-எஸ்.எஸ்.மகாதேவன்

12. சங்க காலத் தமிழா, சமகாலத்துக்கு வா!
நாலு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? கதை என்றால் நீதி கட்டாயம் உண்டு. ஆனால் கதை முடிந்த பிறகுதான் நீதி அல்லது கருத்து வரும். இந்தப் பதிவில் மானுடன் ’கதை முடிந்த’ பிறகு என்ன என்பது பற்றித்தான் கருத்து. பொறுங்கள். அவசரப்பட்டு ஆவி உலகம் பற்றியோ என்று நினைத்து விடாதீர்கள்! விஷயமே வேறு. முதலில் கதைகளைப் படியுங்கள்.
ததீசி
ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கோரமான யுத்தம் ஒன்று நடக்க ஆரம்பித்தது. அசுரர்களைக் கொல்ல, தக்க ஆயுதம் ஒன்றிற்காக தேவேந்திரன் மூன்று உலகங்களிலும் அலைந்து கொண்டிருந்தான். ஆனால் அப்படிப்பட்ட ஆயுதம் அவனுக்குக் கிடைக்கவில்லை. பிறகு பிரம்ம தேவன் யோசனையின் பேரில் அனைத்து தேவர்களையும் தேவேந்திரன் அழைத்தான்.“ஓ! தேவர்களே! ததீசி முனிவரது முதுகெலும்பு கிடைத்தாலொழிய நாம் வெல்ல முடியாது. ஆகவே நீங்கள் அனைவரும் அவரிடம் சென்று பிரார்த்தனை செய்து அவரது முதுகெலும்பைக் கேளுங்கள்” என்று கூறினான். எல்லா தேவர்களும் ததீசி முனிவரிடம் சென்று அவர் முதுகெலும்பிற்காக பிரார்த்தனை செய்தனர். உடனடியாக எந்தவித மறுப்புமின்றி ததீசி தன் ஜீவனை தேகத்திலிருந்து விடுத்தார். அழியாத மஹிமை கொண்ட உயர் பதவியை அடைந்தார். இன்றளவும் அவரது தியாகம் உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. அவரது முதுகெலும்பைக் கொண்டு தேவேந்திரன் வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களைச் செய்தான். பிரம்மாவின் புத்திரரான பிருகு மஹரிஷியிடத்தில் அவரது அரிய தபோ மஹிமையால் பிறந்தவர் ததீசி. அவரது முதுகெலும்பிலிருந்து உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தில் மந்திரங்களைப் பிரயோகித்து அசுரர்களில் தொள்ளாயிரத்து தொண்ணூறு வீரர்களையும் த்வஷ்டாவின் குமாரனும் மகா தபஸ்வியுமான விஸ்வரூபனையும் மிகுந்த பராக்ரமசாலியான விருத்திராசுரனையும் தேவேந்திரன் கொன்றான்.
சிபி
பலராலும் போற்றப்படுபவர் சிபி சக்கரவர்த்தி. காரணம், அவருடைய பரந்த மனமும் தயாள குணமும்தான். சிபியின் இந்தக் கீர்த்தி தேவ லோகத்தையும் எட்டியது. தேவேந்திரன் சிபியை சோதிக்க விரும்பினான். அக்கினி பகவானையும் உடன் அழைத்துக்கொண்டு, தான் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி பகவான் ஒரு புறா வடிவத்திலும் பூமிக்கு வந்தனர். வேகமாகப் பறந்து வந்த கழுகு, புறாவைத் துரத்திக்கொண்டு வந்தது.
ஏழை எளியோருக்கு உதவுவதைத் தம் கைகாளாலேயே செய்ய விரும்புபவன் சிபி. அன்று தம் நந்தவனத்தில் அப்படி ஏழைகளுக்கு உணவளித்து முடித்து அரண்மனைக்குத் திரும்ப நினைத்தபோது, சிபியின் கைகளில் ஒரு புறா வந்து விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கேட்பது போல அதன் முகம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அரசனின் மடியில் அப்படியே சுருண்டு கிடந்தது. அதனை ஆதரவுடன் கையில் எடுத்து தடவிக் கொடுத்தான். அப்போது ஒரு பெரிய கழுகு அவர்கள் முன்னால் வந்து நின்றது. சிபியின் மடியில் இருந்த புறாவை தம் கூரிய கால் நகங்களால், கவ்வி எடுத்துச் செல்ல முயன்றது. அதனிடம், “உனக்குத் தேவையான வேறு எது வேண்டுமானாலும் கேள். நான் அதைத் தருகிறேன். பாவம் அந்த புறாவை மட்டும் விட்டுவிடு.” என்று கூறினான்.
