுள் வரலாறு அறிந்தாரனைவர்க்கும் உடன்பாடாம். கயிலை பாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில், நான் (96), நாங்கள் (44), உன் (14,59), உனகு (77), இத்தனை (17), எத்தனையும் (86), ஆனாலும் (30,55), காட்டுமின்கள், சூட்டுமின்கள் (36), கண்டிடுவான், உண்டிடுவான் (18), மன்னவனே (46), இருப்பன் (65) முதலிய பிற்கால உருவங்களூம், அம்மான் (2), பேசு (27,9,79), அணுக்கர் (12), கிறி (12) முதலிய பிற்காலச் சொற்களும், சரணம் (4), தேவாதிதேவன் (5), ஈசன் (9,38,62), தீர்த்தன், பாசுபதம், பார்த்தன் (13), பாவித்தும் (14), தயா (14), நேசம் (17), பாதம் (18), சேமத்தால் (25), தீர்த்தம் (29), மூர்த்தி (29), கங்காளர் (30), பாலன் (33), நாதன் (34), நாமம் (38), பரமன் (49,99), பசுபதி (50), காயம் (56), தியானிப்பார் (60), பத்தர் (71,83,86), ஆதரித்த (72), பாவம் (76), பாதாளம் (88), சங்கரன் (89), பாதாரவிந்தம் (99) முதலிய வடசொற்களும், விண்ணப்பம் (75,77), நக்கன் (88) முதலிய பாகதச்சொற்களும் வந்துள்ளன. இவ்வந்தாதியினகத்தே கோச்செங்கட்சோழன் (32), மார்க்கண்டன் (33), உபமன்யு (81), சலந்தரன் (84) முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன. இவையனைத்தும் சங்கநூல்களிற் காணப்படாதன; பிற்கால நூல்களிற் பெருவழக்கின. கோபப்பிரசாதத்தில் கண்ணப்பர், சண்டேசர், சாக்கியர், கோச்செங்கட்சோழர் வரலாறுகளும் கூறப்படுகின்றன. இவையும் சங்ககாலத்து நூல்களில் அறியப்படாத வரலாறுகள்.

அன்றியும், முற்கூறிய அந்தாதியிற் சில செய்யுட்கள் பழைய கருத்துக்களைப் பொன்னேபோற் போற்றுகின்றன. உதாரணமாக,

சொல்லும் பொருளுமே தூத்திரியு தெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய தானாகச்- சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று (1)

என்பது,

உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே

என்ற அப்பர்வாக்கை நினைப்பூட்டுகிறது.

... ... ... ... நஞ்சு
உண்டமையால் உண்டிவ் வுலகு (8)

என்பது,

கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு (குறள், 571)

என்ற திருக்குறளை அடியொற்றி வந்துள்ளது.

கூடியிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தங் குற்றங்கள் நாடாதே (91)

என்பது,

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப்படும் (குறள்  186)

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள் 190)

என்பவற்றின் பொருளை யுட்கொண்டு வந்துள்ளது.

செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப்-பையவே
காரேது பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது (78)

என்பது,

போரகத்துப் பாயுமா பாயா துபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ-கூர்வேல்
மதிவெங் கனியானை மாறன் றன்மார்பங்
கதவங் கொண் டியாமுந் தொழ

என்பது போன்ற முத்தொள்ளாயிரச் செய்யுட்களின் முறையைப் பின்பற்றி அமைந்தது.

செய்யுள் நடைநோக்கினும் இப்பிரபந்தங்களின் நடை பிற்பட்ட காலத்த தாகும்.

கூறாய்நின் பொன்வாயாற் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே- நீல்தாவு
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடையெம் ஈசன் திறம்.

என்ற செய்யுள் மிக அழகாயுள்ளது. இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லும் (காளத்தி, ஈசன் என்பன தவிர) சஙகச் செய்யுட்களிற் காணக் கூடியனவே. எனினும் இதன் நடைவேறு; சங்கச் செய்யுட்களின் நடைவேறு. தமிழ் நடையைக் கூர்ந்து ஆராய்வோர் இது பிற்பட்ட நடையென எளிதிற் கூறிவிடுவர். ‘வேறாக வந்திருந்து என்பது நடையின் வேற்றுமையைத் தெற்றெனப் புலப்டுக்கின்றது.

மேற்காட்டிய காரணங்கள் 11-ம் திருமுறையிலுள்ள அந்தாதி முதலிய நூல்கள் சங்க காலத்திற்குப் பிற்பட்டன வென்பதையும், இவற்றை இயற்றிய நக்கீர தேவநாயனார் சங்கப் புலவராகிய நக்கீரர் அல்லரென்பதையும் தெளிவிக்கப் போதியவை. கற்றறிவாளர் எளிதில் ஒப்புக்கொள்ளும் இம் முடிபினைக் குறித்து இன்னும் பல கூறுதல் வேண்டற்பாலதன்று. இந் நக்கீரதேவ நாயனார் இயற்றியருளிய திருவெழு கூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்படுதலின் இவரது காலம் 11-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. கண்ணப்பர் சரித்திரத்திற்குக் கொடுக்கும் தலைமையால், இவரை மாணிக்கவாசக சுவாமிகள் காலமாகிய 9-ம் நூற்றாண்டினராகக் கொள்ளுதல் பொருந்தலாம். சுவாமிகளும் ‘கண்ணப்ப னொப்பதோரன்பின்மை கண்டபின்’ (திருவாசக. 218) என்று கூறினர்.

