-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்
1. அன்பின் உழைப்பு வீணா?
தென்னாப்பிரிக்காவிடமிருந்து மூன்றரைக் கோடி பவுன் நன்கொடையைப் பெறுவதற்கும், அங்கிருக்கும் ஆங்கிலேயர், போயர்கள் இவர்களின் மனத்தைக் கவருவதற்குமே ஸ்ரீ சேம்பர் லேன் வந்திருந்தார். ஆகவே, இந்தியரின் தூது கோஷ்டிக்கு அவர் திருப்திகரமான பதில் கூறவில்லை. “சுயாட்சி பெற்றுள்ள குடியேற்ற நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் குறைகள் நியாயமானவை என்றே தோன்றுகிறது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். ஆனால், ஐரோப்பியரின் மத்தியிலிருந்து வாழ நீங்கள் விரும்பினால், அவர்கள் உங்களிடம் பிரியங் கொள்ளும்படி செய்ய நீங்கள் முயல வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தப் பதில், தூது சென்ற இந்தியரின் உற்சாகத்தைக் குலைத்துவிட்டது. நானும் ஏமாற்றமடைந்தேன். எங்கள் எல்லோருக்குமே இது கண்களைத் திறந்துவிடுவதாக இருந்தது. இனித் தீவிரமாக வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதே என்று கண்டேன். என் சகாக்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறினேன்.
உண்மையில் ஸ்ரீ சேம்பர்லேனின் பதிலில் தவறானது ஒன்றும் இல்லை. விஷயத்தைக் குழப்பாமல் உள்ளதை உள்ளபடியே அவர் சொன்னது நல்லதேயாகும். ‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ அல்லது ‘வாளெடுத்தவன் வகுத்ததே சட்டம்’ என்பதை அவர் நயமான முறையில் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். ஆனால், எங்களிடமோ வாளே இல்லை. வாளினால் வெட்டப்படுவதற்கு வேண்டிய துணிச்சலும் உடல் வலுவுங்கூட எங்களுக்கு இல்லை.
இந்த உபகண்டத்தில் ஸ்ரீ சேம்பர்லேன் கொஞ்ச காலமே இருப்பதாக முடிவு செய்திருந்தார். ஸ்ரீநகருக்கும் கன்னியாகுமாரிக்கும் 1,900 மைல் தூரம் என்றால், டர்பனுக்கும் கேப் டவுனுக்கும் 1,100 மைல் தூரத்திற்குக் குறைவில்லை. ஸ்ரீ சேம்பர்லேன் இந்தத் தொலை தூரத்தைச் சண்டமாருத வேகத்தில் சுற்ற வேண்டியிருந்தது.
நேட்டாலிலிருந்து அவசரமாக டிரான்ஸ்வாலுக்குச் சென்றார். அங்கிருக்கும் இந்தியருக்காகவும் நான் ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்து அவரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் பிரிட்டோரியாவுக்குள் போய்ச் சேருவது எப்படி? உரிய காலத்தில் என்னைத் தங்களிடம் தருவித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட வசதிகளைப் பெறும் நிலையில் அங்கிருந்த நம் மக்கள் இல்லை. போயர் யுத்தம் டிரான்ஸ்வாலை வனாந்திரமாக்கி விட்டது. உணவுப் பொருள்களோ, துணிமணிகளோ அங்கே கிடைப்பதில்லை. கடைகளெல்லாம் காலியாகவோ, மூடப்பட்டோ கிடந்தன. அவை திறக்கப்பட்டு, சாமான்கள் விற்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தெனினும், அதற்கு நாளாகும். கடைகள் திறக்கப்பட்டு உணவுத் தானியங்கள் விற்கப்படும் வரையில், முன்னால் அங்கிருந்து ஓடிப் போய்விட்டவர்களைக் கூடத் திரும்பி வர அனுமதிக்க முடியாது. ஆகையால், டிரான்ஸ்வால் வாசி ஒவ்வொருவரும் உள்ளே நுழைய அனுமதிச் சீட்டுப் பெற வேண்டியிருந்தது. இது ஐரோப்பியருக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடும். ஆனால், இந்தியருக்கோ இது மிகக் கஷ்டமானதாயிற்று.
யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும் இலங்கையில் இருந்தும் அநேக அதிகாரிகளும் சிப்பாய்களும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தனர். அவர்களில் அங்கேயே குடியேறிவிட விரும்புகிறவர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியது, பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடமை என்று கருதப்பட்டது. எப்படியும் அவர்கள் புதிதாக அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவர்கள் இருந்தது சௌகரியமாயிற்று. அவர்களில் சிலரின் சுறுசுறுப்பான புத்திக்கூர்மையினால் ஒரு புதிய இலாகாவையே சிருஷ்டித்து விட்டார்கள். இது அவர்களுடைய சாமார்த்தியத்தைக் காட்டியது. நீக்ரோக்களுக்கென்று ஒரு தனி இலாகா இருந்தது. அப்படியானால், ஆசியாக்காரர்களுக்கென்றும் ஒரு தனி இலாகா ஏன் இருக்கக் கூடாது? இந்த வாதம் நியாயமானதாகவே தோன்றியது. நான் டிரான்ஸ்வாலை அடைந்ததற்கு முன்னாலேயே இந்த இலாகா ஆரம்பமாகி தன்னுடைய அதிகாரத்தை நாலா பக்கங்களிலும் பரப்பி வந்தது. அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கும் அதிகாரிகள், வெளியேறியிருந்து இப்பொழுது திரும்புகிறவர்கள் எல்லோருக்குமே அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கலாம். ஆனால், திரும்பி வரும் ஆசியாக்காரர்களுக்கு புதிய இலாகாவின் குறுக்கீடு இல்லாமல் அவர்கள் எப்படிக் கொடுத்துவிட முடியும்? புதிய இலாகாவின் சிபாரிசின் பேரிலேயே அனுமதிச் சீட்டுக் கொடுப்பதென்றால் அனுமதிச் சீட்டுக் கொடுக்கும் அதிகாரிகளின் சில பொறுப்புக்களும், பாரமும் குறைந்து விடும். இவ்வாறே அவர்கள் வாதித்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், புதிய இலாகாவுக்கு ஏதாவது வேலை வேண்டும் என்பதுதான். அதோடு அந்த ஆட்களுக்குப் பணமும் வேண்டும். அவர்களுக்கு வேலை இல்லையென்றால், அந்த இலாகா அவசியம் இல்லை என்று ஆகிவிடும்; அதை எடுத்தும் விடுவார்கள். ஆகையால், இந்த வேலையை அவர்களே தங்களுக்குத் தேடிக் கொண்டார்கள்.
