மகாவித்துவான் சரித்திரம்- 1(14)

-உ.வே.சாமிநாதையர்

14. உறையூர்ப் புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்

பங்களூரில் மிகுந்த கெளரவமடைந்து வந்த செய்தியைக் கேட்டுத் திரிசிரபுரவாசிகளிற் சிலர் இவரிடம் வந்து, “உங்களுடைய கல்விப் பெருமையையும் மற்றைப் பெருமைகளையும் நாங்கள் அறிந்து கொள்ளாமற் போய்விட்டோம். அடிக்கடி பங்களூரிலிருந்து வருபவர்களால் உங்களுக்கு அங்கே நடந்த சிறப்புக்களையெல்லாம் அறிந்து மிகவும் சந்தோஷமடைந்தோம். உங்களால் எங்களுக்கும் இந்த நகரத்திற்கும் உண்டான கெளரவம் அதிகமே. ஆனால் முன்னமே நாங்கள் உங்களுடைய பெருமையை உள்ளபடி அறிந்துகொண்டு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நன்றாகச் செய்யாமலிருந்து விட்டோம். இனிமேல் நாங்கள் தவற மாட்டோம்” என்றார்கள். “எல்லாவற்றிற்கும் தாயான செல்வத்தின் திருவருளும் உங்களுடைய அன்புடைமையுமே காரணம்; வேறே எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று பணிவுடன் இவர் விடை கூறினார். இங்ஙனமே சந்தோஷம் விசாரிப்பவர்களுக்கெல்லாம் விடை கூறிவந்தார்.

அப்பால் திரிசிராமலை திருவானைக்கா முதலிய ஸ்தலங்களிலுள்ள மூர்த்திகளுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்வித்தும் முன்னமே தாம் வாங்கியிருந்த கடன்களைத் தீர்த்தும் மாணாக்கர்களில் ஏழைகளாக உள்ளவர்க்கு நன்கொடையளித்தும் விவாகம் ஆகாதவர்களுக்கு விவாகம் செய்வித்தும் தம்மிடம் இல்லாத ஏட்டுச் சுவடிகளை விலைக்கு வாங்கியும் பங்களூரிலிருந்து தாம் கொணர்ந்த திரவியத்தை மெல்ல மெல்ல நாளடைவிற் செலவு செய்து விட்டனர்.

உறையூர்ப் புராண அரங்கேற்றம்

பங்களூரிற் பாடி முடித்த உறையூர்ப் புராணத்தை அரங்கேற்ற வேண்டும் என்று யாவரும் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோயிலைச் சார்ந்த இடமொன்று மிக்க அலங்காரங்களமைந்த பந்தருடனும் மேற்கட்டிகளுடனும் அமைக்கப்பெற்றது. பல வித்துவான்களும் தமிழருமையறிந்த கனவான்களும் சைவச் செல்வர்களும் கூடியிருந்த கூட்டத்தின் நடுவே இருந்து பிள்ளையவர்கள் புராணத்தை அரங்கேற்ற ஆரம்பித்தனர். அதில் உள்ள நாட்டுச் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்தோர் சிலர்; நகரச் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்தோர் சிலர்; நகரப்படலத்திலுள்ள சாதி வருணனையைக் கேட்டுச் சந்தோஷத்தோர் சிலர். அதில் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ள நரக வருணனையைக் கேட்டுக்கொண்டே வந்த அக்கோயில் தருமகர்த்தர் கண்ணீர் விட்டுக்கொண்டே கேட்டனரென்பர்.

அப்பால் அப்புராணம் செவ்வனே அரங்கேற்றப் பெற்று நிறைவேறியது. எல்லோருங்கூடிச் சிறந்த பூஷணங்களும் பொன்னாடைகளும் பொருளும் பிள்ளையவர்களுக்கு ஸம்மானம் செய்தார்கள்.

*1 உறையூர்ப் புராண அமைப்பு

காப்பிய உறுப்புக்களெல்லாம் அமையப் பாட வேண்டுமென்றெண்ணித் தொடங்கிய தியாகராச லீலையானது முற்றுப்பெறாமற் போகவே இக் கவிஞர் கோமான் மனக்குறையுள்ளவராகவே இருந்தார். அக்குறை உறையூர்ப் புராணம் பாடியதால் தீர்ந்து விட்டது. மலை, நாடு, நகர், ஆறு முதலியன நன்கு புனைந்து கூறப்பட்டுள்ளதன்றி இப்புராணத்தில் சூரியோதயம், சூரியாஸ்தமனம், சந்திரோதயம், மணம் முதலிய பலவகையான காப்பிய உறுப்புக்கள் அமைந்துள்ளன. சிவபெருமான் தோத்திரங்கள் பல வகையில் இடையிடையே அமைந்து அன்பைப் பெருகச் செய்கின்றன.