இலக்கண ஆசிரியராகிய ஒரு நக்கீரரும் நமக்குப் புலப்படுகிறார். “அடிநூல்” என்ற செய்யுளிலக்கணமொன்று யாப்பருங்கல விருத்தியிற் காட்டப்பட்டுள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர் என்வும் குறிக்கப்பட்டுள்ளது இதினின்றும்,

ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல (யாப். வி. பக்.348)

என்ற சூத்திரம் மட்டுமே இப்போது நமக்குக் கிடைப்பது. நூற்பாவால் இஃது இயன்றதாதல் வேண்டும். இதனைப் பின்பற்றிக் கலிவிருத்தத்தால் இயன்ற பிறிதொருநூலும் முற்காலத்து வழங்கியதாதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில் 414-ம் பக்கத்தில் வரும்

சேரும் நேரடிப் பாவிலைஞ் சீரடி
யேரும் வெள்ளையல் லாவழி யென்பது
சோர்வி லாததொல் காப்பியத் துள்ளுநக்
கீர னாரடி நூலுள்ளுங் கேட்பவே.

என்று வருஞ் செய்யுளால் இது தெரியவருகின்றது’ *1. இவ்விருத்தியுரையில் ‘நாலடி நாற்பது’ (பக். 32,121) என வொருநூல் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கலக்காரிகையில் இந்நூல் அவிநயரது யாப்பதிகாரத்துக்கு அங்கமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இது வெண்பாவினால் இயன்ற நூலென்பது விருத்தியுரை மேற்கோள்களால் விளங்கும். இதனை நக்கீரர் இயற்றியதாகக் கொண்டு நற்றிணைப் பதிப்பாசிரியர் அதன் முன்னுரையிற் குறித்தனர். டாக்டர் சாமிநாதையரவர்களும் தமது பத்துப்பாட்டுப்பதிப்பிற் பாடினோர் வரலாறு கூறுமிடத்தில் ‘நக்கீரர் நாலடிநாற்பது’ எனவே எழுதியுள்ளார்கள். இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரம் காணக்கூடவில்லை.

இறையனார் களவியலுக்கு உரைகண்டவரும் இவர் தாமோ என ஐயுறற்கு இடமுண்டு. இவராகவே யிருப்பின் இவரது காலம் பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலைவராகிய நெடுமாறர் காலமாகும்; அஃதாவது 7-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். வேறொரு விஷயமும் இங்கே கூறுதற்குரியது. யாப்பருங்கலவிருத்தியில் (பக்.217) ‘நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவுமெல்லாம் தூங்கிசைச் செப்பலோசை……….முத்தொள்ளாயிரத்து வண்ணத்தால்வருவனவுமெல்லாம் ஒழுகிசைச் செப்பலோசை’என்று காணப்படுகிறது *2.

இங்கே நாலடி நானூறு, முத்தொள்ளாயிரம் என்பன நூற்பெயர்களாம். ‘நாலடியார்’ என இக்காலத்து வழங்கும் கீழ்க்கணக்கு நூலே நாலடி நானூறென்பது. மயிலைநாதர் அளவினாற்பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடிநானூறு முதலாயின’ என்பர் (சூ.48,உரை). காரிகையுரைகாரர் ‘திருவள்ளுவப் பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்கணக்குள்ளும்’ என்பர் (40.உரை). நக்கீரர் நாலடி நானூறு என்பது இறையனார் களவியல் என்பது போல, நக்கீரர் இயற்றிய நாலடி நானூறு எனப் பொருள் படுதல்வேண்டும் *3. இஃது உண்மையாயின், இந் நக்கீரர் பெருமுத்தரையர் காலத்தவராவர். ஏனெனின் பெருமுத்தரையரை இரண்டிடங்களில் (200,296)  நாலடி குறிப்பிடுகின்றது. இப்பெருமுத்தரையரது காலம் 7-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். இவர் செந்தலைச் சாசனத்தால் அறியப்படும் பெரும்பிடுகு முத்தரையராவர் (புதுக்கோட்டை மான்யுவல், வால்யூம் II, பகுதி I, பக்கம் 563-7), முற்குறித்த காலத்தோடு இதுவும் ஒத்துவருதலால், களவியலுரை கண்ட நக்கீரரே இந்நாலடி நானூற்றை இயற்றியவரென்பது அமைதியுறுகின்றது. நாலடி சமணநூலாதலின், இவர் சமணராதல் வேண்டும்.

முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் மிக முற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது ஆற்றுப்படையின் நடையைநோக்கிய அளவிலே எளிதில் ஊகிக்கத்தகும். இதன் நடை சங்கச் செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது. எனினும், சில வழக்காறுகள் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிற முகனே (89-90)

என்ற இடத்தில் முடிமார் என்பதனை ஆறனுருபு தொக்க பெயராகக் கொண்டு, ‘முடிப்பவருடைய மனத்திலே’ எனப் பழைய உரையின் ஆசிரியரும், நச்சினார்க்கினியரும் பொருளெழுதினர்.வேறு பொருள் கொள்ளுதலும் அமையாது. எனவே, ஆற்றுப்படையின் ஆசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் வேண்டும். இப்பிரயோகம் இலக்கணத்தோடு பொருந்துவதன்றென்பது.

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியு மென்ப (தொல்-வினை.10)

என்ற தொலாப்பியச் சூத்திரமும் அதன் உரைகளும் நோக்கியறியலாம். அன்றியும், இலக்கணத்திற்குப் பொருந்தாமையோடு, சங்க இலக்கிய வழக்கிற்கும் *4 முற்றும் மாறாகவுள்ளது. முருகாற்றுப் படையிலேயே பிறிதோரிடத்து (வரி-173) ‘பெறுமுறைகொண்மார்…….. வந்துடன்காண’ என வழக்கொடு பொருந்திய பிரயோகமும் காணப்படுகின்றது.

இந்நூல் வேறோரிடத்து (வரி-168) ‘ஒன்பதிற்றிரட்டியுயர்நிலை பெறீஇயர்’ என வருகின்றது. இங்கே ‘பெறீஇயர்’ என்ற சொல் கவனித்தற்குரியது. இவ்வாய்பாட்டுச் சொற்கள் எச்சமாகச் சில இடங்களிலும் *5 (தொல்.வினை. 29) வியங் கோளாகப் பல இடங்களிலும் *6 (நன்னூல் 337) வருகின்றன. வேறு பொருள்களில் இவை வந்தனவாகத் தெரியவில்லை. இவ்வழக்கிற்கு மாறாகப் ‘பெற்றவர்’ என்னும் பொருளில் முறுகாற்றுப்படையில் வந்துள்ளது. வேறு பொருள் கூறுதல் ஏலாதாகலின், இதுவும் ஆசிரியர் கருதிற்றே யாதல் வேண்டும்.

இவ்வாறே மற்றோரிடத்துப் ‘பெறலரும் பரிசில் நல்குமதி’ (295) எனக் காணப்படுகின்றது. ‘மதி’ என்பது முன்னிலைக்குரிய அசைச்சொல்லாகும். இது,

யாயிக மோமதி இருஞ்சின் னென்னும்
ஆவயி னாறு முன்னிலை யசைச்சொல் (சொல். இடை. 26)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரப்படும். ‘விடுமதி’ (புறம் 382) ‘நீத்த லோம்புமதி’ (நற்றிணை, 10) முதலிய வழக்குக்களையும் காண்க. தன்மை, படர்க்கைகளில் இகும், சின் என்ற இரண்டு சொற்களும் வருமேயன்றி ‘மதி’ வருதல் இல்லை. இது,

அவற்றுள்,

இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும்
தகுநிலை யுடைய என்மனார் புலவர் (இடை. 27)

என்னுஞ் சூத்திரத்தால் அறியலாகும். நச்சினார்க்கினிர் ‘மதி’ படர்க்கையிடத்தும் வரும் என்பதனைத் ‘தகுநிலையுடைய (இடை.27) என்பதனானாதல், ‘அவ்வச் சொல்லிற் கவையவை’ (இடை.48) என்ற சூத்திரத்தானாதல் அமைத்துக்கொள்க என்று கூறினர். இது தம் கொள்கைக்குத்தாமே யாதாரம் ஆவதன்றிப் பிறிதில்லை. ‘நல்கு’ என்பதனை முற்றாக்கிநிறுத்து ‘மதிபலவுடன்’ என்றியைப்பது இலக்கண இலக்கிய வழக்குகளைப் புறக்கணித்தல் கூடாதென்னுங் கருத்தால் வலிந்து பொருள் கூறுதலேயாகும்; அது கொள்ளத் தக்கதன்று. ஆசிரியரது பெருந்தகுதியை நோக்கி இப்பிரயோகங்களை ‘ஆர்ஷம்’ எனக் கொள்ளுதலே தக்கதாகும். அவர் கருதியதும் படர்க்கைப் பொருளே யாம்.

சங்க நூல் வழக்கோடு இங்ஙனம் மாறுபடுதலேயன்றி, நக்கீரர் இயற்றிய மற்றைச் சங்கச் செய்யுள் வழக்கொடும் மேற்காட்டிய பிரயோகங்கள் முரணுகின்றன *7. இவற்றை நோக்கும்போது இவ்வாற்றுப்படையை இயற்றியவர் தொகை நூல்களிற் காணப்படுபவரும், நெடுநல்வாடையின் ஆசிரியருமாகிய நக்கீரரின் வேறாவரெனத் தோன்றுகிறது.

