சாந்திக்கு மார்க்கம் – 6

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

6. முனிவர்களும், முனிகளும், இரக்ஷகர்களும் ஊழியம் புரிதல்

பூரண வாழ்க்கையாக வெளிப்பட்டுள்ள அன்பின் தத்துவம், மனித உயிரின் கிரீடமும், மெய்ஞ்ஞானத்தின் அந்தமும் ஆகும்.

ஒரு மனிதனுடைய உண்மையின் அளவு, அவனுடைய அன்பின் அளவேயாகும்; எவனுடைய வாழ்க்கை அன்பினால் ஆளப்படவில்லையோ, அவனுக்கு மிக மிகத் தூரத்தில் மெய்ப்பொருள் இருக்கிறது. சகிப்புத்தன்மை இல்லாதவரும், பிறரிடம் குற்றங் காண்பவரும் மிக உயர்ந்த மதத்தினராயினும், மிக மிகச் சிறிய அளவே மெய்ப்பொருளை உடையவராய் இருக்கின்றனர்; பொறுமையுடையவரும், எல்லாக் கட்சிகளையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அமரிக்கையாகக் கேட்பவரும், எல்லாப் பிரச்சினைகளையும் விவாதாம்சங்களையும் பற்றி ஆலோசித்துப் பக்ஷபாதமற்ற முடிவு செய்பவரும், முழு அளவில் மெய்ப்பொருளை உடையவராயிருக்கின்றனர். ஞானத்திற்கு உரைகல் இதுதான்:- ஒரு மனிதன் எவ்வாறு வாழ்கிறான்? அவன் எவ்விதத் தன்மையை வெளிக்காட்டுகிறான்? ஆபத்துக் காலத்திலும் ஆசையெழும் காலத்திலும் அவன் எப்படி நடக்கிறான்? வியாகுலத்தாலும், ஆசாபங்கத்தாலும் காமக் குரோதங்களாலும் இடைவிடாது தள்ளாடிக் கொண்டும், முதலாவதாக வந்த ஒரு சிறு ஆபத்தில் அமிழ்ந்தும் போகிற அனேக மனிதர் தாம் மெய்ப்பொருளோடு வாழ்கிறதாகப் பெருமை பாராட்டுகின்றனர். என்றும் மாறுபடாததாயிருப்பதொன்றே மெய்ப்பொருள். ஒரு மனிதன் மெய்ப்பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டு  வாழுங்காலையில், அவன் ஒழுக்கத்தில் உறுதியாய் நிற்கின்றான்; தனது மனோ விகாரங்களுக்கும், மனோவெழுச்சிகளுக்கும், அடிக்கடி மாறுதல் அடையும் சரீரத் தன்மைகளுக்கும் மேற்பட்டு நிற்கிறான்.

மனிதர் அழிந்துபோகக் கூடிய கோட்பாடுகளை விதித்து அவைகளை மெய்ப்பொருள் என்று கூறுகின்றனர். மெய்ப்பொருளைக் கோட்பாடுகளாக விதிக்க முடியாது. மெய்ப்பொருள் வாக்குக்கு எட்டாதது; புத்திக்கும் எட்டாதது. அப்பியாசத்தால் அதனை உணரலாம். அது மாசற்று ஹிருதயமாகவும், பூரண வாழ்க்கையாகவும் மாத்திரம் தோன்றக் கூடும்.

அப்படியிருக்கும்போது, யார், ஓய்வில்லாது, மதங்கள், மடங்கள், கட்சிகள் இவற்றின் மத்தியில், மெய்ப்பொருளை உணர்ந்திருக்கின்றார்? மெய்ப்பொருளாக வாழ்கின்றவரே அதனை உணர்ந்தவர். மெய்ப்பொருட்டன்மையை அப்பியசிக்கின்றவரே அதனை உணர்ந்தவர். எவர் தன்னை வென்று மதங்கள் முதலியவற்றிற்கு மேற்பட்டு, அவற்றில் தலையிடாமல், சகல சண்டைகளிலும், சசல பக்ஷபாதங்களிலும், சகல குறறச்சாட்டல்களிலும் நின்று விடுபட்டு, அமைதியோடும், அடக்கத்தோடும், சாந்தத்தோடும், தைரியத்தோடும் தூர இருந்துகொண்டு, தன்னுள் இருக்கிற சுயநலமற்ற சந்தோஷகரமான தெய்வஅன்பை எல்லோரிடத்திலும் செலுத்துகிறாரோ, அவரே மெய்ப்பொருளை உணர்ந்தவர்.

எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ, அவன்தான் மெய்ப்பொருளைக் காட்டுகிறான்; வாக்குவாதங்களாலும், உயர்ந்த நூல்களாலும் மெய்ப்பொருளைக் காட்ட முடியாது; ஏனெனில், மனிதர் அளவு கடந்த பொறுமையிலும், அழியாத மன்னிப்பிலும், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்கிற இரக்கத்திலும் மெய்ப்பொருளைக் காணவில்லையானால், அவருக்கு அதனைச் சொற்களால் காட்ட முடியாது. கோபக்காரர் தனிமையாயிருக்கும் போதும், சாந்தத்தின் மத்தியில் இருக்கும்போதும், அவர் அமைதியோடும், பொறுமையோடும் இருத்தல் எளிது. அதே மாதிரியாக இரக்கமில்லாதவர் பிறரால் அன்பாக நடத்தப்படும்போது, பிறர்பால் அன்பும் இரக்கமும் உடையவராயிருத்தல் எளிது. எவன் கோபம் மூட்டப்பட்ட சகல சமயங்களிலும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கிறானோ, எவன் கோபம் அடையக்கூடிய சந்தர்ப்பங்களிலும், அன்பும் இரக்கமும் உடையவனாயிருக்கிறானோ, அவன் மாசற்ற மெய்ப்பொருளை உணர்ந்திருக்கிறான். இதுதான் உண்மை; ஏனெனில், அத்தகைய உயர் குணங்கள் கடவுளுக்குச் சொந்தமானவை. மிக மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தவனும், தனது அவாவையும், சுயநயத் தன்மையையும் துறந்தவனும், மேலானதும் மாறாததுமான மெய்ப்பொருளை உணர்ந்து அதற்குச் சரியாக நடக்கிறவனும்தான் அவ்வுயர் குணங்களைக் கைக்கொண்டிருந்தல் கூடும்.

ஆதலால், மெய்ப்பொருளைப் பற்றி வீணானவையும் ஆத்திரத்தோடு கூடியவையுமான சகல விவாதங்களையும் விடக் கடவர்; அவர் ஒற்றுமையையும் சமாதானத்தையும், அன்பையும் தயையையும் உண்டு பண்ணக்கூடிய பேச்சுக்களைப் பேசக் கடவர்; செயல்களைச் செய்யக் கடவர். அவர் அகஒழுக்கத்தை அப்பியசித்து அடக்கத்தோடும் ஊக்கத்தோடும் மெய்ப்பொருளைத் தேடக் கடவர். மெய்ப்பொருள்தான் ஆத்மாவை எல்லாப் பாவங்களிலும் தீமைகளிலிருந்தும், மனித ஹிருதயத்தைக் கெடுத்து உலகத்தில் அலைந்த திரிகிற ஆத்மாக்களின் வழியை முடிவில்லாத இருளால் மறைக்கிற எல்லாவற்றிலுமிருந்தும் விடுவிக்கின்றது.

