-உ.வே.சாமிநாதையர்

17. இரண்டாவது முறை சென்னைக்குச் சென்றது
சென்னைக்குச் சென்றது
சென்னையிலிருந்த கா.சபாபதி முதலியார் முதலியவர்கள் இவருடைய கல்வி வளர்ச்சியைக் கேள்வியுற்று இவரைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாய் இவருக்கு எழுதும் கடிதங்களில் தங்கள் கருத்தைக் குறிப்பித்து வந்தார்கள். இவருக்கும் அவ்வாறே அவர்களைக் கண்டு மீண்டும் அளவளாவ வேண்டும் என்னும் ஆவல் இருந்தது. அதனால் சென்னைக்குப் புறப்பட்டு இடையிலேயுள்ள பட்டீசுவரம், திருவாவடுதுறை, தருமபுரம், சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு சில வாரங்களில் சென்னை வந்து சேர்ந்தார். அங்கே சபாபதி முதலியார் முதலியோர்களால் வரவேற்கப் பெற்றனர். தாண்டவராயத் தம்பிரானவர்களைக் கண்டு ஸல்லாபம் செய்து கொண்டும் மற்ற வித்துவான்களோடு பழகி இன்புற்றும் வந்தனர். திரிசிரபுரம் சென்ற பின்பு இவர் இயற்றிய காப்பியங்களிலும் பிரபந்தங்களிலும் உள்ள செய்யுட்களை அவர்கள் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தனர்.
*1 சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை
அப்பொழுது திருமயிலைத் திருக்குளத்தின் தென்கரையிலுள்ளதும் இப்பொழுது சித்திரச் சத்திரமென்று வழங்கப் பெறுவதுமாகிய சத்திரத்தைக் கட்டுவித்து அதற்குப் பலவகையான வருவாய்களையும் ஏற்படுத்திப் புகழ்பெற்று விளங்கிய வியாஸர்பாடி விநாயக முதலியார் மீது கா.சபாபதி முதலியார் முதலியவர்கள் பல செய்யுட்கள் இயற்றிப் பாராட்டினர். இவரையும் பாடும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் விருப்பத்தின்படி இவர் அச் சத்திரத்தின் பெருமையைச் சிறப்பித்து 100-விருத்தங்களடங்கிய மாலையொன்று இயற்றிப் பல புலவர்களுக்கு இடையேயிருந்து அரங்கேற்றினர். அம்மாலை ‘சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை’யென்று பெயர் பெறும். அந் நூலைப் பாராட்டி, சபாபதி முதலியார் முதலியவர்கள் கொடுத்த சாத்துக்கவிகள் பல அந் நூலின் பெருமையைப் புலப்படுத்தும். அதிலுள்ள செய்யுட்களுட்சில வருமாறு:
“தெருள்பெற்றான் வியாசநகர் விநாயகமா லதற்கேற்பச் செயிர்தீர் மிக்க பொருள்பெற்றா னதற்கேற்ப மயிலையிற்சத் திரங்கட்டிப் புகழ்சால் பெம்மான் அருள்பெற்றா னிவனன்றிப் பொருள்பெற்றும் அறஞ்செய்யா அவனி யுள்ளார் மருள்பெற்றார் சிறுமைபெற்றா ரின்னுமென்பெற் றாரென்னின் வசைபெற் றாரே.” “கருதரிய புகழ்மயிலைக் காபாலி தீர்த்தநெடுங் கரையோர் நான்குட் பொருவருகீழ் கரைகபா லீச்சரத்தா லேக்கழுத்தம் பூண்டு மேவும் அருமைகொள்தென் கரைவிநா யகமுகில்சத் திரத்தாலஃ தடையு மற்றை இருகரையு மென்செய்வா மென்செய்வா மென்றேங்கி யிருக்கு மாலோ.” “நனையமலர்ப் பொழின்மயிலை விநாயகமால் சத்திரத்தில் நலஞ்சா லோவர் வினையமுற வாய்ந்தமைத்த வவனுருவப் படமொருபான் மேவி வைகும் அனையவன்பாற் பேசவரு மறையவரப் படத்தினைக்கண் டாசி கூறித் தினையளவும் விடார்மொழிய வவனருகே யிருந்துநகை செய்வன் மாதோ.”
