-மகாகவி பாரதி
உழைப்பே உயர்வு தரும்; சோம்பர் வாழ்வைக் கெடுக்கும். இது தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் உழைக்கும்போது, நாடும் தானாக முன்னேறும்- என்கிறார் இதழாளர் பாரதி, இக்கட்டுரையில்....

‘சும்மா இருப்பது சுகம்‘” ’ என்று சிலர் யாதொரு வேலையும் செய்யாமல் பிறர் சோற்றையுண்டு காலந்தள்ளுகின்றனர். நம்மவருள் ஒருவன் சம்பாதித்தால் ஒன்பது பேர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இதுதான் நமது தேசம் தரித்திரத்தையடைவதற்கு முக்கிய காரணம்.
ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறான். உழைப்பில்லாச் சோறு* உப்பில்லாச் சோறு என்று நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். சீட்டாடுவதும், இராப்பகலாகத் தூங்குவதும், பேசுவதும் உழைப்பாகாது. தனக்கும், தன் குடும்பத்திற்கும், தான் பிறந்த தேசத்திற்கும், மற்றவர்களுக்கும் உபயோகமான தொழிலைச் செய்வதே உழைப்பாகும்.
வேலை செய்யாமல் ஒருவனிடம் பணம் பெறுவது பிச்சையேயாகும். ஏற்பது இகழ்ச்சி என்று ஒளவை கூறியிருக்கிறாள். பிச்சை எடுப்பவன் தனது மான அபிமானத்தை விட்டுவிடுகிறான். புத்திசாலியோ யாசகம் செய்ய இசையான். கண், கால், கை முதலிய அவயங்கள் ஹீனமானால் பிச்சையெடுப்பது நியாயமாகும். அவயங்கள் நல்ல ஸ்திதியில் இருக்கும்போது அசந்தவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு இரந்துண்பது மானக்கேடு.
சென்னை, திருச்சி போன்ற சிலவிடங்களில் சோம்பேறிகளென்று ஒருவகைப் பிச்சைக்காரர்கள் உண்டு. இவர்கள் எந்த வீட்டில் கல்யாணமானாலும் எச்சிலைக்குத் தயாராய்க் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்த சோம்பேறிகள் கூட, திருவிழாக்களில் தீவட்டி பிடித்துச் சம்பாதிக்கின்றனர். இந்தச் சோம்பேறிகளைவிட கேடுகெட்ட சோம்பேறிகளாய் நமது தேசத்தில் எத்தனையோ பணக்காரர்களும் மிராசுதார் ஜமீன்தார்களும் இருப்பதைப் பலவிடத்தும் காணலாம்.
வெளிநாடுகளில் சோம்பேறிகள் என்று பெயர் வைத்துக்கொள்ளாமலே காரியம் செய்யாமல் காலம் கழிக்கும் முதல்தர சோம்பேறிகள் வெகு பேர் இருக்கின்றனர். இவர்களால் அநேக குடும்பங்கள் அழிந்து போகின்றன. தகப்பன், பாட்டன் சிரமப்பட்டுத் தேடிய பணத்தைத் தாராளமாய் செலவு செய்யும் மனிதனுக்குப் பெருமையில்லை. தானே தேடி, தானே செலவழிப்பவனே உத்தமன்.
எதேஷ்டமாக திரவியமிருப்பதால் வேலை எதுக்குச் செய்ய வேண்டுமென்று சிலர் கூறுவர். வேலை செய்வதாவது கேவலம், ஸம்பாத்தியத்தை உத்தேசித்து மட்டுமல்ல. பல ஜனங்களுக்கு உபயோகமான ஓர் காரியத்தைச் செய்யலாம்.
காரியம் செய்யாதவனை யாரும் விரும்பார்கள். எவன் வேலையின்றித் தூங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்; தீண்டுவது தீது. ஒவ்வொருவனும் தனக்கேற்பட்ட வேலையை உற்சாகத்துடன் செய்து முடிக்க வேண்டும். இதனால் நமக்கேற்பட்ட வேலைகளை நாம் செய்யாமலிருந்தால் ஸதா சலித்துக் கொண்டிருக்கும் மனது சும்மாவிராது. ஏதேனும் பாவச் செயல்களைச் செய்ய யோசிக்கும். துஷ்ட காரியங்களில் பிரவேசிக்கும். ஆதலின் ஒவ்வொருவனும் தன் கடமையை செய்ய வேண்டியது அவசியம். அக்கடமைகளில் பலவற்றுள் ஜன* தேசத்திற் குழைப்பதை முதன்மையான கடமையாகக் கொள்ள வேண்டியது எல்லாவற்றிலும் முக்கியம்.
- இந்தியா (05.01.1907)
* இங்கே சோறு, ஜன என்ற இரண்டு வார்த்தைகளும் மின்பிரதியில் தெளிவாக இல்லை.
$$$