இதற்கேற்ப, இருவரது உலகமும் வெவ்வேறாக உள்ளன. தொகை நூற்கவிஞருள் ஒருவராகிய நக்கீரர் சங்கப்புலவர்கள் பிறரோடொப்ப, அரசர்கள், குறு நிலமன்னர் முதலியோரது ஆதரவில் வாழ்ந்துவந்தவர்.பாண்டியர்களுள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவரது காலத்தரசன். இவன் ஆலங்கானத்துச் செருவில்,

சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானைப் போலம்பூண் எழினி
நாரறி நறவின் எறுமை யூரன்
தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென்று
எழுவர் நல்வல மடங்க வொருபகல்
முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசேலக்
கொன்று களம் வேட்டனன் (அகம். 30)

என்ற செய்தியை நக்கீரர் அறிவுறுத்துப் புகழுகிறார். நெடுநல்வாடை என்னும் அழகிய செய்யுள் இவ்வாலங்கானத்துச் செருவையே குறித்ததென நச்சினார்க்கினியர் கூறினர். இவன் ‘முதுநீர் முன்றுறை முசிறியை’ முற்றுகையிட்ட செய்தியொன்றும் அகநானூற்றுச் செய்யுளால் (57) விளங்குகிறது.

இப்பேரரசன் பசும்பூட் பாண்டியன் (அகம். 253), பசும்பூட்செழியன் எனவும் வழங்கப்பட்டான். இது ஒரு புறநானூற்றுச் செய்யுளால் (76) புலனாகின்றது. கடற்கரையில் இவனுக்குரிய மருங்கூர்ப் பட்டினத்தின் அழகையும், ஆவணத்தின் சிறப்பையும் பாராட்டிக் கூறுகிறார் (அகம். 227, நற்றிணை 258,358); இப்பட்டினம் தழும்பன் என்பவனது ஊணூருக்கு ‘உம்பர்’ உள்ளது (அகம். 227) கொங்கர்கள் இவனால் துரத்தியடிக்கப் பட்டார்கள்; அவ்வெற்றியால் பல நாடுகள் இவன் வசமாயின (அகம். 253). பெருங்குளம் ஒன்றை அமைத்துத் தனது நாட்டுக் கழனிகள் பயிர் செழிக்கச் செய்தனன்; இக்குளம் வாணன் என்பவனது சிறுகுடி என்னும் ஊர்க்கருகில் இருந்தது (நற்.340). மோகூர்மன்னனும் (மதுரைக்காஞ்சி.508) நெடுஞ்செழியனது வாய்மொழி கேட்பவனுமாகிய (மதுரைக். 772) பழையன்மாறன் கூடற்போரிலே கிள்ளிவளவனை வென்று கோதைமார்பன் என்னும் சேரன் மகிழும்படி வளவனது நாடுகள் பலவற்றைக் கவர்ந்து பாண்டிய நாட்டைப் பெருகச் செய்தனன் (அகம். 346). கூடல் நகரின் நாளங்காடியிலே பலவகை நறும் பண்டங்களும் வைக்கப் பெற்றிருந்ததனாலே இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது (அகம்.93). இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனும் நக்கீரர் காலத்தவனே. இவன் நெடுஞ்செழியனுக்கு எம்முறையினன் என்பது விளங்கவில்லை; ஒருகால் மகனாயிருப்பினும் இருக்கலாம். இந் நன்மாறனை நக்கீரர் (புறம். 56) பூவைநிலைத் துறையில்,

கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே இகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்

எனத் தெய்வங்களோடு ஒப்பிட்டு,

யவனர், நன்கலத் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கிளி தொழுகுமதி ஓங்குவான் மாற

என வாழ்த்துகின்றார்.

சோணாட்டில் உறந்தப் பிரதேசம் தித்தனுக்கு உரியதா யிருந்தது (புறம்.395). இவ்வுறந்தை நிதியாற்பெயர் சிறந்திருந்தது (அகம்.396). அங்கே அறங்கெழு நல்லவை யொன்றிருந்தது (அகம்.93). இந் நகரின் கீழ்பாலுள்ள பிடவூரில் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் வாழ்ந்து வந்தனன் (புறம்.395). காவிரிப்பூம் பட்டினத்தில் பொலம்பூட்கிள்ளி அரசு புரிந்து வந்தனன். இவன் கோசரது படையை அழித்து அவர்கள் நாட்டைக் கைப்பற்றினன் (அகம்.205) பழையன்மாறனால் இக்கிள்ளி தோல்வியுற்றான் (அகம். 346). இடையாறு என்னும் நகர் முற்காலத்தில் கரிகால் வளவனுக்கு உரிமையாயிருந்து நக்கீரர் காலத்தும் சிறப்புற்றிருந்தது (அகம்.141). காவிரி பாயும் கூற்றமொன்றில் எவ்வி அரசு புரிந்துவந்தான் (அகம்.126). இவன் சொல்லைக் கேளாது திதியனுக்குரிய காவன் மரமாகிய புன்னையை விரும்பி அவனோடு அன்னி யென்பவன் பொருதழிந்தான் (அகம்.126).

