காந்தாமணி

-மகாகவி பாரதி

காதலின் புகழ் குறித்து தனிக் கவிதைகளே (பாரதி அறுபத்தாறு- 49-53) எழுதியவர் மகாகவி பாரதி. காதல் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருள் என்பதே அவரது பார்வை. வயது, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் காதலுக்கு ஒருபொருட்டாக மாட்டாது என்பதை இக்கதையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதி, தனக்கே உரித்தான குறும்பான மொழிநடையில்…

“காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்த ஸங்கதி. கோடைக்காலம். காலை வேளை. வானத்திலே பால ஸுர்யன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையாடுகிறான், எதிரே நீலமலை, பச்சை மரங்கள்; பசுக்கள்; பல மனிதர்; சில கழுதைகள் – இவற்றின் தொகுதி நின்றது. வெயிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான்.

எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன.

ஆனால், காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சம் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப்போது உலகம் மிகவும் ஸந்தோஷகரமான காட்சி யுடையதாகிறது.

தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத் தோட்டத்தில் சில அரளிப் பூச்செடிகள்; சில மல்லிகைப் பூச்செடிகள்; சில ரோஜாப் பூச்செடிகள், அந்தக் கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியிலுள்ள பெண்க ளெல்லாரும் ஜலமெடுத்துக் கொண்டு போவார்கள்.

இந்தக் கதை தொடங்குகிற அன்று காலையில் அங்கு காந்தாமணியையும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜல மிறைத்து ஸ்நாநத்தை பண்ணிக் கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளுபடியாகி அதிலிருந்தும் அந்தக் கிராமத்துக்கு வந்து தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தஸாரதி அய்யங்கார் அங்கு பக்கத்திலே நின்று கிழவியைக் குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச் சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல நல்ல மூலிகைக ளிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி யுண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னார். அதுகொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் “கா” “கா” என்று உபதேசம் புரிகின்றன, வான வெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று.

“உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி காந்தாமணியிடம் கேட்டாள்.

“எங்கப்பா பெயர் பார்த்தஸாரதி அய்யங்கார்” என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னாள்.

கிழவி போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தாள். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போனார். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணூறு வயதுக் கிழவனைப் போலே தோன்றினாலும், உடம்பு நல்ல கட்டுமஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆனை, புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சி யுடைவரென்று கேள்வி, பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்பட மாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லி யிருக்கிறார்.

அப்படிப்பட்ட சூராதி சூரனாகிய பார்த்தஸாரதி அய்யங்கார் கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ஙனம் கைகால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி நிற்பதைக் கண்டு வியப்புற்றேன்.

அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைச் சுட்டிக் காட்டி, “இதோ நிற்கிறாரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?” என்று கேட்டாள்.

அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளையும் வானத்திலே போட்டு முகத்திலே வானொளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச, “ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னங் கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிறாரே! எங்கப்பா செக்கச் செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலே யிருப்பார். இவர் நரைத்த கிழவரன்றோ ? எங்கப்பா சின்னப் பிள்ளை” என்று காந்தாமணி உரைத்தாள்.

அப்போது போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் காந்தாமணியை நோக்கி: “உங்கப்பாவுக்கு எந்த ஊரில் வேலை?” என்று கேட்டார்.

“எங்கப்பா சங்கரநாதன் கோயில் ஸப் இன்ஸ்பெக்டர்” என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்ந்து கொண்டார். அவருக்கு “ஸப் இன்ஸ்பெக்டர்” என்ற பெயர் பாம்புக்கு இடிபோல்.

அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்கு மிடையே பின்வரும் ஸம்பாஷணை நிகழலாயிற்று.

“நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்?” என்று பாட்டி கேட்டாள்.

அப்போது காந்தாமணி சொல்லுகிறாள்: “எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; ஸ்ரீவைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக் குழந்தை யில்லை யென்று தீராத மனக்கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணினாலன்றோ தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக்கொண்டு இந்த அறுதலி – பிராமணர் (எங்கப்பா) அடுத்த மாஸம் மன்னார்கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறார். முகூர்த்த மெல்லாம் வைத்தாய்விட்டது.” என்றாள்.

“மன்னார்கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போகிற மாமனாருடைய பெயரென்ன?” என்று அந்தப் பாட்டி கேட்டாள்.

அதற்குக் காந்தாமணி, “அவர் பெயர் கோவிந்தராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானாம். கால் முதல் தலை வரையில் அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவரம்பையைப் போல் அழகாம் அந்தப் பெண்” என்றாள்.

“அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?” என்று பாட்டி கேட்டாள்.

“அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்து போய்விட்டாள். அதன் நடையுடை பாவனைக ளெல்லாம் ஐரோப்பிய மாதிரி. ஆதலால், இதுவரை அதற்கு கலியாணத்துக்கு யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தை யெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப்பட்டுவிட்டார். மேலும், இவருக்கு மனதுக்குள்ளே ஸந்தோஷந்தான். தமக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி இன்றைக்குக் காலையிலேகூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கி யிருக்கிறோம். எங்கப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிந்தபோது அம்மா சொன்னாள்: மன்னார்கோவில் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலேகூட பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லாரும் ஒரே வாக்காகச் சொல்லுகிறார்கள்?” என்றாள். அப்பா அதற்கு ‘நெவர் மைண்ட் அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை ஸந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண்பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் ஏடேம் எபௌட் சாஸ்த்ரங்கள், நாம் சாஸ்திரங்களைப் புல்லாக மதிக்கிறோம்’ என்றார்…” என்று காந்தாமணி சொல்லினாள்.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுதும் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்கார் மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது.

அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தஸாரதி ஐயங்காரையுந் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரச்சி யில்லை; ஸ்மார்த்தச்சி, அந்த ஊர் கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காருக்கும் மேற்படி கிராம முன்சீபுக்கும் பல முறை யுத்தங்கள் நடந்தன வென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின் போதுதான் பார்த்தஸாரதி ஐயங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம் பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப்பட்ட துண்டு.

அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக்கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸம்பாஷணையின் போது மேற்படி ஐயங்காரின் முகத்தில் தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின்வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று.

கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாறாமல் இன்னும் தழல் வீசிக் கொண்டிருக்கிற தென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிறா ரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகளின் அருகேகூடத் தனக்கு அக் கிழவியின் வடிவே அதிக ரம்யமாகத் தோன்றுகிறதென்று உணர்த்த விரும்புகிறா ரென்றும் தெரியலாயிற்று.

ஆனால், அவருடைய முகக் குறிப்புகளிலே பாதி பொய் நடிப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது.

ஏனென்றால், காந்தாமணியையும், அக் கிழவியையும் ஒருங்கே தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதாவாகிய பிரமதேவன்கூடக் காந்தாமணியின் ஸந்நிதியில் அந்தக் கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான்,

அப்படி யிருக்கக் கிழவி மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காரின் முயற்சி மிகவும் நம்பக்கூடாத மாதிரியில் நடைபெற்று வந்தது.

இந்த ஸங்கதியில் மற்றொரு விசேஷ மென்னவென்றால், மேற்படி ஐயங்காரை நான் விருக்ஷ மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததுபோலவே காந்தாமணியும் கிழவியும் அவரை அடிக்கடி கடைக் கண்ணால் கவனித்துக் கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது; பருந்தைக் காட்டிலும் கூர்மையான கண்.

எனவே, பார்த்தசாரதி ஐயங்காருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரீகளும் கண்டுகொண்டன ரென்பதை அவர்களுடைய முகக் குறிகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.

என்னை மாத்திரம் அம் மூவரில் யாரும் கவனிக்கவில்லை. நான் செடி கொடிகளின் மறைவில் நின்று பார்த்தபடியால் என்னை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

இப்படி யிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லரையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில். இவன் பலமுறை அந்தக் கிராமத்து

க்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப் பற்றி வேறொன்றும் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்மதனைப் போலிருந்தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான படர்ந்த உச்சிக் குடுமியும் அவனைக் கண்டபோது எனக்கே அவன் மேல் மோஹமுண்டாயிற்று.

அந்த மலையாளி கிணற்றருகே வந்துட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒரு முறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு நழுவவிட்டு விட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து “ஐயோ, நான் என்ன செய்வேனம்மா? குடம் ஆறங்குலம் ஆழம் அதுங்கிப் போய் விட்டதே? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே? நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

மார்புத் துணியை நெகிழ விட்டாள். பொதியைமலைத் தொடரை நோக்கினாள்.

இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவளென்பதை நான் தொலையிலிருந்தே தெரிந்து கொண்டேன். பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி ஐயங்கார் பூர்வம் நெடுநாள் மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தா ரென்றும், அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தாமணிக்கும் அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிற தென்றும் வெளிப்பட்டது. ஸப் இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்து, காந்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும் கூந்தலாபுரம் ஜமீன் திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாஸாசார்யர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். அந்த ஸ்ரீநிவாஸாசார்யருடன் வாழக் காந்தாமணிக்குச் சம்மத மில்லை. இந்தச் செய்தி யெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரியவந்தது.

அன்று கிணற்றங் கரையில் என் கண்முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன்.

காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு “எங்கம்மா வைவாளே, நான் என்ன செய்வேனம்மா?” என்று அழுதுகொண்டே போனாள். ஆனால் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்திற்குப் போகவில்லை. நேரே அந்த ஊருக்கு மேற்கே யுள்ள மாரந்திக்குப் போனாள், தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங் கரையை நோக்கிச் சென்றான். இதற்குள்ளே எனக்கு ஸந்த்யாவந்தன காலம் நெடுந்தூரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று, “கேட்டீர்களோ, விஷயத்தை! வெகு ஆச்சர்யம், வெகு ஆச்சர்யம்!” என்று கூக்குரலிட்டார்.

“என்ன ஒய் ஆச்சர்யம்? நடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் ஸௌகர்யமாக இருக்கும்” என்றேன்.

“சத்திரத்திலே ஸப் இன்ஸ்பெக்டர் பார்த்தஸாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கி யிருக்கிறாரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையுங் கூட்டிக் கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம், திலோர்த்தமை, ரம்பை தினுசுகளை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜலம் சொட்டுகிறது. காந்தாமணி … காந்தாமணி, என்ன நேர்த்தியான நாமம். ரஸம் ஒழுகுகிறது …..”

இங்ஙனம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து, “மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும்” என்றேன்.

“அந்தக் காந்தாமணியைக் காணவில்லை யென்று விடியற்கால மெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தஸாரதி அய்யங்காரும் அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக் கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஓடிப்போய் விட்டார்கள். பின்னிட்டு, அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும், பார்த்தஸாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்கிறார்களென்றும், அய்யங்கார் அங்கொரு நாட்டுக் கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு க்ஷேமமாக வாழ்கிறாரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s