-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம் – 8
சூரத் மாநாடும் அதன் பிறகும்
1906 டிசம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தேசியவாதிகளின் கை ஓங்கி இருந்தது. அரவிந்தர் தனிப்பட்ட முறையில் தலைவர்களுடன் பேசி தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக ‘ஸ்வராஜ்ஜியம் காங்கிரஸின் நோக்கம்’ என்ற தீர்மானமும் சுதேசி, தேசிய கல்வி, அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். மிதவாதிகள் அதை தங்களுக்கு நேர்ந்த பின்னடைவாகப் பார்த்தனர். சர் பெரோஸ் ஷா மேத்தா, கோகலே போன்ற பம்பாய் காங்கிரஸ் தலைவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம் என்று கூறி வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவை மாற்றி மிண்டோவை ஆங்கில அரசு நியமித்தது. அந்த நேரத்தில் ஜான் மோர்லே இங்கிலாந்தில் அமைச்சரானார். அவர் பரந்த மனப்பான்மை கொண்ட ராஜதந்திரி என்றும் சொல்லப்பட்டது. அரசியல் சீர்திருத்தங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் நடைமுறையில் இந்தியாவின் மீது பிரிட்டிஷ் அரசின் பிடி மேலும் இறுகும். எனவே நம்மை ஏமாற்றுவதற்காகக் கொண்டு வரப்படும் அந்தச் சீர்திருத்தங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அரவிந்தர் வந்தே மாதரத்தில் எழுதினார். ஆனால் மிதவாதிகள் அரசுக்கு ஒத்துழைப்பதென்றும் ஸ்வராஜ்ஜியம் பற்றிப் பேசி அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுத்தனர்.
வங்காளத்தில் தேசியவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையேயான பிளவு அதிகரித்து மோதல் வலுத்தது. 1907 டிசம்பர் 7லிருந்து 9 வரை வங்காள மாகாண காங்கிரஸ் மாநாடு மிதினாபூரில் நடைபெற்றது. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் மிதவாதிகள் அணிவகுத்தனர். தேசியவாதிகளின் தலைவராக அரவிந்தர் வடிவெடுத்தார். மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டது. இறுதியில் அரவிந்தரின் தலைமையில் தேசியவாதிகள் தனி மாநாடு நடத்தினர்.

வழக்கமாக காங்கிரஸின் மாநாடு டிசம்பர் மாத கடைசி வாரத்தில் நடைபெறும். 1907 மாநாடு முதலில் நாகபுரியில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அது தேசியவாதிகளின் கோட்டையாகக் கருதப்பட்டதால் மிதவாதிகள் மாநாட்டை அங்கு நடத்தாமல் தங்களுக்கு ஆதரவான சூரத்தில் நடத்த வேண்டும் என்றனர். தேசியவாதிகள் பலரும் சூரத்துக்கு வந்து காங்கிரசை உடைக்க விரும்பவில்லை. சிலர் நாகபுரிலேயே மாநாட்டை நடத்துவோம், சூரத்தைத் தவிர்த்து விடுவோம் என்றும் சொல்லினர். ஆனால் திலகர் பெருமான், ‘கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன், காங்கிரசை உடைத்து விடாதீர்கள்’ என்று தந்தி அனுப்பினார். அரவிந்தர் அதை ஏற்றுக் கொண்டார்.
1907 டிசம்பர் 26 சூரத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அது தலைவிதியை மாற்றுவதாகவும் அமைந்தது. மாநாட்டில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பிரதிநிதிகள் வந்திருந்தன. அரவிந்தர் தலைமையில் வங்காளத்தில் இருந்து நிறைய பிரதிநிதிகள் வந்திருந்தனர். மகாராஷ்டிரத்திலிருந்து திலகர் பெருமான் வந்திருந்தார். அவர் தலைமையில் டாக்டர் மூஞ்சே, ஜி.எஸ்.காப்பர்டே போன்ற சகாக்களும், அண்மையில் சிறையில் இருந்து வெளிவந்திருந்த லாலா லஜபதிராய், சர்தார் அஜித் சிங் (பஞ்சாப்) போன்றவர்களுடன் திரளான பிரதிநிதிகளும் வந்திருந்தனர். (தமிழகத்திலிருந்து திலகரின் ஆதரவாளர்களாக வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்). மிதவாதிகளும் அவர்களுக்கு இணையாக வந்திருந்தனர். இரண்டு பிரிவினரும் தனித்தனி முகாம்களில் தங்கினார். வெளிப்படையாக அமைதி நிலவுவது போலத் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஆத்திரமும் பொருமலும் இருந்தது. இளம் புரட்சியாளர்கள் சிலர் தங்கள் தலைவர்களை யாராவது தாக்கி விடுவார்களோ என்று எச்சரிக்கையுடன் கண்காணித்து வந்தனர். மிதவாதிகள் அகிம்சைவாதிகள் அல்லர், தேவைப்பட்டால் காலித்தனத்தைக் கட்டவிழ்த்து விடக் கூடியவர்கள் தான். அதுவும் அவர்களது கோட்டையாகக் கருதப்படும் சூரத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர்.
மாநாடு தொடங்குவதற்கு ஒரு நாள் முன் அதாவது டிசம்பர் 25ஆம் தேதி தேசியவாதிகள் தங்கள் கட்சிக் கூட்டத்தை நடத்தினர். அதுபற்றி ஜி.எஸ்.காப்பர்டேயின் நாட்குறிப்பில், ‘நம்முடைய கட்சியில் சிறந்த கட்டுப்பாடு நிலவியது. மதியத்துக்குப் பிறகு நம் தேசியவாதிகள் கட்சியின் மாநாடு நடந்தது. அரவிந்த பாபு தலைமையில் திலகரின் அறிவிப்பு அவருக்கே உரித்தான பாணியில் தெளிவாக, சுருக்கமாக, விளங்கும்படி இருந்தது. அவரின்றி வேறெவரும் அப்படிப் பேச முடியாது. அனைவரும் அதைப் பாராட்டினர்கள்’ என்று உள்ளது.
