-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
68. பக்திப் பசு
.
அமிதமுதம்ருதம் முஹுர்துஹந்தீம்
விமல பவத்பதகோஷ்ட மாவஸந்தீம்/
ஸதய பசு’பதே ஸுபுண்ய பாகாம்
மம பரிபாலய பக்திதேனு மேகாம்//
.
அளவில்லாக் களியமுதம் மென்மேலும் பெருக்கிடும்
கறையில்லா நின்திருவடிக் கொட்டிலில் வசித்திடும்
சிறந்ததாம் புண்ணியத்தின் பயன்வடிவாம் எந்தனது
பக்தியாம் பசுவதனைக் காத்திடுவீர் பசுபதியே!
.
முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது. அந்த பக்திப் பசு, சிவபெருமானின் திருவடித் தாமரைகளாகிய கொட்டிலில்தான் (கொட்டகையில்தான்) வசிக்கிறது.
.சாதாரண மாட்டுக் கொட்டில்களிலே துர்நாற்றமும், கறைகளும் இருக்கலாம். ஆனால் பரமபிதா சிவபெருமானின் திருவடிகளாகிய கொட்டிலோ, எல்லாப் பாவக் கறைகளையும் போக்க வல்ல பரிசுத்தமயமானது. மிகச் சிறந்த புண்ணியத்தின் பயனாகத்தான் இத்தகு பக்தி என்னும் பசு என்னிடம் வளர்ந்து வருகிறது. ஆகையால், அனைத்து உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, எனது இந்த பக்திப் பசுவை நீங்கள் நன்கு காத்தருளுங்கள் என்று நமக்காக வேண்டுகிறார்.
.விருப்பங்களை எல்லாம் நிறைவு செய்யும் காமதேனுப் பசுவைப் போன்றது பக்தி. அது கரக்கின்ற பால் அழிவில்லாப் பேரின்பப் பெருநிலையாம் முக்தி அமுதம். அந்தப் பசு உறைகின்ற வசிப்பிடம் சிவபெருமானின் திருவடி. அதனைக் காப்பாற்றுபவர் சாட்சாத் பரமேஸ்வரன்.
$$$