வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை

-சேக்கிழான்

வரலாற்றுச் சுவடுகள்- இன்றைக்கு 274 ஆண்டுகளுக்கு முன்….

தற்போதுள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில், பாண்டிசேரி.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழப் பேரரசுக் காலத்தில் மிகப் பெரிய ஆலயம் வேதபுரீஸ்வரர் கோயில் என்ற பெயரில் வேதபுரியில் அமைக்கப்பட்டது. அந்த வேதபுரி தான் பின்னாளில் பாண்டிசேரி ஆனது. ஐந்து நிலை ராஜகோபுரம், பிரகாரங்கள், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று மதில்களுடன் எழிலுற அமைந்திருந்தது அத் திருத்தலம். தற்போதைய புதுவையின் பிராமணர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் அக்கோயில் நிலைபெற்றிருந்தது.

 பொ.யு.1700 ஆண்டுகளில் பாண்டிசேரி பிரெஞ்சு அரசு காலனி பகுதியாக மாறியது. இந்தியாவின் நிலப்பகுதிகளை கபளீகரம் செய்ய ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களிடையே கடுமையான போட்டி நிலவிய காலகட்டம் அது. அதில் வென்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையில் ஆண்டார்கள். அதேசமயம், பாண்டிசேரி மட்டும் பிரெஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. டச்சுகாரர்களிடம் இருந்து அதனை 1697இல் பிரெஞ்சு நாட்டினர் சமாதான உடன்படிக்கை மூலமாகப் பெற்றனர். அதாவது பாரதத்தின் ஒரு பகுதியை டச்சுப் படை பிரெஞ்சுப் படைக்கு தானமாக வழங்கியது. அப்படித்தான் இருந்தது அன்றைய காலகட்டம்.

1689இல் ஜெசூட் (யேசு சபை) பாதிரியார்கள் பாண்டிசேரி வந்தனர். டச்சு காலனியாக இருந்த பாண்டிசேரி பிரெஞ்சு காலனியாக மாறியபோது அங்கு செயின்ட் பால் சர்ச் என்ற தேவாலயம் 1692-இல் பிரெஞ்ச் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. அதனை உள்ளூர் மக்கள் சம்பா கோயில் (செயின்ட் பால் கோயில் என்பதன் மரூஉ) என அழைத்தனர்.

1741இல் பாண்டிசேரி பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஜோஸப் ஃபிரான்கோயிஸ் துய்பிளெக்ஸ் (டூப்ளே) புதுவை வந்தார். அவரது மனைவி, மாதாம் துய்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆல்பெர்ட் ஜீன் துய்ப்ளெக்ஸ். இவர் தீவிர கிறிஸ்தவர்; யேசு சபை பாதிரியார்களின் தீவிர ஆதரவாளர்.

ஆனந்தரங்கம் பிள்ளை

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) 1747இல் பொறுப்பேற்றவர் ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761). இவர் கவர்னர் துய்ப்ளெக்ஸின் ஆலோசகராகவும் இருந்தார். பிரெஞ்சு அரசில் செல்வாக்கான பதவி வகித்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. அவர் தினசரி நாட்குறிப்பு எழுதும் வழக்கம் கொண்டவர்.  ஆனந்தரங்கம் பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியுள்ளார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான காலப்பதிவு எனப்படுகிறது.  ‘தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்’ என்று அவற்றைக்  குறிப்பிட்டிருந்தார்.  அவரது நாட்குறிப்புகள் பின்னாளில் கண்டறியப்பட்டு நூல் வடிவம் பெற்றன. இவரது நாட்குறிப்பின் அடிப்படையில் மறைந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘மானுடம் வெல்லும், வானம் வசப்படும்’ ஆகிய நூல்கள், பிரெஞ்சு ஆட்சிக் காலக் கொடுமைகளை விவரிக்கின்றன.

பிரெஞ்சு அரசு ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால், யேசு சபை பாதிரியார்களின் கோரிக்கையை ஏற்று, மாதாம் துய்ப்ளெக்ஸின் ஆணவ அதிகாரத்தால், பிரெஞ்சுப் படையும் கூலிப்படையும் இணைந்து, 1748-இல் வேதகிரீஸ்வரர் கோயிலை இடித்தனர். மனைவியின் ஆசையை நிறைவேற்ற கவர்னர் துய்ப்ளெக்ஸ் அதனை ஆதரித்தார். வேதபுரீஸ்வரர் கோயிலின் மணிச்சத்தம் தேவாலய வழிபாட்டுக்கு இடையூறாக இருப்பதாக பாதிரியார்கள் புகார் கூறியிருந்தனர். உண்மையில், பிரான்கோயிஸ் மார்ட்டின் கவர்னராக இருந்த தொடக்கக் காலத்தில் இருந்தே இந்த சிவன் கோயிலை யேசு சபை பாதிரியார்கள் வெறுத்து வந்தனர். இச்சம்பவங்களை ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். 1748, விபவ ஆண்டு, ஆவணி மாதம் 20 ஆம் தேதி (07.09.1748) வேதபுரீஸ்வரர் கோயில் பிரெஞ்சுகாரர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

ஏற்கனவே இருந்த செயின்ட் பால் தேவாலயம் விரிவுபடுத்தப்பட்டது. வேதபுரீஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் தேவாலயம் விரிவாக அமைக்கப்பட்டு (1791), தூய அமலோற்பவ அன்னை பேராலயம் அங்கு தற்போது அமைந்திருக்கிறது.