அதே நிகழ்வைப் பற்றி நிவின்சனின் ‘நியூ ஸ்பிரிட் ஆஃப் இந்தியா’ நூல் மேலும் தெளிவாக விளக்குகிறது. ‘ஆழ்ந்த அமைதியுடன் மிஸ்டர் அரவிந்த கோஷ் தலைமை நாற்காலியில் அமர்ந்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் உடல் அசையாமல் வீற்றிருந்தது. பார்வையோ வெகு தூரத்தில், எதிர்காலத்தை ஊடுருவிப் பார்ப்பதைப் போல இருந்தது. மிஸ்டர் திலகர் எந்த விதமான உணர்ச்சித் தளும்பலோ ஆடம்பரமோ இல்லாத சிறிய சிறிய வாக்கியங்களில் தெளிவாகப் பேசினார். அவர் பேசும்போது இரவு கவிழ்ந்தது நட்சத்திரம் ஒளிர்ந்தது. யாரோ ஒருவர் லாந்தரை ஏற்றி அவர் பக்கத்தில் வைத்தார்’ என்று அந்த நூலில் உள்ளது.
மிதவாதிகள் ஸ்வராஜ்ஜியம், சுதேசி, அந்நியப் பொருள் புறக்கணிப்பு, தேசிய கல்வி போன்ற தீர்மானங்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாததால் அதைக் கெடுக்க வேறொரு வழியைப் பின்பற்ற முனைந்தனர். காங்கிரஸின் அமைப்பு சாசனத்திற்குப் பதிலாக வேறொரு புதிய சாசனத்தை முன் வைத்தனர். அதில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் மற்ற உறுப்பு நாடுகளைப் போல பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தன்னாட்சியே காங்கிரசின் நோக்கம் என்று கூறப்பட்டிருந்தது. அது தற்காலிக நோக்கமல்ல, அதுவே இறுதி லட்சியம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது கல்கத்தா மாநாட்டுத் தீர்மானத்துக்கு முற்றிலும் முரணானது. அது மட்டுமன்றி, இந்தப் புதிய சாசனத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே மாகாண காங்கிரஸ் கமிட்டியில் இடம்பெற முடியும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
தேசியவாதிகளுக்கு விஷயம் தெளிவாகப் புரிந்து விட்டது. இந்த சாசனம் ஏற்கப்பட்டால் கல்கத்தா மாநாட்டில் செய்ததெல்லாம் வீணாய்ப் போய்விடும். அது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் மிதவாதிகள் பிடிக்குள் காங்கிரஸ் சென்று விடும். மிதவாதிகள் மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே இந்த விஷயத்தை தீவிர பிரசாரம் செய்து தங்களுக்கு ஆதரவு திரட்டினர். தேசியவாதிகளும் சும்மா இருக்கவில்லை. ஆனால் நிலைமை மிதவாதிகளுக்கு ஆதரவாக, அவர்கள் பக்கம் 1300 பேரும் தேசியவாதிகள் பக்கம் 1100 பேரும் இருப்பதாக, அரவிந்தர் கணக்கிட்டிருந்தார்.



இந்தப் பின்னணியில் தான் மாநாட்டில் முதல் நிகழ்ச்சி 26 டிசம்பர் 1907இல் துவங்கியது. சுமார் பத்தாயிரம் பேர் அரங்கில் இருந்தனர். மோதல் தொடங்கியது. டாக்டர் ராஷ் பிஹாரி கோஷ் சிறந்த வழக்கறிஞர்; ஆனால் நல்ல தலைவர் அல்ல. மாநாட்டுத் தலைவராக அவரது பெயரை மிதவாதிகள் முன்மொழிந்தனர். சிறந்த பேச்சாளரான சுரேந்திரநாத் பானர்ஜி அவரது பெயரை வழிமொழிந்து பேச எழுந்தார். ஆனால் அதற்குள் மறுப்பும் எதிர்ப்பும் ஆதரவும் என கோஷங்கள் எழுந்தன. அவர் பேச்சு எவர் காதிலும் விழவில்லை. இரண்டு கோஷ்டிகளுக்குமிடையே எழுந்த சச்சரவைத் தீர்க்க, அமைதிப்படுத்த வரவேற்புக் குழுவின் தலைவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. மாநாட்டுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுக்கு அவர்தான் தலைவர். எனவே அவர், டாக்டர் ராஷ்பிஹாரி மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தார். இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தோல்வி அடைந்தன. ‘ராஷ் பிஹாரியின் தலைமையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், நீங்கள் கல்கத்தா மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், மாற்றக் கூடாது’ என்றனர் தேசியவாதிகள். அதை ஏற்க மறுத்தனர் மிதவாதிகள். அன்று மாலை வரை எந்தவிதமான சமரசத்தையும் எட்ட முடியவில்லை.
காங்கிரஸ் மாநாடு மறுநாள், 27 டிசம்பர் அன்று தொடங்கியது. மாபெரும் அணி டாக்டர் ராஷ்பிஹாரியின் பின்னால் வந்தது. அவர் நேராக வந்து தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஆனால் அவர் தன் உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக திலகர் பெருமான் எழுந்து நின்றார். ஏற்கனவே அவர் கொடுத்திருந்த ஒரு தீர்மானத் திருத்தம் குறித்து பேச மேடையில் ஏறினார். ராஷ் பிஹாரி அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ‘நீங்கள் இன்னும் மாநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என திலகர் பெருமான் பதிலடி கொடுத்தார். பின்பு கூட்டத்தினரைப் பார்த்து கரம் கூப்பி வணங்கி, பேசத் தொடங்கினார். அடுத்து நடந்ததை அரவிந்தரின் வார்த்தைகளிலே பார்ப்போம்:
"திலகர் பேசத் தொடங்கியதும் பெரிய கூச்சல் எழுந்தது. இளம் குஜராத்தித் தொண்டர்கள் திலகர் மீது நாற்காலியை வீசினர். அதைக் கண்ட மராட்டியர்களுக்கு கோபம் வந்தது. ஒரு மராட்டியர் டாக்டர் ராஷ் பிஹாரியை நோக்கி தன் செருப்பை வீசினார். அது சுரேந்திரநாத் பானர்ஜி மீது விழுந்தது. இளம் மராட்டியர்களின் அணி மேடையை நோக்கிப் பாய்ந்து சென்றது. மிதவாதத் தலைவர்கள் மேடையில் ஓட்டம் பிடித்தனர். மேடையில் சண்டை நடந்தது. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. மிதவாதத் தலைவர்கள் காங்கிரஸ் மாநாட்டை இடைநிறுத்தம் செய்தனர்."
