நமது ஞாபகத்திற்கு

-மகாகவி பாரதி

ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தால் சுதந்திரம் கிடைக்குமா என்று, இக்கட்டுரையில்  கோபமாகவும் கேலியாகவும் வினவுகிறார் மகாகவி பாரதி. “வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும்” என்று தனது வாதத்துக்கு ஓர் ஆதார ருசுவையும் முன்வைக்கிறார். ”செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது” என்கிறார் இறுதியில். 

சென்னைவாசிகாள்!

நமது இந்தியாவானது மற்ற தேசங்களைப் போலல்லாமல் ஒரு விசித்திர தேசமாக இருக்கிறது. ஜப்பான் (அருணதேசம்), இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய ஐரோப்பிய தேசங்களும் மற்ற ஆசியா தேசங்களும் ஜன அரசர்களால் ஆளப்பட்டு, தங்கள் நன்மையின் விருத்தியையே அதிகப்படுத்திக் கொண்டுவர, நம் இந்தியா மாத்திரம் வெகுகாலமாக அன்னிய தேச அரசர்களால் ஆளப்பட்டு மகா தாழ்மையை அடைந்திருக்கிறது. மகரிஷிகளாலும், ஆழ்வார் முதலிய திராவிட புண்ணிய புருஷர்களாலும் நிறைந்திருந்த இத்தேசம் இப்போது என்ன கதியிலிருக்கிறது பாருங்கள்.

நம்முடைய பூர்வீகர்கள் ஆத்ம ஞானத்திலும், ஈச்வர பக்தியிலும் உயர்ந்த பதவியை அடைந்திருக்க, நாமெல்லோரும் வறுமையை வளர்ப்பதே முக்கிய காரியமாக வைத்து நம்முடைய கடமைகளை முற்றிலும் ஓரத்தில் ஒதுக்கி, மிக்க தாழ்ந்த நிலைமையை அடைந்துவிட்டோம். இது என்ன கஷ்டம்! பரமார்த்திகளான ஆத்ம தத்துவ ஞானத்திலும், விவகாரமான தேசத்தின் ஞானத்திலும் நம்முடைய பெரியோர்கள் நல்ல உயர்வே அடைந்திருந்தார்கள்; நாமோ தைரியமுமில்லாமல் நம்மை ஆண்டுவரும் அன்னிய தேசத்தார்களுக்கு செல்வத்தையும் தத்தம் செய்து பிரயோஜனமில்லாத பேடிகளாக எஜமானன் புசித்த இலையில் மீதியை தின்னும் அடிமைகளைப்போல் மகா தீனக்கதியை அடைந்திருக்கிறோம். நாமினிமேல் நல்ல கதியை அடைய நல்வழியைத் தேடவேண்டியது முக்கியமானதல்லவா? 

தற்காலத்தில் ஜனத் தலைவர்களென்று பேர் வைத்துக் கொண்டு உலாவும் உத்தியோகஸ்தர்கள், சட்டசபையிலும், நிர்வாக சபையிலும், மற்ற ராஜாங்க உத்தியோகங்களிலும் உயர்ந்த பதவி வேண்டுமென்று இவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய சென்னை ராஜதானிக்கு கவர்னராக ஒரு இந்தியனை நியமித்தால் வெகு நலமாய்த்தான் இருக்கும். கவர்னர்களாகவும் கலெக்டர்களாகவும் நம்மை நியமித்து ஆங்கிலேயர்களுக்குத் தரும் சம்பளங்களை நமக்குக் கொடுத்தால் அதைவிட வேண்டியது நமக்கொன்றுமில்லைதான். நமக்கே ராஜ்ஜியத்தைத் திருப்பி கொடுத்துவிட்டு “இந்தியர்களே இனிமேல் ராஜ்யத்தை ஆளலாம், நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பிப் போகிறோம்” என்று சொல்லிப் போய்விட்டால் இவ்வாங்கிலேயர்கள் தர்மசிந்தை வெகு புகழத் தகுந்ததாயிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வார்களா?

வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும். இதை நம்முடைய மகாபுலிகளான ஜனத்தலைவர்கள் அறிய வேண்டும். வருஷம் ஒன்றுக்கு ஸ்வர்ணமாக 30 கோடி ரூபாய் இங்கிலாந்துக்குப் போகிறதை கருப்பு மனிதர்களாயும், அடிமைகளாயும், பேடிகளாயுமுள்ள நமக்கு ஏன் அவர்கள் கொடுக்க வேண்டுமெனத் தெரியவில்லை.