வேதபுரீஸ்வரர் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட முயன்ற ஹிந்துக்களின் முயற்சியும், துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் முயற்சியும் கைகூடவில்லை. எனினும், 1788இல் அன்றைய திவான் கந்தப்ப முதலியார் மக்களிடம் நிதி வசூலித்து, தற்போதுள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை 75 அடி உயரம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரத்துடன், வேறு இடத்தில் கட்டினார். அந்த வீதி, தற்போது காந்தி வீதி என்று அழைக்கப்படுகிறது.

தனக்கு அடைக்கலம் அளித்த மகாகவி பாரதி பாண்டிசேரியை ‘வேதபுரம்’ என்றே அழைத்து மகிழ்கிறார். அந்த வேதபுரத்தின் காவல் தெய்வமாக வீற்றிருந்த வேதபுரீஸ்வரரின் திருக்கோயிலைக் காக்க முடியாத கோழைகளாக, யேசு சபை பாதிரியார்களின் அட்டூழியங்களை சகித்துக் கொண்ட அடிமைகளாக அன்று வாழ்ந்த மக்கள், வேறு வழியின்றி உள்ளம் வெதும்பினர்.

அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை, அனைத்து மதங்களை நேசிக்கும் பரந்த மனப்பான்மை ஆகியவற்றுடன் கூடவே, சமுதாய வலிமையும் எவர்க்கும் பணியாத வீரமும், உரிமையைக் காக்கும் தன்மானமும், மாறா இறைநம்பிக்கையும் அவசியம் என்பதையே, வேதபுரீஸ்வரர் திருகோயிலின் அழிவு,   சரித்திரச் சாட்சியாக நம்மிடம் சொல்கிறது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கும் பிரான்ஸ் நாட்டினர் தான் வேதபுரியின் சிவன் கோயிலை இடித்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ‘வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பவை வலிமையானோர் சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்பதையும் வேதபுரி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

$$$

வேதபுரத்தில் ஒரு வேதனை அத்தியாயம்

-தஞ்சை வெ.கோபாலன்

வரலாற்றுச் செய்திகள் சில நேரங்களில் மனத்துக்கு வேதனையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவை மக்களிடையே நல்லுறவைக் கெடுக்கும் என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவில் நடைபெற்ற சில ஆலய இடிப்பு நிகழ்ச்சிகள் இன்றைக்கும் மக்கள் மனங்களில் ஆறாத வடுக்களாக இருக்கின்றன.  மகாகவி பாரதி சொல்கிறான், ‘நீ வாழும் பகுதியின் வரலாற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று. அவனுடைய சுதேசிக் கல்வி எனும் கட்டுரையில், நமது பண்டைய வரலாற்றை மக்கள் நினைவில் வைத்திருத்தல் அவசியம் என்கிறான். ஆகவே வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்நியர்களின் மீதுள்ள மோகம், அவர்களிடம் நமக்கிருந்த அடிமைப் புத்தி, நமக்கு எந்த அளவுக்கு சேதங்களை உண்டுபண்ணியது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

புதுச்சேரியை மகாகவி பாரதியார் ‘வேதபுரம்’ என்றே குறிப்பிடுகிறார். அவ்வூருக்கு இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம்தான். இது 1746-இல் ஃப்ரெஞ்சு கவர்னர் டூப்ளே என்பவரின் மனைவியின் தூண்டுதலால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த விவரங்களை அப்போது ஃப்ரெஞ்சு கவர்னரிடம் துபாஷியாக வேலை பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் 17-3-1746ஆம் தேதியிட்ட நாட்குறிப்புப் பகுதியில் அவர் எழுதியிருக்கும் செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அப்போது புதுச்சேரியில் மிகவும் பிரபலமாக இருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம் கவர்னரின் மனைவிக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. மேற்கண்ட தேதியில் அந்தக் கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். யாருடைய தூண்டுதலோ, அன்று இரவில் இரண்டு பேர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த சுவாமி சிலைகள், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் மீது மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்கள். மறுநாள் காலையில் கோயில் திறக்கப்பட்டதும் கோயில் ஊழியர்கள் நிர்வாகிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. உடனே ஊர் மக்கள் தங்கள் வீட்டில் சமையல் வேலை முதற்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சாலைக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அன்றைய தினம் புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரே ஒன்றுதிரண்டு இந்த அராஜகச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. கவர்னர் டூப்ளேக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் மக்கட் கூட்டத்தை அடித்து விரட்டியடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.

