-ஜடாயு

அம்மா அப்பாவுக்கு நடுவில் இருவரையும் அரவணைத்து உட்கார்ந்திருக்கிறான் அந்தப் பிள்ளை. “அம்மாவிடம் ஒரு முத்தம் கொடு” என்று கேட்கிறான். ஆசையுடன் அம்மா அருகில் வர, உடனே சட்டென்று நகர்ந்து விடுகிறான்! பிறகு நடப்பதைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கிறான். இந்தக் கயிலாயக் காட்சியை அழகாகத் தீட்டிக் காட்டுகிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல்.
மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்
அம்மை தருக முத்தம் என அழைப்ப, ஆங்கே சிறிதகன்று
தம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.
இப்படி எதிர்பாராத நேரத்தில் எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அந்தக் குறும்புக்கார வேழமுகனின் பாதங்களைத் தலைமேல் சூடுகிறேன் என்று பாடுகிறார் புலவர். ‘நந்திக் கலம்பகம்’ என்ற நூலின் காப்புச் செய்யுளாக வரும் பாடல் இது.
பிள்ளையார் என்றால் குறும்புக்குப் பஞ்சமா என்ன? அவரது திருவுருவத்தைக் கண்டவுடன் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சிகளுக்கும் முசுடுகளுக்கும்கூட சட்டென்று முகத்தில் ஒரு புன்னகையும் மலர்ச்சியும் வந்து விடுவதைப் பார்க்கிறோம். ப்ரஸன்ன வதனம் என்று சொன்னது பொருத்தமானதுதான்.
“மனது கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து குழப்பமாக இருக்கும் நேரங்களில் அப்படியே தெருவில் நடந்துபோய் ஒன்றிரண்டு பிள்ளையார்களைப் பார்த்துவிட்டு வருவேன். மனது தெளிந்து நிர்மலமாகி விடும்,” என்று சொல்வாராம் ஜெயகாந்தன். “நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன் பிள்ளையாரை நினைப்பேன்” என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நாத்திகவாதிகள் அடுத்த சில நாள்கள் இதற்காக அவரை வறுத்தெடுத்து வசைபாடித் தள்ளிவிட்டார்கள்! ஆனால் பிள்ளையாருக்கு ஒன்றுமில்லை. அப்படி அறிவித்துக் கொண்ட நாத்திகரையும் பிள்ளையார் நிச்சயம் தன் தும்பிக்கையால் அரவணைப்பார். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை.
பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.
அண்மையில் பிள்ளையார் விசர்ஜனத்துக்காக அல்சூர் ஏரிக்கரைக்குப் போயிருந்தபோது அதை நேரடியாக உணர்ந்தேன். பல்வேறு தரப்பட்ட மக்கள் இணைந்து வாழும் எங்கள் cosmopolitan பெங்களூரு நகரம் விநாயக சதுர்த்தியின் போதுதான் உண்மையிலேயே கலாசார ரீதியாக திருவிழாக் கோலம் பூணுகிறது. மற்றதெல்லாம் உள்ளீடற்ற வணிகமயக் கொண்டாட்டங்களே.
விதவிதமான மக்கள், அதற்கேற்ப விதவிதமான விநாயகர்கள். திருவள்ளுவரும் அம்பேத்கரும் விவேகானந்தரும் வீரசிவாஜியும் இணைந்திருக்கும் பேனர் முதல் பிரபாகரன் டி-ஷர்ட் போட்டு காவிக் கொடி பிடிக்கும் தமிழீழ ஆதரவு இளைஞர் வரை எல்லாரையும் இணைக்கிறார் பிள்ளையார். எங்கும் ஒரே ஆரவாரமும் ஆர்ப்பாட்டமுமாக இருந்தாலும் எல்லார் முகத்திலும் புன்சிரிப்பு, நிறைவு, அமைதி.