பிரபஞ்சத்திற்கு ஆதாரமும் காரணமுமான பெரிய சர்வ வியாபகச் சட்டம் ஒன்று இருக்கிறது; அதுதான் அன்பாகிய சட்டம். அது வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு தேசங்களிலும் வெவ்வேறு பெயர்களால் சொல்லப்பட்டிருக்கிறது; ஆனால் அப்பெயர்களுக்கெல்லாம் பின்பக்கத்தில் மாற்ற முடியாத அச்சட்டத்தை மெய்ப்பொருட் கண்ணால் காணலாம். பெயர்கள், மதங்கள், சரீரங்கள் மறைந்து போகின்றன. ஆனால், அன்பாகிய சட்டம் என்றும் அழியாமல் இருக்கின்றது. இச்சட்டத்தைப் பற்றிய ஞானத்தை அடைதல், அறிவோடு அதனுடன் ஒன்றாவதற்கும், மரணமின்மையையும் ஜனனமின்மையையும் அழிவின்மையையும் அடைவதற்கும் மார்க்கம்.

இச் சட்டத்தை உணர்தற்காக ஆத்மா செய்யும் முயற்சியால், மனிதர் வாழ்வதற்கும் துன்புறுவதற்கும், சாதற்கம் திரும்பி வருகின்றனர், அதனை உணர்ந்த பொழுது துன்பம் ஒழிகின்றது; மனிதத் தன்மை மறைந்து போகின்றது; மாமிசத்தோடு கூடிய ஜனனமும் மரணமும் ஒழிகின்றன; ஏனெனில் ஆத்ம அறிவு மெய்யறிவோடு ஐக்கியமாய் விடுகின்றது.

மெய்ப்பொருள் ஒரு சரீரத்தைப் பற்றிய தன்று; மெய்ப்பொருளின் மிக மிக வெளிப்பட்ட விளக்கம் உயிர்களுக்கு ஊழியம் புரிதல். தூயதான அகம் மெய்ப்பொருளை உணர்ந்தபொழுது, கடைசியான, மிக மிகப் பெரிதான, மிக மிகப் பரிசுத்தமான தியாகத்தை (அஃதாவது சரியாகத் சம்பாதித்த மெய்ப்பொருளின் அனுபவ தியாகத்தை) செய்யும்படியாகக் கேட்கப்படுகிறது. இத்தியாகத்தைச் செய்வதால் தெய்வத்தன்மையை அடைந்துள்ள ஆத்மா, மாமிசத்தாலாய உடலைத் தாங்கி, மிக மிகத் தாழ்ந்தவர்கள் மத்தியிலும், அற்பர்கள் மத்தியிலும் சஞ்சரிப்பதில் திருப்தியுடையதாய் மனித சமுகத்தின் ஊழியன் என்று மதிக்கப்படுவதாய், மனிதர்களுள் வசிப்பதற்கு வருகின்றது. உலக இரக்ஷகர்களால் காட்டப்படும் மேலான அடக்கம் கடவுட்டன்மையின் முத்திரையாகும். எவன் ‘யான்’ என்பதை ஒழித்து, சரீரமற்ற, நித்தியமான, அளவற்ற அன்பின் அம்சமாக விளங்குகின்றானோ, அவன் மாத்திரம் பின் சந்ததியார்களால் வணங்கப்படத் தக்கவனாகிறான். எவன் ‘யான்’ என்பதை ஒழித்தது மாத்திரமல்லாமல், சுயநயமற்ற அன்பை எல்லாரிடத்திலும் செலுத்துதலாகிய தெய்வப் பணிவைக் கைக்கொண்டு ஒழுகுகிறானோ, அவன் அளவுகடந்து மதிக்கப்பட்டு, மனித வர்க்கத்தாரின் அகங்களில் தெய்வமாக வசிப்பதற்கு இடம் கொடுக்கப்படுகிறான்.