இந்தியர், அனுமதிச் சீட்டுக்கு இந்த இலாகாவிடம் மனுச் செய்து கொள்ள வேண்டும். பல நாட்கள் கழித்தே பதில் கிடைக்கும். டிரான்ஸ்வாலுக்குத் திரும்ப விரும்பியவர்களின் தொகை ஏராளமானதாக இருந்துவிடவே, இதற்குத் தரகர் கட்டணம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதிகாரிகளுடன் சேர்ந்து இத் தரகர்கள் ஏழை இந்தியர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்தனர். சிபாரிசு இல்லாமல் அனுமதிச் சீட்டே கிடைக்காது என்பதை அறிந்தேன். சிபாரிசு வைத்தும் சிலர் விஷயத்தில் நூறு பவுன் வரையில் பணமும் கொடுக்க வேண்டியிருந்ததாம். இந்த நிலையில் நான் டிரான்ஸ்வாலுக்குப் போவதற்கு வழி இருப்பதாகவே தோன்றவில்லை. எனது பழைய நண்பரான டர்பன் போலீஸ் சூப்பரிண்டெண்டென்டிடம் போனேன். “தயவு செய்து அனுமதிச் சீட்டு அதிகாரிக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து எனக்கு அனுமதிச் சீட்டுக் கிடைக்க உதவுங்கள். நான் டிரான்ஸ்வாலில் வசித்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று அவரிடம் கூறினேன். உடனே, அவர் தொப்பியை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டு என்னுடன் வந்து எனக்கு அனுமதிச் சீட்டை வாங்கிக் கொடுத்தார். நான் புறப்பட வேண்டிய ரெயில் கிளம்புவதற்கு அரைமணி நேரமே இருந்தது. என் சாமான்களையெல்லாம் முன்பே தயாராக வைத்திருந்தேன். சூப்பரிண்டெண்டென்ட் அலெக்ஸாண்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் பிரிட்டோரியாவுக்குப் புறப்பட்டேன்.
என் முன்னாலிருக்கும் கஷ்டங்கள் எவ்வளவு என்பதைக் குறித்து ஒருவாறு நான் இப்பொழுது தெரிந்துகொண்டேன். பிரிட்டோரியா போய்ச் சேர்ந்ததும் விண்ணப்பத்தைத் தயார் செய்தேன். சேம்பர்லேனைச் சந்திக்கப் போகும் பிரதிநிதிகளின் பெயரை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று டர்பனில் கேட்கப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், இங்கோ புது இலாகா இருந்தது; அது முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்று கேட்டது. என்னைப் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கவிடாமல் செய்ய அதிகாரிகள் விரும்பினார்கள் என்பதை பிரிட்டோரியா இந்தியர் அப்பொழுதே அறிந்திருந்தனர்.
வேடிக்கையானதே யென்றாலும் வேதனையான இச்சம்பவத்திற்கு மற்றோர் அத்தியாயமும் அவசியம்.
$$$
2. ஆசியாவிலிருந்து வந்த எதேச்சதிகாரிகள்
நான் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசித்துவிட்டது எப்படி என்பது புதிய இலாகாவின் தலைமை அதிகாரிகளுக்கு விளங்கவில்லை. தங்களிடம் வரும் இந்தியரிடம் இதைப்பற்றி விசாரித்தார்கள். ஆனால், அவர்களாலும் நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை. எனக்குள்ள பழைய தொடர்பை வைத்துக் கொண்டு அனுமதிச் சீட்டு இல்லாமலேயே நான் நுழைந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டுவிடவே அதிகாரிகள் முற்பட்டனர். அப்படித்தான் என்றால், நான் கைது செய்யப்பட வேண்டிய குற்றத்தைச் செய்தவனாவேன்!
ஒரு பெரிய யுத்தம் முடிந்ததுமே, அப்போது அதிகாரத்திலிருக்கும் அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்களைக் கொடுப்பது பொதுவான வழக்கம். தென்னாப்பிரிக்கா விஷயத்திலும் அதுவே நடந்தது. சமாதானப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றியது. அதன்படி, அனுமதி இல்லாமல் டிரான்ஸ்வாலுக்குள் வரும் யாரையும் கைது செய்து சிறைத் தண்டனை விதிக்கலாம். அச்சட்டத்தின் இந்த விதியின் கீழ் என்னைக் கைது செய்யலாமா என்று அதிகாரிகள் யோசித்தார்கள். ஆனால், அனுமதிச் சீட்டைக் காட்டும்படி என்னைக் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. எனினும், அதிகாரிகள் டர்பனுக்குத் தந்தி கொடுத்து விசாரித்தார்கள். அனுமதிச் சீட்டின் பேரிலேயே நான் வந்திருக்கிறேன் என்று அறிந்ததும் ஏமாற்றமடைந்தனர். ஆனால், இத்தகைய ஏமாற்றங்களினால் தோல்வியடைந்து விடக் கூடியவர்கள் அல்ல அவர்கள். டிரான்ஸ்வாலுக்குள் வந்துவிடுவதில் நான் வெற்றிபெற்றுவிட்டாலும் ஸ்ரீ சேம்பர் லேனிடம் நான் தூதுபோக முடியாதபடி அவர்கள் என்னை வெற்றிகரமாகத் தடுத்துவிட முடியும்.