விநாயக முதலியார் அந்தப் பிரபந்தத்திற்குப் பரிசிலாக நூறு வராகன் இவருக்கு ஸம்மானஞ் செய்தனர். அத்தொகை இவர் சென்னையிலிருந்து காலங் கழிப்பதற்கு அனுகூலமாக இருந்தது. அந்தப் பிரபந்தம் பின்பு நள வருடம் சித்திரை மாதம் (1856) பதிப்பிக்கப்பெற்றது. பின் விநாயக முதலியார் மீது இவர் சில தனிச் செய்யுட்களும் இயற்றினர்.
*2 வியாசைக் கோவை
இப்படியிருந்து வருகையில் இவர் செய்த பல செய்யுட்களைக் கேட்டுவந்த கா.சபாபதி முதலியாரும் பிறரும் ஒருசமயம் வேதநாயகம் பிள்ளையின் மீது இவர் இயற்றிய குளத்தூர்க் கோவையிற் சில செய்யுட்களைக் கேட்டு இன்புற்று விநாயக முதலியார் மீதும் ‘ஐந்திணைக் கோவை’யொன்று செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கி அவ்வண்ணமே செய்யத் தொடங்கி நூறு செய்யுட்கள் செய்து முடித்தனர். அவற்றைக் கேட்ட விநாயக முதலியார் பெரிதும் மகிழ்ந்து, விரைவில் நிறைவேற்றித் தரும்படி கூறி ரூபாய் நானூறு பரிசிலளித்தனர். பின்பு அக்கோவையைத் திரிசிரபுரம் போய் முடித்தனுப்புவதாகக் கூறினார். இவருடைய கட்டளையின்படி அக்கோவையின் எஞ்சிய பகுதி சி.தியாகராச செட்டியாரால் இயற்றப்பெற்றது. அக்கோவை சம்பந்தமான ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்:
தியாகராச செட்டியார் உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு உறையூரில் இருந்தபொழுது அவரைப் பார்ப்பதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஒருநாள், “ஐயா அவர்களும் நீங்களும் இயற்றிய வியாசைக்கோவையை நான் பார்த்ததில்லை. இதுவரையில் அது கிடைக்கவில்லை. தங்களிடம் உண்டோ?” என்றேன். “ஓர் அச்சுப்பிரதியே என்னிடம் இருக்கிறது. அதனைக் கொடுப்பதற்கு என் மனம் துணியவில்லை” என்றார் செட்டியார். நான், “படித்துவிட்டுத் தந்துவிடுவேன்” என்றேன். அவர் அப்பால் அதனைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் முன்னிலையில் ஒருநாட் காலை தொடங்கி அதனைப் படித்துப் பொருள் கேட்டுவந்தேன். அவர் கடினமான இடங்களுக்குப் பொருள் சொல்லிக் கொண்டுவந்தார். நூறு பாடல்கள் ஆனவுடன் திடீரென்று அவர், “இனிமேல் வாசிக்க வேண்டாம்; நிறுத்தி விட வேண்டும்” என்றார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் விளங்கவில்லை; “’ஏன் நிறுத்தச் சொல்லுகிறீர்கள்? நேரமாகவில்லையே. இன்னும் சில பாடல்கள் படிக்கலாமே. நல்ல இடமாக இருக்கிறதே” என்றேன். “இல்லை. உங்களுக்கு என்னிடத்தும் என் பாட்டினிடத்தும் மிக்க மதிப்புண்டு. இனி, மேலே வாசித்தால் அந்த மதிப்புக் குறைந்து விடும்” என்றார். “என்ன காரணம்?” என வினவினேன். “இதுகாறும் உள்ள பாடல்கள் ஐயா அவர்கள் பாடியவை; இதற்கு மேலுள்ளவை அவர்களுடைய கட்டளையின்படி நான் செய்தவை. அவர்களுடைய இனிய செய்யுட்களை வாசித்த பின் தொடர்ந்து என் பாட்டுக்களையும் வாசித்தால் என் யோக்கியதை வெட்டவெளியாய்விடும். அமிர்தத்தையுண்டவன் பிண்ணாக்கை உண்டது போலிருக்கும்” என்று சொல்லி வருந்தினார்; அப்பொழுது அவர் கண்களிலிருந்து நீர் பெருகிற்று. பிள்ளையவர்களது கவிச்சுவையை நன்கு அறிந்து அதில் ஈடுபட்டவர்களுள் செட்டியார் முதல்வரென்பதும் அந் நூலின் சிறப்பும் இதனாலும் வெளியாயின.