அவையடக்கம் மிக அழகாக அமைந்துள்ளது. நூற்பாயிர உறுப்பில், நூலினுள் வரும் செய்திகளைப் பலவகையில் எடுத்தாளுதல் சிறந்த கவிஞர்களின் மரபு; அதனைப் பின்பற்றி இக் கவிஞரும் அவையடக்கச் செய்யுட்களுள் ஒன்றில்,

*2 “உயர்குண நிறத்தி னோடு மற்றைய குணங்கட் குள்ள
பெயர்வறு நிறங்க ளுந்தன் மேனியிற் கொண்ட பெம்மான்
உயர்வுறு பெரியோர் சொற்ற வொண்சுவைப் பாட லோடு
பெயர்வறு சிறியேன் சொற்ற பாடலும் பெரிது கொள்வான்”

என இத்தலத்திற் சிவபெருமான் பஞ்சவர்ணம் கொண்ட வரலாற்றை எடுத்துக் கூறுகின்றார். சோழ நாட்டைச் சிறப்பிக்கையில் அது தேவலோகத்தினும் சிறந்ததென்னும் கருத்துப் புலப்பட,

“அறவினைப் போக மூட்டி யமைத்தநா ளொழிந்த ஞான்றே
திறமிறக் கீழே தள்ளுந் தெய்வநாட் டினைப்போ லாது
பெறலறுந் தரும் மூட்டிப் பிறங்குதற் சார்ந்து ளோரை
நிறமரு வுறமே லேற்று நிலையது சோழ நாடு”

என்று கூறுவதில் இவருடைய தேசாபிமானம் புலப்படுகின்றது.

ஐந்திணை வளங்களையும் ஒப்புயர்வின்றிச் சிறப்பித்துச் சொல்லும் இப் பெருங்கவிஞர் நெய்தல் வளம் சொல்லும்பொழுது, அந்நிலத்து வாழ்வார் தம் தெய்வமாகிய வருணனை வழிபடும் முறையொன்றை அறிவித்துள்ளார்:

“நீடு தம்வலை வளம்பொலி தரநிகழ் சுறவக்
கோடு நாட்டுபு பரதவர் தொழுந்தொறுங் குறைதீர்த்
தாடு சீர்ப்புன லிறையவ னாட்சிகொண் டமரும்
பாடு பெற்றது கானல்சூழ் பரப்புடை நெய்தல்.”

இதிற் கூறப்பட்ட செய்தி பண்டை நூல்களிற் காணப்படுவது.
திருநகரப் படலத்தில்,

"செந்தமி ழருமை நன்கு தெரிபவர் தெரிதற் கேற்ப
முந்திநற் பொன்பூ ணாடை முகமனோ டுதவ வல்லார்
அந்தமில் புகழ்வே ளாள ரணிமறு கியல்பென் சொற்றாம்” (85)

என்ற செய்யுள் இவருடைய தமிழருமையை நன்கறிந்து பாராட்டி ஆதரித்த உறையூர்ச் செல்வர்களை நினைந்து பாடப் பெற்றிருத்தல் வேண்டும். தங்களை ஆதரித்துப் போற்றியவர் பெயர்களைப் புலவர்கள் தாம் செய்த நூல்களில் நல்ல இடத்தில் வைத்துப் பாராட்டும் மரபு பண்டைக் காலம் முதலே இருந்து வருவதன்றோ?

புராணத்திற் கூறப்படும் வரலாறுகள் அந்த அந்த இடங்களுக்கேற்ற மன உணர்ச்சியை எழுப்பத் தக்க சொற்பொருளமைதியுடன் விளங்குகின்றன. திருப்பராய்த்துறை யென்னுந் தலத்தில் சிவபெருமான் திருக்கோயிலில் தரிசனம் செய்யவந்த சிலருடன் ஒரு வணிகனும் வந்து நின்றான். அக்கோயிலிலுள்ள ஆதிசைவர் வழக்கம்போல் யாவருக்கும் திருநீறு வழங்கினார். அதனைப் பிறர் பக்தியுடன் பெற்று அணிந்து கொண்டனர். வணிகன் கீழே சிந்திவிட்டான். அதனைக் கண்ட ஆதிசைவர் அஞ்சிச் சினந்து கூறுவதாக உள்ள ஒரு பகுதி சிவத்துரோகத்தின் பயனை நன்கு அறிவிக்கின்றது.