ஆகவே, தூது செல்லப் போகும் பிரதிநிதிகளின் பெயரைச் சமர்ப்பிக்குமாறு சமூகத்தினரைக் கேட்டார்கள். தென்னாப்பிரிக்காவில் எங்குமே நிறவெறி இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தியாவில் நான் கண்ட இழிவான தந்திரங்களும், கீழ்த்தரமான உபாயங்களும் இங்கும் அதிகாரிகளிடம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் பொது இலாகாக்கள் மக்களின் நன்மைக்கு என்றே இருந்தன. அவை பொதுஜன அபிப்பிராயத்திற்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை. ஆகையால் அதிகாரிகள் மரியாதையுடனும், அடக்கத்தோடும் நடந்துகொள்ளுவார்கள். இதனால், வெள்ளையர் அல்லாதாருக்கும் ஓரளவுக்கு நன்மை இருந்துவந்தது. ஆசியாவிலிருந்து அதிகாரிகள் வந்து சேர்ந்ததும், அவர்களுடன் எதேச்சாதிகாரமும், அங்கே எதேச்சாதிகாரர்கள் பெற்றிருந்த பழக்கங்களும் கூடவே வந்துவிட்டன. தென்னாப்பிரிக்காவில் ஒரு வகையான பொறுப்பாட்சி அல்லது ஜனநாயகம் இருந்தது. ஆனால், ஆசியாவிலிருந்து இறக்குமதியான இந்தச் சரக்குகளோ, கலப்பற்ற எதேச்சதிகார மயமானவை. ஏனெனில், ஆசியாக்காரர்களை அந்நிய அரசாங்கமே ஆண்டு வருவதால் அவர்களுக்குப் பொறுப்பாட்சி எதுவும் இல்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஐரோப்பியர், அந்த நாட்டில் குடியேறி நிரந்தரக் குடிகள் ஆகிவிட்டவர்கள். அவர்கள் தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் ஆனதால், இலாகா அதிகாரிகளின் மீது அவர்களுக்கு ஆதிக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ ஆசியாவிலிருந்து ஏதேச்சதிகாரிகள் வந்து விட்டார்கள். இதன் பயனாக இந்தியர் இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆயினர்.
இந்த எதேச்சதிகாரத்தின் கொடுமையை நான் நன்றாக அனுபவித்திருக்கிறேன். இலாகாவின் பிரதம அதிகாரியை வந்து பார்க்குமாறு முதலில் எனக்குக் கட்டளை வந்தது. அந்த அதிகாரி இலங்கையிலிருந்து வந்தவர். பிரதம அதிகாரியின் ‘கட்டளை வந்தது’ என்று நான் சொல்லுவது, விஷயத்தை நான் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றி விடக்கூடும். எனவே இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எழுத்து மூலமான உத்தரவு எதுவும் எனக்கு வரவில்லை. ஆசியாக்காரர்களின் அதிகாரிகளை இந்தியத் தலைவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிச் சந்தித்தவர்களில் ஒருவர் காலஞ்சென்ற சேத் தயாப் ஹாஜிகான் முகமது. அந்தக் காரியாலயத்தின் பிரதம அதிகாரி, ‘நான் யார்? நான் எதற்காக அங்கே வந்திருக்கிறேன்?’ என்று அவரைக் கேட்டார். “அவர் எங்கள் ஆலோசகர். நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் வந்திருக்கிறார்” என்றார், தயாப் சேத்.
அப்படியானால், நாங்கள் இங்கே எதற்காக இருக்கிறோம்? உங்களைப் பாதுகாப்பதற்கென்றே நாங்கள் நியமிக்கப் பட்டிருக்கவில்லையா? இங்கிருக்கும் நிலைமையைப் பற்றி காந்திக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார், எதேச்சதிகாரி.
இக்குற்றச்சாட்டுக்குத் தயாப் சேத் தம்மால் இயன்ற வரையில் பதில் சொன்னார். அது, பின்வருமாறு: “நீங்கள் இருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால் காந்தி எங்கள் மனிதர். அவருக்கு எங்கள் மொழி தெரியும். எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்படியும் நீங்கள் அதிகாரிகள் தானே?”
என்னைத் தம் முன்னால் கொண்டு வருமாறு துரை, தயாப் சேத்துக்கு உத்தரவு போட்டார். தயாப் சேத் முதலியவர்களுடன் நான் துரையிடம் போனேன். எங்களை உட்காரச் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டே இருந்தோம்.
“இங்கே நீர் வந்தது எதற்காக?” என்று துரை என்னைப் பார்த்துக் கேட்டார்.
“எனது சகோதர இந்தியர், தங்களுக்கு ஆலோசனை கூறி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் வந்தேன்” என்று பதில் கூறினேன்.