உடனே இதுதான் சமயம் என்று அந்த கழுகு, “அரசே! எனக்கு மாமிசம் உடனே வேண்டும்! அது மனித மாமிசமாக இருந்தாலும் கூட பரவாயில்லை. என்னால் பசி தாங்க முடியவில்லை! உடனே உணவிற்கு ஏற்பாடு செய்” என்றது. சற்றே யோசித்த மன்னன் சிபி, “உன் பசியைப் போக்க வேண்டியதும் என் கடமைதான். அதற்காக இன்னொரு உயிரைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. உனக்கு மாமிசம்தானே வேண்டும்? இதோ இந்தப் புறாவின் எடைக்குச் சரியாக என் தொடையில் இருந்து சதையை வெட்டித் தருகிறேன். நீ உண்டு பசியாறலாம்” என்று சொல்லி, உடனே சேவகர்களை அழைத்து தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசில் ஒரு புறம் புறாவை வைத்துவிட்டு மற்றொரு புறம் தன் தொடையில் இருந்து சதையை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி வைக்கிறான். ஆனாலும் அந்த தராசு இறங்கவே இல்லை.
உடனே தானே ஏறி அதில் அமர்ந்த மறுநொடி தராசு சம நிலைக்கு வந்தது. அடுத்த நிமிடம் அந்தப் புறாவும், கழுகும் தங்கள் சொந்த உருவமான, அக்கினி தேவனாகவும் இந்திரனாகவும் மாறி, அவனை அன்புடன் தடவிக் கொடுக்க, அவன் தொடையில் சதை வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ரணமும் மறைந்தே போனது. சிபிச் சக்கரவர்த்தி அனைத்து நலங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று ஆசி கூறிச் சென்றனர்.
சம்யம் ராய்
ஒரு போர்க்களம். பல வீரர்கள் மடிந்தார்கள் அங்கே ஒரு இளம் வீரன். பெயர் சம்யம் ராய். அவன் படுகாயம் அடைந்திருந்தாலும் குற்றுயிராக களத்தில் கிடந்த மன்னனைக் காப்பாற்ற உறுதி பூண்டான். மன்னன் உயிர் பிரிந்ததும் அவன் சடலத்தை இரையாக்கிக்கொள்ள கழுகுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. மன்னனைக் கழுகுகளிடமிருந்து காப்பாற்ற தானே மன்னன் மீது படுத்துக் கொண்டான். கழுகுகள் இவனை இரையாக்கிக் கொண்டன மெல்ல பிழைத்த மன்னன் நாடு திரும்பி மீண்டும் போர் தொடுத்து வெற்றி பெற்றான்.
குமணன்

ஐந்தாம் வகுப்பு பாஸ் செய்த யாருக்குமே குமணன் கதை ஞாபகம் இருக்கும். குமணன் பழனிமலை வட்டார அரசன். குமணனின் ராஜ்ஜியத்தை அவன் தம்பி அமணன் அபகரித்துக்கொண்டான். உயிர் தப்பிய குமணன் காட்டில் மறைந்து வாழ்ந்தான். அப்போதும் குமணன் தலைக்கு விலை வைத்தான் அவன் தம்பி. அந்த விலையை ஒரு ஏழைப் புலவர் பெறவேண்டும் என்பதற்காக தன் தலையை கொடுக்க குமணன் முன்வந்தான். புலவரோ குமணன் உயிரைக் காப்பாற்ற அவன் தலை போலவே பொம்மை செய்து அரசவையில் அமணனிடம் காட்டினார். தலையையும் கொடுக்கத் தயாரான அண்ணனின் தயாள குணத்தால் தம்பி மனம் மாறி, அண்ணனை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினான்.
எனக்குத் தெரிந்த கதைகள் முடிந்தன.