"நீற்றைச் சிந்தினை யல்லையிந் நிகழ்பவத் தடையும்
பேற்றைச் சிந்தினை யறவினை யுளனெனப் பேசும்
கூற்றைச் சிந்தினை யிவணடைந் துறுசுகங் குலவும்
ஆற்றைச் சிந்தினை சிந்தினை நின்றிரு வனைத்தும்” 

           (வில்வாரணியப். 12)

என்று ஆதிசைவர் சொல்லுவதாக அமைந்த செய்யுள் அவர் உள்ளத்தெழுந்த சினத்தையும் இரக்கத்தையும் ஒருங்கே தெரிவிக்கின்றது.

உதங்கமுனிவரென்பவர் உறையூரை நோக்கி வரும்பொழுது பல தலங்களைத் தரிசித்து வந்ததாகச் சொல்லப்படும் பகுதி அத்தலங்களின் வரலாற்றைச் சுருக்கமாகவும் அழகாகவும் புலப்படுத்துகின்றது:

“அனைபோலு நல்லானை யடையாரிற் புல்லானை
வினையாவு மில்லானை விளங்குமறைச் சொல்லானைப்
புனைமேரு வில்லானைப் புரிசடையிற் செல்லானை
எனையாள வல்லானை யெழிற்காஞ்சி யிடைப்பணிந்தான்”
“அடுபுலித்தோ லுடையானை யனைத்துலகு முடையானை
வடுவில்களங் கரியானை மாலயனுக் கரியானை
படுபுனன்மா சடையானைப் பவமெனுமா சடையானை
நெடுமணிப்புற் றுறைவானை நிறைவானைப் பூசித்தான்.”

     (உதங்கமுனி பொலிவடைந்த படலம், 82, 102.)   

பஞ்சவர்ணப் படலத்தில் உறையூர்ச் சிவபெருமான் உதங்க முனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களிற் காட்டியருளிய செய்தி சொல்லப்படுகிறது. இப்பகுதியில் சிவபெருமான் தமக்குக் காட்டியருளிய ஒவ்வொரு திருக்கோலத்தையும் தரிசித்து இன்புற்ற உதங்க முனிவர் அவ்வக்கோலத்தைச் சிவபெருமான் கொண்டதற்குப் பலவகைக் காரணங்களைக் கூறுவதாக இந்த வித்தாரகவி அமைத்துள்ளனர்.

படிக உருவத்தைக் கண்டு உதங்க முனிவர் கூறுதல்

“வெள்ளிய மால்வரை வெள்ளிய மால்விடை வெண்டும்பை
வெள்ளிய வான்மதி வெள்ளிய வான்புனல் வெண்ணீறு
வெள்ளிய வார்குழை கொண்டு விளங்குறு தற்கேற்ப
வெள்ளிய மாபடி கத்துரு வாயினை மேலோயே.” 

       (பஞ்சவர்ணப் படலம், 65.)

சூரவாதித்தன் என்னுமரசன் உறையூரைத் தலைநகராக ஆக்கியதும், வேட்டை மேற்சென்று காந்திமதியென்னும் நாக கன்னிகையைக் கண்டு காதல் கூர்ந்து மணஞ்செய்ததும், பிறவும் சூரவாதித்தப் படலத்திற் சொல்லப்படுகின்றன. காந்திமதியின் கேசாதிபாத வருணனை சிறந்த உவமை முதலிய அணிகளுடன் காணப்படும். சந்திரோதயம், சந்திரோபாலம்பனம் முதலியன இப் படலத்தில் வந்துள்ளன.

சந்திரோதயம்

“வாத வூரர் தில்லைநகர் மருவிப் பிடகர் வாய்மூடக்
காத லொருபெண் வாய்திறப்பக் கடவு ளருளாற் செய்ததெனச்
சீத மதியம் வான்மருவிச் செழுந்தா மரைகள் வாய்மூடத்
தாத வாம்பல் வாய்திறப்பத் தண்ணங் கதிராற் செய்ததே.”

சந்திரோபாலம்பனம்

“ஒருபா தலத்து வந்தவெழிற் காந்தி மதியென் னுள்புகுந்து
பொருபான் மையரின் வருத்துமது போதா தென்று மீதலத்து
வருபா னிறத்த செழுங்காந்தி மதியே வெளிநீ வருத்துவையால்
இருபா லஞரா லுள்ளுறவும் வெளியே கவுமென் னுயிரஞ்சும்.” 