சூரத் காங்கிரஸ் மாநாடு இவ்வாறு தடைப்பட்டது. மறுநாள் மிதவாதத் தலைவர்கள் தாங்கள் கொடுத்த அமைப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டினர். தேசியவாதிகள் அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். காங்கிரஸ் பிளவு பட்டது. இரண்டு கோஷ்டியினரும் காங்கிரஸ் மாநாடு பற்றி தனித்தனியாக தங்கள் தரப்பை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டனர். தேசியவாதிகளின் தரப்பில் அரவிந்தர், திலகர் பெருமான் மற்றும் பல தலைவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை வெளியானது. மிதவாதிகள் தங்கள் அறிக்கை தான் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ அறிக்கை என்றனர். அரசியல் வரலாற்றைப் படிப்பவர்கள் அந்த ஆவணங்களை கவனமுடன் படித்து, முரண்பட்ட கோஷ்டிகளின் நோக்கத்தையும் செயல்களையும் சிந்தித்து, புரிந்து கொள்வார்கள்.

அருகில், அரவிந்தர்.
இது சூரத் காங்கிரஸ் மாநாடு பற்றி வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு பல காலம் கழித்து ஒரு சீடரின் கேள்விக்கு அரவிந்தரின் பதிலில், “திரைக்குப் பின்னால் நடக்கும் உறுதியான செயல்களைப் பற்றி வரலாறு எப்போதும் பதிவு செய்வதில்லை. திரைக்கு முன்னால் வெளிப்படையாக நடக்கும் விஷயங்களை மட்டுமே அது பதிவு செய்கிறது. மிதவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும், காங்கிரசைப் பிளக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த முடிவை திலகரைக் கலந்தாலோசிக்காமல் நானே சுயமாக மேற்கொண்டேன். இதை வெகு சிலரே அறிவார்கள்” என்று எழுதியுள்ளார்.
ஏன் காங்கிரசைப் பிளக்க வேண்டுமென்ற முடிவை அரவிந்தர் மேற்கொண்டார்? இதற்கு அவரிடமிருந்து நேரடி பதில் ஏதும் பதிவாகவில்லை. ஆனால் காங்கிரஸின் நோக்கங்கள் பலவீனமானவை என்றும், அதற்குப் பின்னால் எண்ணிக்கை பலம் இருந்தாலும் தீவிர தேசியவாதிகள் அதை ஏற்கக் கூடாது என்றும் அரவிந்தர் விரும்பியது புரிகிறது. இரண்டு கோஷ்டிகள் இடையே ‘உயிரற்ற ஒற்றுமை’, இணக்கம் ஏற்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தீவிர தேசியவாதிகள் காங்கிரசிலிருந்து விலகினால் தீவிர ஒடுக்கு முறைக்கு ஆட்படுவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
அதன்படியே 1908 ஜூலை மாதத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் தூண்டியதாக திலகர் பெருமான் மீது குற்றம் சாட்டப்பட்டது. பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் ஆறு ஆண்டுகள் அடைக்கப்பட்டார். பிறகு அரசின் முழு கவனமும் அரவிந்தர் மீது திரும்பியது. ஆனால் அடக்குமுறைகள் விடுதலைக்கனலை அணைத்து விட முடியாது என்பதும், முழுமையான சுதந்திரம் என்ற லட்சியத்தை வீரமிகு தேசபக்தர்கள் கொழுந்துவிட்டு எரியச் செய்வார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதுதான் நடந்ததும் கூட. 1909 இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாடு ‘பூரண சுதந்திரமே தனது லட்சியம்’ என்று அறிவித்தது. சூரத் மாநாடு மிதவாதிகளுக்கு சாவுமணி அடித்தது. சில மிதவாதத் தலைவர்கள் அரசில் முக்கிய பதவிகளில் அமர்ந்தனர் என்றாலும், மக்கள் மத்தியில் மிதவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு தேய்ந்துகொண்டே போனது. பின்னர் வேறு சில தேசிய சக்திகள் அந்த இடத்துக்கு வந்தன.
1908 ஆண்டு விடியும் போது அரவிந்தர் சூரத்திலிருந்து பரோடாவுக்குப் புறப்பட்டார். 1906 ஜூன் மாதத்தில் அவர் பரோடாவை விட்டு போன பிறகு இப்பொழுது தான் மீண்டும் வந்தார். அந்த பதினெட்டு மாதத்தில் தான் எப்பேர்ப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன! அவர் பரோடாவை விட்டு போகும்போது அவரது நண்பர்களுக்கும் மற்றும் சிலருக்கும் மட்டுமே அவரை தெரியும். இப்போது அவர் இந்திய அரசியலில் முன்னணித் தலைவர்; மொத்த தேசத்திற்கும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தும் உந்து சக்தி; சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டத்தில் இதுவரை யாருமே சொல்லாத வகையில் விடுதலை என்பது ஆன்மிக முன்னேற்றம் என்று விளக்கியவர்.
மாணவர்கள் யாரும் அரவிந்தரை சந்திக்கக் கூடாது, வகுப்பறையை விட்டு வெளியே வரக் கூடாது என்று பரோடா கல்லூரி முதல்வர் தடை உத்தரவு போட்டிருந்தார். அதை மீறி மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து அரவிந்தர் வந்த வண்டியின் குதிரையை அவிழ்த்துவிட்டு அதை தாங்களே இழுத்துக்கொண்டு பேரணியாகச் சென்றனர். பல அரசியல், சமூகத் தலைவர்கள் வந்து அரவிந்தரைச் சந்தித்தனர். அவர் பல கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்.
பரோடாவில் அவரைச் சந்தித்தவர்களில் சோட்டாலால் புராணியும் அவரது தம்பி அம்பாலாலும் அடங்குவர். அவர்கள் அரவிந்தரால் ஊக்கம் பெற்று குஜராத்தில் புரட்சிப் பணியில் தீவிரப் பங்காற்றினார்கள். அம்பாலால் புராணி பின்னர் அரவிந்தரின் சீடராகி 1920களின் துவக்கத்தில் இருந்து பாண்டிச்சேரி ஆசிரமத்தில் சேர்ந்து அவருடைய தனி உதவியாளராக சேவை செய்தார். அரவிந்தர் பரோடாவில் இருந்தபோது மகாராஜாவைச் சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. மகாராஜா மீண்டும் அரவிந்தரைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை.