சேரநாட்டிற் கோக்கோதைமார்பன் அரசு புரிந்து வந்தான் (அகம்.346). இவனுக்கு வானவரம்பன் என்றொரு பெயரும் வழங்கியது (அகம். 389). இவனது தலைநகர் தண்ணான் பொருநையின் கரையிலுள்ள கருவூர் (அகம்.95). தொண்டியிலே குட்டுவன் அரசு புரிந்தான் (அகம். 290).

மூவேந்தரும் பாரியின் பறம்பை முற்றுகையிட, கபிலர் தமது மதித்திறத்தால் தூரத்தே நின்று நெற்கதிர்கள் கொணர்வித்துப் பஞ்சத்தை நீக்கினார் என்ற பழஞ்செய்தியை நக்கீரர் வியந்து பாராட்டுகின்றனர் (அகம். 78).

தொண்டைநாட்டிற் பொலம்பூட்டிரையன் கடற்கரைப் பட்டினமாகிய பவத்திரியில் அரசாண்டு வந்தனன்  (அகம். 340). வேம்பியென்னும் நகரில் முசுண்டையென்னும் குறுநிலத்தரசன் சிறந்து விளங்கினான் (அகம். 249). அயிரியாற்றைத் தன்னகத்தே கொண்டநாட்டிலே வடுகர் பெருமகனாகிய எருமை யென்பவன் வாழ்ந்து வந்தனன் (அகம்.253). சிறுகுடி யென்னும் நகரிலே அருமன் என்ற ஒரு போர்வீரன் விளங்கினன் (நற். 367). கோடை யென்னும் மலையிலே மழவர் என்ற ஓரினத்தவர் இருந்தனர். இவர்கள் மயிற்றூவியாற்செய்த மாலையை அணிந்து வந்தனர் (அகம். 249).

யவனர்கள் மதுவை இயற்றிப் பக்குவப்படுத்தித் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு அரசர் முதலியோரை உண்பித்துக் களிக்கும்படி செய்தனர் (புறம். 56).

இந் நக்கீரருக்குத் தமிழ்நாடு தம்மைப் போன்றார் பெறும் பரிசிலின்பொருட்டு உளதாகிய உலகமாகத் தோன்றிற்று. இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈதலே அரசன் மேற் கொள்ள வேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர் (புறம். 56). செல்வத்துப் பயன் ஈதலே (புறம். 189) என வற்புறுத்துகின்றார். இப் பரிசிலின் பொருட்டு  சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களிலும் வள்ளல்கள் ஊர்களிலும் சுற்றித் திரிந்து பாடியிருக்கின்றார். தெய்வங்களைக் கூட மக்கட் பிறப்புவரை இழித்துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடற்குரிய பொருள்களாகி விடுகின்றனர். மகளிர் பொற்கலத்தில் ஏந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித்தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசி கூறுகின்றார்.

இவ்வுலகத்திற்கும் ஆற்றுப்படை யியற்றிய நக்கீரர் மன வுலகத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மறந்தும் பொருட்பரிசில் அவ்வுலகில் இல்லை. அரசர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் யாரும் அங்கில்லை. முத்தியாகிய பரிசிற்கே தாம் முயன்று பிறரையும் அவ்வழிச் செலுத்துகின்றார். ‘தாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ என்பதே இவரது கொள்கை.கீழ் மக்களது அநாசாரமான வழிபாட்டினும் தெய்வங் கொள்கை கண்டு இன்புறுகிறார். யாண்டும் இறைவனுண்மையை உள்ளூர உணர்கின்றார்.

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்
... .... ... ... .... .... .
வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
(முருகு. 223-249)

எனப் பறை கொட்டுகிறார். அவனது திருவிளையாடல்களைப் புராண வுலகிற் கண்டு களிக்கின்றார். இவர் முற்கூறிய நக்கீரரின் முற்றும் வேறாவர் என்பது சொல்லவும் வேண்டுமோ? தாம் வழிபடுந் தெய்வத்தோடு மக்கட் பிறப்பினனொருவனை இந் நக்கீரர் ஒப்புக்கூறுவரா என்பதையும், தெய்வபத்தியிற் சிறந்த இப்புலவர், ‘மதுவைப் பொற்கலத்தேந்தி மகளிர் ஊட்ட மகிழ்ச்சியோடு இனிது ஒழுகுவாயாக’ என ஓரரசனை வாழ்த்துவரா வென்பதையும் சிந்தித்தல் வேண்டும்.