      (சூரவாதித்த. 153, 161.)

பகைவரும் போற்றல்

பிள்ளையவர்கள் பங்களூர் சென்றுவந்ததை அநேகர் பாராட்டி வந்தாலும் இவருக்கு அங்கே கிடைத்த ஸம்மானம் அதிகமென்றும், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை’ என்பது போலக் கன்னட தேசத்திற் சென்று இவர் பாராட்டப் பெற்றது ஒரு கெளரவமாகாதென்றும் சில பொறாமைக்காரர்கள் அங்கங்கே சொல்லித் திரிந்தனர். அவர்கள் இவர் இவ்வுறையூர்ப் புராணத்தை அரங்கேற்றிய பொழுது பதசாரங்கள் சொல்வதையும் விஷயங்களைத் தக்க மேற்கோள்களைக் காட்டி விளக்குவதையும் இவருக்குள்ள நூலாராய்ச்சியின் விரிவையும் அப்புராணத்தில் இவர் அமைத்துள்ள நயங்களையும் கேட்டு ஆனந்தமடைந்து தங்கள் எண்ணங்களையெல்லாம் மாற்றி, “பங்களூரிற் பெற்ற பரிசிற்கு இவர் பாத்திரரே. இன்னும் எவ்வளவு வேண்டுமாயினும் கொடுக்கலாம். இவருடைய புலமை அகன்றும் அறிவரிதாயும் விளங்குகின்றது” என்று வியந்து தங்கள் பொறாமைக் குணத்தைப் போக்கிக்கொண்டனர்.

வித்துவானென்னும் பட்டம் பெற்றது

இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு ‘வித்துவான்’ என்பது காணப்படும்.

*3 காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் எல்லோராலும் நன்கு மதிக்கப்பெற்று உலாவிவருவதையும் இவர் திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ் இயற்றியிருப்பதையும் அறிந்த அன்பர்கள் உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை மீது ஒரு பிள்ளைத்தமிழ் இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அவ்வாறே வழக்கப்படி செய்து முடித்து ஸ்ரீ காந்திமதியம்மையின் சந்நிதியில் அரங்கேற்றினர். அங்கே வந்திருந்த வித்துவான்கள் அந்நூலை மிகவும் பாராட்டிச் சிறப்புப் பாயிரங்களால் தங்கள் நன்மதிப்பைப் புலப்படுத்தினார்கள். அந்தச் செய்யுட்களுள்,

“தூமேவு திருமூக்கீச் சரப்பஞ்ச வன்னேசச் சோதி பால்வாழ்
ஏமேவு திருக்காந்தி மதிபிள்ளைத் தமிழமிழ்த மெமக்கீந் தானால்
நாமேவு தமிழ்ப்புலமைக் கோரெல்லை யாயுறைந்த நல்லோன் வல்லோன்
மாமேவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே”

என்னும் செய்யுள் மட்டும் கிடைத்தது. அந்நூலை அரங்கேற்றி வருகையிற் பொறாமையால் துராட்சேபஞ் செய்து குழப்பி விடுகிறதென்று நினைந்து சிலர் வரப்போவதாகக் கேள்வியுற்ற சிரஸ்தார் செல்லப்பா முதலியாரென்பவர் தக்கவர்களைக் கொண்டு முதலில் அங்ஙனம் நடைபெறாமற் செய்ததன்றிப் பின்னும் அன்னோர் ஒருவரும் வாராமல் தக்க பாதுகாப்பையும் செய்வித்தனர்.

அதனை அரங்கேற்றிய பின்பு பல கன தனவான்களால் இவருக்குத் தக்க ஸம்மானங்கள் அளிக்கப்பட்டன. ஒருவர் விலையுயர்ந்த கடுக்கனும் மோதிரமும் வழங்கினார். அந்நூல் விரோதிகிருது வருடம் (1852) வைகாசி மாதம் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது.

கற்குடிமாலை

சிலருடைய வேண்டுகோளுக்கிணங்கி எறும்பீச்சரம் வெண்பா வந்தாதி, திரிசிரபுரத்துள்ள கீழைச் சிந்தாமணி தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கற்குடிமாலை முதலியன செய்யப்பட்டு அங்கங்கே உரியவர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டன. அவற்றுள் எறும்பீச்சரம் வெண்பாவந்தாதியில் ஒரு செய்யுளின் பகுதியாகிய, “கூடல்வளை, விற்றானை மேருமலை வில்லானை” என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றது.

