-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
66. அனைத்தும் அவனது திருவிளையாடல்
.
க்ரீடார்த்தம் ஸ்ருஜஸி ப்ரபஞ்சமகிலம் க்ரீடாம்ருகாஸ்தே ஜனா:
யத்கர்மாசரிதம் மயா ச பவத: ப்ரீத்யை பவதஸ்யேவ தத்/
ச’ம்போ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேஸ்டிதம் நிச்’சிதம்
தஸ்மான்மாமக ரக்ஷணம் பசு’பதே கர்தவ்யமேவ த்வயா//
.
ஆடலுக்கே படைத்திட்டாய் அகிலமும் சனங்களும்
ஆதலால் என்னுடை ஆட்டமுந்தன் இச்சையே
ஆட்டுகின்றாய் என்னையும் அடியார்கள் மகிழ்ந்திடவே
ஆதலால் என்காப்பு நின்கடன் உயிர்க்கோவே!
.
சிவபெருமான் நடராஜனாக, ஆடலரசனாகத் திகழ்கிறார். அவரது நடனம்தான் இந்த உலகின் இயக்கம். அவரது திருவிளையாடல்தான் அனைத்தும். இதனையே இந்தச் செய்யுளில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
.இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களாகிய நம்மையும் படைத்தது சிவபெருமானின் திருவிளையாடலே. ஒரு விளையாட்டைப்போலத்தான் உலகையும் நம்மையும் இறைவன் படைத்துள்ளார். ஆகையால், சிவபெருமானின் படைப்புகளில் ஒன்றாகிய எனது செயல்பாடும், அவரது இச்சையால்தான் நடக்கிறது. ஒவ்வொரு மனிதரையும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இறைவன் படைத்திருக்கிறார். உலகம் என்னும் நாடகமேடையில் பரமசிவனின் விருப்பப்படி நடிக்கின்ற கதாபாத்திரங்கள்தாம் நாம். “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே” என்று தேவாரத்தில் அப்பர் பெருமான் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். (பிற்காலத்தில் இதே வரிகளை திரைப்படப் பாடலுக்காக கவிஞர் கண்ணதாசன் பயன்படுத்தியிருக்கிறார்.)
ஜப சங்கல்பம் செய்யும்போது “பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்று கூறிவிட்டுத்தானே தொடங்குகின்றோம். இதேபோல ஒவ்வொரு செயலையும் அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக என்று நினைத்துச் செயல்பட வேண்டும். நமது செயல்பாடுகளை பரமசிவனின் விருப்பதற்கு தத்தம் கொடுத்துவிட்டால், தடுமாற்றம் ஏது?
.சுய விருப்பத்தை விடுத்து, பகவானின் விருப்பத்திற்காகச் செயல்படும்போது நமது செய்கையும் ஒழுங்குபடும், பலனுக்காக வீணே மனம் அலைந்து கொண்டுமிராது. ஆகையால், எனது வாழ்க்கை, சிவனடியார்களை மகிழ்விப்பதற்காக சிவபெருமான் கொடுத்துள்ள ஒரு வாய்ப்பு, ஒரு விளையாட்டு, ஒரு நாடக அனுபவம் அவ்வளவுதான். இவ்வாறான மனநிலை ஒரு பக்தனுக்கு வாய்த்துவிட்டால், பிறகு எல்லாம் இன்பமயம்தான்.
.ஏனெனில், எது நடந்தாலும் சிவபெருமானின் விருப்பம்தான் என்று ஒரு பக்தன் எப்போது நினைக்கிறானோ, அப்போதே அனைத்து உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான், அவனைக் காப்பாற்றுவதைத் தமது கடமையாக எடுத்துக்கொண்டு விடுவார் அல்லவா? ஆகையால், இதனைத்தான் நம்மைப் போன்ற பக்தர்களுக்காக, பரமேஸ்வரனிடம் நினைவுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். “மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என ஊர்ப்புறங்களில் பெரியவர்கள் கூறுவது இதன் அடிப்படையில்தான்.
$$$