மக்கள் வீடுகளுக்குள் தெய்வ வழிபாடாகச் செய்து வந்த விநாயக பூஜையை பாலகங்காதர திலகர் சமூக விழாவாக மாற்றியமைத்து மகாராஷ்டிரத்தில் பெரியதொரு தேசிய விழிப்புணர்வை உண்டாக்கினார். பின்னர் அது பாரத தேசமெங்கும் பரவியது. இதோ இந்த வருடம் (2011) பல பந்தல்களில் “அண்ணா கணபதி”யும் இடம் பெற்று விட்டார்! ஊழல் ஒழிப்புக்கான நீண்ட நெடிய போராட்டத்திற்குப் போட்டாயிற்று பிள்ளையார் சுழி!
***
கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே!
என்று பாரதியாரும் தனது பாட்டில் விடுதலை வேட்கைக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
புதுவையில் வாழ்ந்த காலத்தில் தவறாமல் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை வழிபட்டு வந்தார் பாரதியார். “விநாயகர் நான்மணி மாலை” என்ற அற்புதமான நூலை இந்த விநாயகரை முன்வைத்து இயற்றியுள்ளார். வெண்பா, விருத்தம், கலித்துறை, அகவல் என்ற நால்வகைப் பாக்களையும் கலந்து தொடுக்கப்பட்ட தெய்வீக மணம் வீசும் கவிதை மலர்மாலை இது. பாரதியார் மறைந்த பிறகு, 1929-ஆம் ஆண்டு, கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றது.
கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
-என்று விநாயகரை வாழ்த்தித் தொடங்குகிறது நூல்.
ஒரு சம்பிரதாயமான பக்திப் பாடலாக மட்டுமின்றி, தெய்வீகம், தேசபக்தி, அன்பு, கருணை, எழுச்சி, மனிதநேயம் ஆகிய உன்னத கருத்துக்களைப் பேசும் உயர் நூலாக இது விளங்குகிறது. விநாயகரைத் தியானிக்கும் தோறும் இந்த நற்பண்புகளையும் லட்சியங்களையும் நாம் தியான மந்திரங்களாகக் கொள்ளும் வண்ணம் பாரதியார் இதைப் பாடியிருக்கிறார்.
கணபதி தாளைக் கருத்திடை வைத்தால், என்ன கிடைக்கும்?
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்; அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்; திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துக்கமென்று எண்ணித் துயரிலாது இங்கு நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்.. அச்சம் தீரும், அமுதம் விளையும்; வித்தை வளரும் வேள்வி ஓங்கும்..
எந்தத் தொழிலையும் தொடங்குவதற்கு முன்னால், தடைகள் அகல விநாயகரை வேண்டித் தொழுவது ஹிந்துப் பண்பாடு. இந்தப் பண்பாட்டின் படியே தனது தொழில் அபிவிருத்திக்காக பாரதியாரும் வேண்டுகிறார்.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப் பொழுதும் சோராதிருத்தல்..
இதையே தொழிலாகச் செய்து கொண்டிருந்தால், பிறகு வாழ்க்கைப் பாட்டை யார் கவனிப்பார்கள்?
… உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்;
சிந்தையே இம்மூன்றும் செய்.
என்று தன் மனதிற்கு நம்பிக்கையூட்டுகிறார். தேசத்திற்கு உழைப்பவருக்குத் தெய்வம் துணை செய்யும் என்ற நம்பிக்கையில் பாரதி எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதும் இதிலிருந்து புலனாகிறது.
அனைத்து இடர்களையும் களையும் ஆனைமுகனை அச்சமின்மையின் உருவமாகவே இந்தத் துதிப்பாடலில் தியானித்துப் பாடுகிறார்.
