-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம் – 6
வந்தேமாதரம்- 1
ஆயுத போராட்டத்திற்காக ரகசியமாகத் திட்டமிடுதல் செயல்பாடுகளை அதிகரித்தல், முழுமையான சுதந்திரம் என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்துதல், பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழையாமல் சாத்வீக முறையில் அதை எதிர்ப்பதற்கு வெகுஜன இயக்கத்தை கட்டி எழுப்புதல் – என்ற மும்முனைத் திட்டத்துடன் அரவிந்தர் செயல்பட்டார். பரோடாவை விட்டு வெளியேற நல்ல வாய்ப்புக்காக அவர் காத்திருந்தார். 1905,1906களில் அவர் வங்காளம் சென்றபோது அங்கு முற்போக்கான மாற்றங்களும் தான் நினைத்த திட்டத்தை முன்னின்று செயல்படுத்துவதற்கான காலமும் கனிந்து வந்ததைக் கண்டார்.
வங்காள மாகாணம் அல்லது பிரசிடென்சி ஆஃப் பெங்கால் எனப்பட்டது மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்டது. இன்றைய மேற்கு வங்க மாநிலம், வங்கதேசம் எனப்படும் நாடு, பிஹார், ஒடிசா, அஸ்ஸாம் மாநிலங்களை உள்ளடக்கிய பகுதி அது. மிகப் பெரிய நிலப்பகுதியாக இருந்ததால் அதை நிர்வாகம் செய்வது கடினமாக இருந்தது. எனவே பிரிட்டிஷ் அரசு அதை இரண்டாகப் பிரிப்பதாக அறிவித்தது. ஒரு பகுதியில் இன்றைய மேற்கு வங்காளம், பிஹார், ஒடிசா மாநிலங்களும் மற்றொரு பகுதியில் அஸ்ஸாம் மாநிலமும் இன்றைய வங்கதேசம் என்ற நாடும் சேர்ந்த பகுதி என இரண்டாகப் பிரிப்பதாக அரசு அறிவித்தது.
அந்தத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஒன்றுபட்ட வங்காளத்தில் வங்க மொழி பேசும் இந்துக்கள் முன்னணி சமுதாயத்தினராக இருந்தனர். மேற்கிலிருந்து வந்த புதிய கருத்துக்கள் முதலில் அவர்களிடம் தான் வந்து சேர்ந்தது. ஆங்கிலக் கல்வியும் அவர்களுக்கே முதலில் கிடைத்தது. இதனால் அவர்கள் மற்றவர்களை விட அதிகமான அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தனர். எனவே பிரிவினைத் திட்டமானது தங்களை குறிவைத்து தாக்குவது என்பதையும் அத்திட்டத்தின் விளைவால் இரண்டு பகுதிகளிலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி விடுவோம், தங்கள் வலிமையும் செல்வாக்கும் மிகவும் குறைந்துவிடும் என்பதையும் முதலில் புரிந்து கொண்டனர். எனவே அவர்கள் நூற்றுக்கணக்கான கூட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கனோரைக் கொண்டு எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். பிரிவினைத் திட்டத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொத்தளிப்பும் எதிர்ப்பும் மறுப்பும் எழுந்தது. திடீரென கூட்டத்தில் ‘வந்தேமாதரம்’ என்ற கோஷம் வந்தது. பயமின்மையையும் வல்லமையையும் தாயிடம் வேண்டும் மந்திரம் அது. அதுவே யுத்த கோஷமானது.
அரவிந்தர் அதைப் பற்றி எழுதுகிறார்:
"முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு பங்கிம் சந்திரர் அந்த மகத்தான பாடலை எழுதினார். சிலர் அதை அறிந்தனர். ஆனால் மாயையில் மூழ்கி இருந்த வங்காளிகள் திடீரென விழித்துக்கொண்டு உண்மையைத் தேட, விதிவசத்தால் ஏற்பட்ட அந்த கணத்தில் யாரோ ஒருவர் ‘வந்தேமாதரம்’ என்று பாடினார். அந்த மந்திரம் கிடைத்த ஒரே நாளில் மக்கள் அனைவரும் தேசபக்தி என்ற மதத்திற்கு மாறிவிட்டனர். அன்னை தன்னை வெளிப்படுத்தினாள். அவள் தரிசனம் கிடைத்த பிறகு கோயில் எழுப்பப்பட வேண்டும்; அதில் அவளை வீற்றிருக்கச் செய்ய வேண்டும்; பலிகள் கொடுக்கப்பட வேண்டும். அதுவரை ஓய்வென்பதில்லை; அமைதி என்பது இல்லை; ஆழ்ந்த உறக்க நிலை இனி இல்லை. அந்த தரிசனம் பெற்ற மகத்தான தேசம், ஆக்கிரமிப்பாளர்களின் நுகத்தடிக்கு தன் கழுத்தை வளைந்து கொடுக்காது."