கவர்னர் டூப்ளே

புதுவையிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்துவிடும் எண்ணம் ஃப்ரெஞ்சு அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் கவர்னர் டூப்ளேயும் அவர் மனைவியும் இதில் மிகவும் அக்கறை கொண்ட நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். அவர்களுடைய இந்த முயற்சிக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலரும், உள்ளூர்க்காரர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கி வந்தனர். அதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலை இடிக்கும் எண்ணம் இருந்த போதும்,  அப்போதெல்லாம் இங்கிருந்த பிரெஞ்சு அரசுப் பிரதிநிதிகள் அந்தக் காரியத்தைச் செய்யத் துணியவில்லை. அப்படி ஏதாவது செய்துவிட்டால், ‘இது தமிழ் ராஜ்யம், இந்தக் கோயிலுக்கு ஏதேனும் ஈனம் வந்தால் நமக்கு அபகீர்த்தி உண்டாகும், தங்கள் வர்த்தகம் பாழாகிவிடும்’ என்றெல்லாம் எண்ணி அப்படி எதையும் செய்யாமல் இருந்தனர்.

ஃப்ரான்சு நாட்டின் மன்னர் நம் நாட்டில், நம் மண்ணில் இருந்த பழம்பெரும் இந்துக் கோயிலைத் தகர்க்க உத்தரவில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்திருந்தும்,  இங்கிருந்த கவர்னர்கள் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கி வந்தனர். ஒரு முறை ருத்ரோத்காரி வருஷம் சித்திரை- வைகாசி மாதங்களில் கோயிலை முத்தியாப் பிள்ளை என்பவரைக் கொண்டு இடிக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த ஆணையை நிறைவேற்ற முத்தியாப் பிள்ளை மறுத்ததால், அவரைக் கட்டி வைத்து காதுகளை அறுப்பதாகவும் தூக்கில் தொங்கவிட்டுவிடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த முத்தியாப் பிள்ளை தன் குடும்பத்தாரைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாராம்.

1746-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி. மறுநாள் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடும் மிதப்பில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் இருந்தனர். அன்று இரவு ஏழு மணியளவில் வேதபுரீஸ்வரர் ஆலயத்துக்குள் மலம் நிரம்பிய சட்டி ஒன்று வீசப்பட்டது. அந்தச் சட்டி அப்போது பிள்ளையார் சந்நிதியில் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்த சங்கரய்யன் என்பவர் மீது வந்து விழுந்து உடைந்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். அவர் கவர்னர் துரையிடம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். கவர்னர் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து நடந்த உண்மைகளை விசாரித்து அறியுமாறு ஆணையிட்டார். அந்த விசாரணையில் அருகிலுள்ள சம்பா கோயில் எனும் தேவாலயத்திலிருந்துதான் வீசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. கவர்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான கார்த்தோ என்பவரை அழைத்து விசாரித்தார். அதற்கு அவர் ஈஸ்வரன் கோயில் ஆட்களே இந்தக் காரியத்தைச் செய்துவிட்டுத் தங்கள் மீது பழிபோடுகின்றனர் என பதிலளித்திருக்கிறார். ஆளுநர் ஓர் அறிக்கையை பிரெஞ்சு மன்னருக்கு அனுப்பி வைத்தார்.

கவர்னர் டூப்ளேயின் மனைவி மாதாம் டூப்ளே

1748-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று தனது நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பிள்ளை – ‘இன்றைய நாள் காலையில் நிகழ்ந்த விபரீதம் என்னவென்றால்’ என்ற முன்னறிப்போடு எழுதுகிறார்.

பிரெஞ்சு அதிகாரிகள் கெர்போ, பரதி முதலியோர் ஏராளமான ராணுவ வீரர்களைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள்,  கூலிக்காரர்கள் என்று சுமார் இருநூறு ஆட்கள் துணைகொண்டு வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடிக்கத் தொடங்கினார்கள். முதலில் கோயிலின் தென்புற மதிலையும், மடப்பள்ளியையும் இடித்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. உடனே உள்ளூர் வெள்ளாளர், கைக்கோள அகமுடைய முதலிகள், செட்டிமார்கள், பிள்ளைகள், குடியானவர்கள், ஆலய சாத்தாணிகள் ஆகியோர் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடைபெறும் அக்கிரமம் பற்றி முறையிட்டனர். பலர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுத் தாங்கள் ஊரைவிட்டுப் போய்விடப் போவதாகவும், சிலர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுவதாகவும் முறையிட்டனர். ஆளுநரிடம் போய் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.

