-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
67. சிவத்தியானத்தின் பெருமை
.
பஹுவிதபரிதோஷபாஷ்பபூர
ஸ்புடபுலகாங்கிதசாருபோகபூமிம்/
சிரபதபலகாங்க்ஷிஸேவ்யமானாம்
பரமஸதாசி’வபாவனாம்ப்ரபத்யே//
.
பல்விதமாய் ஆனந்தப் பொங்கலும் களிநீர்
மல்கலும் புல்லரிப்பும் மெய்சிலிர்ப்பும் கொடுத்திடும்
பெரும்போக விளைநிலமாம் நிலைப்பேறு விரும்பிடுவோர்
பெருமையாம் ஒப்பில்லா சிவத்யானம் புகுந்தேனே!
.
மனம் பிறழாமல் இன்ப துன்பத்தை சமநிலையில் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த மனநிலை. அது வாய்க்கப் பெற்றவர்கள், இம்மையிலேயே விடுதலை (முக்தி) பெற்றவர்கள். அவ்வாறான உயர்ந்த மனப்பக்குவம் கிடைக்க நம்மைத் தயார்படுத்துவது இறைவன் சிவபெருமான் குறித்த தியானமே (இடைவிடாத நினைப்பே). தியானம் என்பது மனத்தை இறைவனை நோக்கி ஒருமுகப்படுத்துவது. அந்த நினைப்பிலேயே தோய்ந்து இருப்பது ஆகும்.
.
சிவபெருமான் குறித்த தியானத்தினால், மனம் பல்வேறு விதமான ஆனந்தத்திலே கூத்தாடுகிறது. கண்களில் இருந்து ஆனந்த பாஷ்யம் என்கின்ற களிப்பு நீர் பெருக்கெடுக்கிறது. உடலின் மேல் உள்ள மயிர்க்கால்களில் எல்லாம் புல்லரிப்பு ஏற்படுகிறது. மேனி சிலிர்க்கிறது. பேரின்பத்தின் விளைநிலமாகிய நிலைப்பேறு (முக்தி என்றும் கூறலாம், இன்ப- துன்பத்தால் சஞ்சலமடையாத சமநிலை உணர்வு அதாவது ஸ்தித ப்ரக்ஞை என்றும் கூறலாம்) கிடைக்கிறது. ஆகையால் இப்படிப்பட்ட நிலைப்பேறு கிடைப்பதை விரும்புகின்றவர்களை அதனை நல்கி, பெருமைப்படுத்துகின்ற சிவத்தியானத்தில் பக்தனாகிய நான் புகுகின்றேன்.
$$$