-மகாகவி பாரதி
காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

பாரதி- அறுபத்தாறு (49-53)
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்; உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். 49
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்; வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்!
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. 52
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? 53
$$$
One thought on “பாரதி-அறுபத்தாறு- (49-53)”