சாந்திக்கு மார்க்கம்- 5

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

5. கடவுளோடு ஐக்கியமாதல்

ஆதிகாலம் முதற்கொண்டு மனிதன், தனது சரீரப் பசிகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையில், தான் லௌகிக நிலையற்ற பொருள்களைப் பற்றிக் கொண்டிருக்கிற காலத்தில், தனது சரீர வாழ்க்கையின் அளவுபட்ட, நிலையில்லாத, தோற்ற மாத்திரையான தன்மையை எப்பொழுதும் உள்ளூர உணர்ந்துகொண்டும், தனது ஞான நேரங்களில் கடவுளை அடைவதற்கு முயன்று கொண்டும், அக் கடவுளை அடைந்து அமைதியுறுவதற்குக் கண்ணீரோடு கோரிக்கொண்டும் இருக்கிறான்.

உலக இன்பங்கள் உண்மையானவையென்றும் திருப்தி தரத்தக்கவையென்றும் வீணாக நினைத்துக்கொண்டிருக்குங் காலையில், துன்பமும் துக்கமும் தமது பொய்ம்மையையும் திருப்தியற்ற தன்மையையும் அவனுக்கு இடைவிடாமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருள்களில் பூரண திருப்தியைக் காணலாமென்று நம்புவதற்கு எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கையில், இந்த நம்பிக்கைக்கு விரோதமாகத் தன்னுடைய அகத்தின் பிடிவாதமான எதிர்ப்பை உணர்ந்துகொண்டிருக்கிறான்; அவ்வெதிர்ப்பு அவனுடைய ஆவசியகமான மரணத் தன்மையை மறுப்பதாகவும், மரணமற்ற, நித்தியமாயுள்ள, அகண்டாகாரக் கடவுளிடத்தில் மாத்திரம் நிலையான திருப்தியையும், இடையறாத சாந்தியையும் அவன் காணக் கூடுமென்பதை ருஜுப்படுத்துவதாகவும் இருக்கிறது.

இவ்விடத்தில்தான் விசுவாசத்தின் அடிநிலம் இருக்கின்றது; இவ்விடத்தில்தான் சகல மதங்களுடைய மூலமும் வேரும் இருக்கின்றன; இவ்விடத்தில்தான் சகோதரத்துவ ஆத்மாவும் அன்பின் ஹிருதயமும் இருக்கின்றன. மனிதன் தெய்வத் தன்மையும் நித்தியத் தன்மையும் வாய்ந்தவன்; அவன் மரண ஞாபகத்தில் அமிழ்ந்து அமைதியின்மையால் தொந்தரிக்கப்பட்டு, அவனுடைய உண்மையான தன்மையின் உணர்ச்சியை அடைவதற்கு எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறான்.

மனிதனுடைய ஆத்மா கடவுளிடத்தினின்று பிரிக்கப்பட முடியாதது; கடவுள் தவிர வேறு எஃதாலும் திருப்தியடைய மாட்டாதது; மனிதன் இந்த ஸ்தூல உலகைப் பற்றி அலைந்து கொண்டிருத்தலை நிறுத்தி, நித்தியப் பொருளின் உண்மைத் தன்மையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவரும் வரையில், துன்பத்தின் சுமை அவனுடைய ஹிருதயத்தை அமுக்கிக் கொண்டேயிருக்கும்; துக்கத்தின் நிழல்கள் அவனுடைய வழியை இருட்படுத்திக் கொண்டேயிருக்கும்.

சமுத்திரத்தினின்று பிரிக்கப்பட்ட ஒரு சிறு துளி ஜலம் சமுத்திர ஜலத்தின் தன்மைகளையெல்லாம் கொண்டிருந்தல்போல, கடவுளாகிய அகண்டாகார அறிவினின்று பிரிக்கப்பட்ட மனிதன் கடவுளின் தன்மையை உடையவனாயிருகிறான்; அத் துளி ஜலம். அதன் இயற்கைச் சட்டப்படி கடைசியாகச் சமுத்திரத்திற்குச் சென்று அதன் மௌனமும் ஆழமுமான ஜலத்தோடு கலந்து தன் சொரூபத்தை இழந்து விடுதல்போல, மனிதன் அவனுடைய தவறாத இயற்கைச் சட்டப்படி, கடைசியில் அவனுடைய உற்பத்தி ஸ்தானத்திற்குச் சென்று, கடவுளாகிய பெரிய சமுத்திரத்தில் கலந்து தன் சொரூபத்தை இழந்து விடுகிறான்.

