-எஸ்.எஸ்.மகாதேவன்









18. நமது ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் பிரபலங்கள்!
சிங்கப்பூர் நாட்டிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமான இல்லத்தரசி ஒருவர் என் வீடு தேடி வந்தார். பேசிக்கொண்டிருந்தோம். தன் மகளுக்கு திருமணம் பாரதத்தில் நடக்கவிருப்பதை விவரித்தார். அவரது மகன் பற்றிக் கேட்டேன். “பதினெட்டு வயது ஆகிறது. எனவே சிங்கப்பூர் சட்டப்படி இரண்டு ஆண்டுகள் தேச சேவை (நேஷனல் சர்வீஸ்) எனப்படும் ராணுவப் பணி முடித்த பிறகுதான் மேற்படிப்பு பற்றி யோசிக்க வேண்டும்” என்றாரே பார்க்கலாம்!
சிங்கப்பூர் 1965இல் சுதந்திரம் பெற்றபோது அங்கு மிக மிக சிறிய பட்டாளம் தான் இருந்தது. விமானப் படையில் பெயரளவில்கூட ஒரு விமானம் கிடையாது. ஒருபுறம் இந்தோனேசியாவும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிடம் சிங்கப்பூர் ராணுவ உதவி கேட்டது. இஸ்ரேல் கொடுத்த அறிவுரையின்படி 18 வயதான ஆண்கள் ஒவ்வொருவரும் கட்டாய ராணுவப் பணி புரிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது சிங்கப்பூர். கடந்த 55 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் இதுபோல கட்டாய ராணுவப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இன்று சிங்கப்பூர் ராணுவம் அதிநவீன ராணுவமாக அறியப்படுகிறது.
சிங்கப்பூர் ராணுவ புராணம் இருக்கட்டும். முதலில் இந்தப் பட்டியலை ஒரு தரம் படித்து முடித்து விடுங்கள்.
1. அபினவ் பிந்த்ரா
2. சச்சின் டெண்டுல்கர்
3. கபில்தேவ்
4. மில்கா சிங்
5. மகேந்திர சிங் தோனி
6. சச்சின் பைலட்
7. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
8. அனுராக் சிங் தாக்குர்
9. மோகன் லால்
10. டெல்லி கணேஷ்
11. கூபி பைந்தல்
இவர்கள் விளையாட்டு, சினிமா, அரசியல் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர்கள் என்று தெரிகிறது. குறிப்பிட வேண்டிய விஷயம், இவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் நமது ராணுவத்துடன் சம்பந்தப் பட்டிருப்பவர்கள்.
தொலைக்காட்சித் தொடர் மகாபாரதத்தில் சகுனியாக நடித்த கூபி பைந்தல் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இவர் 1962இல் சீனாவுடனான யுத்தத்தில் போர்முனையில் ராணுவ ஜவானாகக் களம் கண்டவர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தார். பிறகு நடிப்புத் துறைக்கு மாறினார்.
ராணுவ வீரர்களுக்கு பெருமிதம் சேர்க்கும் விதத்தில் பல படங்களில் நடித்த மலையாள திரைப்பட நட்சத்திரம் மோகன்லால், பிரதேச ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்.
அதே அமைச்சகம் அதே பதவியில், முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற பாரத கிரிக்கெட் அணியின் தலைவர் கபில் தேவை நியமித்து லெப்டினன்ட் கர்னல் ஆக்கியது.
கிரிக்கெட்டில் உலக சாதனைகள் பல படைத்த பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர், பாரத விமானப் படையில் கௌரவ குரூப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, பிரதேச ராணுவத்தில் சீக்கிய படையணியில் லெப்டினன்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிரதேச ராணுவத்தில் பாராசூட் படையணியில் லெப்டினன்ட் கர்னல் பதவி அளிக்கப் பட்டுள்ளார். இவர் இரண்டுமுறை விமானத்திலிருந்து பாரா ஜம்பிங் செய்து பயிற்சி பெற்றார்.
அதிவேக ஓட்டத்தில் உலகப்புகழ் பெற்ற ‘பறக்கும் சீக்கியர்‘ பத்மஸ்ரீ மில்கா சிங் முதலில் நாயிப் சுபேதாராக ராணுவப் பணி தொடங்கி, பிறகு விளையாட்டுக்கு மாறினார். இவர் பெற்ற வெற்றிகளால் ஜேசிஓ ஆக பதவி உயர்வு பெற்றார்.
அரசியல்வாதிகளும் ராணுவ கௌரவத்திலிருந்து விதிவிலக்கு அல்ல. பிரபல காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதேச ராணுவத்தில் கேப்டன் பதவி அளிக்கப்பட்டார். தற்போது இவர் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர சிங் மோடியின் அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 1990 – 2013இல் ராணுவ அதிகாரியாக இருந்தவர். பின்னாளில் பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானார்.
ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்கள் போலத்தான் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகுரின் மாநிலமான இமாச்சலப் பிரதேசமும். அங்கே மக்கள் ராணுவத்தில் சேருவது சர்வ சகஜம். அனுராக் தாக்குர் 2016இல் பிரதேச ராணுவத்தில் பயிற்சி முடித்து லெப்டினன்ட் ஆக நியமிக்கப்பட்டார். அண்மையில் இவருக்கு கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
தமிழ்த் திரை உலகின் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன், டெல்லியில் விமானப்படை அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். அவர் சீருடையில் தென்படும் ரேங்க் ‘கார்ப்பொரல்’ என்று காட்டுகிறது.
அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான். டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள் மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.
(டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிரதேச ராணுவம் தேசத்தின் ராணுவத்துக்கு அடுத்த நிலையில் உள்ள ஏற்பாடு. நெருக்கடி ஏற்படும்போது ராணுவப் பணிக்கு கைகொடுக்கும். ஆண்டில் ஒரு மாதம் பிரதேச ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது).
பல ஆண்டுகளாக இது போல இளைஞர்கள் மனதில் ராணுவம் பற்றி நல்லெண்ணம் உருவாக்கி வந்ததில் ஒரு நல்ல விளைவு தென்படுகிறது. அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதும் ராணுவத்தில் சேர பாரத இளைஞர்கள் அபரிமிதமான உற்சாகம் காட்டியது தற்செயல் அல்ல. பாரத விமானப்படையில் சேர ஏழரை லட்சம் பேர் நாடு நெடுக விண்ணப்பித்தார்கள். பாரத கப்பற்படையில் சேர முன்வந்தோர் மூன்றரை லட்சம் பேர். தரைப்படை க்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களிலேயே 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளது மிகுந்த தெம்பு தரக்கூடிய செய்தி. பார்ப்போம்.
$$$