பரோடாவில் காசிராவ் ஜாதவ் வீட்டில் முதலில் அரவிந்தர் தங்கினார். அங்கு அவரைச் சந்தித்தவர்கள் அவரது எளிய வாழ்க்கையைக் கண்டு வியந்தனர். ஏற்கனவே அவர் பரோடாவில் பணியில் இருந்தபோது எந்த ஆடம்பரமும் இல்லாமல் தான் இருந்தார். இப்போதோ அதுவும் மிகக் குறைந்து விட்டிருந்ததைக் கண்டனர். குளிர்காலத்தில் கூட அவர் வெறும் வேட்டி சட்டையுடன் மேல் போர்வை இல்லாமல் இருந்தார். அவர் குளிரால் பாதிக்கக் கூடாது என்று அவரது நண்பர் சர்தார் மஜும்தார் ஒரு கம்பளி சால்வையைப் பரிசளித்தார். அரவிந்தர் ரயில் பயணத்தின் போதும் படுக்கையைக் கொண்டு செல்வதில்லை. (அந்தக் காலத்தில் இருந்த பழக்கம் அது) மூன்றாம் வகுப்பில் மரப்பலகையில் வெறும் கையைத் தலையணையாக்கி படுத்துக் கொள்வார்.
கல்கத்தாவில் இருந்து காங்கிரஸ் மாநாட்டிற்காக சூரத் போன போதும் அவர் தேசியவாதப் பிரதிநிதிகளுடன் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். அவருக்கென சிறப்பாக எந்த ஏற்பாடும் இல்லை. அதே ரயில் வண்டியில் காங்கிரஸ் செயலாளரும் மிதவாத கோஷ்டியை சேர்ந்தவருமான ஜே.கோஷாலும் வந்தார். அவர் ஐரோப்பியர்களைப் போன்று ஆடை அணிந்து முதல் வகுப்பில் பயணம் செய்தார். வண்டி ஆங்காங்கே ரயில் நிலையத்தில் நிற்கும் போது தலைவர்களைப் பார்க்க, குறிப்பாக அரவிந்தரை தரிசிக்க, ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் முதல் வகுப்பு பெட்டியில் அவரையும் பரீந்தரையும் எதிர்பார்த்தனர். அங்கு இல்லையெனத் தெரிந்தவுடன் விலகிச் சென்றனர். இது கோஷாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் அரவிந்தரை தன்னுடன் முதல் வகுப்பில் பயணம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் அழைத்தார். ஆனால் அவரஅது கோரிக்கையை அரவிந்தர் ஏற்கவில்லை.
அரவிந்தர் பரோடாவில் இரண்டு வாரம் தங்கி இருந்தார். அது அரசியல் செயல்பாடுகளை விட ஆன்மிக விஷயத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் முக்கியமாக்க் கருதிய ஆன்மிக அனுபவங்களில் முதல் அனுபவம் அப்போதுதான் ஏற்பட்டது. 1904இல் அவர் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு அவரது அரசியல் செயல்பாடுகள் அதிகரித்ததால் யோகாவில் ஈடுபடுவதற்கு நேரம் இல்லாமல் போனது. தனது ஆன்மிகப் பயணத்தில் முன்னேற்றம் இல்லாதது மட்டுமின்றி, தடைப்பட்டதாகவும் அவர் கருதினார். அந்த நிலையிலிருந்து தன்னை மீட்டு முறையாக யோக சாதனையில் தன்னை ஈடுபடுத்த யாராவது இருக்கிறார்களா என்று அவர் பரீந்தரிடம் கேட்டார். பரீந்தர் தேசப் பணியின் பொருட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்றிருந்தபோது விஷ்ணு பாஸ்கர் லீலீ என்ற மராட்டிய யோகியைச் சந்தித்தார். சுருக்கமான அந்தச் சந்திப்பிலே அவரது மீது ஈடுபாடு ஏற்பட்டது. அரவிந்தரின் அனுமதி பெற்று குவாலியரில் இருந்த லீலீக்கு பரோடா வரும்படி தந்தி அனுப்பினார். தந்தி கிடைத்ததும் அவர், ஒரு உயர்ந்த ஆன்மா யோகா சம்பந்தமாக தன் உதவியை கோருவதைப் புரிந்து கொண்டு, பரோடாவுக்கு வந்தார்.
காசிராவ் ஜாதவ் வீட்டில் அவர் அரவிந்தரைச் சந்தித்தார். யோகப் பயிற்சியில் உதவ வேண்டுமென்றால் கொஞ்சம் நாட்களுக்காவது அரசியல் செயல்பாடுகளை முற்றிலும் விலக்கிவிட்டு தன்னுடன் யோகப் பயிற்சியில் மட்டுமே ஈடுபட வேண்டுமென்றார் அவர். எனவே, நெருக்கமான சிலருக்கு மட்டும் தான் எங்கிருக்கிறேன் என்பதைச் சொல்லிவிட்டு லீலீயுடன் சர்தார் மஜும்தார் வீட்டுக்கு அரவிந்தர் சென்றார். அங்கு மேல் மாடியில் ஒரு சிறிய அறையில் இருவரும் தங்கினர். அங்கு நடந்தது எவர் கற்பனைக்கும் எட்டாதது. ஆன்மிக வரலாற்றில் அதற்கு இணை ஏதுமில்லை என்று சொல்லலாம்.
