கண்ணன் மீதான பக்திப் பாடல்கள்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணன் மீதான பாடல்கள் (45- 51) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடல் மிகப் புகழ் பெற்ற இசைப்பாடல். இக்கவிதையை தனது புதினத்திலும் (சந்திரிகையின் கதை), குழந்தை சந்திரிகை பாடுவதாக அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி.

பக்திப் பாடல்கள்

45. கண்ணனை வேண்டுதல்

வேத வானில் விளங்கி, “அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்
தீத கற்றுமின்” என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே, 1

உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே. 2

எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம். 3

வீரர் தெய்வதம், கர்மவிளக்கு, நற்
பார தர்செய் தவத்தின் பயனெனும்
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ. 4

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம். 5

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே,
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால். 6

ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால். 7

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்
கொற்றவா! நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம். 8

நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே. 9

$$$

46. வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய் – கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் – கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் – கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் – கண்ணா! (வருவாய்) 1

இணைவாய் எனதா வியிலே – கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் – கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் – சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்) 2

எழுவாய் கடல்மீ தினிலே – எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே – கண்ணா!
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்) 3

$$$

47. கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே! – நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே! – நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே! – நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே! – நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே! – நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே! – நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே!

வேறு

போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!

$$$

48. நந்த லாலா

ராகம் – யதுகுல காம்போதி; தாளம் – ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! – நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா! 1

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! – நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா! 2

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! – நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா! 3

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! – நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா! 4

$$$

49. கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
.காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ண முடையான் – மணி
வண்ண முடையான் – உயர்
.தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்.
பண்ணை யிசைப்பீர் -நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் – இந்தப்
.பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
.ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு. (கண்ணன்) 1

அக்கினி வந்தான் – அவன்
திக்கை வளைத்தான் – புவி
.யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
.சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்;
மிக்க திரளாய் – சுரர்,
இக்கணந் தன்னில் – இங்கு
.மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
.போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்) 2

சங்கரன் வந்தான்; – இங்கு
மங்கல மென்றான் – நல்ல
.சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்;
பங்க மொன் றில்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
.பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
கங்கையும் வந்தாள் – கலை
மங்கையும் வந்தாள், – இன்பக்
.காளி பராசக்தி அன்புட னெய்தினள்,
செங்கம லத்தாள் – எழில்
பொங்கு முகத்தாள் – திருத்
.தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்) 3

$$$

50. கண்ணன் திருவடி

கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே. 1

தருமே நிதியும், பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே. 2

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை, பொங்கும் நலமே. 3

நலமே நாடிற் புலவீர் பாடீர்,
நிலமா மகளின், தலைவன் புகழே. 4

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே. 5

தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே. 6

தவறா துணர்வீர், புவியீர் மாலும்
சிவனும் வானோர், எவரும் ஒன்றே. 7

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே. 8

$$$

51 வேய்ங்குழல்

ராகம் – ஹிந்துஸ்தான் தோடி; தாளம் – ஏகதாளம்

எங்கிருந்து வருகு வதோ? – ஒலி
யாவர் செய்கு வதோ? – அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ? – மரக்
      கொம்பி னின்றும் வருகுவதோ? – வெளி
மன்றி னின்று வருகுவதோ? – என்றன்
      மதி மருண்டிடச் செய்குதடி! – இஃது (எங்கிருந்து) 1

அலையொ லித்திடும் தெய்வ – யமுனை
      யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? – அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
      எழுவதோ இஃதின்ன முதைப்போல? (எங்கிருந்து) 2

காட்டி னின்றும் வருகுவதோ? – நிலாக்
      காற்றைக் கொண்டு தருகுவதோ? – வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
      நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து) 3

பறவை யேதுமொன் றுள்ளதுவோ? – இங்ஙன்
      பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
      வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து) 4

கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
      காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
      பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து) 5

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s