மக்கள் தங்கள் உணர்வுகளை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தவில்லை. நடைமுறையில் பிரிட்டிஷ் பொருட்களையும் துணிகளையும் புறக்கணித்தனர். அவற்றுக்கு மாற்றாக இந்தியத் தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படித்தான் சுதேசி இயக்கமும் அந்நியத் தயாரிப்புகள் புறக்கணிப்பும் துவங்கியது. அந்த அலை வங்காளத்திற்கு வெளியேயும் பரவத் தொடங்கியது. வங்காளத்தில் இந்த இயக்கத்திற்கு முன் நின்றவர் பிபின் சந்திரபால், மகாராஷ்டிரத்தில் பால கங்காதர திலகர், பஞ்சாபில் முன்னின்றவர் லாலா லஜபதி ராய். லால்-பால்-பால் என்று இவர்கள் மும்மூர்த்திகள் போல அறியப்பட்டனர். தேசம் முழுக்கவும் ஏற்பட்ட இந்த எழுச்சியினால் பிரிட்டிஷ் பொருட்களின் விற்பனை சரிந்தது. 1905 டிசம்பர் மாத கடைசியில் காசியில் கூடிய காங்கிரஸ் மாநாடும் இந்த வெகுஜன எழுச்சியை அலட்சியப்படுத்த முடியாமல், ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

வங்கப் பிரிவினை முடிந்து போன விஷயம் என்றார் வைஸ்ராய் கர்ஸன் பிரபு. இந்தியாவை ஆள வேண்டும் என்பது இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக உரிமை என்று கூறும் முதலாளித்துவத்தின் உச்சம் அவர். பிரிவினை நாளான 1905 அக்டோபர் 16ஆம் தேதி துக்க தினமாக நாட்டு மக்கள் அனுஷ்டித்தனர். வங்காளத்தில் யார் வீட்டிலும் அடுப்பு எரியவில்லை; கடைகள் திறக்கப்படவில்லை; சந்தைகள் இயங்கவில்லை. மக்கள் காலணி இல்லாமல் வெறும் காலுடன் மௌன ஊர்வலம் நடத்தினார்கள். தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ராக்கி அணியும் ரக்க்ஷாபந்தனை நடத்தினார்கள்.
ஜதீன் பானர்ஜி, பரீந்தர்,அபினாஷ் பட்டாச்சார்யா போன்ற தன்னுடைய இளவல்கள் மூலம் நடப்பதை சரியாக அறிந்து கொண்டார் அரவிந்தர். அவர்களுக்கு, ‘மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புரட்சிக்கான கருத்துக்களை இளைஞர்களிடையே பரப்ப வேண்டும். அவர்களை நம் பாசறையில் இணைக்க வேண்டும். இது அருமையான வாய்ப்பு. பிரிவினைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். நம் இயக்கத்திற்கு மேலும் பல ஊழியர்கள் கிடைப்பார்கள்’ என்று அவர் எழுதியிருந்தார். முடிந்து போன விஷயம் என்ற அரசின் நிலையை நிலைகுலைக்க வேண்டும் என்பது அவரது வழிகாட்டுதலில் இருந்தது.
கல்கத்தா பற்றி எரிந்து கொண்டிருந்தது. பத்திரிகைகளிலும் பொதுவெளியிலும் சந்தைகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் சுருக்கமாகச் சொன்னால் எங்கும் ‘சுதந்திரம்’, ‘புறக்கணிப்போம்’ என்ற வார்த்தைகளே வெளிப்பட்டன. பிரிட்டிஷாரை வெளியேற்ற வேண்டும் என்று எல்லோரும் பேசினார்கள். சுதேசி, பகிஷ்கரிப்பு, தேசிய கல்வி, கிராம மேம்பாடு என்றெல்லாம் பேசப்பட்டது. அதேவேளையில் ரகசியமாக ஆயுதத் தாக்குதல்களுக்கும் ஆயுதத் தயாரிப்புக்கான பணிகளும் தலைமறைவாக நடந்து வந்தன.

அரசும் தூங்கிக்கொண்டு இருக்கவில்லை. மக்கள் இயக்கத்தை நசுக்க அவர்கள் மீது கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டன, ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிடுவதே அரசுக்கு எதிரான சதி எனப்பட்டது. தங்கள் அதிகாரத்தையும் வல்லமையையும் உறுதியுடன் நிலைநிறுத்த பிரிட்டிஷார் முடிவெடுத்தனர்.