“இங்கே வர உமக்கு உரிமை கிடையாது என்பது உமக்குத் தெரியாதா? நீர் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டு, தவறாக உமக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இங்கு குடியேறிய இந்தியராக உம்மைக் கருத முடியாது. நீர் திரும்பிப் போய் விட வேண்டும். ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீர் தூது போகக்vகூடாது. முக்கியமாக, இங்கிருக்கும் இந்தியரின் பாதுகாப்புக்கென்றே ஆசியாக்காரர்களின் இலாகா ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சரி நீர் போகலாம்” என்று கூறித் துரை எங்களை அனுப்பி விட்டார். பதில் சொல்லுவதற்குச் சந்தர்ப்பமே அளிக்கவில்லை.
ஆனால், என்னுடன் வந்தவர்களை மாத்திரம் அங்கே காக்க வைத்தார். அவர்களைக் கண்டபடி திட்டி, என்னை அனுப்பி விடுமாறு அவர்களுக்கு யோசனை கூறி அனுப்பினார். அதிக எரிச்சலுடன் அவர்கள் திரும்பி வந்தார்கள். இவ்விதம் நாங்கள் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று எங்கள் முன் குறுக்கிட்டது.
$$$
3. அவமதிப்புக்கு உட்பட்டேன்
அந்த அவமரியாதை என் மனத்தை அதிகமாக வருத்தியது. ஆனால், இதற்கு முன்னால் இத்தகைய அவமரியாதைகள் பலவற்றை சகித்திருக்கிறேனாகையால், அவைகளால் நான் பாதிக்கப்படாதவன் ஆகிவிட்டேன். எனவே, இப்பொழுது கடைசியாக ஏற்பட்ட இந்த அவமதிப்பையும் மறந்து விடுவதெனத் தீர்மானித்தேன். இவ்விஷயத்தில் விருப்பு வெறுப்பின்றிக் கவனித்து, எந்த வழி சரியெனத் தோன்றுகிறதோ அதன்படி நடப்பதென்றும் முடிவு செய்தேன்.
ஆசியாக்காரர்கள் இலாகாவின் பிரதம அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ சேம்பர்லேனை நானே டர்பனில் கண்டிருக்கிறேனாகையால், அவரைச் சந்திக்கப் போகும் தூது கோஷ்டியிலிருந்து என் பெயரை நீக்கிவிட வேண்டியது அவசியமாகிறது என்று அக்கடிதம் கூறியது. அக்கடிதத்தை என் சகாக்களினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தூது போவது என்ற யோசனையையே அடியோடு கைவிட்டு விடுவது என்று அவர்கள் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால், சமூகத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடமான நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
“ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீங்கள் உங்கள் குறைகளை எடுத்துக் கூறாது போனால், உங்களுக்குக் குறைகளே இல்லை என்று கருதப்பட்டுவிடும். எப்படியும் நாம் சொல்லப் போவதை எழுத்து மூலமே சொல்லப் போகிறோம். அதையும் நாம் தயாரித்திருக்கிறோம். அதை அவர் முன்பு நான் படிக்கிறேனா, வேறு ஒருவர் படிக்கிறாரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமே அல்ல. ஸ்ரீ சேம்பர்லேன் இந்த விஷயத்தைக் குறித்து நம்மிடம் விவாதிக்கப் போவதில்லை. இந்த அவ மரியாதைக்கு உட்பட்டுத் தீரவேண்டியது தான் என்று எண்ணுகிறேன்” என்றேன்.
நான் இவ்விதம் சொல்லி முடிப்பதற்குள் தயாப் சேத் பின்வருமாறு ஆத்திரத்தோடு கூறினார்: “உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை சமூகத்திற்கேற்பட்ட அவமரியாதை அல்லவா? நீங்கள் எங்கள் பிரதிநிதி என்பதை நாங்கள் எப்படி மறந்துவிட முடியும்?”
“உண்மையே. சமூகம்கூட இது போன்ற அவமரியாதைகளுக்கு உட்பட்டுவிட வேண்டியே இருக்கிறது. இதைத் தவிர நமக்கு வேறுவழி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“என்ன வந்தாலும் வரட்டும். புதிதாக ஓர் அவமரியாதைக்கு நாம் உட்படுவானேன்? இதையும் விட மோசமானது எதுவும் நமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. மேற்கொண்டும் நாம் இழந்து விடுவதற்கு நம்மிடம் இன்னும் ஏதாவது உரிமை பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டார் தயாப் சேத்.
அது ரோஷமான பதில்தான். ஆனால், அதனால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தினிடமுள்ள சக்தி இன்னது தான் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். நண்பர்களைச் சாந்தப்படுத்தினேன். அத்தூதுக் குழுவில் எனக்குப் பதிலாக இந்தியப் பாரிஸ்டரான ஸ்ரீ ஜார்ஜ் காட்பிரேயைச் சேர்த்துக் கொள்ளுமாறு யோசனை கூறினேன்.
ஆகவே, ஸ்ரீ காட்பிரே தூதுக் குழுவுக்குத் தலைவராகச் சென்றார். ஸ்ரீ சேம்பர்லேன் தமது பதிலில், நான் தூதுக் குழுவிலிருந்து விலக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சொன்னார். “திரும்பத் திரும்ப அதே பிரதிநிதி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை விடப் புதிதாக ஒருவர் இருப்பது நல்லதல்லவா?” என்று கூறி, இந்தியருக்கு ஏற்பட்டிருந்த மனப்புண்ணை ஆற்ற முயன்றார்.