மக்களுடைய முறையீட்டுக்குப் பதிலளித்து ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள்,  “உங்களிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை முன்னமேயே இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி நடந்திருக்காதே!” என்று சொல்லிவிட்டு, “உங்களில் ஒரு சிலர் பெரிய துபாசித்தனம் பெறுவதற்காகவும், சாவடி துபாசித்தனம் பெறுவதற்காகவும் கோயிலை இடிக்க ரகசியமாக ஒப்புக் கொள்ளவில்லையா? அதனால்தானே இன்றைக்கு இந்த விபரீதம் நடந்திருக்கிறது” என்று சொல்லி அவர்களைக் கடிந்து கொண்டிருக்கிறார்.

கவர்னரும், கவுன்சிலும் இந்த முடிவை எடுத்திருப்பதால் இதில் நாம் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகையால் இயன்றவரை வாகனங்கள், சிலைகள் முதலியவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று காளத்தீஸ்வரர் கோயிலில் கொண்டு போய் வைத்துவிடுங்கள். இப்படி இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோயிலின் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் இடித்துக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது. ஆலயத்து சிலைகளையெல்லாம் எப்படி உடைக்க வேண்டுமோ,  அப்படி உடைத்துக் கொள்ளுங்கள் என்று டூப்ளேயின் மனைவி சொல்லிவிட்டாளாம். ஆகவே ஆலயத்தில் இருந்த மகாலிங்கத்தை சிலர் உதைத்தும், எச்சிலை உமிழ்ந்தும், மற்ற சிலைகளை உடைத்தும் போட்டனர்.

இதனைக் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை எழுதுவதாவது:

“பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்.” 
 
                (தொகுதி 5. பக்கம் 293)

இப்படிக் குறிப்பிட்ட ஆனந்தரங்கம் பிள்ளை, கோவிலை இடித்தவர்கள் அதற்குண்டான வினையை அனுபவிப்பார்கள் என்று நம்பினார். அதன்படியே 11-09-1748ஆம் நாள் ஆங்கிலேயருடன் நடந்த சண்டையில் கோவிலை இடிப்பதில் முனைப்புடன் இருந்த பரதி என்பாருக்கு தலையில் மரணகாயம் ஏற்பட்டது என்பதையும் ஆனந்தரங்கம் பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்த அதே நேரத்தில் அருகில் இருந்த மசூதியொன்றையும் இடிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மசூதியை இடிக்கத் தொடங்கியதும், அப்துல் ரகுமான் ஆளுனரிடம் சென்று மசூதியை இடித்தால் ஒரு சிப்பாய்கூட உயிருடன் இருக்க முடியாது. இடிக்கிறவர்கள் பேரிலே விழுந்து செத்துவிடுவார்கள் என்று சொன்னார். ஆளுனரும் மசூதியை இடிப்பதைக் கைவிட்டுவிட்டார். இதன் பிறகு அப்துல் ரகுமான் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் வந்து கூறிய செய்தியாவது:

“பகைவன் வந்து நம் பட்டணத்தை வாங்குவேன் என்று இறங்கியிருக்கும் வேளையில் சகல சனங்களையும் சந்தோஷமாய் வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்துக் காரியம் கொள்ளுகிறதை விட்டுவிட்டுப் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரவர் மனதை முசே துய்ப்ளே முறித்துப் போடுகிறார். இங்கிலீஷ்காரனே செயிச்சால் கூட நல்லது என்று சனங்கள் நினைக்கும்படி பண்ணுகிறார். தமிழர் கோயிலை இடித்து இப்படிப் பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா?” 

              (தொகுதி 5. பக். 292)

இதுபோன்று அவர்கள் செய்திருக்கும் தீங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்; மறக்கவோ அல்லது மன்னிக்கவோ கூடிய நிகழ்ச்சியா அது? அந்நிய மோகம் நம் மக்கள் மனதை எப்படி அடிமைத்தனத்துக்கு ஆட்படுத்தியிருந்தது, கண் முன்னால் நடந்த கொடுமையைத் தடுக்க முடியாத ஆண்மையற்றவர்களாக ஆக்கியது என்பதை காலம் தாழ்த்தியாவது நம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சி பற்றி ஆனந்தரங்கம் பிள்ளை டைரியிலிருந்து இக்கட்டுரை எடுத்துத் தொகுக்கப்பட்டது.

அந்நியர்கள் இங்கு வந்ததால்தான் பல நன்மைகள் கிட்டியது என்றும் நாகரிகம் பெருகியது என்றும் பொய்யான கற்பனையில் மிதக்கும் நம்மவர்கள் சிலர் இனியாவது யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

குறிப்பு: 

திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021), அமரத்துவம் பெற்றுவிட்ட பாரதி ஆர்வலர். தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்தி வந்தவர். 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s