கடவுளோடு மறுபடியும் ஐக்கியமாதல் மனிதனுடைய இலட்சியம். நித்திய சட்டமாகிய கடவுளோடு ஐக்கியமாதல் ஞானம், அன்பு, சாந்தி! இத் தெய்வத் தன்மையை சரீரத்தைப் பற்றிக்கொண்டிருக்கிற மனிதர்கள் உணர முடியாது: சரீரப் பற்று, வேற்றுமைத்தன்மை, சுயநயம் இவையெல்லாம் உண்மையில் ஒன்றே; இவை மெய்ஞ்ஞானத்திற்கும் தெய்வத் தன்மைக்கும் விரோதமானவை; சரீரப் பற்றை முற்றும் விட்டுவிட்டால், வேற்றுமைத் தன்மையும் சுயநயமும் ஒழிந்து, மனிதன் தனது அழியாத் தன்மையும், அகண்டாகாரமுமாகிய தெய்வத் தன்மை வாய்ந்த பிதுரார்ஜிதத்தை அடைகிறான்.

அவ்வாறு சரீரப்பற்றை விட்டுவிடுவதை உலகப் பற்றும் சுயநயமும் உடைய மனிதன் மிக மிகத் துன்பத்தைத் தரும் ஓர் ஆபத்தாகவும், மிக மிகப் பெரிய நஷ்டமாகவும் கருதுகிறான்; அவன் அவ்வாறு கருதினாலும் அதுதான் ஒப்புயர்வற்ற மேலான ஆசீர்வாதம்: நிலையான உண்மையான இலாபம். ஜீவ தத்துவத்தின் அகச் சட்டங்களையும், தன் உயிரின் தன்மையையும், விதியையும் அறியாத மனிதன். அநித்தியமான தோற்றங்களையும், நிலையான உண்மைத்தன்மை இல்லாத பொருள்களையும் பற்றிக்கொண்டிருக்கிறான். அவ்வாறு பற்றிக்கொண்டு அவனுடைய சொந்தம் பிரமைகளோடு அழிகின்றான்.

மனிதர் மாமிசப் பிண்டமாகிய சரீரத்தைப் பற்றிக் கொண்டும். அஃது அழியாமல் என்றும் இருப்பதாக நினைத்துக் கொண்டும், அது விரும்பியவற்றையெல்லாம் அதற்குக் கொடுக்கின்றனர்; சரீரத்திற்கு அழிவு இன்றியாமையாத தென்பதையும், அவ்வழிவு விரையில் வரக்கூடியதென்பதையும் அவர் மறந்துவிட முயற்சித்தபோதிலும். மரண பயமும், அவர் பற்றிக்கொண்டிருக்கிற எல்லாவற்றின் இழப்புப் பயமும், அவருடைய மிகமிகச் சந்தோஷமான நேரங்களைப் பழுதுபடுத்துகின்றன. அவருடைய சுயநயத்தின் வெவ்விய நிழல் ஒரு குரூரமான பேய்போல அவரைப் பின் தொடர்கின்றது.

உலக சௌகரியங்களையும் உலக இன்பங்களையும் அதிகமாகக் கொள்ளும்போது, மனிதரின் அகத்துள் இருக்கின்ற தெய்வம் மருத்தூட்டப்பட்டு, ஸ்தூல உலகத்துள்ளும், அழிதற்றன்மையுள்ள ஐம்பொறி வாழ்க்கையுள்ளும் ஆழ்ந்து ஆழ்ந்து அமிழ்கின்றது; அப்போது சரீரத்தின் அழியாமையைப் பற்றிய கற்பனைகள் தவறாத உண்மைகளென்று மதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனுடைய ஆத்மா எவ்விதமான சுயநயத்தாலாவது மூடப்பட்டிருக்கும்போது, அவன் தனது ஆத்ம பகுத்தறிவின் சக்தியை இழந்து. அநித்தியப் பொருள்களை நித்தியப்பொருள்களாகவும், அழிந்து போகும் பொருள்களை அழியாத பொருள்களாவும், மரண முடையவற்றை மரண மில்லாதனவாகவும், மெய்ப் பொருளைப் பொய்ப்பொருளாகவும் கருதுகிறான். இவ்வாறே உலகமானது மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டிராத வெறுங் கற்பனைகளாலும் ஊகங்களாலும் நிறைக்கப்பட்டிருக்கின்றது. மாமிசத்தாலாய ஒவ்வொரு சரீரமும், அது பிறந்த நிமிஷ முதற் கொண்டு, அதனை அழிக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது; அதனுடைய மாற்றமடியாத இயற்கைச் சட்டப்படி அஃது அழிந்தே தீரும்.

