பாரதியின் தனிப்பாடல் – 20

-மகாகவி பாரதி

20. சுப்பராம தீட்சிதர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுரம் அரண்மனையின் அரசவையில் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் சுப்பராம தீட்சிதர் (1839- 1906). இவர் தெலுங்கு மொழியில் எழுதிய  ‘ஸங்கீத சம்பிரதாயப் பிரதர்ஷினி’ என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம். இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். 

எட்டயபுரம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, இசையின் மீதும் பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது... 

அகவல்

கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப. 5

ஈட்டிய செல்வம் இறந்தமை யானும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல. 10

நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை,
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும், 15

சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யருளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன, 20

நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்,
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்! 25

இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுதினைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே? 29

விருத்தம்

கன்னனொடு கொடைபோயிற்று; உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று;
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே. 1

கலைவிளக்கே! இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே! எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே! நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்; அந்தோ! நீ
அகன் றதுயர் உரைக்கற் பாற்றோ? 2

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்! நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்; அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ? 3

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s