-மகாகவி பாரதி

19. ஓவியர்மணி இரவிவர்மா
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி, ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. 2
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்,
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்,
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான், இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். 3
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்! செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 4
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 5
$$$