பிரபஞ்சத்திலுள்ள அழியும் பொருள்கள் ஒருபோதும் அழியாப் பொருள்களாக மாட்டா; அழியாப் பொருள்கள் ஒருபோதும் அழியமாட்டா; இறக்கும் உயிர்கள் ஒரு போதும் இறவா உயிர்களாக மாட்டா; இறவா உயிர்கள் ஒருபோதும் இறக்க மாட்டா; நிலையற்ற பொருள்கள் ஒரு போதும் நிலையுள்ள பொருள்களாக மாட்டா; நிலையுள்ள பொருள்கள் ஒருபோதும் நிலையற்ற பொருள்களாக மாட்டா; தோற்றங்கள் ஒருபோதும் உண்மைகளாக மாட்டா; உண்மைகள் ஒருபோதும் தோற்றங்களாகத் தேய மாட்டா; பொய்ப்பொருள் ஒருபோதும் மெய்ப்பொருள் ஆக மாட்டாது; மெய்ப்பொருள் ஒருபோதும் பொய்ப்பொருள் ஆகமாட்டாது; மனிதன் மாமிச உடம்பை அழியாத உடம்பாகச் செய்ய முடியாது. ஆனால், அதன் விருப்பங்களையெல்லாம் துறந்து அதனை வென்று, அவன் அழியாத தன்மையுள் புகலாம்.

“கடவுள் ஒருவரே அழியாத் தன்மை வாய்ந்தவர்.” பேரறிவாகிய கடவுட்டன்மையை அடைதலால் மாத்திரம் மனிதன் அழியாத் தன்மையுள் புகுகின்றான்.

கோடிக்கணக்கான உயிர்களது உடம்புகளின் இயற்கை மாறும் தன்மையது, அழியும் தன்மையது. நிலையற்றது அவ்வியற்கையின் உண்மைத் தத்துவம் ஒன்றே நிலையுள்ளது. இயற்கை பல; அவற்றுள் ஒவ்வொன்றும் வேற்றுமையுடையது. இயற்கையின் உண்மைத் தத்துவம் ஒன்றே; அஃது ஒற்றுமையுடையது. புறப்பொறிகளையும் அகச் சுயநயத்தையும் வெல்வதானால். அஃதாவது இயற்கையை வெல்வதனால், மனிதன் தோற்ற மாத்திரையான சரீரத்திற்கு ஆதாரமான கருவிலிருந்து வெளிப்பட்டு, அழியக்கூடிய உருக்களெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமான மெய்ப்பொருட் பிரதேசத்துன், ஆத்ம ஒளிக்குள் பறக்கிறான்.

ஆதலால், மனிதர்கள் தன்னை (‘யான்’ என்பதை) மறுத்தலை அப்பியசிக்கட்டும்; தங்களுடைய மிருக விருப்பங்களை வெல்லட்டும்; சுகத்திற்கும் இன்பத்திற்கும் தாங்கள் அடிமையாதலை மறுக்கட்டும்; அவர்கள் நல்லொழுக்கத்தை அப்பியசித்துக் கடைசியாகக் கடவுட்டன்மையை அடையும் வரையில், மேலும் மேலும் உயர்ந்து ஒழுக்கத்தில் வளரட்டும்; பணிவு, சாந்தம், மன்னித்தல், இரக்கம், அன்பு இவற்றை அறிந்து அப்பியசிக்கட்டும்; இவ்வறிவும் அப்பியாசமுமே கடவுட்டன்மையை அடைதலாம்.