’கதை முடிந்தது’ என்றால் சடலம். அது எதற்கு ஆகும்? எரிக்கவோ புதைக்கவோ தானே செய்வார்கள் என்கிறீர்களா? தேக தானம் செய்யலாமே? 10 ஆண்டுகளுக்கு முன் பொதுவெளியில் தேக தானம் என்பது கேள்விப்படாத சொல்லாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்களான சில அன்பர்கள் வாழ்நாளெல்லாம் சமூக சேவை செய்திருந்தாலும் தங்கள் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கூறு இயல் படிக்க உதவட்டும் என்ற உயர் உணர்வுடன் தேக தானம் செய்து சென்றார்கள். இதையடுத்து ஒரு சிலர் தங்கள் காலத்துக்குப் பின் தங்கள் உடல் தேக தானம் செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து சமூக ஊடகங்களிலும் பதிவிடுவது தென்படுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு வள்ளல். தமிழகம் நன்கு அறிந்த மனிதர். வாழ்நாளெல்லாம் தன் சம்பாத்தியம் முழுவதையும் சிறார் கல்விக்காக தானமளித்தவர். ஒரு முறை அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது தேக தானம் பற்றி பேச்சு திரும்பியது. ஒரு தேக தானம் நடைபெறுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். 1999 ஜூன் 29 அன்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் சிவராம்ஜி காலமானார். அவர் விரும்பி இருந்தபடி அவரது உடல் தேக தானம் செய்யப்பட்டது. அதற்கு சற்று முன்னதாக நான் கொடுத்திருந்த தகவல் பேரில் அந்த வள்ளல் சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வந்து தேக தானம் நடைபெறுவதைப் பார்த்து விட்டுச் சென்றார். புறப்படும் போது, தான் தேக தானம் அளிக்க விரும்புவதாக தெரிவித்துவிட்டுச் சென்றார். அவர் நீடூழி வாழவும் அவர் விருப்பம் நிறைவேறவும் பிரார்த்தித்துக் கொள்வோம், தவறில்லைதானே?
கதைகள் பல சொல்லி அதில் ஏதோ ஒரு கருத்தைப் பொதியலிட்டு, ஆகவே தேக தானம் செய்வீர் என்று பரப்புரை செய்ய என்ன அவசியம் வந்துவிட்டது, தேக தானத்துக்கு அப்படி என்ன பெரிதாக தேவை ஏற்பட்டுவிட்டது என்ற கேள்வி மனதில் எழுகிறதல்லவா?
ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை- நெல்லை விரைவு ரயிலில் பயணம். என் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அம்மையார் ஒருவர் அலைபேசியில் யாரிடமோ மருத்துவ ஆலோசனை வழங்கினார். சற்று நேரம் பொறுத்து, “நீங்கள் டாக்டரா?” என்று கேட்டேன். ஆம் என்று சொன்னவர், “உங்கள் உடம்புக்கு என்ன?” என்று கேட்டார். “என் உடம்புக்கு ஒன்றுமில்லை. அது சடலம் ஆகும்போது என்ன செய்தால் நல்லது; புதைப்பதா, எரிப்பதா?” என்று சமத்காரமாக கேட்டு வைத்தேன்.
(சமீபத்தில்தான் வடலூர் வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் “பரன் அளித்த தேகம்; இதை சுடுவது அபராதம்” என்று அருளியதைப் படிக்க நேர்ந்தது. மறுபுறம் அந்த்யேஷ்டி (இறுதி வேள்வி) என்ற வேத நெறி காட்டும் சொல்லாடல். வாழ்நாளெல்லாம் செய்த / செய்வித்த வேள்விகளில் ஆகுதியாக எத்தனையோ பண்டங்களை வேள்வித்தீயில் சமர்ப்பித்த ஒருவர் உடலை தகனம் செய்வதன் மூலம் சரீரமே ஆகுதியாகி அவரது இறுதி வேள்வி நிறைவேறுகிறது என்பது அதன் பொருள் என்று சொல்கிறார்கள். எனவே எரிப்பதா, புதைப்பதா என்ற கேள்வி).