அக்கோவைப் பாடல்களிற் சில வருமாறு:
தலைவன் தலைவியைப் புகழ்தல் “புரவோன் கவிஞர்வைப் பானோன் விநாயக பூபனெனும் உரவோன் வரையிவர் தம்வாண் முகத்தொழி லுட்சிறிதா தரவோ னிரந்து கொளத்திரி தன்மையிற் றானலவோ இரவோ னெனும்பெயர் பெற்றா னுடுபதி யென்பவனே.” தலைமகன் மறுத்தல் “நீர்வேட் டடைந்திரந் தோரைப் பிரமற்கு நேடரிய ஆர்வேட்ட வேணிப் புனல்கொண்டுண் பாயென் றறைதலொக்கும் பார்வேட்ட சீர்த்தி விநாயக மால்வரைப் பான்மொழியாய் தார்வேட்ட மங்கையை நீவரைந் தெய்தென்று சாற்றியதே.”
திருமயிலைப் புராணம் செய்யத் தொடங்கியது
விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்.
குளத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றது
இவர் இங்ஙனம் சென்னையில் இருந்துவருகையில், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் ஆகியவர்கள் பெரும்பாலும் தங்கித் தமிழை அபிவிருத்தி செய்தும் பலருக்குப் பாடஞ்சொல்லியும் தமிழ் நூல்களை இயற்றியும் விளங்கிய இடங்களைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. உண்டாகவே விநாயகபுராணம் அரங்கேற்றப்பட்ட இடமாகிய சென்னை ஐயாப்பிள்ளை தெருவிற் கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ பிரஸந்ந விநாயகரைத் தரிசித்தார்; விநாயக புராணம் செய்வித்த சிதம்பர முதலியாரென்பவரின் பரம்பரையினராகிய ஒருவரால் அழைக்கப்பெற்றுக் குளத்தூர் சென்றார். அங்கே கோயில்கொண்டெழுந்தருளிய ஸ்ரீ சோமேசரையும் ஸ்ரீ அமுதாம்பிகையையும் தரிசனம் செய்தார். அவர்கள் இருந்துவந்த மடத்திற்றங்கினார். அவர்களுடைய பெருமையை ஆண்டுள்ளார்க்கெல்லாம் எடுத்துரைத்தார். “சிவஞான முனிவர், சோமேசர் முதுமொழி வெண்பாவும் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழும் குளந்தைப் பதிற்றுப்பத்தந்தாதியும் இயற்றுவதற்கும் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் விநாயக புராணம் செய்வதற்கும் அவர் பெரும்பாலும் வாசம் செய்வதற்கும் இடமாகவிருந்த இவ்வூர் என்ன புண்ணியம் செய்ததோ? இந்தப் பெருமையைப் பெரிய நகரமும் பெற்றிலதே!” என்று மனமுருகினர்; சில நாள் அங்கிருந்தனர்.
அப்பால் தொட்டிக்கலைக் கேசவ முதலியார் பரம்பரையினராகிய கிருஷ்ணசாமி முதலியாரால் அழைக்கப்பெற்றுத் தொட்டிக்கலை சென்றார். அங்கே முற்கூறிய சிவஞான முனிவர் முதலிய மூவரும் இருந்த மடத்தையும் அவ்வூரிற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் விநாயகரையும், ஸ்ரீ சிதம்பரேசுவரரையும், ஸ்ரீ சிவகாமி அம்மையையும், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளையும் தரிசனம் செய்தார். *3 சிவாலயத்தின் முன் மண்டபத்திற் சிலாரூபமாக எழுந்தருளியிருக்கும் சிவஞான முனிவரையும் தரிசித்தார். சிலதினம் அங்கே அவர்களால் உபசரிக்கப்பட்டுத் தங்கியிருந்தார்.