அது பற்றி அரவிந்தர் எழுதியுள்ளதாவது:
"தியானத்தில் அமர். ஆனால் எதையும் யோசிக்காதே. உன்னுடைய மனதை மட்டுமே பார். வெளியே இருந்து எண்ணங்கள் அதற்குள் நுழையும் போது அதை அங்கேயே தடுத்து நிறுத்தி, வீசிவிடு. உன் மனம் முற்றிலும் அமைதியில் நிற்கும் வரை இதை தொடர்ந்து செய்’ என்று லீலீ என்னிடம் கூறினார். எண்ணம் வெளியிலிருந்து மனதுக்குள் நுழைகிறது என்று அதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அது உண்மைதானா அவ்வாறு செய்வது சாத்தியம்தானா என்றெல்லாம் கேள்வி கேட்காமல், உட்கார்ந்து அவர் சொன்னபடி செய்தேன். மலையுச்சியில் காற்று அசைவற்று இருப்பது போல் என் மனம் ஒரு கணத்தில் அமைதியுற்றது. பிறகு ஒரு எண்ணம், அதன் பிறகு இன்னொன்று என்று வெளியில் இருந்து அவை உள்ளே வருவதை தெளிவாகக் கண்டேன். அவை உள்ளே நுழையும் முன்பே தடுத்து வீசினேன். என் மூளையை வசப்படுத்தினேன். மூன்று நாளில் நான் சுதந்திரமானவனாக ஆனேன். அந்தக் கணம் முதல் என் மனம் சுதந்திரமான அறிவாக, பிரபஞ்ச மனமாக, எண்ணங்கள் எனும் தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளி போல் குறுகிய தனிப்பட்ட எண்ணமாக இல்லாமல், நூற்றுக்கணக்கில் இருக்கும் உயிர்ப்புகளிடமிருந்து அறிவை பெறுபவனாக, கண்ணுக்கு புலப்படும் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட சிந்தனை சாம்ராஜ்யத்தில் உள்ள எண்ணற்றவற்றிலிருந்து வேண்டியதை தேர்ந்தெடுக்க கூடியவனாக ஆனேன்"
-என்று அரவிந்தர் எழுதியுள்ளார்.
பின்னாளில் பாண்டிச்சேரி ஆசிரம வாசிகளுடன் பேசும்போது அந்த அனுபவத்தைப் பற்றி, “லீலீ மனத்தை அமைதிப்படுத்தும்படியும் எண்ணங்கள் வரும்போது அதைத் தடுத்து வெளியே வீசும்படி என்னிடம் கூறினார். நான் அவ்வாறே மூன்று நாட்கள் செய்தேன். அதன் விளைவாக எல்லாம் மிக அமைதியாயின. நான் பரிநிர்வாண அனுபவத்தை அடைந்தேன். அது என்னுள் நீண்ட காலம் இருந்தது. நான் விரும்பினாலும் அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. பின்னாளில் நான் எந்தவிதமான செயல்களில் ஈடுபட்டாலும் அது பின்புலமாக எப்போதும் இருந்தது” என்று கூறியுள்ளார்.
மூன்றே நாளில் அவர் பரிநிர்வாண நிலையை அடைந்தது ஆச்சரியம் அளிக்கிறது. அது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, “அதற்குக் காரணம் இறையருள்தான். எனக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செய்ததை நானும் செய்து காலத்தை வீணாக்க இறைவன் விரும்பவில்லை” என்று கூறினார் அரவிந்தர். இருந்தாலும் வாழ்நாள் முழுக்க யோக சாதனை செய்தால் அடையக் கூடியதை அவர் மூன்றே நாளில் அடைந்தது நமக்கு வியப்படுகிறது. அதே வேளையில் அவருடைய அனுபவத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது நமக்கு சில விஷயங்கள் புலப்படுகின்றன. அவர் லீலீயின் வழிகாட்டுதலை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு செய்தார். அரவிந்தர் போன்ற அறிவாளிகள் கேள்வியைக் கேட்காமல் நம்புவதும், நம்பிச் செயல்படுவதும் மிக அரிதானது.
அவர் சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “நாங்கள் இருவரும் உட்கார்ந்தோம். அவர் சொல்லியதை நான் அப்படியே நம்பி, சொல்லியபடி செய்தேன். அவர் என்னை எந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்வார், நான் எதை நோக்கிப் போகிறேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நான் கேட்கவும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்தர் வெளியுலகச் செயல்பாடுகளில் இருந்து விலகி, கவனத்தைத் திருப்பி யோகத்தில் அமர்ந்தார் என்பது உண்மைதான். ஆனால் இதை அவர் பரபரப்பான உலகச் சிக்கலில் இருந்து விடுபட்டு இமயமலைச் சாரலில் உட்கார்ந்து அடையவில்லை. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அது உங்கள் ஆன்மிகப் பயணத்துக்கு தடை இல்லை என்பதே அது. அரவிந்தர் தான் பெற்ற அனுபவத்தைப் பற்றி ‘நிர்வாணா’ என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எழுதியுள்ளார்.
அரவிந்தர் அடைந்த அனுபவம், எட்டிய உச்சம் லீலீயும் எதிர்பார்க்காதது. அவருக்கு அது வியப்பளித்தது. அரவிந்தருக்கும் அந்த அனுபவம் ஆச்சரியம் அளித்தது. ஏனெனில் அதுவரை அவர் கொண்டிருந்த கருத்துக்களுக்கு எல்லாம் முற்றிலும் மாறானது அது. “பிரம்மம் எண்ணற்ற வடிவங்கள் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் விளையாடிக் கொண்டிருப்பது சினிமா பட காட்சி போல தெளிவாக திருத்தமாக எனக்கு அந்த அனுபவத்தின் மூலம் தெரிந்தது” என்று அவர் எழுதியுள்ளார்.
இதனால் அவர் அரசியலை விட்டு விலகி விடவில்லை. பல இடங்களில் இருந்து அவருக்கு உரையாற்ற அழைப்பு வந்தபடியே இருந்தது. அவரும் பூனா, பம்பாய் என பல இடங்களுக்குச் சென்று மக்களிடையே உரையாற்றினார். சூரத்தில் அவர் எடுத்த எந்த சமரசமும் இல்லாத நிலைப்பாடு உண்மையான தேச பக்தர்கள் இடையே பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. சிக்கலான நேரத்தில் சீரியல் தலைமை கொடுப்பார் என்று அனைவரும் அவரை எதிர்பார்த்தனர்.
பரோடாவில் இருந்து அரவிந்தர் பூனாவுக்குச் சென்றார். அவர் கேட்டுக் கொண்டதால் லீலீயும் அவருடன் சென்றார். அரவிந்தரின் மனம் அமைதியாக, எல்லா சிந்தனைகளையும் துடைத்தெறிந்ததாக இருந்ததால் அவரால் அரசியல் கூட்டங்களில் பேச முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. என்ன செய்வது என்று லீலீயிடம் கேட்டார். அதற்கு லீலீ, ‘கூட்டத்தினரை பார்த்து இரு கரம் கூப்பி வணக்கம் செய்து அமைதியாக நில். உன் மனதில் இருந்து அல்லாமல் வேறொரு இடத்தில் இருந்து உனக்கு பேச்சு வரும்’ என்று சொன்னார். அவ்வாறே அரவிந்தர் செய்ய பேச்சு தானாக வந்தது.

