-கவியரசு கண்ணதாசன்
செய்யுளின் கடைசிச் சொல்லும், அடுத்த செய்யுளின் முதல் சொல்லும் ஒன்றாக அமைந்திருப்பது ‘அந்தாதி’ எனப்படும். அதாவது அந்தமே ஆதியாகத் தொடர்வது. இந்த யாப்பிலக்கண முறையில் திரைப்படப் பாடலையும் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். (இரண்டிரண்டு வரிகளாக பாடலைக் கவனியுங்கள்!) ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரைப்படத்தின் அதிரடித் திருப்பக் காட்சியை உள்ளடக்கியது. அதற்கேற்றவாறு சொற்பிரயோகத்தையும் கையாண்டிருக்கிறார் கவியரசர்.

நாயகன்:
வசந்தகால நதிகளிலே
வைரமணி நீரலைகள்! (2)
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்! (2)
நாயகி:
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்! (2)
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்…
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்!
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்!
நாயகன்:
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சணைகள்! (2)
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனம் இரண்டும் தலையணைகள்…
வசந்தகால நதிகளிலே
வைரமணி நீரலைகள்!
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்!
நாயகி:
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்! (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்…
ஓ… பூமாலை மணவினைகள்!
எதிர் நாயகன்:
மணவினைகள் யாருடனோ?
மாயவனின் விதிவகைகள்! (2)
விதிவகையை முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்!
திரைப்படம்: மூன்று முடிச்சு (1976) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்.
$$$