அருள் அகப்பார்வையை உண்டுபண்ணுகின்றது. எவன் தனது சரீரப் பற்றை வென்று, எல்லாப் பிராணிகளிடத்தும் அருளுடையவனாயிருக்கிறனோ. அவன் தெய்வத்தன்மை வாய்ந்த அகப்பார்வையை உடையவனாய், பொய்யினின்று மெய்யைப் பிரித்து அறியும்படியான திறமையுடையவனாகின்றான். ஆதலால், மிக மேம்பாடுற்ற நல்ல மனிதன் ஞானியும், தேவனும், அறிஞனும், கடவுளை உணர்ந்தவனும் ஆகிறான். எவனிடத்தில் தாராள அமைதியையும், அசையாத பொறுமையையும், மேலான தாழ்மையையும், இனிய பேச்சையும், தன்னடக்கத்தையும், தன்னை மறத்தலையும், ஆழ்ந்து நிறைந்த அனுதாபத்தையும் காண்கிறீர்களோ, அவனிடத்தில் மிகமிக உயர்ந்த ஞானத்தை எதிர்பாருங்கள்; அவனுடைய கூட்டுறவைக் கொள்ளுங்கள்; ஏனெனில், அவன் கடவுளை உணர்ந்துவிட்டான்; கடவுளுடன் வாழ்கிறான்; கடவுளோடு ஐக்கியமாய்விட்டான். எவன் பொறுமையற்றவனாயிருக்கிறானோ, எவன் கோபிக்கிறானோ, எவன் தற்பெருமை பாராட்டுகிறானோ, எவன் இன்பத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறானோ, எவன் சுயநயபோகங்களை விடுவதற்கு மறுக்கிறானோ, எவன் தயையும் அகன்ற இரக்கத்தையும் அப்பியசிக்கவில்லையோ, அவனை நீங்கள் நம்பாதீர்கள்; ஏனெனில், அவனிடத்தில் ஞானம் இல்லை; அவனுடைய அறிவெல்லாம் பயனற்றது; அவனுடைய செயல்களும் சொற்களும் அழிந்துபோம்; ஏனெனில், அவை அழிந்துபோகக் கூடியதையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.

மனிதன் ‘யான்’ என்பதை விடக் கடவன்; உலகினை வெல்லக் கடவன்; சரீரப்பற்றை விடக் கடவன். இந்த வழியினால் மாத்திரமே கடவுளுடைய அகத்துட் பிரவேசிக்கக் கூடும்.

உலகமும், சரீரமும், தானும், காலமாகிய பாலைவனத்தில் தோன்றும் காணல் தோற்றங்கள்; ஆத்ம உறக்கத்தில் தோன்றும் அழிந்து போகக்கூடிய சொப்பனங்கள்; எவர்கள் அப்பாலைவனத்தைக் கடந்து விட்டார்களோ, எவர்கள் ஆத்ம விழிப்புடையவர்களாயிருக்கிறார்களோ, அவர்கள் மாத்திரம் எல்லாத் தோற்றங்களும் நீங்கிச் சொப்பனமும் மயக்கமும் ஒழிந்து நிற்கும் சர்வவியாபக மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள்.

ஒரு பெரிய சட்டம் இருக்கிறது; அது நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வேண்டுகிறது. ஓர் ஒற்றுமைத் தத்துவம் இருக்கிறது; அது சகல வேற்றுமைகளுக்கும் ஆதாரமானது. ஒரு நித்திய மெய்ப்பொருள் இருக்கிறது; அதில் உலகப் பிரச்னைகளெல்லாம் தீர்ந்துவிடுகின்றன. இந்தச் சட்டத்தை, இந்த ஒற்றுமையை, இந்த மெய்ப்பொருளை உணர்தல் அகண்டாகாரக் கடவுள் நிலையுள் பிரவேசித்து நித்தியமான கடவுளோடு ஐக்கியமாதல், அன்பாகிய பெரிய சட்டத்தைப் பின்பற்றி ஒருவன் வாழ்க்கையை நடத்துதல் அமைதியையும்,சமாதானத்தையும், சாந்தியையும் இடைதற்கு வழி. தீமையிலும் பகைமையிலுமுள்ள சகல சம்பந்தங்களையும் விடுதலும், நன்மையையும் நட்பையும் விடாமையும், அகத்துள் நிலவும் தூய அமைதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடத்தலும், பொருள்களின் ஹிருதயத்தின் உள்ளுள்ளே பிரவேசித்ததற்கும், வெறுமனே அறியும் அறிவுக்கு எட்டாத நித்திய அகண்ட தத்துவப் பொருளை உணர்ந்து வாழ்தற்கும் நெறிகளாம். இத்தத்துவத்தை உணரும் வரையில், ஆத்மா சாந்தி அடைய மாட்டாது. எவன் இத்தத்துவத்தை உணருகின்றானோ, அவன் உண்மை ஞானி. அவனுடைய ஞானம் கற்றவர்களுடைய ஞானம் அன்று. ஆனால், ஒரு குற்றமற்ற ஹிருதயத்திற்கும் தெய்வீக மனிதத் தன்மைக்கும் சொந்தமான நேர்மையாம்.