1906 மார்ச் மாதத்தில் அரவிந்தர் கல்கத்தா வந்தார். பாரிசாலில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். ஏப்ரல் பதினான்காம் நாளில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் முன்னணியில் தலைவர்கள் நடந்தனர். போலீசார் தலைவர்கள் கடந்து செல்லும் வரை காத்திருந்து அவர்களுக்கு பின்னே சென்ற தொண்டர்களை இரும்புத் தடியால் தாக்கினர். பலர் காயமடைந்தனர். எத்தனை அடித்தும் ‘வந்தே மாதரம்’ கோஷத்தைக் கைவிடாத ஒரு இளைஞனை மண்டையில் அடித்து விழ்த்தினர்.
தேசபக்தி உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும், அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரிக்குச் செல்ல மறுத்தனர். சுதேசி இயக்கத் தலைவர்கள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து சிந்தித்தனர். அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தேசிய சிந்தனையுடன் செயல்பட தேசிய கல்வி கழகம் (நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷன்) ஆரம்பிக்கப்பட்டது. அரவிந்தர் அதன் கூட்டங்களில் கலந்து கொண்டார். சில கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார். செல்வந்தரும் சிறந்த தேசபக்தருமான சுபாஷ் சந்திர மாலிக் என்பவர், தேசிய கல்லூரியைத் துவங்க ஒரு லட்சம் ரூபாய் நிதி அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தார். அரவிந்தர் கல்லூரி முதல்வராக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை.
பரோடாவை விட்டு வெளியே வர இது அரவிந்தருக்கு வசதியாய்ப் போனது. தேசிய கல்லூரியின் முதல்வர் என்ற வகையில் அவருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் வழங்கப்படும் என்றார்கள். அப்போது அவருக்கு பரோடாவில் எழுநூறு ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவர் தன்னைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாமல் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். அவரது தியாகத்தை பலரும் பாராட்டினார்கள்.

இன்னொரு முக்கியமான நிகழ்வும் அப்போது நடந்தது. 1906 மார்ச் மாதத்தில் பரீந்தரும் மற்றவர்களும் இணைந்து ‘யுகாந்தர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள். அது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அரவிந்தர் அதன் துவக்கத்தில் பல கட்டுரைகளை எழுதினார். அது மட்டுமின்றி அந்தப் பத்திரிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த பத்திரிகையின் வீச்சை அறிந்த அரசு அதன் ஆசிரியராக இருந்த பூபேந்திரநாத தத்தரை (இவர் சுவாமி விவேகானந்தரின் தம்பி) கைது செய்தது; ராஜத் துரோகச் செயலில் ஈடுபட்டதாக சிறையில் அடைத்தது. யுகாந்தர் 1908 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டது. அது வெளிவந்தது குறுகிய காலமாக இருந்தாலும் அது அரசை தைரியமாக வீரத்துடன் எதிர்த்தது; மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது.
அந்தக் காலகட்டத்தில் ‘தேசீர் கதா’ என்ற நூல் வங்கமொழியில் வெளிவந்தது. அதை எழுதியவர் சங்கராம் கணேஷ் துஸ்கார் என்ற மராட்டியப் புரட்சியாளர். அவருக்கு வங்கமொழி நன்றாகத் தெரியும். அரவிந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் அந்த நூலை வங்கமொழியில் இயற்றினார். அந்த நூலில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை தொழில் துறையிலும் வர்த்தகத் துறையிலும் எப்படியெல்லாம் கொடூரமாகச் சுரண்டினார்கள் என்பதை விவரமாக எழுதியிருந்தார். அரவிந்தர் இதுபோன்ற செயல்களை தன்னுடைய புரட்சிகரப் பணியில் ஓர் அங்கமாகக் கொண்டிருந்தார். அந்த நூலுக்கு அமோக வரவேற்பு இருந்தது; அது மிதவாதிகளையும் உலுக்கி விட்டது; சுதேசி இயக்கத்திற்கு வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. அதன் தாக்கத்தையும் வீச்சையும் கண்டு அதிர்ந்த அரசு அந்த நூலைத் தடை செய்தது.
அரவிந்தர் ஆரம்பத்தில் தேசிய கல்லூரியின் பணிகளில் மூழ்கியது போலத் தெரிந்தாலும் விரைவில் அவர் வேறுவிதத்தில் வெளிப்பட்டார். பிபின் சந்திர பால் அப்பொழுது நாட்டின் முன்னணி அரசியல் தலைவராக இருந்தார். அவர் சிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், அறிஞர்; தேசியவாதி (நேஷனலிஸ்ட்) என்ற புரட்சிக் கட்சிக்கு ஆதரவாக நின்றார். அக்கட்சி காங்கிரஸின் மிதவாதப் போக்குக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது.