ஆனால், இவைகளினாலெல்லாம் காரியம் சரியாக முடிந்துவிடவில்லை. ஆனால், சமூகமும் நானும் செய்ய வேண்டிய வேலையையே இவை அதிகப்படுத்தின. நாங்கள் அடியிலிருந்து வேலையைத் தொடங்க வேண்டியிருந்தது. “நீங்கள் சொன்னதன் பேரில் தானே சமூகம் யுத்தத்தில் உதவி செய்தது! அதன் பலனை இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று சிலர் என்னைக் குத்திக் காட்டினார்கள். அதனால் நான் பாதிக்கப்பட்டுவிடவில்லை. “அப்பொழுது நான் கூறிய யோசனைக்காக இப்பொழுது நான் வருத்தப்படவில்லை” என்றேன். “யுத்தத்தில் நாம் பங்கெடுத்துக் கொண்டதில் நாம் சரியான காரியத்தையே செய்தோம் என்பதை நான் இப்பொழுதும் கூறுகிறேன். அப்படிச் செய்ததில் நம் கடமையைத்தான் நாம் நிறைவேற்றினோம். கடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது. என்றாலும்,எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளித்தே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை. நடந்து போனதை மறந்துவிட்டு நம் முன்னால் இப்பொழுது இருக்கும் வேலை என்ன என்பதைக் கவனிப்போம்” என்று நான் கூறியதை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
நான் மேலும் கூறியதாவது: “உண்மையைச் சொன்னால், நீங்கள் எந்த வேலைக்காக என்னை அழைத்திருந்தீர்களோ அந்த வேலை இப்பொழுது முடிந்துவிட்டது. நான் தாய்நாடு திரும்புவதற்கு என்னை நீங்கள் அனுமதிப்பது சாத்தியமே என்று இருந்தாலும் நான் டிரான்ஸ்வாலை விட்டுப் போகக் கூடாது என்று எண்ணுகிறேன். முன்போல நேட்டாலில் இருந்துகொண்டு என் வேலையைச் செய்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, இங்கிருந்து கொண்டே நான் அதைச் செய்து வரவேண்டும். ஓர் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் திரும்புவது என்று நான் இனியும் எண்ணிக் கொண்டிருப்பதற்கில்லை. டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக நான் பதிவு செய்து கொள்ள வேண்டியதே. இப்புதிய இலாகாவைச் சமாளித்துக் கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இதை நாம் செய்யவில்லை என்றால், சமூகம் அடியோடு கொள்ளையடிக்கப்பட்டு விடுவதோடு இந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும் விடும். ஒவ்வொரு நாளும் புதுப்புது அவமரியாதைகள் சமூகத்தின்மீது வந்து குவிந்து கொண்டும் இருக்கும். ஸ்ரீ சேம்பர்லேன் என்னைப் பார்க்க மறுத்ததையும், அந்த அதிகாரி என்னை அவமதித்ததையும், இந்தியச் சமூகம் முழுமைக்கும் இருந்து வரும் அவமதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேவலம் நாயின் வாழ்வை நாம் நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கப் படுகிறோம். இதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.”
எனவே, நான் வேலையைச் செய்துகொண்டு போக ஆரம்பித்தேன். பிரிட்டோரியாவிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் இருக்கும் இந்தியருடன் விஷயங்களை விவாதித்தேன். முடிவாக ஜோகன்னஸ்பர்க்கில் எனது அலுவலகத்தை அமைப்பது என்று தீர்மானித்தேன்.
டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் என்னை வக்கீலாகப் பதிவு செய்துகொள்ளுவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வக்கீல்கள் சங்கம் என் மனுவை எதிர்க்கவில்லை. கோர்ட்டும் அங்கீகரித்துவிட்டது. தகுதியான இடத்தில் அலுவலகத்திற்கு அறைகளை அமர்த்திக் கொள்வது என்பது இந்தியருக்குக் கஷ்டமானதாகவே இருந்தது. ஸ்ரீ ரிச் என்பவர் அப்பொழுது அங்கே வர்த்தகராக இருந்தார். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவருக்குத் தெரிந்த வீட்டுத் தரகர் ஒருவருடைய முயற்சியின் பேரில் நகரில் வக்கீல்கள் இருக்கும் பகுதியில் என் அலுவலகத்திற்குத் தகுதியான அறைகள் எனக்குக் கிடைத்தன. என் தொழில் சம்பந்தமான வேலையையும் தொடங்கினேன்.
$$$
4. தியாக உணர்ச்சி மிகுந்தது
டிரான்ஸ்வாலில் குடியேறிய இந்தியரின் உரிமைக்காகவும், ஆசியாக்காரர் இலாகாவின் சம்பந்தமாகவும் நடந்த போராட்டத்தைக் குறித்து நான் கூறும் முன்பு, என் வாழ்க்கையின் வேறு சில அம்சங்களைப் பற்றியும் நான் கூறவேண்டும்.
இதுவரையில் எனக்குக் கலப்பானதோர் ஆர்வம் இருந்து வந்தது. தன்னலத் தியாகம் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை, வருங்காலத்திற்கு ஏதாவது ஒரு பொருள் சேர்த்துவைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிதப்படுத்திக் கொண்டிருந்தது.