பெரிய மதாச்சாரியர்களெல்லாம் சரீர சுகங்களையும், சௌக்கியங்களையும், பிரதிப் பிரயோஜனங்களையும் துறந்து, உலகச் செல்வங்களையெல்லாம் விட்டு நீங்கி, சர்வவியாபகமும் அகண்டாகாரமுமான மெய்ப்பொருளை உபதேசித்திருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைகளையும், உபதேசங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையிலும் உபதேசத்திலும் ஒரே நேர்மையை, ஒரே தன்மறுப்பை, ஒரே பணிவை, ஒரே அன்பை, ஒரே சாந்தியைக் காண்பீர்கள். அவர்களெல்லாரும் ஒரே நித்தியக் கொள்கையை உபதேசித்தார்கள்; அக் கொள்கையைக் கைக்கொண்டு ஒழுகவே எல்லாத் தீமைகளும் அழிந்துபோம். மனித சமூகத்தின் இரக்ஷகர்களாகத் துதிக்கவும் தொழவும் பெற்ற பெரியார்கள், ‘யான்’ என்பது இல்லாத பரம்பொருளின் அவதார புருஷர்கள், அவ்வாறு இருந்தமையால், அவர்கள் காமக் குரோதங்கள் அற்றவர்களாயும் பிறருக்கு உபதேசிப்பதற்கும், பிறரினின்று காப்பதற்கும், சொந்த அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இல்லாதவர்களாயும் இருந்தார்கள். அவர்கள் எவரையும் தம் மதத்தில் சேர்க்கவாவது, பிற மதத்தில் சேரும்படி செய்யவாவது நாடினதில்லை. மிக மிக உயர்ந்த நன்மையிலும் மேலான பூரணத்துவத்திலும் வாழ்ந்து வந்தமையால், அவர்களுடைய முழுநோக்கமும் அந்த நன்மையை நினைப்பிலும், சொல்லிலும், செயலிலும் பிறரும் அனுசரிக்கும்படி செய்து மனித சமூகத்தை மேற்படுத்த வேண்டும் என்பதாகவேயிருந்தது. அவர்கள் சரீரத்தையுடைய மனிதனுக்கும் சரீரமற்ற கடவுளுக்கும் மத்தியில் நின்று, ‘யான்’ என்பதற்கு அடிமைப்பட்ட மனித வர்க்கத்தினரை இரட்சிப்பதற்காக உழைக்கின்ற உத்தமர்கள்.

‘யான்’ என்பதில் அமிழ்ந்தவராயும், சரீரமில்லாது நன்மை சொரூபமாய் விளங்குகிற கடவுளை அறிய முடியாதவராயும் இருக்கிற மனிதர், தம்முடைய இரக்ஷகர் தவிர மற்றைய இரக்ஷகர்களுக்குக்கெல்லாம் தெய்வத்தன்மை இல்லையென்று சொல்லி, மனித வெறுப்பையும், கொள்கைத் தர்க்கத்தையும் உண்டு பண்ணுகின்றனர்; தமது சொந்த அபிப்பிராயங்களைச் சரியானவையென்று அவர் வாதிக்குங் காலையில், மற்றவர்களை விக்கிரகாராதனைக்காரரென்றும், நாஸ்திகரென்றும், அவருடைய வாழ்க்கைகள் பயனற்றவையென்றும், தமது சொந்த ஆசிரியர்களுடைய வாழ்க்கைகளுடையவும் உபதேசங்களுடையவும் தூய தன்மையையும் சுயநயமற்ற அழகையும் பற்றிப் பேசுகின்றனர். மெய்ப்பொருளை அளவுபடுத்த முடியாது; அஃது எந்த மனிதனுக்கும், எந்த ஆசிரியனுக்கும், எந்த தேசத்திற்கும் விசேஷ உரிமையுள்ளதாயிருக்க முடியாது; ‘யான்’ என்பது பிரவேசித்தபொழுது, மெய்ப்பொருள் இழக்கப்பட்டது.