பிபின் சந்திர பால் தன் நண்பர்கள் மூலம் ‘சந்தியா’ என்ற வங்கமொழி பத்திரிகையை நடத்தி வந்தபோதும் தேசிய அளவில் ஒரு பத்திரிகை தேவை எனக் கருதினார். அவரிடம் போதிய நிதி வசதி இல்லாத போதிலும் துணிச்சலுடன் ‘வந்தேமாதரம்’ என்ற பத்திரிகையைத் துவங்கினார். அதன் முதல் இதழ் வங்கப் பிரிவினையின் முதல் ஆண்டு நாளான 1906 ஆகஸ்ட் 7 தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் பிபின் சந்திரர் அவசரமாக கல்கத்தாவை விட்டு வெளியே போக வேண்டியிருந்ததால் ஆகஸ்ட் 5-ஆம் தேதியே அதை வெளியிட்டு விட்டு, அரவிந்தரிடம் அந்தப் பத்திரிகையை தொடர்ந்து நடத்தும்படி சொல்லிவிட்டுப் போனார். இவ்வாறு ஆரம்பம் முதலே அந்த நாளேட்டோடு இணைந்த அரவிந்தர் தினமும் அதில் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்த நாளேடு பற்றி அவர் எழுதியுள்ளது:
"ஹரிதாஸ் ஹல்தார் கொடுத்த நன்கொடையான ஐநூறு ரூபாயைக் கொண்டு பிபின் பால் ‘வந்தேமாதரம்’ நாளேட்டைத் தொடங்கினார். துணை ஆசிரியராக இருந்து தனக்கு உதவுமாறு என்னைக் கேட்டார். நான் கல்கத்தாவில் இருந்த நேஷனலிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களுடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் அதை தங்கள் கட்சி பத்திரிகையாக ஏற்று நடத்த முன்வந்தனர். சுபோத், நீரத் மாலிக் சகோதரர்கள் அதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தனர். அதற்கென ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. ஆனாலும் சுபோத் தான் அதற்கு நிதி ஆதாரமாக இருந்தார்." "சித்தரஞ்சன் தாஸும் மற்றவர்களும் பிபின் சந்திரர்தான் அதன் ஆசிரியராக இருக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆசிரியர் குழுவில் இருந்த ஹேமசந்திர பிரசாத் கோஷுக்கும் சியாம் சுந்தருக்கும் ஆசிரியரோடு இணைந்து பணியாற்ற முடியவில்லை. அடிக்கடி உரசல் வந்தது. மாலிக் சகோதரர்களும் அவர்களை ஆதரித்தனர். கடைசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் பிபின் சந்திரர் அந்த நாளேட்டில் இருந்து விலகினார். அப்போது நான் உடல்நலம் குன்றி மாமனார் வீட்டில் தங்கி இருந்தேன். அதனால் அலுவலகத்தில் நடந்ததென்ன என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் ஆசிரியராக என்னுடைய பெயரை வெளியிட்டிருந்தனர். அதுபற்றி செயலாளரிடம் நான் கடுமையாகப் பேசினேன். என் பெயரை நீக்க வைத்தேன். சுபோத்திற்கு இதுபற்றி காட்டமாக ஒரு கடிதம் எழுதினேன். அத்துடன் பிபின் சந்திரருக்கும் அந்த பத்திரிகைக்குமான உறவு விட்டுப் போனது. இருந்தாலும் இந்திய தேசியத்தின், தேச பக்தியின் அடையாளமாக கருதப்பட்ட பத்திரிகையைத் தொடங்கியவர் என்ற வகையில் பிபின் சந்திரர் நம் நினைவில் நிற்கிறார்."

வந்தேமாதரம் பத்திரிகை ஆரம்பம் முதலே வெகுஜன வரவேற்பைப் பெற்றாலும் அதன் வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களைச் சந்தித்தே வந்தது. முதலில் அரசின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல ஏற்கனவே இருந்த ஆங்கிலேயர்களால் துவங்கி நடத்தப்பட்ட வந்த பத்திரிகைகளில் செல்வாக்கும் விற்பனையும் சரிந்ததால் அவையும் வந்தே மாதரம் பத்திரிகைக்கு எதிராகச் செயல்பட்டன. வந்தே மாதரம் நாளேட்டுக்கு வெகுஜன ஆதரவு இருந்த போதிலும், அதை நடத்த ஒரு நிறுவனம் ஏற்படுத்தப் பட்டிருந்த போதிலும் அதற்கு நிதி நெருக்கடி தொடர்ந்து இருந்து வந்தது. அரவிந்தர் இதற்கும் தன் நேரத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்த பத்திரிகைக்கென அதிகாரப்பூர்வமான ஆசிரியர் என்று எவரும் இல்லை. ஒரே ஒரு இதழில் அரவிந்தரின் பெயர் ஆசிரியரென வந்தது. அதுவும் அவர் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. அவர் அப்போது பரோடா சமஸ்தானப் பணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகவில்லை; தேசிய கல்லூரியின் முதல்வராக இருந்தார். தன்னால் அந்தக் கல்லூரி அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள கூடாதெனவும் கருதினார்.