தொகைநூற் புலவராகிய நக்கீரர் சிறந்த கவித்துவம் படைத்தவர். அவரது நெடுநல்வாடை சங்கச் செய்யுட்களில் முன்னணியில் வைத்தற்குரிய தகுதி வாய்ந்தது. இவ்வரிய செய்யுளில் வரும் சில செய்திகள் இவரது காலத்தை ஒருவாறு அறுதியிடுவதற்கு உதவுகின்றன. மதுரை மாடமோங்கிய மல்லல் மூதூராக விளங்குகின்றது. அதன் தெருக்கள் ஆறு கிடந்தன போன்றுள்ளன. அங்கே மிலேச்சர்கள் மாலைப்பொழுதில் தேறலையுண்டு, மழை தூற்றிக்கொண்டிருக்கவும் அதனைப் பொருட்படுத்தாது தெருக்களில் திரிகின்றார்கள். அரசனது அரண்மனை மிக்க அழகு வாய்ந்துள்ளது. அதனை மனைநூல் விதிப்படி ஒரு நன்னாளில் தொடங்கி இயற்றினர்.

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்தனர் (72-3)

வாயில் நிலையின் உத்தரக் கற்கவி நடுவே திருவும் அதன் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரக் கற்கவி

நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து (32)

எனப்படுகின்றது. ‘உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற செருகுதல் பொருந்தின பெரியமரம்’ என்பது பொருள். அரண்மனையிற் கர்ப்பகிருகம் ஒன்று மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இம்மனைப்பகுதி,

கருவொடு பெயரிய காண்பி னல்லில் (114)

என்று கூறப்படுகிறது. அந்தப்புரத்தில் அரசியிருக்கும் கட்டிலின் மேற்கட்டியில்,

புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி       (159-163)

எழுதப்பட்டுள்ளது.

மேற்காட்டிய அடிகளிலே மனையமைப்பிற்குரிய வடமொழிப் பெயர்க் குறிப்புக்கள் வந்துள்ளன. மேஷ ராசியிலிருந்து தொடங்கிப் பன்னிரு ராசிகளிலும் சூரியன் செல்கின்றமை குறிக்கப்பட்டிருக்கிறது. உரோகிணி நக்ஷத்திரமும் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர்களிடமிருந்து ராசியைப் பற்றிய அறிவு சுமார் கி.பி.200-ல் தமிழ் நாட்டிற் புகுந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இதற்கேற்ப, யவனரும் நக்கீரரால் குறிப்பிடப்படுகின்றனர். எனவே சுமார் கி.பி. 250-ல் நக்கீரரால் நெடுநல்வாடை இயற்றப்பட்டிருக்கலாம். கபிலர், பாரி, கரிகாலன் முதலியோர்களெல்லாம் இந்நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்டவராகலாம். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இவராகவிருக்கலாம். சங்க காலப் புலவர் இவரேயாதல் வேண்டும்.

முருகாற்றுப்படை இயற்றப்பெற்ற காலத்தில் பௌராணிகச் செய்திகள் தமிழ் நாட்டிற் பரவிட்டன. சங்க காலத் தமிழ் வழக்காறுகளும் நன்குணரப்படவில்லையென்பதும் மேலே காட்டப்பட்டது. ஆதலால், சங்கப் புலவராகிய நக்கீரருக்குப் பல நூறாண்டுகளின்பின் அவர் பெயர் கொண்ட பிறரொருவரால் முருகாற்றுப்படை இயற்றப் பட்டதாகலாம். இவ்வாற்றுப்படை 11-ம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதும் இப்பிற்காலத்தையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை நக்கீர தேவநாயனார் என 11-ம் திருமுறை கூறும்.

பத்துப்பாட்டு சங்க நூலாயிற்றே! அதன் கண் உள்ள ஒரு நூல் சங்ககாலத்திற்குப் பின் தோன்றியதெனக் கூறல் அமையுமோ? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். ஆனால், சில குறிப்புக்கள் ஞாபகத்தில் வைக்கத் தகுந்தன. தொகை நூல்களிற் பெரும்பாலனவற்றைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் இவரென்று அவ்வத் தொகுதியின் இறுதியிற் காணப்படுகின்றது. எஞ்சியுள்ளன முற்றும் அகப்படவில்லையாதலால் அவைபற்றி இவ்விவரங்கள் அறியக்கூடவில்லை. பத்துப்பாட்டு அங்ஙனமன்று. முற்றுங் கிடைத்துவிட்டது; எனினும் இவ்விவரங்கள் காணப்படவில்லை.