அகண்டாகாரமாயும் நித்தியமாயும் உள்ள கடவுளை உணர்தல், இருள் இராஜ்யமாகிய காலத்திற்கும் உலகத்திற்கும் சரீரத்திற்கும் மேற்ப்பட்டு நிற்றலாம்; ஒளி இராஜ்யமாகிய அழியாமை, பரலோகம், ஆத்மா இவற்றில் தங்குதலாம். கடவுளோடு ஐக்கியமாதல் வெறும் பேச்சு அல்லது மனோபாவம் அன்று; அஃது அகத்தைத் தூய்மையாக்குவதற்காகச் சிரத்தையோடு செய்த அப்பியாசத்தின் பலனாகிய பிராணாதார அனுபவம். சரீரம் மனிதன் அன்று என நம்பப்பட்டபொழுது, சகல பசிகளும் விருப்பங்களும் முற்றிலும் கீழ்ப்பட்டுத் தூய்மையாக்கப்பட்டபொழுது, மனோவெழுச்சிகள் ஓய்ந்து அமைதியானபொழுது, புத்தியின் தடுமாற்றம் நின்று சமநிலை அடைந்தபொழுது, தன் அறிவு கடவுளோடு ஐக்கியமாகின்றது. அது வரையில் நேர்மையான ஞானமும், நிலையான சாந்தியும் சித்திப்பதில்லை.

மனிதர் வாழ்க்கையில் இருண்ட பிரச்னைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துக் களைத்து, நரைத்து, அவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமலே இறந்து போகின்றனர்; ஏனெனில், அவர் தம் சரீரத்தின் சிற்றளவுள் அமிழ்த்தப்பட்டுச் சரீராபிமான இருளினின்று வெளிப்படுவதற்கு வழிகாண முடியாதவராயிருக்கின்றனர். தன் சரீர உயிரைக் காப்பதற்கு விரம்பி, மனிதன் மெயப்பொருளாகிய சரீரமற்ற உயிரை இழந்துவிடுகிறான்; அழிந்துபோகும் பொருளைப் பற்றிக் கொண்டிருப்பதால், மெய்ப்பொருளின் ஞானத்தை அடைகிறான் இல்லை.

‘யான்’ என்பதை விடுவதால் எல்லாக் கஷ்டங்களும் ஜெயிக்கப்படுகின்றன; அகத் தியாகத்தால் எரிக்கப்படாத பொய் எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை. தன்னைத் துறத்தலாகிய ஆராய்ச்சி விளக்கின்முன் தீர்ந்துபோகாத பெரிய பிரச்னை எதுவும் இல்லை. பிரச்னைகள் தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட தன்னுடைய சொந்தப் பிரமைகளிலே தங்குகின்றன. தன்னைத் துறந்தபோது அவை நீங்கிவிடுகின்றன. ‘யான்’ என்பதும் ‘பொய்’ என்பதும் ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். ‘யான்’ என்பது அளக்க முடியாத கோணல்களுள் சிக்கியுள்ளது. மெய்ப்பொருள் நித்திய நேர்மையாக விளங்கும் பெருமை வாய்ந்தது. தன்னை நேசிக்கும் மனிதருக்கு மெய்ப்பொருள் மறைக்கப்பட்டிருக்கிறது. தம்முடைய சொந்தச் சரீர சுகத்தை நாடுவதால், அவர் மிக ஆழ்ந்ததும், மிகச் தூயதும், மிக நீடித்து நிற்பதுமான இன்பத்தை இழக்கின்றனர். மனிதரிடத்துச் சரீரசுகத்திலும் மேம்பட்ட இன்பம் ஒன்று இருக்கிறது. சுகம் இல்லாமல் மனிதன் இருக்கக்கூடும். அதற்குப் பதிலாக இன்பத்தைக் காணக் கூடும். “சுகத்தை நேசிக்காதேயுங்கள். கடவுளை நேசியுங்கள்; கடவுள் தாம் என்றும் நிலைத்திருக்கின்ற உள்பொருள். அப்பொருளிடத்தில்தான் எல்லா வேற்றுமைகளும் ஒழிகின்றன.; எவன் வேற்றுமை காணாது செய்கின்றானோ, கிடக்கின்றானோ, அவனுக்கு எல்லாம் நன்மையாய் முடிகின்றன” என்று கார்லைல் என்னும் பெரியார் கூறுகிறார்.