பம்பாயில் நான் என் அலுவலகத்தை அமைத்த சமயம், ஓர் அமெரிக்க இன்ஷூயூரன்ஸ் ஏஜெண்டு அங்கே வந்தார். அவர் நல்ல முகவெட்டும் இனிக்கப் பேசும் திறமையும் உள்ளவர். நாங்கள் ஏதோ வெகு காலம் பழகிய நண்பரைப் போல அவர் என்னிடம் என் வருங்கால நலனைக் குறித்து விவாதித்தார். “அமெரிக்காவில் உங்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் எல்லோரும் தங்கள் ஆயுளை இன்ஷூர் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தை முன்னிட்டு நீங்களும் இன்ஷூர் செய்துகொள்ள வேண்டாமா? வாழ்வு நிச்சயமில்லாதது. அமெரிக்காவிலுள்ள நாங்கள், இன்ஷூர் செய்து கொண்டுவிட வேண்டியதை ஒரு மதக் கடமையாகவே கருதுகிறோம். நீங்களும் ஒரு சிறு தொகைக்கு இன்ஷூர் செய்து கொள்ளுமாறு நான் உங்களைத் தூண்டக் கூடாதா?“ என்றார் அவர்.
இந்தச் சமயம் வரையில், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும், நான் சந்தித்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள் கூறியதற்கெல்லாம் செவிகொடுக்காமல் இருந்திருக்கிறேன். ஆயுள் இன்ஷூர் செய்வதென்பது பயத்தையும், கடவுளிடம் நம்பிக்கை இன்மையையும் காட்டுவதாகும் என்று நான் எண்ணினேன். ஆனால், இப்பொழுதோ அமெரிக்க ஏஜெண்டு காட்டிய ஆசைக்குப் பலியாகி விட்டேன். அவர் தமது வாதத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது என் மனக்கண்ணின் முன்பு என் மனைவியும் குழந்தைகளும் நின்றனர். ‘உன் மனைவியின் நகைகள் எல்லாவற்றையுமே நீ விற்று விட்டாய்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ‘உனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அவளையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பாரம், உன் ஏழைச் சகோதரர் தலைமீது விழும். அவரோ, உனக்குத் தந்தைபோல் இருந்து எவ்வளவோ பெருந்தன்மையுடன் நடந்து வந்திருக்கிறார். அப்படியிருக்க மேலும் அவர்மீது பாரத்தைச் சுமத்துவது உனக்குத் தகுமா?’ இதுவும் இதுபோன்ற வாதங்களும் என்னுள் எழுந்தன. இவை, ரூ.10,000-க்கு இன்ஷூர் செய்யுமாறு என்னைத் தூண்டிவிட்டன.
ஆனால், தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கை முறை மாறியதோடு என் மனப்போக்கும் மாறுதலடைந்தது. சோதனையான இக்காலத்தில் நான் செய்த ஒவ்வொரு காரியத்தையும் கடவுளின் பெயரால் அவர் பணிக்கு என்றே செய்துவந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் எவ்வளவு காலம் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாது. இந்தியாவுக்குத் திரும்ப முடியாமலே போய்விடுமோ என்ற ஒரு பயமும் எனக்கு இருந்தது. ஆகவே, என் மனைவியையும் குழந்தைகளையும் என்னுடன் வைத்துக்கொண்டு அவர்களைப் பராமரிப்பதற்கு வேண்டியதைச் சம்பாதிப்பது என்று தீர்மானித்தேன். இத்திட்டம் நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்திருந்ததற்காக வருந்தும்படி செய்தது. இன்ஷூரன்ஸ் ஏஜெண்டின் வலையில் விழுந்து விட்டதற்காக வெட்கப்பட்டேன். ‘என் சகோதரர் உண்மையாகவே என் தந்தையின் நிலையில் இருப்பதாக இருந்தால், என் மனைவி விதவையாகி விடும் நிலைமையே ஏற்பட்டாலும், அவளைப் பாதுகாப்பதை அதிகப்படியான சுமை என்று அவர் கருத மாட்டார். மற்றவர்களைவிட நான் சீக்கிரத்தில் இறந்து போவேன் என்று நான் எண்ணிக் கொள்ளுவதற்குத்தான் என்ன காரணம் இருக்கிறது? பார்க்கப்போனால், உண்மையில் காப்பாற்றுகிறவர் எல்லாம் வல்ல கடவுளேயன்றி நானோ, என் சகோதரரோ அல்ல. நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்ததனால், என் மனைவியும் குழந்தைகளும் சுயபலத்தில் நிற்க முடியாதவாறு செய்துவிட்டேன். அவர்கள், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளுவார்கள் என்று ஏன் எதிர்பார்க்கக்கூடாது? உலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஏழைக் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது? அவர்களில் நானும் ஒருவனே என்று நான் ஏன் கருதிக்கொள்ளக் கூடாது?’ இவ்வாறு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
இவ்விதமான எண்ணற்ற எண்ணங்கள் என் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால், அவற்றின்படி நானே உடனேயே ஒன்றும் செய்து விடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிய பிறகு இன்ஷூரன்ஸுக்கு ஒரு தவணையாவது பணம் கட்டியதாகவே எனக்கு ஞாபகம்.