இதனால், தொகை நூல்களோடொப்ப அவை தொகுக்கப் பெற்ற காலத்தில் பத்துப்பாட்டுத் தொகுக்கப் பெறவில்லை யென்பது தெளிவு.’பத்துப் பாட்டு’ என்ற பெயரும் இத்துணிபினையே ஆதரிக்கின்றது. தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் அமைந்துள்ளதைப்போல முருகாற்றுப்படை முதலாவது வைக்கப் பெற்றிருப்பதை நோக்கினால், அவற்றைப் பின்பற்றி இந்நூல் முற்படக் கோக்கப்பட்டதாதல் வேண்டும். பத்துப்பாட்டிற் செய்யுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப் பெயர் கொண்டே இளம்பூரணர் முதலியோர் எடுத்தாண்டுள்ளார்கள். களவியலுரையில் கடைச்சங்க வரலாறு கூறுமிடத்துப் பத்துப் பாட்டு என்பது குறிக்கப்படவில்லை. மலைபடு கடாத்தின் உரையில் (அடி-145) “சங்கத்தார் நீக்காது கோத்தற்குக் காரணம்” என்று பொதுப்பட எழுதிச் செல்வது கோத்தார் இவரெனக் கூற வியலாமையையே புலப்படுத்துகிறது. எனவே சௌகரியங் கருதி ஒரு முறையில் எழுதிக்கோத்த நீண்ட பாடல்களைப் பிற்காலத்தார் ‘பத்துப் பாட்டு’ என வழங்கலாயினர் என்றலே அமைவுடைத்தெனத் தோன்றுகிறது. இவ்வழக்கு கி.பி.14-ம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைத்துவிட்டதென்பது மயிலைநாதர் ‘பத்துப்பாட்டு, பதிணெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுள்ளும்’ (நன்.387, உரை) எனக் கூறுவதால் விளங்கும். ‘பாட்டு’ எனக்குறிப்பிடும் வழக்காறும் நாளடைவில் உளதாயிற் றென்பது’ பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டுகொள்க.’ எனப் பேராசிரியர்(தொல்.செய்.60) கூறுவதால் அறியலாகும்.

மேலெழுதியவற்றாற் பெற்ற முடிபுகள் கீழே தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன:

காலம்நூல்கள்சமயம்
1. சங்க- நக்கீரர் / கி.பி. 250நெடுநல்வாடை,
தொகைநூற் செய்யுட்கள்
சைவம்
2.இலக்கண- நக்கீரர் / கி.பி. 650அடிநூல், களவியலுரைசமணம்
3. நக்கீரதேவ நாயனார் / கி.பி. 350முருகாற்றுப்படை முதலிய
11-ம் திருமுறைப் பிரபந்தங்கள்
சைவம்

முருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தவிரப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. பண்டையுரைக் காரர்கள் மீது சுமத்தப்பட்ட உரைகளும் அச்சிலிருகின்றன. உதாரணமாக, தி.சன்முகம்பிள்ளை யவர்களால் பார்த்திப வருஷ மேடரவியில், சென்னை ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் ‘பரிமேலழகருரை’யென ஓருரை பதிப்பிக்கப்பட்டது. இதனையே மாகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் பத்துப்பாட்டின் 3-ம் பதிப்பில் ‘வேறுரை’ என அடிக்கிறிப்பிற் காட்டி யிருக்கின்றார்கள். பரிமேலழகர் இவ்வுரையை இயற்றவில்லை யென்னுங் கருத்தோடுதான் இதனை ‘வேறுரை’யென ஐயரவர்கள் குறித்துள்ளாரென நினைக்கிறேன். இதனைப் போன்றே ‘உரையாசிரியருரை’ என ஏட்டுப் பிரதியில் எழுதப் பெற்ற ஓருரையுளது. இதனை மதுரைத் தமிழ் சங்கப் பிரசுரமாக யான் வெளியிட்டுள்ளேன். உரையாசிரியர் என்று சிறப்பிட்டுச் சொல்லப்படும் இளம் பூரணவடிகள் இவ்வுரையை இயற்றியவரல்லர் என்பது உரையின் நடையை நோக்கிய அளவிற் புலனாம்.

ஆனால் ஏட்டுப்பிரதி 994-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 30-ம் தேதி எழுதப்பெற்றது. எனவே இற்றைக்கு 134 வருஷங்களுக்கு முன் பிரதி செய்ததாகும். எப்பொழுது இவ்வுரை வகுக்கப் பெற்றது என்பது அறியக்கூடவில்லை. இவ்வுரையும் நச்சினார்க்கினியர் உரையும் பெரிதும் ஒத்துச் செல்கின்றன. ‘வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (106-ம் அடி) என்ற தன் உரையில் ‘வளைய வேண்டுமிடம் வளைந்து நிமிர வேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்’ என நச்சினார்க்கினியர் தமக்கு முற்பட்ட உரைகாரர் ஒருவரைக் குறிப்பிடுன்றார். ‘உரையாசிரியர்’ உரையில் இப்பொருளே காணப்படுகிறபடியால், இவ்வுரை நச்சினார்க்கினியர்க்கு முந்தியது எனக் கொள்ளுதல் அமையும். உத்தேசமாக கி.பி. 14-ம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப் பெற்றதாகலாம்.