முனிவன், ஞானி, இரக்ஷகன் இவருடைய பெருமை இது:- அவன் மிக மிகத் தாழ்ந்த தாழ்மையையும், மிக மிக உயர்ந்த சுயநயமின்மையையும் அடைந்துவிட்டான்; எல்லாவற்றையும், அவனுடைய சொந்த சரீரத்தையுங் கூட, அவன் துறந்துவிட்டமையால், அவனுடைய செயல்களெல்லாம் தூயவையாயும் நிலையுள்ளனவாயும் இருக்கின்றன; ஏனெனில், அவை ‘யான்’ என்பதன் எவ்வகை மாசும் நீங்கினவையாயிருக்கின்றன. அவன் பிறருக்குக் கொடுக்கிறான்; அவன் பிறரிடமிருந்து கொள்வதற்கு ஒருபோதும் நினைப்பதில்லை; சென்றதற்கு இரங்காமலும், வருவதை எதிர்பாராமலும் அவன் வேலை செய்கிறான்; அவன் ஒருபோதும் பிரதிப் பிரயோஜனத்தைப் பார்ப்பதில்லை.

விவசாயம் செய்வோன் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்க வேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்.

மனிதர் சுயநயமற்ற ஹிருதயத்தின் தெய்வ நேர்மையை அறியாது, தமது சொந்த இரக்ஷகனை ஒரு விசேஷ அவதார புருஷனென்றும், பொருள்களின் இயற்கைக்கு முற்றிலும் வேறுபட்டவனென்றும், அவனுடைய ஒழுக்க உயர்வு காரணமாக மனித வர்க்கத்தினரால் தீண்டப்படத் தகாதவனென்றும் கருதுகின்றனர். மனிதன் தெய்வத் தன்மையில் பூரணத்துவம் அடையக் கூடுமென்பதிலுள்ள அவநம்பிக்கை, முயற்சியைத் தடுத்து, மனிதரின் ஆத்மாக்களைப் பாவஞ் செய்யும்படிக்கும் பலத்த கயிறுகளால் கட்டுகிறது. ஏசுநாதர் ”ஞானத்தில் வளர்ந்தார்”; ”துன்ப அனுபவத்தால் பூரணத்துவம் அடைந்தார்.” ஏசுநாதர் எஃதாயிருந்தாரோ அஃதேயானார்; புத்தர் பெருமான் எஃதாயிருந்தாரோ அஃதேயானார்; ஒவ்வொரு பக்தனும் தன்னைத் துறத்தற்காகச் செய்த இடைவிடாத முயற்சியால் அவ்வாறானான். இவ்வுண்மையை அறிந்துகொள்ளுங்ள்; ஜாக்கிரதையான முயற்சியாலும், நம்பிக்கையோடு கூடிய உழைப்பாலும், உங்களுடைய கீழ்மையான இயற்கையை விட்டு மேல் எழலாமென்று உணர்ந்து கொள்ளுங்கள்; நீங்கள் அடையக் கூடிய பதவியின் காட்சி பெரிதாகவும் பெருமை வாய்ந்ததாயும் இருக்கும். புத்தர் பெருமான் தாம் பூரணத்தத்துவத்தை அடையும் வரையில் தமது முயற்சிகளைத் தளர்த்துவதில்லையென்று உறுதி செய்து கொண்டார்; அவர் தமது காரியசித்தியை அடைந்தார்.

முனிவரும், ஞானிகளும், இரக்ஷகர்களும் அடைந்த சித்திகளை, அவர்கள் சென்ற வழியிலே, அஃதாவது தன்னைத் துறத்தலும், தன்னலம் மறுத்து ஊழியஞ் செய்தலுமாகிய வழியிலே செல்லுவீர்களாயின், நீங்களும் அடையலாம்.