அச்சமில்லை அமுங்குத லில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை, பாவமில்லை பதுங்குதலில்லை ஏது நேரினும் இடர்பட மாட்டோம்; அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்; கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்; யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்…
எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கும் நிராகரிப்புகளுக்கும் இடையில் வறுமையில் வாழ்ந்த போதும், வாழ்க்கைத் துன்பங்களுக்கு நடுவிலும் அதன் சாரமான இன்பத்தை உள்ளூர உணர்ந்தவர் பாரதி. அதனால் தான் ’எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்றும் ’கணபதி இருக்கக் கவலை ஏன்’ என்றும் அவரால் பாட முடிந்தது.
வானமுண்டு, மாரி யுண்டு; ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே; தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், காண நல்லுலகும், களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றும் இங்குளவாம்; சலித்திடாய்; ஏழை நெஞ்சே வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னோ!
”இந்நூல் புதுவை மணக்குளப் பிள்ளையாரை உத்தேசித்துச் செய்திருப்பினும் ஷண்மதங்களுக்குள் காணாபத்திய (அதாவது பரம்பொருளைக் கணபதியாகத் தொழும்) முறையைத் தழுவியிருக்கிறது” என்று பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட முதற்பதிப்பின் முன்னுரை கூறுகிறது. அதன்படியே பல இடங்களில் கணபதியை சகல தேவ சொரூபமாகவும் அனைத்தும் கடந்த பரம்பொருளாகவும் கண்டு சிலிர்க்கிறார் பாரதி.
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்
என்று தொடங்கி,
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா யெஹோவா எனத்தொழுது அன்புறும்
தேவரும் தானாய்..
என்று பிற நாட்டு தெய்வங்களையும் (இந்த தெய்வங்கள் பற்றிய அந்த மதங்களின் இறையியல் கொள்கைகள் பாரதியின் பரம்பொருள் தத்துவத்துடன் பொருந்தாத போதும்) பரந்த மனத்துடன் அரவணைத்து,
.. திருமகள், பாரதி,
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
என்று பாடிச் செல்கிறார்.
விநாயகப் பெருமானைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் ஆழ்ந்த உட்பொருள் கொண்டவை. பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது ஒரு தொன்மம். இறைவனும் இறைவியும் களிறும் பிடியுமாகிக் கலந்து ஆனைமுகன் அவதரிப்பது மற்றொரு தொன்மம். மாதங்கர்கள் என்ற பழங்குடிகள் வழிபட்ட புராதன யானைமுகக் கடவுள்தான் விநாயகராக ‘ஆரிய மயமாக்கப்பட்டு’ விட்டார் என்பது ஒருதரப்பு சமூக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நவீனத் தொன்மம். ரிக்வேத மந்திரங்களில் புகழப்படும் பிரகஸ்பதி, பிரமணஸ்பதி ஆகிய தெய்வங்களின் இயல்பான பரிமாண வளர்ச்சியே கணபதி என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எப்படியானாலும், இந்தத் தொன்மங்களின் தொகுப்பாகவும், இவை அனைத்தையும் உள்ளடக்கி அவற்றையும் கடந்து திகழும் பேரொளியாகவும் திகழ்கிறார் கணநாதர். தியானிப்போரின், வழிபடுவோரின் ஆன்ம நலன்களையும், உலக நலன்களையும் ஒருங்கே விகசிக்கச் செய்பவராக விநாயகர் விளங்குகிறார். வேதாந்தத்தின் ஒளியால் சுடர்விடும் ‘தத்துவத் தெய்வமாகவும்’ எளிய மக்களின், பழங்குடி மக்களின், விளிம்பு நிலை மாந்தரின் ‘இயற்கைத் தெய்வமாகவும்’ அவரே அருள்பாலிக்கிறார். இத்தத்துவத்தை பாரதியும் எடுத்துரைக்கிறார்–
இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித் தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய் உள்ளொளி யாகி உலகெலாம் திகழும் பரம்பொருளேயோ பரம்பொருளேயோ! ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும் தேவதேவா சிவனே கண்ணா வேலா சாத்தா விநாயகா மாடா இருளா சூரியா இந்துவே சக்தியே வாணீ காளீ மாமகளேயோ! ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே! வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே.. ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான் வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும் தானே யாகிய தனிமுதற் கடவுள், ’யான்’ ’எனது’ அற்றார் ஞானமே தானாய் முக்தி நிலைக்கு மூலவித்தாவான், சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்…
இத்தகைய சத்திய வடிவான கடவுளிடம் உலகியல் வெற்றியையும், ஆன்மிக அருள் சக்தியையும் ஒருங்கே வேண்டித் தொழுகிறார் கவியரசர்.