பூனாவில் இருந்து பம்பாய் சென்றார். அங்கும் பல பெரிய கூட்டங்களில் பேச வேண்டி இருந்தது. பேச்சு மடைதிறந்த வெள்ளமென வந்தது. அப்படித்தான் ஜனவரி 19ஆம் தேதி மகாஜன்வாடியில் நேஷனல் யூனியன் கூட்டத்தில் அவரது உரை நிகழ்ந்தது. அந்த பேச்சு மறுநாள் வந்தே மாதரத்தில் வெளியானது. அதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதேபோன்ற வேறொரு விஷயத்தையும் அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். “அந்த அனுபவத்துக்குப் பிறகு நான் வந்தே மாதரத்திற்காக எழுத உட்கார்ந்தபோது எண்ணங்கள் என் மனதுக்குள் வராமல் நேராக பேனா வழியாக வெளிப்பட்டன. நான் என்ன எழுதுகிறேன் என்பது எழுதப்படுவதற்கு முன்பு எனக்குத் தெரியாது. சில நேரங்களில் மனம் சலனமற்று இருக்கும்போது அவை மனதின் ஊடே புகுந்து எந்த தடயமும் இன்றி வெளிப்பட்டன” என்று அவர் கூறியுள்ளார்.
அரவிந்தர் பம்பாயை விட்டுக் கிளம்பும் முன் லீலீயிடம் தாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கேட்டார். அதுபற்றி அரவிந்தரே, “அவர் எனக்கு விலாவாரியாக வழிமுறைகளை பற்றி கூறிக் கொண்டே வந்தார். அப்போது திடீரென்று ஒரு மந்திரம் தோன்றியது. நான் அதை அவரிடம் எடுத்துக் கூறினேன். வழிமுறைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த அவர் பாதியிலேயே நிறுத்தி விட்டார். ‘அந்த மந்திரத்தைக் கொடுத்தவனை (இறைவனை) நீ முழுமையாக நம்புகிறாயா’ என்று கேட்டார். ஆமாம் என்று நான் சொன்னேன். அதன்பின் அவர் ‘இனி உனக்கு எந்த உபதேசமும் தேவையில்லை’ என்று கூறிவிட்டார்” என்று எழுதியுள்ளார்.
அதுபற்றி மேலும் கூறுகையில் “லீலீவுக்குள்ளிருந்த (தெய்வீக) குரல் என்னை இறைவனிடம் முழுமையாகச் சரணடையச் செய்யும்படி கூறியது. முழு சரணாகதி என்ற அந்த சக்தி, எந்த ஒரு குறிப்பிட்ட விதிமுறையையோ வழியையோ பாணியையோ நூலோ இல்லாத, அடர்ந்த காடு போன்ற யோக சாதனையில் எந்த ஊசலாட்டமும் இல்லாமல் என்னை வழிநடத்தி உயரத்துக்குக் கொண்டு சென்றது” என்று அரவிந்தர் எழுதியுள்ளார். இது நாம் கவனிக்கத்தக்க விஷயம்.
திலகர் பெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க அரவிந்தர் நாசிக், துலியா, அமராவதி, நாகபுரி போன்ற மராட்டிய பண்பாட்டு மையங்களுக்கும் தீவிர தேசியவாதிகளின் கோட்டை போன்றிருக்கும் பகுதிகளுக்கும் சென்றார். அங்கு பல முக்கியமானவர்கள் வந்து அவரைச் சந்தித்தனர். பல இடங்களில் அவர் உரை நிகழ்த்தினார். அவரைப் பார்த்தவர்களும் பேச்சை கேட்டவர்களும் மிகுந்த உத்வேகம் பெற்றனர். எல்லா இடங்களிலும் அவர் பேச்சின் சாராம்சமாக – தேசம், தேசபக்தி தான் நம்முடைய மதம். அதுவே இறை சக்தி – என்ற விஷயமே இருந்தது. ஜனவரி 29 இல் அமராவதியில் நடந்த கூட்டத்தின் துவக்கத்தில் வந்தே மாதரம் கீதம் பாடப்பட்டது. அந்த மேடையில் அரவிந்தர் வந்தே மாதரம் பாடலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினார்.
1908 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அரவிந்தர் கல்கத்தா திரும்பினார். உடனே ‘வந்தே மாதரம்’ நாளேட்டின் பணியில் மூழ்கினார். அப்பொழுது அவர் அகில இந்தியாவும் அறிந்த தலைவராக ஆகிவிட்டதால் பல இடங்களுக்கு பேச அழைத்தார்கள். அவரது புறச் செயல்பாடுகள் நடந்து கொண்டே இருந்த அதே வேளையில், உள்ளுக்குள் மாற்றமும் தொடர்ந்தது. மேடையில் ஏறியதும் தன்னிச்சையாக பேச்சு தடையற்று வந்தது. ஏதோ ஒரு உயரிய சக்தி அவர் மூலமாகச் செயல்பட்டு அவரது சிந்தனையிலும் வார்த்தையிலும் செயலிலும் வெளிப்பட்டது. வந்தே மாதரத்தில் மட்டுமல்ல, பின்னாளில் ’கர்மயோகின், ஆர்யா’ பத்திரிகைகளிலும் அவரது கடிதங்களிலும் ’சாவித்திரி’ என்ற காவியத்திலும் பற்பல கவிதைகளும் அவ்வாறு வெளிப்பட்டவை; அந்த மன அமைதியிலிருந்து எழுந்தவையே. “நான் ஒரு கருவிதான். எனக்கென்று எந்தப் பொறுப்பும் கடமையும் இல்லை. இந்த நிலை ஒரு பெரிய அமைதியும் விடுதலையும் ஆகும்” என்று அது பற்றி அரவிந்தர் சொல்லி உள்ளார்.