*4 சிதம்பரேசர் மாலை
அங்கே இருக்கும்பொழுது சிவஞான முனிவராலே இயற்றப்பட்ட செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, சுப்பிரமணிய முனிவர் இயற்றிய கலைசைச் சிலேடை வெண்பா, கலைசைக்கோவை முதலியவற்றின் நயங்களை அன்பர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணசாமி முதலியார், “இந்த ஸ்தலத்துச் சிதம்பரேசுவரர் மீது ஒரு சந்நிதிமுறை சுப்பிரமணிய முனிவராற் செய்யத் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாமல் நின்றுவிட்டமையால் தாங்கள் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று வேண்டினார். அவ்வண்ணமே இவர் செய்யத் தொடங்கிச் சிதம்பரேசர் மாலையொன்றைமட்டும் அங்கே செய்து முடித்தனர். பின்பு திரிசிரபுரம் போய் எஞ்சியவற்றைச் செய்தனுப்புவதாகச் சொல்லி விடைபெற்றுத் திரும்பினார். பின்பு அச்சந்நிதிமுறை முற்றுப்பெறவில்லை. சிதம்பரேசர் மாலையிலுள்ள சில செய்யுட்களின் பகுதிகள் வருமாறு:
“வட்டநாண் மலர்மேற் கடவுளென் றலைமேல் வருந்துறக் கடவையென் றெழுதி இட்ட தீ யெழுத்து நீரெழுத் தாதற் கெத்தவஞ் செய்துளே னடியேன்" (33) “என்றுமை யாற்றை மேவுமென் மனநின் இணையிலை யாற்றைமே வாது சென்றுயர் தில்லை தரிசித்த தில்லை” (72) “மறைவனங் கொடிய பாவியேன் விழிக்கு மறைவன மாயின தாரூர் அறையருள் பெறுவான் புகுதயா னாரூ ராறெனி னஞ்சுவன் மூழ்க” (73) “குதித்தநீர்க் கோலக் காவுறேன் வீணே கோலக்காத் தோறுமுற் றுழல்வேன்” (75) “அரும்பிய மலர்நீர் வாஞ்சிய மொருநா ளாயினும் வாஞ்சியம்” (76) “உடற்பரங் குன்ற நின்பரங் குன்ற முற்றொரு காற்றொழேன் கருவூர் விடற்கரு மாசை கொண்டெழேன் கருவூர் விடற்கரு மாசைமிக் குடையேன்” (77) “நெற்படு பழனம் பற்பல வேண்டி நின்றன னீயினி திருக்கும் மற்படு பழனம் வாஞ்சியேன் கொடிய வஞ்சக னல்லனோ கடையேன்” (85)
திரிசிரபுரம் மீண்டது
இப்படியே அம்முனிவர்கள் இருந்த இடங்களையெல்லாம் இடையிடையே பார்த்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்து சிலநாள் தங்கி அங்கிருந்த வித்துவான்களோடு பழகிக் கிடைத்த நூல்களைச் சேகரித்துக்கொண்டு பின்பு எல்லாரிடமும் பிரியாவிடை பெற்றுச் சென்னையை விட்டுப் புறப்பட்டார். இடையிலே உள்ள பல ஸ்தலங்களையும் தரிசித்துக்கொண்டு வருகையில் திருப்பாதிரிப்புலியூரில் சில நாள் தங்கினார். அப்பொழுது இவருக்குத்தக்க உபசாரங்களைச் செய்து ஆதரித்தவர் இவர் மாணாக்கராகிய சிவசிதம்பர முதலியாரென்பவர். பின்பு அவ்விடத்தினின்றும் நீங்கி திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். வந்து வழக்கம் போலவே பாடஞ் சொல்லுதல் முதலியவற்றைச் செய்து வருவாராயினர்.
தாண்டவராயத் தம்பிரானவர்கள்பால் பேரூர்ப் புராணம் பெற்றது
ஆனந்த வருஷத்தில், சென்னையிலிருந்த தாண்டவராயத் தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சி செல்வதற்குப் பயணமாகி திரிசிரபுரம் வந்து மெளனஸ்வாமிகள் மடத்தில் சிலநாள் தங்கினர். அவர் வரவையறிந்த இவர், மாணாக்கர்களுடன் சென்று தரிசித்துச் சம்பாஷித்துக் கொண்டிருந்தார். அப்போது இவர், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர்ப் புராணம் தம்பாலில்லை யென்றும் அதனைப் படித்து இன்புற வேண்டுமென்னும் விருப்பம் தமக்கு உள்ளதென்றும் அதனை வருவித்துத் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவர், “இப்பொழுது என் கையில் அது வந்துள்ளது. ஆனால் கல்லிடைக்குறிச்சிக்கு அதனைக் கொண்டுபோக வேண்டியவனாகவிருக்கிறேன்” என்றார்.