*4 கற்குடிமாலை எளிய நடையில் அமைந்தது. இந்நூலுள், திருக்குறட் பாக்களின் கருத்து 9, 65, 91-ஆம் செய்யுட்களிலும், திருவுந்தியார் திருக்களிற்றுப் படியாரென்பவற்றின் கருத்துக்கள் 10,11-ஆம் செய்யுட்களிலும், திருவாசகத்தின் கருத்துக்கள் 87, 98-ஆம் பாடல்களிலும், பெரிய புராணத்தின் கருத்து 89-ஆம் செய்யுளிலும், பழமொழிகள் 4, 19-ஆம் செய்யுட்களிலும், திருவிளையாடற் புராணத்தின் கருத்து 16-ஆம் செய்யுளிலும், நாயன்மார்களுடைய அருஞ்செயல்கள் 17, 27, 34-5, 47, 72-3, 84ஆஞ் செய்யுட்களிலும், யாப்பருங்கலக் காரிகையின் கருத்து 77ஆம் பாடலிலும், சிலேடை 12, 44-ஆம் செய்யுட்களிலும், அகப் பொருளிலக்கணச் செய்தி 43-ஆம் பாடலிலும், ஒருவகைக் கற்பனை நயங்கள் 21-2- ஆம் பாடல்களிலும், உலோபிகளுடைய செயல் 94-ஆம் பாடலிலும், பிரார்த்தனைகள் 23, 80-ஆம் பாடல்களிலும் மிக அழகாக அமைந்துள்ளன. இதிலுள்ள சில பாடல்கள் வருமாறு:-

"புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார் பொன்னடித் தாமரைச் செருப்பு
மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ் வழிப்புலாய்க் கிடப்பினு முய்வேன்
எண்ணுவ தினியா திமையவ ருலக மிறுதிநா ளழிவது நோக்கிக்
கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங் கற்குடி மாமலைப் பரனே.”
“மறையவர் திருவை வைதிகர் துணையை வருபர சமயகோ ளரியைக்
குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக் கொழுந்தினைத் துதிக்குமா றருள்வாய்
நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க ணன்குமைத் திலகந்தீட் டுதற்குக்
கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங் கற்குடி மாமலைப் பரனே.” (6, 48.)

*5  வாட்போக்கிக் கலம்பகம்

இவர் ஒருமுறை இரத்தினகிரியென வழங்கும் வாட்போக்கி யென்னுந் தலத்திற்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அந்தத் தலத்தின் அடியவர்களாகவுள்ள பன்னிரண்டாஞ் செட்டிமார்களிற் பலர் விரும்ப, அந்தத் தலவிஷயமாக ஒரு கலம்பகம் இவராற் பாடப்பெற்றது. அது ‘வாட்போக்கிக் கலம்பகம்’ என வழங்கும். அத் தலத்தின் பெயர்களாகிய வாட்போக்கி, அரதனாசலம், சிவாயமென்பவைகளும், ஸ்வாமியின் திருநாமங்களாகிய வாட்போக்கி, முடித்தழும்பர், இராசலிங்கர், மலைக்கொழுந்தென்பவைகளும், அம்பிகையின் திருநாமமாகிய சுரும்பார்குழலி யென்பதும், சத்த கன்னியர் வழிபட்டு இறைவன் கட்டளையால் இங்கே தங்கியிருப்பதும், வயிரப்பெருமாளென்னும் தெய்வம் இத்தலத்தைப் பாதுகாத்துக் கொண்டிருத்தலும், இடி பூசை செய்ததும், ஆரியவரசன் வெட்டினமையாலுண்டான வாளின் தழும்பு இறைவன் திருமுடியிலிருத்தலும், ஓரிடையன் அபிஷேகத்திற்காகக் கொண்டுவந்த பாற்குடத்தைக் கவிழ்த்த காகம் எரிக்கப் பெற்றதும், ஆரியர் திருமஞ்சனம் கொண்டுவருதலும், காக்கையின் செய்தியைப் புலப்படுத்த அதன் வடிவம் அக் குடங்களில் அமைக்கப் பெற்றிருத்தலும், சிவநேசச் செல்வர்களும் தம்முடைய பொருள் வருவாயுட் பன்னிரண்டு பங்கில் ஒருபங்கை இறைவனுக்கு அளித்து வருபவர்களுமாகிய பன்னிரண்டாஞ் செட்டிமார்களின் அருமைச் செயலும் உரிய இடங்களிற் செவ்வனே இந்நூலுள் அமைக்கப் பெற்றுள்ளன.