மனிதர் மிக மிக நேசிக்கிறதும், அவர் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறதுமான ‘யான்’ என்பதைத் துறந்துவிட்ட மனிதன், எல்லாக் கலக்கத்தையும் கடந்து, பொய்யும் மடமையுமாகிய வலையில் சிக்கியிருக்கிற உலகம் கூட எளிதில் காணக்கூடிய நேர்மைத் தன்மையில் புகுந்து விட்டான். அப்போது அவன் மிக மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தவனாய், அகண்டாகாரக் கடவுளிடத்தில் அமைதியுற்றிருக்கிறான். அவன் முயற்சி செய்யாமல் காரியசித்தி அடைகிறான். ”எல்லாப் பிரச்னைகளும் அவன் முன்னிலையில் தீர்ந்து போகின்றன. ஏனெனில், அவன் உண்மைப் பிரதேசத்தில் புகுந்துவிட்டான். பொருள்களின் மாறுகிற காரியங்களோடல்லாமல், பொருள்களின் மாறாத காரணங்களுடன் பழகுகிறான். அவன் மிருகத் தன்மைக்கு மேற்பட்ட பகுத்தறிவு போன்றதும், தர்க்கத்திற்கு மேற்பட்டதுமான ஞானத்தால் அறிவூட்டப்பட்டிருக்கிறான். தனது காமங்களையும், தனது தவறுகளையும், தனது அபிப்பிரயாங்களையும், தனது துரபிமானங்களையும் விட்டுவிட்டதனால், அவன் சுவர்க்கத்தைப்பற்றிய சுயநய ஆசையையும், நரகத்தைப்பற்றிய மட அச்சத்தையும் கொன்று, கடவுள் ஞானத்தை அடைந்துவிட்டான்; உயிரின் மீதுள்ள அன்பையும்கூட விடத்து, பிறப்பையும் இறப்பையும் ஒழிப்பதும் தனது மரணமற்ற தன்மையை அறிந்துள்ளதுமான, நித்திய உயிரையும் பேரின்பத்தையும் அடைந்துவிட்டான். ஒன்றும் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் துறந்துவிட்டதனால், அவன் எல்லாவற்றையும் அடைந்து, அகண்டாகாரக் கடவுளின் மார்பில் சாந்தியாய் அமர்ந்திருக்கிறான்.

தான் வாழ்வதிற்போலவே சாவதிலும், சாவதிற்போலவே வாழ்வதிலும், சமமான திருப்தியை அடையும்படியான விதத்தில், எவன் ‘யான்’ என்பதை அடியோடு துறந்து விட்டானோ, அவன் கடவுளோடு ஐக்கியமாவதற்குத் தகுதியுடையவன். அழியக்கூடிய தன்னை நம்புவதை விடுத்து, அழியாத மேன்மையான நன்மை வடிவமாயுள்ள பெரிய சட்டத்தை அளவுகடந்து எவன் நம்புகிறானோ, அவன் அழியாத பேரின்பத்தை அடையத் தயாராயிருக்கிறான்.