வந்தே மாதரம் நாளேட்டை நடத்துவதில் அரவிந்தருக்கு மிகச் சிறந்த எழுத்தாளர்களான சியாம் சுந்தர் சக்கரவர்த்தி, பிஜோய் கிருஷ்ண சாட்டர்ஜி, ஹேமேந்திர பிரசாத் ஆகியோர் உதவியாக இருந்தனர். ஆனாலும் வரலாற்றாளரான ஜே.எல்.பானர்ஜி, ‘அந்தப் பத்திரிகையில் எழுதியவர் எவராக இருந்தாலும் அதன் உயிராக, ஆன்மாவாக இருந்தவர் அரவிந்தர் தான். எழுதியவர் ஷியாம் சுந்தராகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம், ஆனால் அதன் மூலம் வெளிப்படுவது அரவிந்த கோஷின் குரல் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னாளில், வந்தே மாதரம் நாளேடு பற்றி பிபின் சந்திர பாலர் எழுதும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே ஆசானின் (அரவிந்தர்) கை அதிலிருந்தது. அதன் துணிச்சலான அணுகுமுறை, தீவிர சிந்தனை, தெளிவான கருத்துக்கள், பண்பான, வலிமையான அதன் வாக்கிய அமைப்பு, குத்தலான கேலி, நாகரிகமான நகைச்சுவை இவையெல்லாம் அந்தக் காலத்தில் நாட்டின் வேறெந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. ஆங்கிலத்திலும் இல்லை. இந்திய மொழிகளிலும் இதற்கு நிகர் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் கல்கத்தாவில் மட்டுமன்றி நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் படித்தவர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. லண்டனில் இருந்து வெளிவந்த டைம்ஸ் பத்திரிகையில் இதன் கட்டுரையின் பல பத்திகள் அப்படியே எடுத்து பிரசுரம் செய்யப்பட்டன. வந்தே மாதரம் பத்திரிகையை நீங்கள் வெறுக்கலாம், பயப்படலாம், ஆனால் அலட்சியப்படுத்த முடியாதபடி ஒரு தேசிய சக்தியாக வடிவெடுத்திருந்தது. அந்த புதிய பத்திரிகையின் மைய சக்தியாக முதல் விசையாக இருந்தவர் அரவிந்தர்தான்’ என்று புகழ்ந்து எழுதியுள்ளார்.

அரவிந்தர் கல்கத்தாவுக்கு வந்த உடனேயே தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்து விட்டார். அது அவரது உடல்நலத்தைப் பாதித்தது. பரோடாவில் செய்தது போல நீண்ட நேரம் பிராணாயாமம் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் வேலைப்பளுவும் கூடியதால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மருத்துவத்திற்காக அவர் தனது மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு அவர் மனைவி மிருணாளினி அன்போடும் அக்கறையோடும் அவரைப் பராமரித்தார். பின்னர் அவர் தியோகாரில் இருந்த தன் பாட்டனார் வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்து உடல் தேறினார். அதன் பிறகே அவரால் கல்கத்தா வர முடிந்தது. டிசம்பர் 26இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போதிருந்தே வந்தே மாதரம் நாளேட்டையும் நேஷனலிஸ்ட் கட்சியையும் அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
கல்கத்தா காங்கிரஸ் மாநாடு முதியவரும் மதிப்பிற்குரியவருமான தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்தது. அவர் பெரும்பாலான காலம் இங்கிலாந்தில் வசித்தார். அவர்தான் மிதவாதிகளின் தேர்வாக இருந்தார். தேசியவாதிகள் திலகர் பெருமான் தான் மாநாட்டிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்றனர். ஆனால் இந்த விஷயத்தில் பிளவு தவிர்க்கப்பட்டது. திலகர் பெருமான், லஜபத் ராய், ஜி.எஸ்.கார்பர்டே போன்ற தேசியவாதத் தலைவர்களுடன் வந்து அமர்ந்தார். அரவிந்தர் ஒளி வெள்ளத்தைத் தவிர்த்து விட்டு தனிப்பட்ட விவாதங்களில் கலந்து கொண்டார். அவரது தாக்கத்தால் தேசியவாதிகள் – அவர்களை தீவிரவாதிகள் என்றனர். அப்போது – சுதேசி, அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு, தேசிய கல்வி போன்றவற்றோடு முழுமையான சுதந்திரமே காங்கிரசின் கொள்கை என்ற தீர்மானத்தை முன் வைத்தனர். அந்தத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது.