கலம்பகத்திற்குரிய உறுப்புக்கள் எவ்வளவு செவ்வையாக அமைய வேண்டுமோ அங்ஙனமே இதில் அமைந்து விளங்குகின்றன. இதிலுள்ள கூத்தராற்றுப் படையகவலில், இத்தலத்தையடைந்து வழிபட்டுப் பெருஞ்செல்வமடைந்து தன்னிடம் செல்லும் ஒரு கூத்தன், வறுமையால் துன்புற்றுத் தன்னை யாசித்த மற்றொரு கூத்தனை நோக்கி, இத்தலத்தை யடையும் முன்னம் தான் அடைந்திருந்த வறுமைத் துன்பத்தைக் கூறும் பகுதி படிப்பவர்களுடைய மனத்தையுருகச் செய்யும். இந்நூலிலுள்ள,

“தழுவுமையான் முன்னுந் தமிழிறையாற் பின்னும்
தொழுமிறையான் மேலுஞ் சுவடு - கெழுமுவகீழ்
இன்றா லெனுங்குறைபோ மென்மனஞ்சேர் வாட்போக்கி
அன்றா லமர்ந்தா யடி” (7)

என்ற செய்யுளில், தொழும் இறையால் மேலும் சுவடு கெழுமியதாகச் சொல்லியது இத்தலவரலாறாகும். ‘உமையினால் முன்னும், பாண்டிய அரசனாற் பின்னும், ஆரிய அரசனால் மேலும் சுவடுகள் உண்டாயின; கீழே மட்டும் சுவடு இல்லை; என்னுடைய கல்லைப் போன்ற நெஞ்சில் தேவரீருடைய திருவடிகளைச் சேர்ப்பின் அக் குறை நீங்கும்’ என்பது இச் செய்யுளின் பொருள்.

இந் நூலிலுள்ள வேறு சில நயமுள்ள பாடல்கள்:

“குறையின்மா ணிக்கமலை வெள்ளிமலை நாளுங்
குலவுசோற் றுத்துறைபாற் றுறைநெய்த்தா னமுநீர்
உறையில்கரச் சிலையம்பொன் வரைநெடுமான் முதலோர்க்
குறுபோகங் கொடுப்பதுநுந் திருவருள்பா லுறைவாள்
கறையிலறம் பலவளர்ப்பா ளொருதோழ னிதிக்கோன்
கரையில்பொருட் பங்களிப்பார் கனவணிக ருளர்நீர்
முறையிலெலும் பாதியணிந் தையமேற் றுழல்வீர்
முடித்தழும்பீ ரிதுதகுமோ மொழிமினடி யேற்கே.” (15)

வண்டு விடு தூது  

“இன்று பைங்கிளியை யேவி னம்மைகை இருக்கு மோர்கிளியொ டுரைசெயும்
எகின நேடியறி யாத தேமுடிமுன் எங்ங னின்றுசெவி யருகுறும்
ஒன்று மங்குலரு குறின்வ ளைத்திவையொ டுறுதி யென்றுசடை சிறைசெயும்
உறுக ருங்குயிலொர் செவிலி பட்டதை உணர்ந்த தேசெலவு ளஞ்சிடும்
துன்று தென்றலெதிர் சென்றி டிற்கடிது தோள்கொள் பூணிரையெ னக்கொளும்
துச்சி லல்லவென வண்டு வாழ்செவி துனைந்து சேரும்வலி யார்க்குள
தன்று தொட்டெனது கொண்டை வாழும்வரி வண்டிர் காண்மய லடங்கவும்
அரத னாசல ரிடத்து ரைத்தவர் அணிந்த மாலைகொணர் மின்களே.” (26)

பிள்ளையவர்கள் இயற்றிய கலம்பகங்களில் இது முதலாவதாகும். இவர்கள் சொல்ல இந் நூலை அப்பொழுதப்பொழுது எழுதிவந்தவர் சி.தியாகராச செட்டியார்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இந்நூல் தியாகராச செட்டியாரால் விஷு வருஷம் ஆனி மாதம் பதிப்பிக்கப்பட்டது.
2.  உயர்குணமென்றது சத்துவத்தை; அதன் நிறம் வெண்மை.
3.   ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 276-387.
4.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2810 – 2914. மற்ற இரண்டு நூல்களும் கிடைக்கவில்லை.
5.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 947-1048.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s