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன். நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன். அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன். உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன், வேண்டா தனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.
நல்வாழ்க்கையையும், வெற்றியையும், அன்பையும் அருளையும் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், தன் நாட்டுக்காகவும் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், அனைத்து உயிர்களுக்கும், புல்பூண்டுகளுக்கும் அருளுமாறு விநாயகரை வேண்டுகிறார்.
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்; கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்; மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்றுநான் ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க’என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
பாரதி கண்ட விநாயக தத்துவம் இத்தகு உயர்ந்த விழுமியங்களையும், வாழ்க்கை நெறிகளையும் உள்ளடக்கியது. குறும்புக்காரக் குழந்தை விநாயகன், குவலயம் அனைத்திற்கும் ஒளிதரும் விஸ்வரூப விநாயகனும் ஆவான் என்பதை பாரதியின் பனுவல் நமக்கு உணர்த்துகிறது.
விநாயக சதுர்த்தியை நாட்டிலும் வீட்டிலும் கொண்டாடும் நன்மக்கள் இதனை உணர வேண்டும். ரசாயன வண்ணங்களால் படாடோபமான கண்ணை உறுத்தும் விநாயக வடிவங்களுக்கு மாற்றாக இயற்கை வண்ணங்களால் கலாபூர்வமாக, அழகுணர்வுடன் விநாயக வடிவங்களை செய்து வணங்க வேண்டும். வங்க மக்களின் துர்கா பூஜைத் திருவுருங்கள் இதற்கு நல்லதோர் முன்னுதாரணமாக இருக்கின்றன. கலாசாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் பாடல்களை மக்களைத் தொந்தரவு செய்யும் வகையில் அலற விடாமல், இனிய மெல்லோசையில் அமைந்த தெய்வபக்தி, தேசபக்திப் பாடல்களையே ஒலிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தையும் நற்பண்புகளையும் போதிக்கும்வண்ணம் கூட்டு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தலாம். விநாயக சதுர்த்தி விழாவை முகாந்திரப்படுத்தி நல்ல கலை, இலக்கியத்தை மக்களிடம் அறிமுகம் செய்யலாம். சமூக விழிப்புணர்வையும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வையும் உருவாக்கலாம். முக்கியமாக, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து, குறிப்பாக தாழ்த்தப்பட்ட தலித் சகோதரர்களையும் அரவணைத்து அன்போடு கொண்டாடும் விழாவே விநாயகனுக்கான உண்மையான வழிபாடு ஆகும்.
அப்போதுதான் பால கங்காதர திலகரும், மகாகவி பாரதியும் கண்ட விநாயக தரிசனம் சமூக வெளிப்பாடாக மலரும். அதுவே நம் லட்சியமாகக் கொள்ளத் தக்கது. வாழும் பிள்ளை காட்டும் வழி அதுவே.
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே.
குறிப்பு:
திரு. ஜடாயு, தகவல் தொழில்நுட்ப வல்லுநர். தமிழ் ஹிந்து இணையதளத்தை நடத்தி வருபவர்.
இக்கட்டுரை தமிழ் ஹிந்து இணையதளத்தில் 2011இல் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.
கணபதி படம் நன்றி: ஓவியர் திரு. ஷ்யாம் அவர்களின் முகநூல் பக்கம்.