இவ்விதமான எண்ணப்போக்குக்கு வெளிச் சந்தர்ப்பங்களும் உதவியாக இருந்தன. நான் முதல் தடவை தென்னாப்பிரிக்காவில் தங்கியபோது கிறிஸ்தவர்களின் தொடர்பே, சமய உணர்ச்சி என்னுள் குன்றாமல் இருக்கும்படி செய்து வந்தது. இப்பொழுதோ, பிரம்மஞான சங்கத்தினரின் தொடர்பு, அதற்கு அதிக பலத்தை அளித்தது. ஸ்ரீ ரிச் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். ஜோகன்னஸ்பர்க்கிலிருக்கும் அச்சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்படும்படி அவர் செய்தார். அதற்கும் எனக்கும் அபிப்பிராய பேதம் இருந்ததால், அச்சங்கத்தில் நான் அங்கத்தினன் ஆகவில்லை. ஆனால், அநேகமாக அச்சங்கத்தினர் ஒவ்வொருவருடனும் நான் நெருங்கிப் பழகினேன். ஒவ்வொரு நாளும் சமய சம்பந்தமாக அவர்களுடன் விவாதிப்பேன். பிரம்மஞான நூல்களிலிருந்து சில பகுதிகளை அங்கே படிப்போம். சில சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் பேசும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. பிரம்ம ஞான சங்கத்தின் முக்கியமான விஷயம், சகோதரத்துவ எண்ணத்தை வளர்த்துப் பரப்புவதாகும். இதைக் குறித்து எவ்வளவோ விவாதித்து இருக்கிறோம். அங்கத்தினர்களின் நடத்தை அவர்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதாக இல்லாத சமயங்களில் அவர்களை நான் குறை கூறுவேன். இவ்விதம் குறை கூறிவந்ததால், என்னளவில் நன்மை ஏற்படாமல் போகவில்லை. என்னையே நான் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுமாறு அது செய்தது.
$$$
5. ஆன்ம சோதனையின் பலன்
1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின் உபதேச மேன்மையை நான் உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு விடும்படி செய்வதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். நானோ, திறந்த மனத்துடன் அவர்கள் கூறியதையெல்லாம் அடக்கத்தோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் என் சக்திக்கு எட்டிய வரையில் இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு மற்றச் சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன்.
1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை ஓரளவுக்கு மாறுதல் அடைந்துவிட்டது. பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவ்வாறு முயன்றார்கள். பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகையால், நான் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள் கருதினார்கள். சமஸ்கிருத மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத் தெரியாது என்றும், ஹிந்து சமய நூல்களை நான் மூலமொழியில் படித்ததில்லை என்றும், மொழிபெயர்ப்புக்களை நான் படித்ததுகூட மிகக் குறைவே என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். ஆனால், சமஸ்காரம் அல்லது பூர்வஜன்ம வாசனை, மறுபிறப்பு ஆகியவைகளில் அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாகையால், நான் கொஞ்சமாவது தங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே, ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பது போலானேன். இந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்’ என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன்.
எம்.என்.துவிவேதி எழுதிய ‘ராஜயோகம்’ என்ற நூலை, வேறு சிலருடன் சேர்ந்து படித்தேன். ஒரு நண்பருடன் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும், மற்றும் பலருடன் பகவத் கீதையையும் நான் படிக்க வேண்டியதாயிற்று. ஒருவகையான மெய் நாடுவோர் சங்கத்தை நாங்கள் அமைத்துக்கொண்டு ஒழுங்காக நூல்களைப் படித்து வந்தோம். கீதையினிடம் இதற்கு முன்பே எனக்குப் பக்தி இருந்தது; அது என் உள்ளத்தைக் கவர்ந்தும் இருந்தது. அதை ஆழ்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன். என்னிடம் கீதையின் இரண்டொரு மொழிபெயர்ப்புக்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சமஸ்கிருத மூலநூலைப் புரிந்துகொள்ள முயன்றேன். தினம் இரண்டொரு சுலோகத்தை மனப்பாடம் செய்துவிடுவது என்றும் தீர்மானித்தேன்.
எனது காலைக் கடன்களைச் செய்யும் நேரத்தை இதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு முப்பத்தைந்து நிமிடங்களாகும். பல் துலக்குவதற்குப் பதினைந்து நிமிடங்கள்; குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து, நின்று கொண்டே பல் துலக்குவேன். அப்போது எதிரேயுள்ள சுவரில் கீதையின் சுலோகங்களை எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன். நினைவுபடுத்திக் கொள்ள அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்ளுவேன். அன்றாடம் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய சுலோகங்களை மனப்பாடம் செய்து கொள்வதற்கும், முன்னால் மனப்பாடம் செய்திருந்த சுலோகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்கும் எனக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது. இவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம் செய்துவிட்டதாக எனக்கு ஞாபகம்.
ஆனால், வேறு வேலைகள் அதிகமாகிவிட்டபோது கீதையை மனப்பாடம் செய்வதை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிந்திப்பதற்கு எனக்கு இருந்த நேரத்தையெல்லாம், சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் கிரகித்துக் கொண்டு விட்டன. இன்றுவரை நிலைமை அவ்வாறே இருந்து வருகிறது எனலாம். கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன்.
அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), சமபாவம் (சமத்துவம்) போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் சமபாவத்தை எப்படி வளர்ப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதே பிரச்னை. சிலர் நம்மை அவமதிப்பவர்கள்; மற்றும் சிலர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்; நேற்று சக ஊழியர்களாக இருந்தவர்கள் இன்று அர்த்தமில்லாத எதிர்ப்புகளை எல்லாம் கிளப்புகிறார்கள்; இவர்களல்லாமல் எப்பொழுதுமே நல்லவர்களாக இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே ஒருவர் சமபாவத்துடன் நோக்குவது எப்படி? உடைமையெதுவுமே இல்லாதிருப்பதும் எவ்வாறு? நம் உடம்பே ஓர் உடைமை அல்லவா? மனைவியும் குழந்தைகளும் உடமைகளல்லவா? என்னிடம் அலமாரி நிறைய இருக்கும் புத்தகங்களையெல்லாம் நான் கொளுத்திவிட வேண்டுமா? எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு கடவுளைப் பின்பற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது.