மீ: அதைப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் அடியேனுக்கு மிகுதியாக இருத்தலால் *5 அங்குத்தி கொடுத்தருளுமாயின் விரைவில் பிரதி செய்துகொண்டு கொடுத்துவிடுவேன்.
தாண்டவ: நான் இன்னும் சில தினங்களே இங்கு இருப்பேன். அதற்குள் நீங்கள் எப்படிப் பிரதி செய்து கொள்ள முடியும்? ஒரு மாதமாவது அதற்கு வேண்டாமா?
மீ: வேண்டாம். அங்குத்தி குறிப்பிடும் காலத்திற்குள்ளாகவே பிரதி செய்து கொடுத்துவிடுவேன். அதைப்பற்றி அங்குத்திக்குச் சிறிதேனும் கவலை வேண்டாம்.
தாண்டவராயத் தம்பிரானவர்கள், “நான் பாடஞ் சொல்வதற்கு வைத்திருக்கும் பிரதியாதலால் அவசியம் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி அதனைக் கொடுத்தனர். உடனே அதனை இவர் வாங்கிச் சென்று தம்முடைய மாணாக்கர்களுள் பனையோலையில் எழுதக்கூடியவர்கள் சிலரைத் தேர்ந்து அழைத்து, அப்புத்தகத்திலுள்ள ஏடுகளைப் பிரித்து அவர்களிடம் கொடுத்து ஒரு பாகத்தைத் தாம் வைத்துக்கொண்டு எழுதுவித்தும் எழுதியும் சில தினங்களுள் முடித்து உடனுடன் ஒப்பு நோக்கிவிட்டுத் தம்பிரானவர்கள் புறப்படுவதற்குள் பிரதியைச் சேர்ப்பித்து விட்டார்.
இடையிடையே மாணாக்கர்களுடன் போய்த் தாண்டவராயத் தம்பிரானவர்களைத் தரிசித்து வருவதுண்டு. அக்காலத்தில் மாணாக்கர்களுள் ஒவ்வொருவரையும் அவர் பரீட்சித்து அவர்கள் பாடங்கேட்ட முறையைத் தெரிந்து சில காலத்துப் பல நூல்களை மாணாக்கர்கள் ஒழுங்காகப் பாடங்கேட்டிருத்தலையும் இவர் வருத்தமின்றி இடைவிடாமற் பாடஞ்சொல்லிய அருமையையும் பற்றி மிகவும் வியப்புறுவாராயினர். அவர் ஒவ்வொன்றையும் சிரமப்பட்டு ஆசிரியரிடம் கற்றவராகையால் அவருக்கு இவருடைய அருமை நன்கு புலப்பட்டது. ‘இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து பாடஞ் சொல்வாராயின் இவருடைய கல்வி பலர்க்குப் பயன்படக்கூடும்; ஆதரவும் ஊக்கமும் இவருக்கும் வளர்ச்சியடையும்’ என்று அவர் எண்ணினார்.
மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவரைப் பற்றி அறிதல்
சில தினங்களுக்குப் பின்பு தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சிக்குச் சென்றார். திருவாவடுதுறை யாதீனத்தில் அப்போது சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் அங்கே இருந்தார். அவர் தாண்டவராயத் தம்பிரானவர்களிடம் பல தமிழ் நூல்களைப் பாடங்கேட்டவர். அவரைக்கொண்டே மாணாக்கர்களுக்கும் பாடம் சொல்லச் செய்யலாமென்று தேசிகர் எண்ணி அக்கருத்தை அவரிடம் வெளியிட்டனர். தாண்டவராயத் தம்பிரானவர்கள், “என்னுடைய தேகநிலை அவ்வாறு செய்ய இடந்தராது; வழக்கமும் இல்லை. திரிசிரபுரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யென்று ஒரு வித்துவான் இருக்கிறார். அவர் இரண்டுமுறை சென்னைக்கு வந்திருந்தார். அக் காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. பின்பு திரிசிரபுரத்திலும் பழகினேன். அப்பொழுது அவருடைய அருமை நன்கு விளங்கிற்று. பாடஞ் சொல்வதிலும் செய்யுள் செய்வதிலும் அவருக்கு இணையாக இக்காலத்தில் யாரும் இல்லையென்றே சொல்லலாம்; இடைவிடாமற் பாடஞ் சொல்வதிற் சிறிதேனும் சலிப்பில்லாதவர்; நிறைந்த கல்விமான். இந்த ஆதீன வித்துவானாக அவர் நியமிக்கப்படுவாராயின் ஆதீனத்தின் புகழ் எங்கும் பரவும். அவரைக் கொண்டு பல மாணாக்கர்களைப் படிப்பிக்கலாம்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர். அக்காலமுதல் சுப்பிரமணிய தேசிகர் இவரை ஆதீனத்தில் இருக்கச்செய்ய வேண்டுமென்னும் எண்ணம் உடையவராகித் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தார். நிற்க.