டாக்டரம்மா என்னிடம் சொன்னதைக் கேட்போம்:
“உயிரற்ற மனிதச் சடலத்தை ’கடவர்’ (cadaver) என்று மருத்துவக் கல்வி பரிபாஷையில் சொல்வார்கள். 4 மருத்துவ மாணவர்கள் உடற்கூறியல் முழுமையாக கற்றுக்கொள்ள ஒரு கடவர் என்ற விகிதத்தில் தேகங்கள் தேவை. ஆனால் இன்று 15 மாணவர்கள் சடலத்தின் இடுப்புக்கு மேற்பட்ட பகுதியையும் இன்னொரு 15 மாணவர்கள் இடுப்புக்கு கீழ்ப்பட்ட பகுதியையும் (ஆக 30 மருத்துவ மாணவர்கள்) ஒரு சடலத்தை வைத்து உடற்கூறியல் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். காரணம், தேகங்கள் தேவையான எண்ணிக்கையில் கிடைப்பதில்லை.
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் உயிருள்ள தவளையை அறுத்துப் பார்த்து அறிவியல் கற்றுக் கொள்ளும் நிலையை மாற்றுவதற்காக ரப்பராலான தவளை பொம்மை பயன்படுத்திப் பார்த்தார்கள். உயிருள்ள தவளை அறுபடுவதை வீடியோ எடுத்து வகுப்பில் காட்டினார்கள். மருத்துவம் பயிலும் மாணவர்கள் மரித்த மனிதர் உடலை வைத்துத்தான் உடற்கூறியல் அறிந்து எந்த வியாதி எந்த உடற் பகுதியில் ஏற்படும் போன்ற விவரங்களை கண்கூடாகப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியும். அதுவும் தவிர மருத்துவக் கல்லூரிகளும் அதிகரிக்கின்றன. மருத்துவம் பயிலும் மாணவர்களும் அதிகரிக்கிறார்கள். எனவே தேகங்கள் தேவை. எனவே எரிப்பதும் புதைப்பதும் தவிர்த்து தேக தானம் செய்யுங்கள் என்ற பரப்புரையும் தேவை.”
சொல்லி முடித்துவிட்டு டாக்டரம்மா பெருமூச்செறிந்தார்.
“உங்களுக்கு ஏன் இந்த விரக்தி?” என்றேன். “ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் ஆயிரத்தில் ஒருவர் தேக தானம் செய்ய விருப்பம் வெளியிடுகிறார். அவர் விருப்பம் நிறைவேறும் அந்த தருணம் நேரிடும்போது உடனிருப்பவர்கள் தேக தானம் நடப்பதில் ஒத்துழைக்க வேண்டுமே?”
தேக தானத்தின் முக்கியத்துவம் யாருக்குத்தான் தெரியாது? “ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கதுடைத்து” என்று சொன்ன வள்ளுவர் சும்மா இருக்காமல் ததீசி முனிவரின் கதையை “அன்புடையார்….என்பும் உரியர் பிறர்க்கு” என்று சூத்திர வடிவில் சொல்லி ஆசை காட்டிவிட்டுப் போய்விட்டார்; நமக்கென்ன புரியாமலா இருக்கிறது?
நன்றாகப் புரிந்து கொள்வதற்காக “பரோபகாரார்த்தம் இதம் சரீரம்” (பிறருக்கு உதவுவதற்காகவே ஏற்பட்டது இந்த தேகம்) என்ற முனிவன் வாக்கு இதே கருத்தை ஆணித்தரமாக எடுத்துச்சொல்லி பசுமரத்தாணி போல நம் மனதில் பதிய வைக்கிறது.
நம்பி நெடுஞ்செழியன் என்ற குறுநில மன்னன் அறநெறியில் பொருளீட்டி அறவழியில் நின்று இன்பமெல்லாம் துய்த்து இறந்து போகிறான்; அவனுக்கு வீடுபேறு கிடைப்பது உறுதி; எனவே அவன் உடலை “சுடுகவொன்றோ, இடுகவொன்றோ” {எரித்தால் என்ன, புதைத்தால் என்ன) என்று சங்க காலத் தமிழ்ப் புலவன் மக்கள் கேள்விக்கு விடையாக வினா எழுப்பினான். எரித்தல், புதைத்தல் இரண்டும் தவிர்த்து தேக தானம் செய்வது காலத்தின் அறைகூவல் என்று சமகாலத் தமிழருக்கு யாராவது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் நல்லது தானே?
$$$