‘என்னிடம் இருப்பவைகளை யெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது’ என்பதே அந்தப் பதில். ஆங்கிலச் சட்டத்தைக் குறித்து நான் படித்திருந்ததும் எனக்கு உதவி செய்தது. சமநீதியின் தத்துவத்தைக் குறித்து ஸ்னெல் எழுதியிருந்த விளக்கம் என் நினைவுக்கு வந்தது. கீதையின் உபதேசத்தை அனுசரித்துக் கவனித்தபோது ‘தருமகர்த்தா’ என்ற சொல்லின் பொருள் எனக்கு மிகத் தெளிவாக விளங்கியது. நீதி சாத்திரத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. மத தருமத்தை நான் அதில் கண்டேன். உடைமை கூடாது என்று கீதை உபதேசிப்பதன் உண்மைக் கருத்தையும் உணர்ந்தேன். ‘மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்களிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்’ என்பதே அதன் பொருள் எனக் கண்டேன்.
உடைமையின்மைக்கும் எல்லோரையும் சமமாகப் பாவிப்பதற்கும், மனமாற்றமும், நடத்தையில் மாறுபாடும் ஏற்படுவது முதல் அவசியம் என்று பட்டப்பகல் போல எனக்கு வெட்டவெளிச்சமாகப் புலனாயிற்று. என் மனைவியையும் குழந்தைகளையும் என்னையும் படைத்த கடவுள், எங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவார் என்பதில் திடமான உறுதி கொண்டேன். உடனே நான் ரேவா சங்கர் பாய்க்கு எழுதி, இன்ஷூரன்ஸூக்கு மேற்கொண்டு பணம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தேன். இதுவரை கட்டிய பணத்தில் கிடைக்கக் கூடியதைப் பெறப் பார்க்கும்படியும், இல்லா விட்டால் அத்தொகையைப் போனதாகவே வைத்துக்கொள்ளும் படியும் எழுதினேன். எனக்குத் தந்தையைப்போல் இருந்து வந்தவரான என் சகோதரருக்கும் கடிதம் எழுதினேன். அதுவரையில் நான் மிச்சமாக வைக்க முடிந்ததையெல்லாம் நான் அவருக்கே கொடுத்து விட்டதாகவும், இனி என்னிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றும், மேற்கொண்டும் என்னிடம் ஏதாவது மீதமிருக்குமானால் அதை இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்றும் அவருக்கு விளக்கினேன்.
என் சகோதரர் இதை எளிதாக அறிந்துகொள்ளும்படி செய்ய என்னால் ஆகவில்லை. அவருக்கு நான் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விளக்கி அவர் எனக்குக் கடுமையான பாஷையில் கடிதம் எழுதினர். எங்கள் தந்தையைவிட நான் அதிகப் புத்திசாலியாகி விட்டதாக எண்ணிக்கொண்டு விட வேண்டாம் என்றார். தாம் செய்வதைப் போன்றே நானும் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எழுதினார். தந்தையார் என்ன செய்தாரோ அதையே நான் செய்து வருகிறேன் என்பதைக் குறிப்பிட்டு, அவருக்கு எழுதினேன். ‘குடும்பம்’ என்பதன் பொருளைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால், நான் மேற்கொண்ட காரியத்தின் விவேகம் நன்கு தெளிவாகும்.
என் சகோதரர் என்னைக் கைவிட்டுவிட்டார். கடிதம் எழுதுவதைக்கூட அடியோடு நிறுத்திவிட்டார். இதனால், அதிகமான வருத்தம் அடைந்தேன். ஆனால், என் கடமை என்று நான் கருதியதைக் கைவிடுவதென்பதோ இன்னும் அதிக மன வேதனையைத் தருவதாகிவிடும். ஆகையால், குறைவான மனக்கஷ்டத்தை அளிப்பதாக இருப்பதைச் செய்தேன். ஆனால், அது என் சகோதரரிடம் எனக்கு இருந்த பக்தியைப் பாதிக்கவில்லை. அது எப்பொழுதும் போல் தூயதாகவும் அதிகமாகவுமே இருந்து வந்தது. என்மீது அவர் வைத்திருந்த அபாரமான அன்பே அவருடைய துயரத்திற்கெல்லாம் காரணம். குடும்பத்தின் விஷயத்தில் நான் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரேயன்றி என் பணத்தைப் பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை.
அவருடைய வாழ்நாளின் அந்திமக் காலத்தில் என்னுடைய கருத்தின் சிறப்பை அவர் உணர்ந்தார். மரணத் தறுவாயிலிருந்த சமயம், நான் செய்ததே சிறந்த காரியம் என்பதைத் தெரிந்துகொண்டு எனக்கு உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதினார். தந்தை தனயனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைப் போல் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தமது புதல்வர்களை என்னிடம் ஒப்படைப்பதாகவும், எனக்குச் சரி என்று தோன்றும் வழியில் அவர்களை வளர்க்குமாறும் அறிவித்தார். என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் துடித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதினார். தென்னாப்பிரிக்காவுக்கு வரத் தாம் விரும்புவதாகத் தந்தி கொடுத்தார். அவரை வருமாறு பதிலுக்குத் தந்தி கொடுத்தேன். ஆனால், கடவுள் சம்மதம் இல்லாமல் போயிற்று.
அவருடைய புதல்வர்களைக் குறித்து அவர் விரும்பியதும் நிறைவேறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவருடைய குமாரர்கள் பழைய சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களை என்பால் இழுத்துக்கொள்ளவும் என்னால் ஆகவில்லை. அது அவர்கள் குற்றமன்று. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால் தான் முடியும்? பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டுவிட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தம் புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை. பெற்றோராயிருப்பது எவ்வளவு பயங்கரமான பொறுப்பு என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஓரளவுக்குப் பயனுள்ளதாகிறது.
$$$