தாண்டவராயத் தம்பிரானவர்கள் பிரதியைப் பார்த்தெழுதிய பேரூர்ப் புராணம் பின்பு படிப்பவர்களாற் பல பிரதிகள் செய்யப்பட்டது. அப்பால் இச்செய்தியை அறிந்த பிள்ளையவர்களுடைய மாணாக்க பரம்பரையினர் ஒவ்வொருவரும் அப்பிரதியைப் பார்த்துக்கொண்டே கைவழிப் போக்கியதில் இவருடைய மாணாக்கருள் ஒருவரும் அருங்கலை விநோதரும் வரகனேரிப் பட்டாதாருமாகிய சவரிமுத்தா பிள்ளையிடம் வந்து தங்கிற்று. அவர் அதனைப் பொன்னேபோற் போற்றிச் சேமத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அது தெரிந்த நான் பிற்காலத்து அவரிடம் சென்று கேட்டு அதனை அரிதிற் பெற்று வந்து என் பால் வைத்து, பிள்ளையவர்களைப் பார்ப்பதுபோல் பார்த்து வருகிறேன்.
தாண்டவராயத் தம்பிரானவர்களின் கடிதம்
தாண்டவராயத் தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருந்து மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கையில் முகத்தில் ஒரு பரு உண்டாகி வருத்தினமையால் திருச்சிராப்பள்ளியில் ஐந்து தினங்கள் தங்கினார். பிள்ளையவர்கள் சென்று ஸம்பாஷித்து வந்ததும் அப்பொழுது அங்கே இருந்ததும் அக்காலத்தில் இவரோடு பழகி இன்புற்றதும் மேலகரம் சுப்பிரமணிய தேசிகருக்கு அவர் எழுதிய விண்ணப்பத்திலுள்ள அடியிற்கண்ட வாக்கியத்தால் விளங்கும்.
“அடியேன் திரிசிரபுரத்தில் மெளனஸ்வாமிகள் மடத்தில் தங்கி *6 பருவரலாற் பருவரலுற்று வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சம்பாஷணையினால் *7 அஞ்சு தினங்களையும் அஞ்சுதினங்களாகக் கழித்தேன்.”
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 3954 – 4083.
2. மீ. பிரபந்தத் திரட்டு, 4160-4609.
3. “ஓதரிய வாய்மைச் சிவாகமங் கட்கெலா முற்றபே ராகரமதாய்
ஓங்குதிரு வாவடு துறைப்பதியி லற்புதத் தொருவடிவு கொண்டருளியே
பேதமுறு சமயவாதி களுள மயக்கைப் பெயர்க்கும்ரச குளிகையாகிப்
பிரியமுட னேவந் தடுத்தவர்க் கின்பப் பெருங்கருணை மேருவாகி
ஆதரித் தடியேங்க ளுண்ணத் தெவிட்டாத வமிர்தசா கரமாகியே
அழகுபொலி கலைசைச் சிதம்பரே சுரரடிக் கதிமதுர கவிதைமாரி
மாதவர் வழுத்தப் பொழிந்தருளி யென்றுமவர் மணிவளர் சந்நிதியிலோர்
மணிவிளக் கென்னவளர் சிவஞான மாதவன் மலர்ப்பாதம் வணங்குவாமே.”
4. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2915 – 3015.
5. தாங்கள் என்னும் பொருளுடைய இச் சொல்லைத் தம்பிரான்மார்களோடு பேசும்பொழுது கூறுதல் சம்பிரதாயம்.
6. பருவரல் – பரு (ஒருவகைச் சிரங்கு) வருதல்; துன்பம்.
7. அஞ்சு தினம் – ஐந்து தினங்கள்; அம் சு தினம் – அழகிய நல்ல தினம்.
$$$