பக்திப் பாடல்கள் (42 – 44)

-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்

42. கோமதி மஹிமை

தாருக வனத்தினிலே – சிவன்
      சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் – பர
      சிவன்பு கழமுதினை அருந்திடுவார்;
பேருயர் முனிவர் முன்னே – கல்விப்
      பெருங் கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் – உயர்
      சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்: 1

வாழிய, முனிவர்களே! – புகழ்
      வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், – இந்த
      உலக மெலாமுருக் கொண்டபிரான்.
ஏழிரு புவனத்திலும் – என்றும்
      இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், – ஒளி
      யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். 2

தேவர்க் கெலாந்தேவன், – உயர்
      சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் – அந்தக்
      கண்ணனுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவங்கள் – பல
      ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான், – அந்த
      வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3

கேளீர், முனிவர்களே! இந்தக்
      கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் – சதுர்
      வேதங்க ளாயிர முறைபடித்தால்,
மூளுநற் புண்ணியந்தான் – வந்து
      மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள் – பல
      நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்! 4

இக்கதை உரைத்திடுவேன், – உளம்
      இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் – இங்கு
      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் – வளர்
      தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? – புவி
      எத்தனை யுளதென்ப தியார றிவார்? 5

நக்க பிரானறிவான், – மற்று
      நானறி யேன்பிற நரரறியார்.
தொக்க பேரண்டங்கள் – கொண்ட
      தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ஒளி
      தருகின்ற வானமோர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே – எங்கும்
      அக்கரை இக்கரை யொன்றில்லையாம். 6

இக்கட லதனகத்தே- அங்கங்
      கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள், – திசைத்
      தூவெளி யதனிடை விரைந்தோடும்,
மிக்கதொர் வியப்புடைத்தாம் – இந்த
      வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்!
மெய்க்கலை முனிவர்களே! – இதன்
      மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்! 7

எல்லை யுண்டோ இலையோ? – இங்கு
      யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லிமொர் வரம்பிட்டால் – அதை
. . . . . .

(இது முற்றுப் பெறவில்லை)

$$$

43. சாகா வரம்

பல்லவி

சாகவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!

சரணங்கள்

ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா) 1

வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா) 2

நித்யா, நிர்மலா, ராமா
நிஷ்க ளங்கா, சர்வா, தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா) 3

$$$

44. கோவிந்தன் பாட்டு

கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு

நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும், மிகப் பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே. 1

எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான

வெளியிலே, கடலிடையே, மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 2

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு

வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா,
எனக்கமுதம் புகட்டு வாயே.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s