மிதவாதிகளின் தலைவர்களான பெரோஸ் ஷா மேத்தா, கோகலே, சுரேந்திர நாத் பானர்ஜி போன்றோருக்கு பூரண சுதந்திரம், முழுமையான விடுதலை என்ற வார்த்தை பிடிக்கவில்லை. அதை அவர்கள் எதிர்த்தனர். காரசாரமான விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் தேசியவாதிகள் வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்படிச் செய்தால் மாநாடு தோல்வி அடையும் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. தேசியவாதிகளின் கை ஓங்கி இருப்பதைத் தெரிந்துகொண்ட மாநாட்டுத் தலைவர் நௌரோஜி விடுதலை என்ற வார்த்தைக்குப் பதிலாக ஸ்வராஜ்யம் என்ற வார்த்தையை முன்வைத்து சமரசம் செய்தார்; தீர்மானம் நிறைவேறியது. ஒவ்வொரு பிரிவும் அந்த்த் தீர்மானத்தை தங்களுக்கு உரிய வகையில் விளக்கிக் கொண்டார்கள். சுதேசி, அன்னியப் பொருள்கள் புறக்கணிப்பு, தேசிய கல்வி ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டுக்குப் பிறகு தேசியவாதிகளின் வலிமை அதிகரித்தது.
1906 டிசம்பர் 31 தேதி வந்தே மாதரத்தில் ‘காங்கிரஸ் முடிவுகள்’ என்ற தலைப்பில் அரவிந்தர் கட்டுரை எழுதி இருந்தார். அதில், “கடுமையான வார்த்தைகளை கொண்ட எந்தத் தீர்மானமும் அங்கு முன்வைக்கப்படவில்லை, நிறைவேற்றப்படவும் இல்லை என்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில் உறுதியான வார்த்தைகளை அல்ல, உறுதியான செயல்களையே நாம் நம்புகிறோம். ஆனால் நம் எதிர்பார்ப்புகள் புரிந்துகொள்ளப் பட்டுள்ளன. நம் கருத்துக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாம் ஆசைப்பட்ட விதத்தில் இல்லாமல் இருக்கலாம், நாம் சொல்வதைப் போல கூர்மையும் கச்சிதமாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாம் எதற்காகப் போராடினோமோ அதனை சாராம்சத்தில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்” என்று அரவிந்தர் குறிப்பிட்டு இருந்தார். அவரது யுக்தி வென்றது. பின்னணியில் ராஜதந்திரமாகச் செயல்பட்டதும் அவரது அரசியல் திறமையும் வெளிப்பட்டன. மிதவாதிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வந்தே மாதரத்தின் நோக்கமென அரவிந்தர் முன்வைத்தவை மூன்று விஷயங்கள். முதலாவது, சுதந்திரத்தைப் பற்றிய தன் கருத்துக்களை தொடர்ந்து மக்கள் முன் வைப்பது. 1906 செப்டம்பர் மாதத்திலேயே அவர், “(வங்கப்) பிரிவினையை அரசு கைவிடுவதால் மட்டும் நம் இனத்திற்கும் நம்மினத்தை ஆள்பவருக்கும் இடையேயான நிலை மாறிவிடாது. கர்ஸன் பிரபுவின் ஆட்சி நல்லதாக மாறிவிட்டதாக்க் கருத முடியாது. இந்த அரசு சில சலுகைகளை அறிவித்தாலும் கூட இந்த (அந்நியர்) ஆட்சி தொடர்ந்து இருக்க முடியாது. ஏகாதிபத்திய மனநிலை கொண்ட இன்னொரு வைஸ்ராய் வருவார். அவர்மூலம் ஏகாதிபத்திய அரசு இந்த தேசத்தின் நலன்களுக்கும் மக்களின் மனநிலைக்கும் எதிராகச் செயல்படும். இதற்கு உறுதியான மாற்று ஒன்றுதான், தேசத்தின் தலைவிதியை அதன் மக்களே தீர்மானிப்பது மட்டுமே யாகும்” என்று எழுதியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் முழுமையான சுதந்திரம் என்ற கருத்தை முன்வைத்தது அரவிந்தர் தான்.
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நௌரோஜி ‘ஸ்வராஜ்யம்’ என்ற வார்த்தையை காங்கிரஸின் நோக்கமென அறிமுகம் செய்தார். மிதவாதிகள் அந்த வார்த்தையை பிரிட்டிஷ் காலனி நாடுகளில் இருப்பதைப் போன்ற பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சிறிய அளவிலான சுய ஆட்சி என்று விளக்கினர். அதுவும்கூட நடைமுறை சாத்தியமற்றது, அப்படியே சாத்தியமானாலும் அதற்கு நீண்ட காலமாகும் என்று அவர்களில் பலர் கூறி வந்தனர்.
