-திருநின்றவூர் ரவிகுமார்

சகோதரி ஷிவானி
“நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும் அப்படியே நம்பி விட வேண்டாம். நீங்கள் கேள்விப்படும் ஒவ்வொரு கதைக்கும் மூன்று பக்கங்கள் உள்ளன: உங்களுடையது, அவர்களுடையது, உண்மை” .
-ஷிவானி வர்மா
இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலகில் பலருடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் சகோதரி ஷிவானி எனப்படும் பி கு ஷிவானி வர்மா. பி கு என்றால் பிரம்மகுமாரி. இவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றமே பலரின் வாழ்வில் மாற்றத்துக்கு வித்திட்டது.
சகோதரி ஷிவானி பிறந்தது மகாராஷ்டிர மாநிலத்தில் புனே நகரில். 1972 மே மாதம் 31 பிறந்தார். பொறியியல் பட்டப் படிப்பில் B.E. (E&C) தங்கப்பதக்கம் (1994இல்) பெற்றவர்.
கல்லூரியில் படிக்கும் போது அவரது தாயார் அருகில் உள்ள பிரம்மா குமாரிகள் சங்கத்தில் அறிமுகமானார். யோகாசனம் பயின்றார். “பிரம்ம குமாரிகளின் தொடர்புக்குப் பிறகு என் தாயாரிடம் பெரிய மாற்றத்தை நான் கண்டேன். அவரிடம் சாந்தம் ஏற்பட்டது. பேச்சில் இனிமை வந்தது. மனவலிமை உள்ளவராக ஆனார்” என்று தன் தாயிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி கூறுகிறார் ஷிவானி.

தாயின் தூண்டுதலால் தானும் பிரம்ம குமாரிகளின் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றதாகக் கூறும் ஷிவானி கல்லூரிப் படிப்புக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். விஷால் வர்மா அவரது கணவர். அவருடன் சேர்ந்து ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். தில்லியில் நொய்டா பகுதியில் அது இருந்தது.
பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தரும் பயிற்சிக்கு ராஜயோகப் பயிற்சி என்று பெயர். கல்லூரிப் படிப்பின் துவக்கத்திலிருந்தே அந்தப் பயிற்சியைப் பெற்று பழகி வந்த ஷிவானி வர்மாவின் வாழ்வில் 2004-இல் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அவர் தன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம், தனக்கென ஒரு பணி இருப்பதை உணர்ந்தார். தன்னை ஆன்மாவாகவும், பேரான்மாவாக இறைவனின் இருப்பையும் உணர்ந்தார்.
இந்நிலையில் தில்லியில் இருந்தபோது ‘ஆஸ்தா’ தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மகுமாரிகள் அமைப்பைப் பற்றி ஒரு தொடரை 2007-இல் தயாரித்தது. அந்தத் தயாரிப்பில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் பின்னணிப் பணியில் ஷிவானி ஈடுபட்டார். அப்போது ஒருமுறை அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் வர முடியாத சூழ்நிலையில் சகோதரி ஷிவானி அந்த நிகழ்ச்சியில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, அவருக்கும் அமைப்பிற்கும்.
அந்தத் தொலைக்காட்சித் தொடருக்குப் பிறகு பலருக்கு அவரைத் தெரிந்தது. அதுவரை ராஜயோகப் பயிற்சி செய்பவராகவும் சிறிய அளவில் பயிற்சி அளிப்பவராகவும் இருந்த அவர் பல இடங்களுக்கு சிறப்புப் பயிற்றுநராக அழைக்கப்பட்டார். அவரது பேச்சும் ராஜயோகப் பயிற்சியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களிடையே பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின.
தன்னை நிர்வகிப்பது, உறவுகளை நிர்வகிப்பது, கர்மக் கொள்கை, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆன்மிக அறிவு என்று பல நூல்களை எழுதியுள்ளார். அவை பல பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளன. தொலைக்காட்சிகளில் மட்டுமன்றி யூ-டியூபிலும் இவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பிரம்மச்சரியம் பற்றி காந்திஜி சொல்வார் ‘குடும்ப வாழ்வில் இருந்தாலும் பிரம்மச்சரியம் காக்க வேண்டும்’ என்று. சகோதரி ஷிவானி தன் கணவருடன் ஒரே வீட்டில் இருந்தாலும் பிரம்மச்சாரிணியாக வாழ்ந்து வருகிறார்.
அஸோசெம் 2014-இல் சிறந்த பெண்மணியாக இவரைத் தேர்வு செய்து விருது அளித்தது. இந்தியா முழுவதும் மட்டுமன்றி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் என 35-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்; அங்கு ராஜயோகப் பயிற்சி அளித்துள்ளார்.
இவரது பேச்சும் ராஜயோக பயிற்சியும் மக்களிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்களைக் கண்ட உலக உளவியலாளர்கள் சங்கம் 2017-ஆம் ஆண்டு இவரை தங்கள் அமைப்பின் தூதுவராக நியமித்து.
இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பல நாடுகளில் இவரது முகம் பிரபலமானது. இந்திய அரசு பெண்களுக்கென வழங்கும் மிக உயரிய விருதான ‘நாரி சக்தி’ விருதை 2019-இல் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
சுயமரியாதை என்ற வார்த்தை மிக அதிகமாக காதில் விழும் தமிழகத்தில் சுயமரியாதை பற்றி சகோதரி ஷிவானி கூறுவதைத் தெரிந்து கொள்வது நல்லது:
“Ego is lack of self-respect. In any situation, if we react aggressively or get hurt, it is our ego, and if we remain stable and have faith in ourselves, it is self-respect.”
$$$