மெய்ப்பொருள் மிக நேர்மையானது. அது, ”யான் என்பதை விட்டுவிடு; என்னிடம் வா; நான் உனக்கு அமைதியைத் தருகிறேன்” என்று கூறுகின்றது. அப்பொருளின்மேல் குவிக்கப்பட்டிருக்கிற வியாக்கியான மலைகளெல்லாம் ஒழுக்கத்தை உண்மையாக நாடிக் கொண்டிருக்கிற நெஞ்சத்தினின்று அதனை மறைக்க முடியாது. அதற்குக் கல்வி அவசியம் இல்லை; கல்வி இல்லாமலே அதனை உணரலாம். தவறிழைக்கும் தன்னை நாடுகிற மனிதன் பல உருக்களைக் கொண்டிருந்தாலும், மெய்ப்பொருளின் அழகிய நேர்மையும் தெள்ளிய பிரகாசமும் மாறுபடாமலும் மங்காமலும் இருக்கின்றன; சுயநயமற்ற நெஞ்சம் அதன் ஒளிப் பிரதேசத்தில் புகுந்து அதன் ஒளியை அடைகின்றது. சிக்கலான கோட்பாடுகளை உண்டுபண்ணுவதனால், நிச்சயமற்ற தர்க்கங்களைச் செய்வதனால், மெய்ப்பொருளை அடைய முடியாது; அகத் தூய்மையை உண்டுபண்ணுவதனால், மாசற்ற வாழ்க்கையை நடத்துவதனால், மெய்ப்பொருளை அடையக் கூடும்.

இத் தூய நெறியில் செல்லுகிற மனிதன் தனது காமக் குரோதங்களை அடக்கத் தொடங்குகிறான். இதுதான் ஒழுக்கம்; முனித்தன்மையின் தொடக்கம். முனித்தன்மை தூய்மையின் தொடக்கம்; உலக வாழ்க்கையையே பற்றியுள்ள மனிதன், தனது விருப்பங்களையெல்லாம் அனுபவிக்கிறான்; தான் வாழும் நாட்டின் சட்டத்திற்கு மாத்திரம் கீழ்ப்படிந்து நடக்கிறான்; ஒழுக்கமுள்ள மனிதன் தனது காமக் குரோதங்களை அடக்குகிறான்; முனிவன் தன் சொந்த அகத்துள்ளே மெய்ப்பொருளின் விரோதியாகிய ‘யான்’ என்பவனை அவனுடைய பலத்த அரணிலேயே தாக்கி எவன் சுயநல அசுத்த நினைப்புக்களையும் அடக்குகிறான்; எவன் காமக் குரோதங்களையும் அசுத்த நினைப்புக்களையும் விட்டு, மலரானது மணத்தையும் நிறத்தையும் தனக்கு இயற்கையாகக் கொண்டிருத்தல் போல, நன்மையையும், தூய்மையையும் தனக்கு இயற்கையாகக் கொண்டுள்ளானோ, அவனே தூய மனிதன். தூய மனிதன் தெய்வஞானத்தைக் கொண்டிருக்கிறான்; அவன் மாத்திரம் மெய்ப்பொருளைப் பூரணமாக உணர்ந்து, நிலையான அமைதியிலும் சாந்தியிலும் அமர்ந்திருக்கிறான். அவனினின்று தீமையென்பது நீங்கிவிட்டது; அது சர்வ நன்மையாகிய சர்வவியாபக ஒளியில் மறைந்துவிட்டது. தூய்மையானது ஞானத்தின் அடையாளம். அர்ஜுனனுக்குக் கிருஷ்ண பகவான் பின்வருகிறபடி உபதேசித்தார்:-

''அடக்கம், வாய்மை, அஹிம்சை, பொறுமை,
தகுதி, ஞானிகள் தம்மை மதித்தல்.
தூய்மை, தன்னிலை மாறா திருத்தல்,
பொறியின் பத்தை அடியோ டிகழ்தல்,
தன்னை அடக்கல், தன்னைத் துறத்தல்,
ஜனனம், மரணம் முதுமை, வியாதி,
பாவம், துயர்களில் தீமையைப் பார்த்தல்,
நல்ல விதியிலும், தீய விதியிலும்
அமைதி யுடைய அகத்தோ டிருத்தல்,
பூரண ஆன்மக் காட்சியை அடைய
அசையா முயற்சிகள் அனுதினம் செய்தல்
அதனை அடைதலால் ஆம்பயன் அறிதல்,
இவையே ஞானம்; இவையில் லாமையே
அஞ்ஞானம் என்றே அறிகஇள அரசே.''