அவர்களை, ‘தர்மமானவர்களே, தர்மபாலர்களே! நீங்கள் மகா தர்மசிந்தை உள்ளவர்கள், பிரபுக்கள் என்று பெயர் பெற்றிருக்கிறீர்கள். அப்பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் அடிமைகளாய் உள்ள எங்கள் சில வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். அது என்னவெனில் ஆங்கிலேயர்களால் முற்றிலும் நிறையப்பட்ட உத்தியோகங்களில் நியமிக்க வேண்டும். விக்டோரியா ராணி இந்தியர்களையும் ஆங்கிலேயர்களையும் எவ்வித்தியாசங்களின்றி ஆளுவதாகச் சொல்லவில்லையா? அதற்கு விரோதமாக செய்ய நியாயமில்லை” என்று சென்ற 20 வருஷ காலங்களாக காங்கிரஸ் மூலமாகச் சொல்லியும், விண்ணப்பப் பத்திரிகைகள் அனுப்பியும் வேண்டியும் கெஞ்சியும் இன்னும் பல விதங்களால் பிரயத்தனித்தும் வீண் என்று இன்னும் நம்மிடையே மகா கீர்த்தி பெற்ற ஜனத் தலைவர்கள் நினைக்கவில்லையே. இது என்ன மூடத்தனம்.

இவர்கள் தங்கள் சகோதர இந்தியருக்கு “ஏ சகோதரர்களே, சென்ற 20 வருஷ காலமாய் ஆங்கிலேயர்களுக்கு நம்முடைய கஷ்டங்களைத் தெரிவித்தும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது. ஆகையால் இனிமேல் அவர்களை நெருங்கிக் கேட்பது பிரயோஜனமில்லை. நாமே வேறு ஏதாவது வழியைத் தேட வேண்டியது முக்கியம். இனிமேல் காலத்தை முன்வழியில் செய்வது (செலுத்துவது) நம்முடைய நாசத்தை விளைக்கும். இனிமேல் நாமே நம்முடைய நல்வழியைத் தேட வேண்டும்!” என்று விண்ணப்பத்தையனுப்புவது வெகு சிரேஷ்டமான வழியாகும்.

நம்முடைய ஜனத் தலைவர்கள் தங்களுக்கு உயர்ந்த சம்பளமும் உத்தியோகமும் கொடுத்துவிட்டால் இந்தியா முழுவதும் நற்கதியடைந்துவிடுமென்று பாசாங்கு செய்கிறார்கள். கவர்மெண்டு உத்தியோகங்களில் அவர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுத்தல் இந்தியர்களுக்கு பொருத்தமென்று இவர்கள் வெகுகாலமாய் சொல்லி வருகின்றார்கள். இவர்களே மற்ற வெகுதாழ்ந்த சம்பளத்தைப் பெறுகிற கணக்கர்களின் நிலைமையைப் பற்றி பேசுகிறது கிடையாது. அதைப் பற்றிப் பேசினால் அந்த நிபுணர்கள் அசட்டை செய்துவிடுகிறார்கள். 15 ரூபாய் சம்பளத்தைப் பெறும் கணக்கர்கள் கவர்ன்மெண்டு ஆபீஸ்களில் ஆயிரக் கணக்கானவர்களை அடுத்துப் பூஜிக்கிறார்களே அனேகர். 

15 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு ஒரு மனிதன் 5 பேர்களடங்கிய ஒரு சம்சாரத்தை எப்படித்தான் காப்பாற்றுவான்? ஆகையால் தங்களின் சுய நன்மையும் சுகத்தையும் லாபத்தையும் கவனியாமல் கஷ்டப்படும் ஜனங்களின் நன்மையைத் தேடுகிறவன் தான் ஜனங்களால் பூஜிக்கப்படுபவன். ஆகையால் நம்முடைய தலைவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளும் கவர்ன்மென்டாரைப் பிச்சை கேளாமல் ஜனங்களையடுத்து அவர்களின் உதவியைக்கொண்டு நற்கதியை அடைவார்களென்றால் நம்முடைய ராஜ்ஜியம் சீக்கிரத்தில் ஒரு நல்ல நிலைமையில் வந்துவிடும். ஆனால் செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது.

  • இந்தியா (11.01.1907)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s