ஸ்வாமி அபேதாநந்தர்

-மகாகவி பாரதி

சுவாமி அபேதாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். அவரது சென்னை விஜயத்தால் மகிழ்ந்து இதழாளர் பாரதி தீட்டிய செய்தி இது... சுவாமி அபேதாநந்தா குறித்து ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார் மகாகவி பாரதி.

இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங்களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதாநந்தரின் வரவே யாகும். பாரத நாட்டு மஹரிஷிகளில் ஒருவரும் ஜகத் பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்தரது ஸகபாடியுமான அபேதாநந்தர் பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் அமிழ்ந்துகிடக்கும் மனிதர்களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு செய்வித்து வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு  செய்வித்து பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு,  இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டும் வந்திருக்கிறார்.

இவருக்குச் சென்னையில் நடந்த உபசரணைகளையும் இவர் சென்னையில் செய்த உபந்நியாசக் கருத்துக்களையும் பற்றி மற்றோரிடத்திலே பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். இவரும் இவருடைய கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம் கடந்துபோய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மஹான்கள்தாம் என்ன கைமாறை எதிர்பார்க்கிறார்கள்? யாதொரு பற்று மில்லாமல், இரந்து உண்பவர்களாய்  உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற்பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை  நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்துவரும் இப் பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப் பட்டிருக்கிறது. ஆத்மாவே உண்மை யென்றும், அதனை மறைத்து நிற்கும் மற்ற தோற்றங்களெல்லாம் மயக்கமே என்றும் போதனை செய்யத் தலைப்பட்டிருக்கும் அபேதாநந்த ஸ்வாமிகள், அந்தப் பாரமார்த்திக நிலைமை அறியாமல் வியாவஹாரிக நிலையிலே உழலும் நம்மவர்களுக்குக்கூட மிகவும் பயன் படத்தக்க சில ஹிதோபதேசங்கல் தந்திருக்கின்றார். ஞாயிற்றுக் கிழமை மாலை டவுன் ஹால் வெளி மைதானத்திலே இவர் உபந்நியாசம் புரிந்த காலத்தில் நம்மவர்களின் பேடித்தன்மையும் பயங்காளித் தன்மையும் பற்றிப் பேசியது கொஞ்சமில்லை. “ஆண்மை இழந்து பள்ளத்தில் விழுந்து கிடக்கிறீர்களே! எழுந்து நின்று உங்களது புருஷத் தன்மையை நிரூபித்துக்கொள்ளுங்கள்” என்று இத் தேசத்தாரை நோக்கிக் கூறுவதில் விவேகாநந்தர் எம்மட்டு ஆத்திரம் கொண்டிருந்தாரோ அம்மட்டு அபேதாநந்தரும் கொண்டிருப்பதைக் காண்கிறோம். தீர புத்திரர்களாகிய ஆரியர்கள் ஏதோ ஒரு விதமான மதி மயக்கத்தால் குழந்தைகLளைப் போலவும் பெண்களைப் போலவும் நடந்துகொள்வதைப் பார்த்தால் அனைத்தையும் துறந்த ஞானிக்குக்கூட ஒருவிதமான பரிதாபம் ஜனிக்குமல்லவா?

அபேதாநந்தருக்கும் அவரைப் போன்ற ஞானிகளுக்கும் நாம் பெரிய உபசரணைகள் நடத்துவதால் மட்டும் அவர்களது பிரீதிக்கு உள்ளாய்விட மாட்டோம். பல்லக்குகள், புஷ்ப ஹாரங்கள், வாத்தியங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு ஞானியின் கிருபையை சம்பாத்தியம் செய்துவிடுவதென்றால் அது எளிதான காரியமா? அவர்களது உபதேசத்தின் உண்மையைக் கிரகித்து நம்மால் இயன்றமட்டும் அதன்படி நடக்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய கடமையாகும்.

தீரத் தன்மையைப் பற்றி மட்டிலுமல்லாமல் ஐக்கியம் முதலிய மற்ற விஷயங்களைப் பற்றியும் அபேதாநந்தர் பேசியிருக்கிறார். இந்தியாவில் ஒரு கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவனுக் கொருவன் சம்பந்தமில்லாமல் ஒவ்வொருவன் ஒவ்வொரு மாதிரி எண்ணங்கொண்டிருக்கிறான். ஆதலால் வெவ்வேறு வகைப் பட்ட ஒரு கோடி  எண்ணங்கள் ஏற்பட்டுப் போய் விடுகின்றன. எனவே ஒரு காரியம் எளிதாகச் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது. பிரிட்டிஷ் தேசத்தில் 4 கோடி ஜனங்கள் மாத்திரமே இருந்தபோதிலும், அவர்களைனைவரும் ஒரே விதமான எண்ணங் கொண்டிருப்பதால் அவர்கள் காரியங்கள் மிகவும் எளிதாகக் கைகூடிவிடுகின்றன. இதனை விவேகாநந்தர் வெகு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறார்.

அது நிற்க,  அபேதாநந்தர் சென்னை மாகாணத்திலும் நகரத்திலும் பெற்ற உபசரணைகள் அவருக்கு இத்தேசம் முழுதும் நடைபெறும் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் அத்துடன் இவர் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் இவரது போதனைகளைப் பக்தியுடன் கேட்டுப் பயன் பெறுவார்களென்று இத்தனைய மஹான்கள் இந்நாட்டிலே தோன்றி வருவார்களானால் ஆரிய பூமியானது மறுபடியும் புராதன காலத்துப் பெருமையைக் காட்டிலும் மேற்பட்ட பெருமைக்கு வந்துவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s