இது ஒரு சிறந்த பழையவுரையாகும். யாவரும் அறியக்கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப்பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வுரையால் இதுகாறும் கருகலாயிருந்த ஓர் அரிய தொடருக்கு இப்போது பொருள் விளங்குகிறது. 216-ம் அடியிலுள்ள ‘தலைத்தந்து என்பதற்கு ‘முதற்கைகொடுத்து’ என நச்சினார்க்கினியர் எழுதினர். புறநானூறு 24-ம் செய்யுளில் ‘தலைக்கை தரூஉந்து’ என்பதற்கு அதன் பழையவுரைகாரர் ‘முதற்கை கொடுக்கும்’ என்றெழுதினர். 73-ம் கலியுள் ‘துணங்கையுட் டலைக்கொள்ள’ என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே ……தலைக்கை கொடுத்தற்றொழிலை……கொள்கையினாலே” என நச்சினார்க்கினியர் விளக்கினார். ஆனால் தலைக்கை கொடுத்தல் அல்லது முதற்கை கொடுத்தல் என்பதன் பொருள் இதுகாறும் விளங்கியபாடில்லை. இவ்வுரைக்காரர் ‘அவர்கள் (மகளிர்கள்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து’ என்றெழுதுகின்றார். இவ்வுரை பழைய வழக்காற்றினை யுணர்ந்து எழுதியதாகத் தோன்றுகிறது; பொருளும் விளங்குகின்றது.

முருகாற்றுப்படை எவ்வளவு பிற்பட்ட காலத்ததாயிருப்பினும், அது சைவ நன்மக்களுக்குப் பாராயண நூலாய் அமைந்துவிட்டது. சிறந்த ஓர் இலக்கியமாகவும் அது கொள்ளற்குறியது. அதனைப் பொருளுணர்ந்து கற்றல் தமிழ் மக்கள் அனைவர்க்கும் கடனாம்.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

[1] ‘அடிநூல்’ நத்தத்தனார் இயற்றியதாக யாப்பருங்கலக்காரிகையுரைப் பதிப்பு (‘அருகிக்கலி’-42) தெரிவிக்கின்றது. அடிநூலைப் பின்பற்றி யெழுந்த கலிவிருத்த நுலில் ‘நக்கீரனாரடி நூலுள்ளுங் கேட்பவே’ எனக் காணுதலால், ‘நத்தத்தனார்’ என்பது பிழையாதல் வேண்டும்.

[2.] திருநெல்வேலி, ஸ்ரீ நெல்லையப்பக் கவிராயரவர்களது வீட்டிலிருந்து கிடைத்த யாப்பருங்கலபிரதியில் (பக்.113) ‘நக்கீரர்’ என்பது காணப்படவில்லை.

[3]. இதனை ஒப்புக்கொள்வதிற் பல தடைகள் உள்ளன. ஆனால் நக்கீரர் நாலடி நானூறு என்பதற்கு வேறு பொருள் கூறுதல் ஏலாது. யாப்பருங்கல வுரைக்குத் திருந்திய பதிப்பு வெளிவரின் இதனைத் தெள்ளிதின் அறியக்கூடும்.

[4]. செப்பங்கொண்மார் (குறுந்.16). செய்வினைமுடிமார் (குறுந்.309). பேண்மார் (அகம்.35) கொண்மார் (அகம்.67) உயம்மார் (அகம்.207). சாஅய்மார் (கலி.80) எள்ளுமார் (கலி.81) கொண்மார் (புறம்.15) அறுமார் (புறம்.93) உண்மார் (புறம்.163) இறுமார் (புறம்.232), இடுமார் (புறம்.325) முதலிய பிரயோகங்கள் யான் கூறியதனைத் தெளிவிக்கும். மயிலைநாதர் தமது நன்னூலுரையில் (326)’ பாடனமாரெமரே (புறம் 375), எனப்பெயரொடு முடிதலும் கொள்க’ என்றனர். இது சிந்தித்தற்குரியது.

[5]. உணீ இயர் (அகம்.106).உடீஇயா (அகம்.50)

[6]. நிலீஇயரோ (புறம்.2), செலீஇயா, நிலைஇயா (புறம்.24); பணியியர், செலியா; இலியர்(புறம்.6), பெறீஇயர் (குறுந்.75) பெறீஇயரோ (குறுந்.83,227); இறீஇயர் (அகம்.49); படீஇயர் (அகம்145); தவர்அலியரோ.அறாஅலியரோ (அகம்.338) பணீஇயர் (நற்.10).

[7] ‘ஒழுகுமதி’ எனப் புறத்திலும் (56) ‘ஓம்புமதி’ என நற்றிணையிலும் (358) வருகின்றன. ‘நிலைஇயா’ எனப் புறத்திலும்  (56), ‘தேயர்’ என நற்றிணையிலும் (197) காண்கின்றன.’தருமார்’ (141)’, ‘அயர்மார்’ (205), ‘நிறுமார்’ (889) என அகத்திலும், ‘அயர்மார்’ என நற்றிணையிலும் (258), ‘பெய்ம்மார்’ (54), ‘புணர்மார்’ (67) ‘அயர்மார்’ என நெடுநல்வாடையிலுமுள்ளன. ஈண்டெல்லாம் இச்சொற்கள் மேலை முருகாற்றுப்படை வழக்கொடு மாறுபடுகின்றன.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s