-மகாகவி பாரதி

சுவாமி அபேதானந்தர் (1866 அக். 2 - 1939 செப். 8) ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். 1906 ஜூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், அதுகுறித்து தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது....
18. அபேதாநந்தா
சுருதியும் அரிய உபநிட தத்தின்
.தொகுதியும் பழுதற உணர்ந்தோன்,
கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்
.கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,
அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்
.அப்புறத் திருந்துநண் பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
.மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1
வேறு
ஒன்றேமெய்ப் பொருளாகும்; உயிர்களெலாம்
.அதன்வடிவாம், ஓருங்காலை;
என்தேவன் உன்தேவன் என்றுலகர்
.பகைப்பதெலாம் இழிவாம் என்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
.ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
.விலங்கின த்தைச் செகுத்த வீரன். 2
வேறு
வானந் தம்புகழ் மேவி விளங்கிய
.மாசி லாதி குரவணச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
.நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-
கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்
.அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
.ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3
வேறு
தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்
.டொளிர்தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
.சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
.னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடுமோர் முகில்போன்றான்
.இவன்பதங்கள் துதிக்கின் றோமே. 4
$$$
One thought on “பாரதியின் தனிப்பாடல்- 18”