எவன் தனது சொந்த சுயநயத்திற்கு விரோதமாக இடைவிடாது சண்டை செய்து, அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் தழுவும் பேரன்பை நிலைநாட்ட முயற்சிக்கிறானோ, அவன் ஒரு குடிசையில் வசித்தாலும் சரி, செல்வங்களோடும் செல்வாக்கோடும் வசித்தாலும் சரி, பிறருக்கு உபதேசித்தாலும் சரி, உண்மை முனிவனாவன்.

மேலான காரியங்களைக் கோருவதற்குத் தொடங்குகிற லௌகிகர்களுக்கு ஆஸிஸி நகரின் பிரான்ஸிஸ் என்னும் இனிய முனிவர், அல்லது அந்தோணி என்னும் வெற்றிப் பிரதாப முனிவர், மனோவுணர்ச்சியை உண்டு பண்ணுகிற ஒரு பெரியாராகத் தோன்றுகிறார். அம்முனிவருக்கு, ஆசை அணுகாதவராய், பாவத்தையும் துக்கத்தையும் வென்றவராய், சாந்தியோடும் பக்தியோடும் இருக்கிற ஞானியானவர் ஆனந்தத்தை உண்டுபண்ணும் ஒரு பெரியாராகத் தோன்றுகிறார்; தம்முடைய அறிவைச் சுயநயமற்ற வேலைகளில் ஊக்கத்தோடு உபயோகித்துக்கொண்டு, துக்கத்தால் துடித்து மேற்செல்லக் கோருகிற மனித வர்க்கத்தினர்களின் அகங்களுள் அமிழ்த்து அவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தமது தெய்வத் தன்மையின் வலிமையை உபயோகிக்கிற இரக்ஷகர், ஞானியினும் அதிகப் பெருமை வாய்ந்தவராக விளங்குகிறார்.

உண்மையான ஊழியமாவது, எல்லாரையும் நேசிப்பதில் தன்னை மறத்தலும், எல்லாருக்கும் வேலை செய்வதில் தன்னை இழத்தலுமே, பொய்ப் பொருள்களைப் பற்றிக்கொண்டு உன்னைப் பற்றியும், உன் வேலையைப் பற்றியும், உனது பல தியாகங்களைப் பற்றியும், உனது சிறந்த தலைமையைப் பற்றியும் உரத்துப் பேசுகிற, உனது பல செயல்கள் உன்னைக் காப்பாற்றுமென்று நினைத்துக் கொண்டிருக்கிற வீணனே! மூடனே! இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வாயாக; உனது புகழ் இவ்வுலகமெல்லாம் பரவியிருந்தாலும், உனது செயல்களனைத்தும் வெறுந்தூளாய்ப் போம், நீ மெய்ப்பொருள் இராஜ்யத்தில் அற்பனிலும் அற்பனாய்க் கருதப்படுவாய்.

‘யான்’ என்பது இல்லாதவனுடைய செயல்களே நிலை நிற்கும்; ‘யான்’ என்பவனுடைய செயல்கள் சக்தியற்றவை, அழியக்கூடியவை. கடமைகள் எவ்வளவு தாழ்ந்தவையாயிருந்தாலும், அவற்றைச் சுயநயம் இன்றியும் சந்தோஷத்தோடும் செய்தபொழுது, அஃது உண்மையான ஊழியமும் அழியாத வினையும் ஆகின்றது. செயல்கள் எவ்வளவு உயர்ந்தவையாகவும் வெற்றிகரமாகவும் தோன்றினாலும், தன்னைப் பற்றிய அன்பு காரணமாகச் செய்யப்பட்ட இடத்தில், ஊழியச் சட்டத்தின் அஞ்ஞானம் இருக்கிறது. அவ்வாறு செய்யப்பட்ட செயல்கள் அழிந்து போகின்றன.