ஆனால் அரவிந்தர் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தரப்பை தெளிவாக எழுதி உள்ளார். “காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக இருந்த பழுத்த அரசியல்வாதி ஸ்வராஜ்யம் தான் காங்கிரஸின் நோக்கம் என்றும் அது மட்டுமே நாம் எல்லா துன்பங்களையும் போக்கும் ஒரே வழி என்றும் ஸ்வராஜ்ஜியத்திற்கு குறைவான எந்தக் கோரிக்கையும் இந்திய மக்களை திருப்திப்படுத்தாது என்றும் கூறினார். முழுமையான தன்னாட்சி என்பது பிரிட்டிஷ் இங்கிலாந்தில் இருப்பது போன்றோ அல்லது அதன் குடியேற்ற (காலனி) நாடுகளில் இருப்பது போன்றோ என்று அவர் ஸ்வராஜ்ஜியத்தை விளக்கினார். காலனி நாடுகளில் உள்ள தன்னாட்சி முறையே போதுமென காங்கிரஸ் கூறுகிறது. புதிய சிந்தனைகளை முன்வைக்கும் நாம் பிரிட்டிஷ் இங்கிலாந்தில் இருப்பதைப் போன்ற ஸ்வராஜ்ஜியம் வேண்டும். அதற்கு சற்றுக் குறைவான எதையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் உறுதியாக முன்வைக்கிறோம்” என்று அவர் வந்தே மாதரத்தில் தெளிவாக எழுதி இருந்தார்.
இந்திய சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் சுதந்திரம் போல இருக்க வேண்டும். ஸ்வராஜ்ஜியம் என்பது முழுமையான ஸ்வராஜ்ஜியமாக பிரிட்டனில் இருப்பதைப் போல இருக்க வேண்டும். இதை மிகத் தெளிவாக அரவிந்தர் தன் பேச்சிலும் எழுத்திலும் தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வைத்தார். முழுமையான சுதந்திரம் என்பது அந்தக் காலத்தில் பலரும் அறியாத விஷயம் என்பது மட்டுமன்றி புரட்சிகரமானதாகவும் இருந்தது.
வந்தே மாதரம் நாளேட்டின் இரண்டாவது நோக்கமென அரவிந்தர் கருதியது, அது நேஷனலிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேடாக இருக்க வேண்டுமென்பது. கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு விளக்குவது. மற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துவது. அதன் மூலம் புதிய கட்சியான நேஷனலிஸ்ட் கட்சிக்கு ஆதரவை அதிகரிப்பது. அதன் மூலம் காங்கிரசை தன் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது அவரது திட்டம். இதுபற்றி 1907 ஏப்ரல் 26இல் அவர் தெளிவாக எழுதி உள்ளார்.
"மோசமான இந்த அரசாங்கத் திட்டங்களை எதிர்ப்பது மட்டுமே புதிய இயக்கத்தின் நோக்கம் அல்ல. பிரிட்டிஷ் அரசு நன்மை செய்கிறதா -தீமை செய்கிறதா, நியாயமா- நியாயமில்லையா என்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமானதோ பொருட்படுத்த தக்கதோ அல்ல. பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியால் எழுந்த எதிர்ப்பும் அல்ல. இந்தியா மகத்தானதாக இருக்க வேண்டும்; சுதந்திரமாக இருக்க வேண்டும்; அதற்கு தகுதி இருக்கிறது என்ற நேர்மறைச் சிந்தனையால் ஏற்பட்டது. வீழ்த்த வேண்டும் என்ற எதிரோட்டச் சிந்தனையால் வந்தது அல்ல. மாறாக ஆக்கபூர்வமான சிந்தனையால் நவீன இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்ற உந்துதலால் ஏற்பட்டது. வெறுப்பில் எழுந்த புரட்சி கோஷம் அல்ல. தேசியத்தின் மீது உள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பினாலும் எழுந்த அமுத கீதம். இதை தீவிரவாதம் என்பது சரியான சொல்லாடல் அல்ல. ஜனநாயக தேசியம் என்பது சரியான வார்த்தை, விளக்கம்." "இதுதான் முக்கியமான விஷயம். இப்பொழுது இந்தியாவில் இரண்டு கட்சிகள் அல்ல, மூன்று கட்சிகள் உள்ளன. ஒன்று, விசுவாசிகள். இரண்டு, மிதவாதிகள். மூன்று, தேசியவாதிகள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நன்றாக ஆட்சி செய்தால், அந்த நிர்வாகத்தில் தங்களுக்கும் சிறிது பங்கு கொடுத்தால் திருப்தி அடைந்து விடுவார்கள் விசுவாசிகள்; பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட வகையில் தன்னாட்சி வேண்டும், அதற்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க தயார் என்பவர்கள் மிதவாதிகள்; முழுமையான விடுதலை, முழுமையான தன்னாட்சி வேண்டும், அது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாகவோ அல்லது அதற்கு அப்பாற்பட்டதாகவோ இருக்கலாம். இந்திய தேசம் அழிவிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அது சுதந்திரம் வேண்டி நிற்பதாலோ காத்திருப்பதாலோ பயனில்லை. அது உடனடியாக உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும், கிளர்ந்தெழ வேண்டும் என்பது தேசியவாதிகளின் நிலைப்பாடு"
-என்று அந்தக் கட்டுரையில் இருந்தது.