சூரத்திலிருந்து திரும்பி கல்கத்தா வந்தவுடன் அவர் தன் மனைவி மிருணாளினிக்கு ஒரு கடிதம் எழுதினார். அவள் அப்பொழுது கல்கத்தாவில் இல்லை. அனேகமாக அதுதான் அவர் தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதமாக இருக்கும். அது மனதை நெகிழ வைக்கும் ஒரு ஆவணம். நீண்ட காலமாக அவளுக்கு கடிதம் எழுதாததற்கு வருத்தம் தெரிவித்து தொடங்கும் அந்த கடிதத்தில்…
"இது என்னுடைய பெரிய தோல்வி. உன்னுடைய நல்ல குணத்தினால் என்னை மன்னிக்காவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? உள்ளுக்குள்ளே செதுக்கப்பட்டிருப்பது ஒரு நாளில் மறைந்து போகாது. அந்தத் தவறை சரி செய்ய என் முழு வாழ்நாளும் தேவைப்படலாம்" என்று போகும் அந்தக் கடிதத்தின் இறுதியில், "என் பணியின் காரணமாக உன்னை அலட்சியப்படுத்தி விட்டேன் என்று நீ நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்காதே. நான் பல தவறுகள் செய்திருக்கலாம். அவை உன்னை வருத்தமூட்டி இருக்கலாம். ஆனால் நான் சுதந்திரமானவனாக இல்லை. நான் செய்வது எல்லாம் நான் சிந்தித்துச் செய்வதல்ல. எனக்கிடப்பட்ட கட்டளையை தான் நிறைவேற்றுகிறேன். இதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ இங்கு வரும்போது என் வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வாய். இறைவன் தன் அளப்பற்ற கருணையால் எனக்கு காட்டியது போலவே உனக்கும் ஒளியைக் காட்டுவான். ஆனால் அதுவும் அவன் விருப்பத்தைப் பொறுத்ததே. நீ என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு என் லட்சியத்தை ஏற்றுக் கொண்டு, முழுமூச்சுடன் அதற்காகச் செயல்பட்டால், அவன் உன் மீதும் கருணை கொண்டு பாதையை காட்டுவான்"
– என்று முடிகிறது. அவர் இறை சக்தியிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டார். அதேவேளையில் மிருணாளினி தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தன்னைப் பின்தொடர வேண்டும் என்றும் விரும்பினார். அவர் அவளையோ அவள் உணர்வுகளையோ எப்பொழுதும் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தினார் என்று கூற முடியாது என்பதை இந்தக் கடிதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.
அரவிந்தர் ஆன்மிக நிதர்சனங்களைத் தெரிந்து கொண்டார் என்பதை அவர் வந்தே மாதரத்தில் எழுதிய கட்டுரைகளில் வெளிப்பட்ட புதிய தொனியில் இருந்து புரிந்து கொள்ளலாம். 1908 பிப்ரவரி 18 ஆம் தேதி வந்தே மாதரத்தில் அவர் எழுதிய கட்டுரையில் எழுதியிருந்ததாவது:
"ஸ்வராஜ்ஜியம் என்பது இந்த மக்களுக்கு இறைவன் நேரடியாக்க் கொடுத்த உண்மையின் வெளிப்பாடு. அது வெறும் அரசியல் சுதந்திரம் அல்ல. அது தனி மனிதனின் விடுதலை, சமுதாயத்தின் விடுதலை, தேசத்தின் விடுதலை, ஆன்மிக விடுதலை, அரசியல் விடுதலை என பரந்த, முழுமையான விடுதலையாகும். ஆன்மிக விடுதலையை நம் பண்டைய ரிஷிகள் நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். சமூக விடுதலையின் அம்சமாக இருப்பது புத்தர், சைதன்யர், நானக், கபீர் மற்றும் மகாராஷ்டிர மகான்கள் கொடுத்த செய்தி. அரசியல் விடுதலை என்பது கடைசியாக வருகிறது. இந்த மூன்றும் ஒன்றான இறைமொழி தான் ஸ்வராஜ்யம். இறைவன் இந்தியாவை புனிதமான ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்ணாகப் படைத்திருக்கிறான். அது வற்றிப்போக அவன் விட மாட்டான். எனவே தான் ஸ்வராஜ்யம் நமக்கு இறை வெளிப்பாடாக வந்துள்ளது. நம்முடைய அரசியல் விடுதலை நம்முடைய ஆன்மிக விடுதலையை மீட்டுத் தரும். இந்த ரிஷி முனிவர்களின் பூமியில் மீண்டும் வேள்வித் தீ வளர்க்கப்படும். இந்த மண்ணின் மைந்தர்களின் மனங்கள் உயர்ந்து இறைநிலைக்கு அருகில் செல்லும்"
-என்று எழுதியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் தான் அமரேந்திரநாத் சாட்டர்ஜி என்ற இளம் தேச பக்தர் அரவிந்தரைச் சந்தித்தார். அவர் ஏற்கனவே சுதேசி இயக்கத்திற்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். அரவிந்தர் அவரை புரட்சிகரப் பாதையில் நடையிட உத்வேகம் அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அந்தச் சந்திப்பைப் பற்றியும் அரவிந்தர் அப்போது கூறிய வார்த்தைகளையும் எழுதி உள்ளார்.
” இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்றால் நாம் அதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். மரண பயத்தை வெல்ல வேண்டும். நம் உயிரைக் கொடுக்கவும் முன்வர வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்து அன்னையின் பெயரில் இந்தப் பணியில் மூழ்கு. இதுவே நான் உனக்கு அளிக்கும் தீக்க்ஷை” – என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியதாக அவர் எழுதியுள்ளார். அந்த வார்த்தைகள் தன் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டதாகக் கூறும் அமரேந்திரர் அவை தன்னிடம் இருந்த பயத்தையும் பந்த பாசத்தையும் நீக்கி விட்டதாக எழுதியுள்ளார். இவ்வாறு அரவிந்தர் தன்னுடைய மந்திர வார்த்தைகளால் பல வாலிப உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
இதனிடையே பரீந்தரின் வேண்டுகோளை ஏற்று லீலீ கல்கத்தாவுக்கு வந்தார். அரவிந்தர் அப்பொழுது 23 ஸ்காட் தெருவில் குடியிருந்தார். லீலீ அங்கு சென்று யோகப் பயிற்சிகள் எல்லாம் எப்படி நடக்கிறது என்று விசாரித்தார். தியானம், மற்ற யோகப் பயிற்சிகளை விட்டு விட்டதாக அரவிந்தர் கூறினார். அதற்கு லீலீ ‘உன்னை பேய் பிடித்துக் கொண்டுள்ளது’ என்றார். அதைக் கேட்டதும் அரவிந்தர், “என்னைப் பிடித்துள்ளது பேயானால் நான் அதையே தொடர்வேன்” என்று மனதுக்குள் சொன்னார். அதுபற்றி பிறகொரு நாள் பேசும்போது, “நான் வேலை செய்யும்போதும் இளைப்பாறும் போதும் தூங்கும்போதும் தியானத்தில் இருந்தேன். எனவே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தியானத்தில் அமர வேண்டிய தேவையில்லாமல் போனது” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் ‘மூன்று சந்தியா காலத்திலும் அன்னை காளியின் பெயரை உச்சரிப்பவன் எதற்கு தனியாக வழிபாடு செய்ய வேண்டும்?’ என்று கூறியுள்ளார். ஒரு சில மாதங்களிலேயே அரவிந்தர் தன் யோகா பயிற்சிகள் மூலம் லீலீ போன்ற யோகிகள் சென்றதை விட மிக ஆழத்துக்குச் சென்று விட்டார்.