அத்தகைய மனிதனிடம் செய்தற்கு இரங்கலாவது, ஆசாபங்கமாவது, துன்பமாவது கிடையாது; ஏனெனில், சகல சுயநயமும் நீங்கின இடத்தில் இவ்வநுபவங்கள் இருக்க முடியா; அவனுக்கு என்னென்ன நேர்கின்றனவோ, அவையெல்லாம் அவனுடைய சொந்த நன்மைக்காகவே நேர்கின்றனவென்பது அவனுக்குத் தெரியும்; அவன் ‘யான்’ என்பதன் வேலைக்காரனாயிராமல் பரம்பொருளின் வேலைக்காரனாயிருப்பதால், அவன் எதிலும் திருப்தியாயிருக்கிறான். பூமியில் உண்டாகும் மாறுதல்களால் அவன் பாதிக்கப்படுவதில்லை. அவன் யுத்தங்களைப் பற்றியும் யுத்தப் பிரஸ்தாபங்களைப் பற்றியும் கேள்விப்படுங்காலையில், அவனுடைய சாந்திக்குக் கேடு உண்டாவதில்லை. மனிதர் வெகுளியும், கடுகடுப்பும் கலகப்பிரியமும் கொள்ளும்போது, அவன் அவர்மீது இரக்கமும் அன்பும் கொள்ளுகிறான். உலகின் நிலைமைகள் உலகாபிவிர்த்திக்கு மாறாகத் தோன்றினும், உலகம் அபிவிர்த்தி அடைந்து கொண்டிருக்கிறதென்பதும்.

''தன்சிரிப் பாலும் தன் அழுகை யாலும்,
தன்வாழ் வாலும் தன்வைப் பாலும்,
தன்பிழை யாலும் தன்செய லாலும்,
பார்வை யிடத்திலும் பார்வைக் கப்புறமும்,
தொடக்க முதலா இறுதி வரையில்:
பலவறங் களாலும், பலமறங் களாலும்,
உலக மாகிய விலையுயர் பாவில்
அபிவிர்த்தி யென்னும் கடவுள் ஓடத்தின்
ஒளிரும் பொன்னூல் ஊடாய்
ஒடலும் வருதலும் ஒருங்குகொள் கின்றான்''

என்பதும் அவனுக்குத் தெரியும்.

உக்கிரமான புயல் காற்று அடிக்கும்போது அதனை ஒருவரும் கோபிப்பதில்லை; ஏனெனில், அது விரைவில் போய்விடுமென்பது எல்லாருக்கும் தெரியும். வாதப் புயல்கள் உலகத்தை நாசமாக்கிக்கொண்டிருக்கும்போத, ஞானி மெய்ப்பொருளும் இரக்கமாகிய கண்களால் பார்த்து அவ்வாதம் நீங்கிடுமென்றும், உடைந்துபோன ஹ்ருதயங்களிலிருந்து அழியாத ஞானாலயம் கட்டப்படுமென்றும் அறிந்துகொண்டிருக்கிறான்.

கம்பீரமான பொறுமையும், அளவற்ற இரக்கமும், ஆழ்ந்த யோசனையும், மௌனமும், தூய்மையும் உடைய மனிதனைப் பார்த்தாலே ஓர் ஆசிர்வாதம். அவன் பேசும்போது அவனுடைய சொற்களை மற்றைய மனிதர் தமது உள்ளத்திற்கொண்டு சிந்திக்கின்றனர்; அச் சொற்களால் அவர் உயர்ந்த பதவிகளை அடைகின்றனர். அவன்தான் கடவுளோடு ஐக்கியமானவன்; அவன்தான் மிக மிகப் பெரிய தியாகம் செய்து வாழ்க்கையின் மர்மங்களைத் தீர்த்தவன்.

சுற்றிச் சுழலும் கரியரா க்ஷசிபால்
வாழ்க்கை யோடு மாண்மெய்ப் பொருளையும்
விதியையும் பற்றி வினாவியே அடைந்தேன்;
அறைந்தனள் அவள்இவ் வதிசய மொழிகளை:
"மறைக்கப் பட்டகண் களுக்கே மறைவுள:
கடவுள் வடிவினைக் கடவுளே காண்பான்."
மறைக்கப் பட்டஇம் மர்மத்தை அறியக்
கண்கள் காண வொண்ணா வழியிலும்
மிகுதுயர் வழியிலும் வீணே சென்றேன்;
அன்பும் சாந்தியும் ஆகிய வழியை
நெருங்கினேன்; மறைவும் குருடும் நீங்கின;
கடவுட் கண்களால் கடவுளைக் கண்டேன்."

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s