நமது மகமதிய சகோதரர்கள்

-மகாகவி பாரதி

ஹிந்து- முஸ்லிம் மத வேற்றுமைப் பிரச்னை இன்று தோன்றியதல்ல என்பதை மகாகவி பாரதியின் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்த வேற்றுமையை இல்லை என்று ஒளித்துவைத்துப் பிரயோசனமில்லை என்று கூறும் இதழாளர் பாரதி, ”மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப் பற்றி பயமேற்படுகின்றது“ என்று விசனப்படுகிறார். நமது மகமதிய சகோதரர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்ச்சியை எவ்வாறாகிலும் சரிப்படுத்த வேண்டும் என்ற அவரது ஆத்மார்த்த விருப்பமும் இச்செய்தியில் தெரிகிறது...

“ஸத்யமேவ ஜயதே”. இந்தியாவின் வருங்காலப் பெருமைக்கும், சிறப்புக்கும், இத்தேச ஜனங்களில் பெரும் பாலார் ஹிந்துக்கள், மகமதியர் என இரண்டு பகுதிப்பட்டு  நிற்பது பெரும் தடையாகவே இருக்கிறதென்பதை ஒளித்து வைத்து பிரயோஜனமில்லை. தென்னிந்திய கிராமாந்திரங்களிலே மகமதியர்களும், ஹிந்துக்களும் தமக்குள்ள வேறுபாட்டை மறந்து மகமதியர்களும் ஹிந்துஜன சமூகத்தில் ஒரு கிளையராகவே கருதப்படுகிறார்கள்  என்பது வாஸ்தவமென்ற போதிலும், பொதுவாக இம்மாகாணத்திலும் கூட வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஹிந்து, மகமதியர்கள் ஒருவிதமான பரஸ்பர துவேஷம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மகமதிய ஆட்சியில் ஏற்பட்ட துவேஷமே.

இந்த விரோதங்களை நீக்கி இந்த இரண்டு ஜாதியாருக்குள்ளே சிநேக உணர்ச்சியும், சகோதரப் பான்பையும் ஏற்படுத்துவது இத் தேசாபிமானிகளின் முக்கிய கடமையாகும். ஆனால், ஒரு நோயைத் தீர்க்க விரும்புவோன் அந்த  நோயே இல்லையென்று பிரமாணம் செய்துவிடுதல் மிகவும் சிறப்பான உபாயமில்லை. ஹிந்து, மகமதியருக்குள்ளே விரோதங்களைத் தீர்க்க விரும்புவோர் மேற்படி விரோதங்களே இல்லையென்று சாதித்து விடுதல் சரியான பாதையாக  மாட்டாது. திருஷ்டாந்தமாக கல்கத்தாவிலே நடந்த சிவாஜி உற்சவத்தை எடுத்துக்கொள்வோம். எவ்விதமான ஆபத்திலும் ஹிந்துக்களை விட்டு நீங்காத மகாதேசாபிமானிகளாகிய வியாகத்ஹுசேன் போன்றவர்கள் கூட அந்த சமயத்திலே சிவாஜி உற்சவத்தினின்றும் விலகி இருந்துவிட்டார்கள். சிவாஜியை தெய்வாம்சமென்றும், மகாத்மாவென்றும் ஹிந்துக்கள் ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்கும் போது, அவர் கொலையாளி என்றும், பாதகர் என்றும் அநேக மகமதியர்கள் “இங்கிலீஷ்மான்” பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கிறார்கள்.

மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப்பற்றி பயமேற்படுகின்றது. “கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும்” நடக்குமானால் எதிரிக்கு எப்போழுதும் சந்தோஷமேயல்லவா? இதற்காக, நம்மவர்கள் பெரும் பாடுபட்டு ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் இடையேயுள்ள பகைமையாகிய கழியை கடக்க முயல வேண்டும். அந்தக் கழியிலே இருக்கும் கற்களும், பாறைகளும் எண்ணிறந்தவையாகும். இதைக் கடக்கும் போது எத்தனையோ ஆபத்துக்களும் துன்பங்களும் நேரிடக் கூடும். ஆனால், விடாமுயற்சி, பொறுமை, தீரத்துவம், கருணை என்னும் சிறந்த மாலுமிகளைத் துணையாகக்கொண்டு நாம் செல்ல வேண்டும். நம்மால் கூடிய வரை முயற்சி செய்துவிட்டுப் பலனை தெய்வத்திற்கு விட்டுவிடுதலே பொருந்தும். “பசுவைக் கொல்லுவோர்”, “பசுவை வணங்குவோர்”  ஆகிய இந்த இரண்டு வகுப்பினரும் எத்தனைக் கெத்தனை சீக்கிரமாக நெருங்கத் தொடங்குகிறார்களோ, அத்தனைத் கத்தனை நலமுண்டாகும். மகமதியர்களும் இந்தப் பெரும் முயற்சியிலே தம்மாலியன்ற அளவு ஒத்து முயல வேண்டுமென்று மிகவும் ஆவலுடன் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

  • இந்தியா (23.06.1906)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s