உலகத்தாருக்கு ஒரு பெரிய தெய்வ பாடம் கொடுக்கப்பட்டிருக்கிறது; அப் பாடமாவது ஒரு சிறிதும் சுயநயம் இல்லாத தன்மை. பல காலங்களில் தோன்றிய முனிவரும், ஞானிகளும், இரக்ஷகரும் இப்பாடத்தைப் படித்துக் கற்றுத் தேர்ச்சியடைந்தவர்களே. உலகத்திலுள்ள சகல மத வேதங்களும் இந்த ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளன; எல்லாப் பேராசிரியர்களும் இப்பாடத்தையே திருப்பித் திருப்பிச் சொல்லுகிறார்கள். இப் பாடத்தைக் கற்றுக் கொள்ளுதல் உலகத்தாருக்கு மிக மிக எளிது; அப்படியிருந்தும் உலகத்தார் இப்பாடத்தை இகழ்ந்து, சுயநயத்தின் சிக்கலான வழிகளிற் சென்று தடுமாறுகிறார்கள்.

ஒரு தூய அகம், சகல மதங்களின் முடிவும், கடவுட்டன்மையின் தொடக்கமும் ஆகும். இவ் அகத்தூய்மையாகி ஒழுக்கத்தை நாடுதல், மெய்ப்பொருட்கும் சாந்திக்கும் நெறியாகும். இந்த வழியில் செல்லுகிறவன், பிறப்பிறப்புக்களுக்கு அப்பாற்பட்ட அழியாப் பொருளை விரைவில் கண்டு, பிரபஞ்சத்தைப் பற்றிய கடவுட்கணக்கில் மிக மிகத் தாழ்ந்த முயற்சியும் விடப்பட மாட்டாதென்பதை உணர்வான்.

ஒரு கிருஷ்ண பகவானுடைய, ஒரு கௌதம முனிவருடைய, அல்லது ஓர் ஏசுநாதருடைய தெய்வத்தன்மை தன்னைத் துறத்தலின் பெருமை வாய்ந்த கிரீடமும், ஸ்தூல உலகத்திலும் மரணத்திலும் ஆத்மா செய்த யாத்திரையின் முடிவும் ஆகும். ஒவ்வோர் ஆத்மாவும் அம்மூவரையும் போலாகி, தனது தெய்வத் தன்மையின் ஆனந்தத்தை அனுபவிக்கும் வரையில், உலகம் தனது நீண்ட யாத்திரையை முடித்ததாகாது.

இடைவிடா முயற்சியால் எய்திய வுணர்ந்த
நிலைகள்மேல் பெருமைகள் நிலவிநின் றிடும்காண்;
அரிய செயல்களை ஆற்றிய நரைத்த
தலையினைச் சுற்றுறும் புணிதநன் மதிப்பு;
பொன்னின் ஊதிய நன்னெறி தன்னில்
செல்வோன் தனக்குச் செல்வங்கள் வந்துறும்;
மேதைமை ஒளிரும் மூளை தன்னொடு
வினைசெய் வோனை மேவிடும் நற்புகழ்;
மிகைக்கும் தனக்கும் விரோத மாகும்
புரியும் இரத்தம் இலாத அமரில்
அன்புகா ரணமா ஆருயிர் ஈயும்
மனிதனை மன்னும் மிகப்பெருங் கீர்த்தி;
தன்னை வணங்கும் கண்ணிலா மாந்தரின்
இகழ்ச்சிக ளூடே முட்கிரீ டத்தை
ஏற்கும் மனிதனின் எழிற்புரு வத்தை
மிகமிக ஒள்ளிய மதிப்புகள் சுற்றும்;
மனித உயிர்களுக் கினிமை நல்கிட
அன்பும் வாய்மையும் ஆகிய நெறிகளில்
நடக்க முயலும் நல்ல மனிதனை
சிறந்த தூய செல்வங்கள் நண்ணும்,
மனிதர் களுக்கு நனிநல் லூழியம்
புரிவோன் அழியும் புகழினைக் கொடுத்தே
ஒளிரும் சுவர்க்க உடையுடன் ஒளியும்,
இன்பமும், சாந்தியும் எய்துகின் றனனே.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s