பரீந்தர் லீலீயை கல்கத்தாவுக்கு வரச் சொன்னதற்கு வேறொரு காரணம் இருந்தது. சில காலத்திற்கு முன்பு அரவிந்தர் ஸ்காட் தெருவில் இருந்த வீட்டிலிருந்து பரீந்தர் விலகி வடக்கு கல்கத்தாவில் முராரிபுகூர் என்ற இடத்தில் உள்ள மணித்தோலா தோட்டத்திற்குப் போய்விட்டார். இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பரம்பரைச் சொத்து அது. பெயர்தான் தோட்டமே தவிர அதுவொரு புதர் மண்டிய காடு. நடுவில் சிதலமடைந்த ஒரு கட்டடம். ஆனால் அது அவருடைய நோக்கத்துக்குப் பொருத்தமாக இருந்தது. அவர் பதினைந்து, இருபது தீவிர புரட்சி நாட்டம் கொண்டவர்களைச் சேர்த்துக்கொண்டு அங்கிருந்தார். தாய்நாட்டிற்காக உயிரையும் கொடுப்போம் என்று அவர்கள் சபதம் ஏற்றிருந்தனர். அவர் அந்த இளம் வீரர்களுக்கு உடலை வலுப்படுத்துவது, குறிபார்த்துச் சுடுவது, குண்டு தயாரிப்பது என பல விஷயங்களைப் பற்றி சிறப்புப் பயிற்சி அளித்து வந்தார். அத்துடன் அவர்களுக்கு பகவத் கீதையை கற்பிப்பதும் தியானம் செய்ய சொல்லிக் கொடுப்பதும் நடந்தது வந்தது. அரவிந்தருக்கு அங்கு நடப்பது என்னவென்று தெரிந்தாலும் அதை கண்டு கொள்ளவில்லை. அதில் ஈடுபடவும் இல்லை. ஒருமுறை பரீந்தர் தோட்டத்திற்கு வரும்படி அரவிந்தருக்கு ஆள் அனுப்பிய போதும் அவர் வர மறுத்துவிட்டார்.
மாணிக்தோலா தோட்டத்தில் இருந்த புரட்சியாளர்களுக்கு லீலீ யோகா பயிற்சிகளில் வழிகாட்ட வேண்டுமென பரீந்தர் அவரை அழைத்திருந்தார். அங்கு சென்ற லீலீக்கு நடப்பது என்ன என்பது சீக்கிரத்தில் புரிந்து விட்டது. உடனே அவர் பரீந்தரிடம் இது போன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட வேண்டாமெனவும் இல்லையென்றால் ‘படுகுழியில் விழுந்து விடுவாய்’ என்றும் எச்சரித்தார். ஆனால் அதைக் கேட்கும் மனநிலையில் பரீந்தர் இல்லை. ‘அவன் படுகுழியில் விழுந்து விட்டான்’ என்று பின்னாளில் அரவிந்தர் குறிப்பிட்டார். விரைவில் பரீந்தர் தன் வாழ்வின் மிக மோசமான சிக்கல்களை எதிர்கொண்டார்.
கருமேகங்கள் சூழத் தொடங்கின. ஏப்ரல் முப்பதாம் தேதி முசாபர்பூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்போர்டு பயணிப்பதாக இருந்த வண்டி மீது வெடிகுண்டு வீசப்பட்டது. பதினான்கு வயது பையனை, ஏதோ குற்றத்திற்காக, பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் அடிக்கும்படி அந்த நீதிபதி செய்தான். அதனால் மக்கள் அவன் மீது ஆத்திரத்தில் இருந்தனர். வெடிகுண்டு வீசப்பட்ட வண்டியில் அப்பொழுது நீதிபதி கிங்ஸ்போர்டு இல்லை. மாறாக அதில் பயணம் செய்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் கொல்லப்பட்டனர். இதனால் பெரிய அமளி ஏற்பட்டது. சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகk கைது செய்ய அரசு உத்தரவிட்டது.
நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அரவிந்தர் மாணிக்தோலா தோட்டத்தில் இருந்த ஆயுதங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும் படியும் எல்லாவிதமான தடயங்களையும் அழித்து விடும்படியும் செய்தி அனுப்பினார். ஆனால் அந்தச் செய்தியின் படி பரீந்தர் செயல்படுவதற்கு முன்னரே போலீஸ் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தது. 1908 மே மாதம் இரண்டாம் தேதி நடத்திய சோதனையில் ஆதாரங்களைக் கைப்பற்றிய போலீசார் அப்போது அங்கிருந்தவர்களையும் கைது செய்தது.
இதனிடையே அரவிந்தர் தன் குடியிருப்பை மாற்றி விட்டிருந்தார். 23 ஸ்காட் தெருவில் இருந்து ஏப்ரல் மாதம் இருபத்தியெட்டாம் தேதி கிரே தெருவில் இருந்த 48 எண் வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அது ‘நவசக்தி’ என்ற வங்க மொழி பத்திரிகையின் அலுவலகமும் கூட. 1908 மே மாதம் இரண்டாம் தேதி அதிகாலை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தரை பெரிய போலீஸ்படை கைது செய்தது.
$$$