மூன்றாவதாக, சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவது. அதற்காக அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். அரசுக்கு எதிரான சாத்வீக மறுப்பு என்ற தனது போராட்ட யுக்திகள் குறித்த கட்டுரைகளில் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, சுதேசி, தேசிய கல்வி போன்ற அனைத்தும் இணைந்ததாக இருந்தது. அவர் எழுதுகிறார்:
"சுய முன்னேற்றமும் சாத்வீக மறுப்பும் நமது செயல் திட்டமாகும். நமது திட்டத்தை தேசிய வாழ்வின் எல்லா அம்சங்களிலும் செயல்படுத்த வேண்டும். சுதேசிப் பொருள்களை வாங்குதல், தேசிய கல்வி என்பதோடு நிற்காமல் தேசப் பாதுகாப்பு, நீதித் துறை என எல்லாத் தளங்களிலும் சுதேசிச் சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும். எதெல்லாம் நம்மால் முடியுமோ அதை எல்லாம் நாமே செய்ய வேண்டும். வேறு யாரோ வந்து நமக்காகச் செய்வார்கள் என்று காத்திருக்கக் கூடாது. நம்முடைய சாத்வீக எதிர்ப்பு ஆரம்பத்தில் எதிர்ப்பைக் காட்டாத மறுப்பாக ஆரம்பிக்கும். தேவையான தயாரிப்பும் பலமும் சேர்ந்த பிறகு, தேவைப்படும் போது தீவிர எதிர்ப்பாக வெளிப்படும். சாத்வீக எதிர்ப்பென்பது நம் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வாகவும் அமையலாம் அல்லது இறுதித் தீர்வுக்கான துவக்கமாகவும் இருக்கலாம்"
-என்று அக்கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் பின்னாளில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய அம்சமாக ஆயின.
அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. “சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்” என்று அரவிந்தர் எழுதியிருந்தார்.
வந்தே மாதரம் நாளேட்டின் சிறப்பு அது அரசியல் கொள்கைகளையும் திட்டங்களையும் சிறப்பாக முன்வைத்தது மட்டுமே என்று கூற முடியாது. ஆனால் உயர்ந்த லட்சியவாதத்தையும், அதன்மூலம் ஆன்மிக முன்னேற்றம் அடைய முடியும் என்பதையும் முன்வைத்ததே அதன் சிறப்பு. அப்போது இருந்த நாளேடுகளில் இருந்தும் அரசியல் பத்திரிகைகளில் இருந்தும் இதுவே அதை வேறுபடுத்தியது.
1908 ஆண்டின் துவக்கத்தில் அரவிந்தர் பம்பாயில் உரை நிகழ்த்தினார். அதை ‘வந்தேமாதரம்’ வெளியிட்டது. அதில்,
"தேசியம், தேசபக்தி என்பதைச் சாகடிக்க முடியாது. ஏனெனில் அது மனிதன் அல்ல; அது கடவுள். அந்தக் கடவுள் வங்காளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. கடவுளைக் கொல்ல முடியாது, சிறையிலிட முடியாது. ....... வெறும் அரசியல் செயல்திட்டங்களாலோ தேசிய கல்வியினாலோ சுதேசியினாலோ அந்நிய பொருள்களைப் புறக்கணிப்பதனாலோ மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது." "சுதேசி மூலம் பொருளாதார வளம் சற்று அதிகரிக்கலாம். அவ்வாறு வளம் சேரும்போது செல்வ மயக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டிய சாரமான விஷயத்தை விட்டுவிடுவீர்கள். செல்வத்தைச் சேர்ப்பதிலும் அதைப் பாதுகாப்பதிலுமே உங்கள் கவனம் போய்விடும். பொருளாதாரத்தில் முன்னேறிய, தொழில்துறையில் முன்னேறிய, செல்வ வளம் கொழித்த பல நாடுகளிலும் உண்மையான பிரச்னை வந்தபோது அவை ஈடு கொடுக்க முடியாமல் செத்தொழிந்தன. .......இறைவன்தான் எல்லாவற்றையும் செய்கிறான். அவன் உங்களை விலக்கி வைத்தால் அதற்கு பொருள் நீங்கள் இனித் தேவையில்லை என்பதல்ல. அவன் தன் அடியார்கள் நெஞ்சில் நீக்கமில்லாமல் வாழ்கிறான்"
-என்று பேசியிருந்தார்.
$$$
(அடுத்த பகுதி ஞாயிறன்று வெளியாகும்)
$$$